பதிப்பக அலமாரி ’ஆழி’ பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் மாகடிகாரம் விழியன்

.
’ஆழி’ பதிப்பக வெளியீடாக வரவிருக்கும்

மாகடிகாரம்
விழியன்

 

 

 

சிறார் நாவலிலிருந்து ஒரு பகுதி…

 

ஹெர்குலஸின் குடிசைக்கு இருவரும் வந்து சேர்ந்தனர். அந்த குடிசை விநோதமாக இருந்ததை தீமன் இதை கவனிக்காமல் இல்லை. மிகவும் பழையப் பொருட்களால் நிறைந்து இருந்தது. தாத்தாவுடன் யாரும் இல்லை. இவர் மட்டுமே தனியாக இருக்கின்றார் எனத் தெரிந்தது.

“தாத்தா, நீங்க மட்டும் தனியாகவா இந்தக் காட்ல இருக்கீங்க?”

ஆமாம் என்பதை தலையாட்டி தெரிவித்தார். நெருப்பு மூட்டி அதில் சின்ன சட்டி வைத்து கஞ்சி காசினார். மிகவும் ருசியாக இருந்தது என தீமன் கஞ்சியை ருசித்தபடி தெரிவித்தான். அது விசேஷமான ஒரு கஞ்சி. எந்த பருவத்திலும் பருகலாம், யார் பருகினாலும் கசக்கும். ஆனால் தீமனுக்கு இனித்தது.

“தீமா, அந்த யானையைப் பார்த்து உனக்கேன் பயமே வரவில்லை? அது கொடிய மிருகம் அல்லவா? அதற்கு எப்படி உதவ வேண்டும் என தோன்றியது உனக்கு?”

“தாத்தா, யானை என்றால் எனக்கு பயம் தான், ஆனால் அதன் காலில் அடிப்பட்டிருந்ததை பார்த்ததும் அதற்கு உதவ வேண்டும் என்றுத் தோன்றியது. என்ன செய்யலாம் எனப் பார்த்துக்கொண்டிருந்த போது தான் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். நல்லவேளை நீங்க கொடுத்த மூலிகையினால் விரைவில் குணமானது..”

கஞ்சி பருகியதும், தீமனின் உடலில் சில பரிசோதனைகளை செய்தார். வழக்கமாக இந்த கஞ்சி குடித்தால் உடல் வியர்த்துவிடும், அதிக மூச்சு வாங்கும். ஆனால் தீமன் சாதாரணமாக இருந்தான். அறிவு, இறக்கம், உடல் பலம் என எல்லாவற்றிலும் இவன் தான் சரியான ஆள் என முடிவிற்கு வந்தார் ஹெர்குலஸ்.

ஆம் தீமன் தான் ஹெர்குலசின் வாரிசு. அந்த குறிப்பிட்ட தினத்தில் தான் தன் வாரிசை ஹர்குலஸ் சந்திப்பார் என ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருக்கு.

இனி தீமன் தான் ஹெர்குலஸின் வேலைகளை அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குச் செய்ய வேண்டும். அதன் பின்னர் தீமனுக்கு ஒரு வாரிசை கண்டுபிடிக்க வேண்டும். முதலில் தீமன் மரியானா அகழிக்கு சென்று மாகடிகாரத்தை செயல்படுத்தும் சாவியினை எடுத்துக்கொண்டு மெளன லோஆ(MOUNA LOA) தீவிற்கு செல்ல வேண்டும், அங்கே மாகடிகாரத்தை செயல்படுத்திவிட்டு அங்கே இருக்கும் மடாகஸ் மற்றும் இதர வீரர்களுடன் சில நாள் இருந்துவிட்டு திரும்பச் சொந்த ஊருக்கு வந்துவிடலாம். மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மீண்டும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இதே போல் சென்றுச் செயல்படுத்திவிட்டு வந்தால் போதும். ஊரில் மற்றவர்கள் யாருக்கும் இந்த விஷயத்தை சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டாருக்கு மட்டும் தெரிவிக்கலாம். கடந்த பல தலைமுறையாக இப்படித்தான் நடந்து வருகின்றது. ஏலகிரி மலையில் தான் அந்த கண்டுபிடிப்பு நிகழும். அந்த மலைக்கு அப்படி ஒரு விசேஷ சக்தி உண்டு.

 

தீமனுக்கு முதலில் மாகடிகாரம் பற்றியும் அவன் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் விளக்கினார். பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றதே என முதலில் அவனுக்கு தோன்றியது. ஆனாலும் ஹெர்குலஸ் சொன்ன எல்லா விஷயத்தையும் கவனித்தான். மறுநாள் காலையே அவன் கிளம்பவேண்டும் என்றும் தீமன் வீட்டாருக்கு ஹெர்குலசே நேரில் சென்று விஷயத்தை தெரிவிப்பதாகச் சொன்னார்.

 

ஓவியங்கள் நிறைந்த ஒரு பழைய புத்தகம் ஒன்றை தீமனுக்கு கொடுத்தார். அதில் மாகடிகாரம் பற்றிய விளக்கமும், முறைகளும் விளக்கப்பட்டு இருந்தது. பெட்டி ஒன்றினையும், மெளன லோவா தீவில் இருக்கும் மடாகஸிற்கு ஒரு கடிதமும் கொடுத்து அனுப்பினார்.

 

“தீமா, பத்திரம் இந்த உலக சுழற்சியே உன்னிடம் தான் இருக்கு, பொறுப்பறிந்து செயல்படு” என சொல்லி வாழ்த்தி அனுப்பினார். யூக் என்னும் இளைஞன் தீமனை அழைத்துச் சென்றான். இவர்கள் இருவருக்காக காத்திருந்தது ஒரு நீர்மூழ்கிக் கப்பல்.

***

Advertisements