பதிப்பக அலமாரி புது எழுத்து பதிப்பகம் மீன்கள் துள்ளும் நிசி

பதிப்பக அலமாரி புது எழுத்து பதிப்பகம்  மீன்கள் துள்ளும் நிசி

mail.google.com

1.   மழைவழிப்பயணம்

அவர்கள் மழைப்பாதையில் பயணித்து

இங்கே வந்திருக்கிறார்கள்.

மொத்தம் மூன்று பேர்.

சிறுமி,

நாய்க்குட்டி,

சிறுமியின் குடுவை மீன்.

ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்

நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.

மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்

எதற்காக இவ்வருகை என்பதை

அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்

அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.

அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்

என்றது குடுவை மீன்.

முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்

குடுவையை.

1.   இலை

அங்குமிங்கும் அலைவுறும்

இலையின்

பின் ஓடுகிறாள் சிறுமி

கைகளில் அகப்படாத

இலையை

முயல்போல் தாவித்தாவி

பின் தொடர்கிறாள்.

மாபெரும் விருட்சங்கள்

தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன.

வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு

இலையை தொடர்கின்றன.

பச்சை இலையின் நரம்புகளை

தீண்ட விரல் நீட்டுகையில்

ருதுவாகிறாள்.

அசைவற்று நின்றது இலை.

1.  மார்புக்காலம்

மலைகள் சூழ்ந்த அருவிக்கரையில்

கச்சை சரி செய்யும் பேரிளம் பெண்

தன் மார்புகளில் வழிகின்ற நீரின்

வழியே வருடங்கள் பல

பின்னோக்கி நகர்ந்து முதன் முதலாய்

நீராடிய குளக்கரையின் படித்துறைக்கு

செல்கிறாள்.

குளத்தில் மிதக்கும் தாமரை இலைகளின்

நடுவே சிறிமியொருத்தி நீந்தும் தருணம்

மொட்டொன்று மலர்வதை மிகுந்த

வலியுடன் தாங்கிக்கொள்கிறது குளம்.

மார்புகளில் வழிகின்ற துளிகளுடன்

வீட்டிற்கு செல்லுமவள்

மெளனத்தின் அறைக்குள் ஒளிந்துகொள்கிறாள்.

சிறுமியிலிருந்து யுவதிக்கும்

யுவதியிலிருந்து பேரிளம் பெண்ணுக்கும்

இடையே வெளவ்வாலாக தொங்குகிறது

மார்புக்காலம்.

1.   நடுநிலைத் திணை

ஒவ்வோர் இதழிலும்

வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருக்கும்

அம்மலருக்குள்

ஓர் உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.

எண்ணிலடங்கா பட்சிகளும் விலங்குகளும்

நிறைந்த அவ்வுலகில் .

சர்ப்பமொன்று பச்சை மரக்கிளையில்

ஊர்ந்து செல்ல

காட்டாற்றின் கரையில்

மூன்று நிழல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பறவையின் முதல் நிழலும்

அலகுப் புழுவின் இரண்டாம் நிழலும்

சந்திக்கும் புள்ளியில் உருப்பெற்ற

மூன்றாம் நிழலில்

ஓய்வெடுக்கிறது கனத்தவோடு முதிர் ஆமை.

சுழலும் அதன் நாவில் வெப்பமலரொன்றை

சுவைத்துக்கொண்டு.

1.   தருணம்

அங்கே மூன்று பேர் நிற்கிறார்கள்.

நீள அங்கியுடன் நிற்பவனின் கைகளில்

சிறிய பூச்செடியொன்று இருக்கிறது.

அதை ஒரு குழந்தைபோல் மென்மையாய்

பற்றியிருக்கிறான்.

கண்கள் மூடியபடி நிற்பவனின் வதனத்தில்

வெண்நிற நதி தவழ்ந்து செல்கிறது.

மூன்றாவதாக நிற்பவன் தன் மரக்கால்களால்

மெல்ல நதிக்குள் இறங்குகிறான்.

ஒரு பூச்செடியாக

ஒரு நதியாக

ஒரு ஜோடி மரக்கால்களாக.

1.   நகரம்

பிளாஸ்டிக் பைகளில் சுற்றுவதற்கு

முன் பழைய தினசரிகளில்

ஒரு சுற்று சுற்றிவிடவேண்டும்.

பிறகு பிளாஸ்டிக்.

அதன் பிறகு உபயோகப்படுத்தாத

அல்லது மிச்சமிருக்கும்

சில துளி வாசனைத் திரவியத்தை

தெளிக்கலாம்.

வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து

குடியிருப்புவாசிகள் அறிந்திடாமல்

தெருவில் இறங்கி நடக்கவேண்டும்.

பச்சை நிறத்தில் வாய்பிளந்து நிற்கும்

குப்பைத்தொட்டியில் ஒன்றும்

நடந்துவிடாத பாவனையில் எறிந்துவிட்டு

நகர்ந்துவிட வேண்டும்.

செல்லப் பூனைதான் எனினும்..

.

Advertisements