பதிப்பக அலமாரி ஆழி பதிப்பகம் தமிழன் குரல்

பதிப்பக அலமாரி

தமிழன் குரல்

 

download

 

ம.பொ.சி. எழுதியதும், டிசம்பர் 1947-ல் வெளிவந்ததுமான “தமிழன் குரல்” எனும் நூலின் மறுபதிப்பு, “ஆழி” பதிப்பக வெளியீடாக வருகிற புத்தகக் கண்காட்சியில் வெளிவர இருக்கிறது. செம்பதிப்பாக வெளிவரும் இப்புத்தகத்தின் பதிப்பாசிரியர் தி.பரமேசுவரி.
தமிழன் அன்றும் இன்றும், புதிய தமிழகம், தமிழகத்தில் தமிழரசு, தமிழரசில் தமிழின் நிலை, தமிழரும் தாழ்த்தப்பட்டோரும், சோஷலிசத் தமிழரசு, புதிய தமிழகத்தின் நிலப்பரப்பு முதலான பல கட்டுரைகளும், அப்போதைய திருவாங்கூர் தமிழகப் படம், சித்தூர் மாவட்டப் படம், இந்தியாவில் இனவாரி நாடுகள் படம் முதலான விளக்கப் படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.இப்புத்தகத்திலிருந்து ஒரு பகுதி…….

 

………………………………………………………………………………………………………………………………………………………………………………

 

புதிய தமிழகம்

தமிழ்மொழியைப் போன்றே தமிழ்  நிலத்தின் அமைப்பும் மிகப்  பழமையானது. நில நூல் வல்லாரும்  ஏனைய ஆராய்ச்சியாளர் பலரும் தமிழ் நிலத்தின் தொன்மையை நன்கு ஆராய்ந்து தாங்கள்  கண்ட முடிவை அறிவித்துள்ளனர். அவர்களது முடிவுகள் அனைத்தும்  ஒருமுகமானவையன்று. ஒன்றோடொன்று  மாறுபட்டவையுங்கூட. எனினும், அவற்றில் பெரும்பாலோரால் ஏற்றுக் கொண்டுள்ளதும் நமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் பொருந்தக் கூடியதுமான உண்மைகளை மட்டும் கொண்டு பழைய தமிழகத்தைக் காணுவோம்.

 

ஆதித் தமிழகம்

இன்று நாம் காணும் குமரி  முனைக்குத் தெற்கே ஒரு காலத்தில்  மிகப் பெரிய நிலப்பரப்பு  இருந்ததாகத் தெரிகிறது. அது எவ்வளவு தூரம் நீண்டிருந்தது  என்பதை வரையறுத்துக் கூற  இயலவில்லை. ஆனால், அந்த நிலப்பரப்பு மிக நீண்டும் விரிந்தும் இருந்தது என்று மட்டும் ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர். ஆதியில் மனிதன் முதன்முதலாகத் தோன்றியது அந்தப் பகுதியில்தான் என்றும் சொல்லப்படுகின்றது.

அந்த நிலப்பரப்பில் பல நாடுகளும், பல ஊர்களும் இருந்தன. பஃறுளி ஆறு, குமரி ஆறு, முதலிய ஆறுகளும், குமரிக்காடு (குமரி மலை) மணிமலை முதலிய மலைகளும் இருந்தன. அந்த நிலப்பரப்பு சிறிது சிறிதாகக் கடலால் கொள்ளப்பட்டு மறைந்தொழிந்தது. இதை,

பஃறுளி  யாற்றுடன் பன்மலை யடுக்கத்து

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

என்ற சிலப்பதிகார வரிகளாலும் அறிகிறோம். இந்த நிகழ்ச்சி  இளங்கோ அடிகளுக்கு மிக மிக  வருத்தத்தைத் தந்தது. ஆகவேதான், “எமது குமரி நாட்டைக் கொள்ளை கொண்டதே அக்கொடுங்கடல்” என்று கொதித்துக் கூறுகிறார் அப்பெரியார். மனிதனின் தோற்றத்துக்கும், மறந்தமிழரின் மாண்புக்கும் உறைவிடமாயிருந்த அந்த தொன்மை நிலம் மறைந்தொழிந்ததை நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் வருத்தந்தானே வேண்டும்.

குமரிநாடு கடல் கொள்ளப்பட்டதால்  அங்கு வாழ்ந்த மக்கள் குமரிக்கு  வடக்கே குடியேறினர். இவர்களது வருகையால் தமிழகம் நாகரீகத்தில் சிறப்புற்றேங்கியது. அரசுகள்  பல தோன்றின. அவை சேர, சோழ, பாண்டிய அரசுகள் எனவும் பெயர் பெற்றன.

 

தென்னிந்தியா

அந்நாளில், விந்திய மலை வரை தமிழரே வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. அப்போது வட இந்தியா இன்றிருப்பதுபோல் நிலப்பரப்பாக இல்லாமல், நீர்ப்பரப்பாகக் காட்சி அளித்தது. பின்னர் நாளடைவில் கடல் நீர் விலகிச் சென்றதால் கங்கையாறும், இமய மலையும் கண்ணுக்கு தோன்றின. அப்போதும் கூட வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே ஒரு சிறிய கடல் இருந்து வந்தது இதனால் வட இந்தியாவும், தென்னிந்தியாவும் ஒன்றோடொன்று நிலத்தொடர்பற்ற தனித்தனி நாடுகளாகவே இருந்து வந்தன.

 

தமிழ் இந்தியா

வட இந்தியாவில் முதன்  முதலாகக் குடியேறியவர்கள். தமிழர்களேயாவர். அவர்கள்  மரக்கலங்களின் துணையால் கடலைக் கடந்து அங்கு குடியேறினர். தமிழர் தங்கள் உழைப்பால், வறண்டு கிடந்த வட இந்தியாவை வளமுள்ள நாடாக்கினர். தமிழரது அறிவால் வட இந்தியா நாகரீகத்தில் சிறந்து விளங்கியது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் பிரித்து வந்த நீர்ப்பரப்பு நிலப்பரப்பாக மாறியது. அப்போது தான் இன்றுள்ள பூகோள இந்தியா உருவாயிற்று. குமரி முதல் இமயம் வரை பல ஆறுகளையும், மலைகளையும் தன்னகத்தே கொண்டு இயற்கை வளங்களுடன் பரவிக்கிடக்கும் இந்த நிலப்பரப்புதான் அன்று தமிழ் இந்தியா. அந்த தமிழ் இந்தியாவில் அன்று தமிழரே வாழ்ந்தனர்; தமிழ் மொழியே வழங்கியது; தமிழர் நாகரிகமே தழைத்தது. தமிழ் மன்னர் குமரி இமயம் வரை ஒரு மொழி (தமிழ் மொழி) வைத்து  அரசாண்ட செய்தியைத் தமிழ் இலக்கியங்களிலும் காண்கிறோம். இந்த உண்மையை சிந்து நதிக்கரை யோரத்தில் மண்ணில் மறைந்த ஹரப்பா, மொஹஞ்சொதரா நாகரீகமே அறிவிக்கும் இந்த நாகரீகம் இன்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதுவரை  நாம் கூறியவற்றிலிருந்து இன்று எந்த நிலப்பரப்பை  இந்தியா என்று நாம் அழைக்கிறோமோ  அதுதான் சரித்திர காலத்துக்கு  முற்பட்ட பண்டைத் தமிழகம் – தமிழரின் தாயகம். அதனால்தான் கால்டுவெல் துரைமகனாரும் கூட ‘தமிழர் தான் இந்தியாவின் பூர்வ குடிகள்’ என்று கூறினார். அதுபோலவே, இந்தியர்களின் தொன்மையான நாகரீகம் என்பதும் தமிழர் நாகரீகமேயாகும். தமிழர் நாகரீகம்தான் – மக்கள் நாகரீகம். அது இந்து நாகரீகமோ முஸ்லீம் நாகரீகமோ அல்ல. அந்த நாகரீகம் சாதி அறியாதது; சமயம் கடந்தது; சமரச சன்மார்க்கம் நிரம்பியது.

குமரி நாட்டைக் கடல் கொண்டதால்  தென்னிந்தியாவில் குடியேறிய  தமிழர் இயற்கையின் சீற்றம்  வந்த இடத்திலும் தங்கள் வாழ்வைக் கெடுக்குமோ என அஞ்சினர். எனவே அம் மக்கள் கன்னித் தெய்வத்தின்  திருவுருவத்தைக் கடற்கரையில்  வைத்து வழிபட்டனர். அதன் காரணமாகவே  இன்றைய தமிழகத்தின் தெற்கு முனைக்கு கன்னியாகுமரி என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் தமிழரது  ஆட்சியில் இருந்த காலத்தில்  தான் வடக்கே கைபர் கணவாய் வழியாக வெளி நாட்டார் அணியணியாக  இந்தியாவை அணுகலாயினர். அவர்கள் பல நிறத்தினர்; பல மொழியினர் என்றாலும், அவர்களில் முதன்மையானவர் ஆரியரேயாவர். நாடோடிகளாய்த் திரிந்து வந்த அவர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் தங்களுக்கென நாடு பெற்றதோடு நாகரீகமும் பெற்றனர்.

வடக்கே பிற நாட்டினர்  அணியணியாக குடியேறியதின்  காரணமாகத் தமிழர் தெற்கு நோக்கிப் பின் வாங்கலாயினர். இதனால் இந்தியாவின் தொன்மைக் குடிகளான தமிழரின் நிலம்  குடியேறிய மக்களான ஆரியருக்கும் பிற இனத்தவருக்கும் உரியதாயிற்று. தமிழ் இந்தியாவின் வடக்குப் பகுதி ஆரிய இந்தியாவாக மாறியது.

 

வடவேங்கடம் – தென்குமரி

இறுதியாகக் கடைச் சங்க காலத்தில் அதாவது கி.மு200 லிருந்து தமிழ் நாட்டின் எல்லை, குமரி முதல் வேங்கடம் வரை என்று சுருங்கிற்று. தமிழில் மிகப்பழைய நூல் தொல்காப்பியம். அந்த நூலுக்கு பாயிரம் எழுதியவர் பனம்பாரனார். அதில்,

வடவேங்கடந்  தென்குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல்லுலகம்

என்று அவர் பாடியுள்ளார். பனம்பாரனரின் பரம்பரையில்  வாழையடி வாழையாகத் தோன்றி வந்த புலவர் பெருமக்கள் பலரும் கூட தங்கள் தங்கள் நூலில் தமிழகத்தின் எல்லை, வடவேங்கடம் – தென் குமரி என்றே வற்புறுத்துவாராயினர். நமது காலத்துப் புலவராகிய பாரதியாரும்,

நீலத்திரை கட லோரத்திலே நின்று

நித்தந் தவஞ் செய் குமரிஎல்லை – வட

மாலவன்  குன்றம் இவற்றிடையே புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.

என்று பாரறியப் பறை சாற்றினார். எனவே, பனம்பாரனார் காலத்திலிருந்து பாரதியார் காலம் வரை தமிழகத்தின் எல்லை வடக்கே திருப்பதியும் தெற்கே குமரிமுனையும் என்ற கொள்கை உறுதிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், இன்று தெற்கெல்லையான குமரி முனையும் அதைச் சேர்ந்த இரண்டாயிரம் சதுர மைல் நிலப்பரப்பும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் – மலையாளிகள் ஆட்சியில் அகப்பட்டிருக்கிறது.

வடக்கெல்லையான திருப்பதி  மலையும் அதைச் சேர்ந்த  சில தாலுக்காக்களும் சித்தூர் ஜில்லாவில் சேர்க்கப்பட்டு ஆந்திரர்களின் ஆதிக்கத்திலிருந்து வருகின்றன.

புதுக்கோட்டைப் பிரதேசம் மன்னரின் ஆட்சிக்குட்பட்ட  தனியரசாங்கமாகத் திகழ்வதால் தமிழகத்தோடு கலக்காமல்  இந்திய யூனியனோடு நேரடித்  தொடர்பு வைத்துக் கொண்டுள்ளது.

புதுவை, காரைக்கால் ஆகிய தமிழ்ப்பகுதிகள் பிரெஞ்சுக்காரர் களின் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

எனவே, இன்று நாம் காணும் தமிழகம் வடக்கே இமயத்தை எல்லையாக்கிக் கொண்டிருந்த பண்டைத் தமிழ் இந்தியா அல்ல. விந்தியத்தை எல்லையாகக் கொண்ட தென்னிந்தியாவுமல்ல. வேங்கடத்தை எல்லையாக உடைய பனம்பாரனார் கண்ட தமிழ் நாடுமல்ல.

வடக்கே ஆந்திரர்கள் அபகரித்ததும், தெற்கே மலையாளிகள் கொள்ளை கொண்டதும் போக எஞ்சியுள்ள நிலத்தையே தமிழகம் என்று சொல்லி வருகிறோம்.

சென்னை மாகாணத்தின் தற்போதுள்ள ஜில்லாக்கள் பிரிவினை அதில்  வாழும் மக்களின் விருப்பதின்  மீது செய்யப்பட்டதல்ல. ஆளப்படுவோரின்  கருத்துக்கு மாறாக ஆளுவோதால்  செய்யப்பட்டதேயாகும். ஆகவே, மொழிவாரி மாகாணங்களைப் பிரிக்கையில், ஒரு பிரதேசம் எந்த இனத்துக்கு உரியது என்பதை அந்த பிரதேசத்தின் இயற்கை அமைப்பு அதன் பண்டை வரலாறு இலக்கியச் சான்று, அதில் வாழும் மக்களின் மனப்பண்பு ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும். இதற்கு விரோதமாகச் செய்யப்படும் எந்த முடிவும் நிலைத்து நிற்காததோடு மேற்கொண்டு உள்நாட்டுப் பகைமைக்கு வித்திடுவது போன்றுமாகும்.

இனி, வருங்காலத்தில் குமரி முதல் வேங்கடம் வரை தமிழகம் அமைய வேண்டுமென்பதே தமிழர் கோரிக்கை. அந்தப் புதிய தமிழகத்தை அடைவதற்குக் குறுக்கே நிற்கும் எவரையும், அவர்கள் எந்த இனத்தவராயினும் அவர்களுக்கு நமக்குள் உள்ள பண்டைத் தொடர்புகள் எதுவாயினும் அதைப்பற்றிக் கவலை கொள்ளாது போரிட்டே தீருவோம்.

சொத்தைப் பறிக்க முயல்வோரிடம் சொந்தம் பாராட்டுவது தன்மானமற்ற செய்கை. அது தமிழ்ப் பண்பாட்டிற்கு  உடன் பாடானதும் அல்ல. தமிழர் இழந்த பிரதேசங்களை மீண்டும் அடைந்தே தீர வேண்டும்.

 

திருவிதாங்கூர் தமிழகம்

தமிழ் நாட்டின் தெற்கெல்லையை அபகரிக்க மலையாள ஆதிக்கவாதிகள்  திட்டமிட்டு விட்டனர். துண்டுபட்ட மலையாள நிலங்களை ஒன்றுபடுத்தி ஐக்கிய கேரளம் காண ஆசைப்படுகின்றனர். திருவிதாங்கூர் சமஸ்தானம், கொச்சி, மலபார் ஆகிய மூன்று பிரதேசங்களையும் ஒன்றுபடுத்தி  காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை ஐக்கிய கோளம் அமைக்க மலையாளிகள் ஆசைப்படுகின்றனர். அவர்களது ஆவலை நாம் வரவேற்கிறோம். அது நிறைவேற வேண்டுமென்றும் வாழ்த்துக் கூறுவோம். ஆனால் ஐக்கிய கேரளத்தில் தமிழருக்குரிய தென் திருவிதாங்கூரையும் மற்றும் சில பகுதிகளையும்  சேர்த்துக் கொள்ள நினைப்பது அறிவற்ற செய்கை. அதிலும் ஏகாதிபத்திய உணர்ச்சிக்கு எதிரிகள் என்று பறைசாற்றிய காங்கிரஸ் மலையாளிகள் இந்த இழிசெயலில் இறங்குவது காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைக்கும் வரலாற்றுக்குமே முரண்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு அமைதிக்குக் கேடு சூழ்வதுமாகும். தமிழ் நாட்டின் தெற்கெல்லையைப் பற்றி சிறிது விரிவாக ஆராய்வது அவசியமாகும்.

திருவிதாங்கூரின் மக்கள் தொகை 1941-ம் ஆண்டு கணக்குப்படி அறுபது லட்சத்து ஏழாயிரம். இதில் தமிழர்கள் எண்ணிக்கை சுமார் பன்னிரண்டு லட்சமாகும். மலையாளிகள் நாற்பத்தைந்து  லட்சத்தினர். பிறமொழி பேசுவோர் ஏழாயிரம். மேற்சொன்ன பன்னிரண்டு லட்சம் தமிழர்களும் திருவிதாங்கூரின் தென் தாலுக்காவில் சேர்ந்தாற்போல் வாழுகின்றனர்.

இவ்வாறு தமிழர்கள் பெருவாரியாக  வசிக்கும் பகுதிகள் தமிழ்நாட்டோடு  சேர்க்கப்பட வேண்டியதே. இதற்கு வசதியாக மேற்படி  ஊர்கள் தமிழ் ஜில்லாக்களைச்  சேர்ந்தாற்போல் இருப்பதைப் பிறிதோரிடத்திலுள்ள படத்தில் காணலாம்.

மேற்படி ஊர்களின் மொத்த  விஸ்தீரணம் இரண்டாயிரம்  சதுர மைல்களாகும். (திருவிதாங்கூரின் மொத்த விஸ்தீரணம் ஏழாயிரத்து அறுநூற்று அறுபத்திரண்டு  சதுர மைல்கள்) அதாவது திருவிதாங்கூரின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு தமிழ் நிலம்.

தமிழர்களுக்குரிய பகுதியில்  நாஞ்சில் நாடு எனப்படும்  தென் திருவிதாங்கூர் நில  வளம் படைத்தது. தமிழ்நாட்டிக்குத்  தஞ்சை ஜில்லா எப்படி நெற்களஞ்சியமாக விளங்குகிறதோ அதுபோலவே திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதற்கும் நாஞ்சில்நாடு நெற்களஞ்சியமாக விளங்குகிறது. திருவிதாங்கூர் தமிழர்கள் உழைத்துப் பயிர்செய்து  அங்குள்ள மலையாள மக்களுக்கு உணவளித்துக் காக்கிறார்கள்  என்றால் மிகையன்று.

குளச்சல் என்ற இடத்தில் துறைமுகம் ஒன்றும் இருக்கிறது. உலக நாடுகளின் கருத்தைக்  கவர்ந்துள்ள அணுகுண்டு  செய்வதற்கு மூலப்பொருளான தோரியம் இங்குதான் இருக்கிறது.

மற்றும், திருவிதாங்கூரில் தமிழர்க்குரிய தேவிகுளம், பீருமேடு ஆகிய தோட்டப் பிரதேசங்களில் தான் ரப்பர், தேயிலை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தத் தோட்டங்களில் பாடுபடும் தொழிலாளர்கள் நூற்றுக்கு நூறு தமிழர்களே யாவர். இவ்வாறு திருவிதாங்கூரின் வளர்ச்சிக்கும், மலையாளிகளின் வாழ்விற்கும் உழைத்துவரும் தமிழர்களின் உரிமையை அங்கீகரிக்க மலையாளிகள் மறுப்பாராயின் இதைவிட நீதியற்ற செயல் வேறு இருக்க முடியாது.

ஐக்கிய  கேரளத்தை அமைக்க திருவிதாங்கூர் மலையாளிகளுக்கு உரிமை உண்டானால், அதை எதிர்க்கும் சக்தியைத் தகர்க்க உணர்ச்சியுண்டானால் அது போலவே புதிய தமிழகத்தைக் காணும் உரிமையும் திருவிதாங்கூர் தமிழர்களுக்கு உண்டு என்பதை மலையாளிகள் ஒப்புக்கொள்ள மறுப்பானேன்?

 

வடக்கெல்லை

இனி, தமிழகத்தின் வடக்கெல்லையான திருப்பதியைப் பற்றி கவனிப்போம். சித்தூர் ஜில்லாவில் திருப்பதி அடங்கியிருக்கிறது. இந்தச் சித்தூர் ஜில்லா ஏனைய ஆந்திர ஜில்லாக்களோடேயே வைத்து எண்ணப்படுகிறது. சென்னை சர்க்காரின் அமைப்புப்படி சித்தூர் ஜில்லாவை, ஆந்திர ஜில்லாவென்றே, தமிழ் ஜில்லாவென்றோ சொல்வதற்கில்லை. என்றாலும் வழக்கத்தில் அது ஆந்திர ஜில்லாக்களோடு வைத்துத்தான் கணக்கிடப்படுகிறது. காங்கிரஸ் அமைப்பிலும் கூட சித்தூர் ஜில்லா ஆந்திர மாகாண காங்கிரசோடுதான் சேர்க்கப்பட்டிக்கிறது.

சித்தூர் ஜில்லாவின் வரலாறு என்ன? 1911 ம் ஆண்டுதான் அந்த ஜில்லா சிருஷ்டியாயிற்று. அதற்கு முன்பு வரை சென்னை மாகாணத்தில் சித்தூர் ஒரு தனி ஜில்லாவாக இருந்ததில்லை. ஆந்திர ஜில்லாவான கடப்பாவிலிருந்து மதனபள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு தாலுக்காக்களையும் தமிழ் ஜில்லாவான வட ஆற்காட்டிலிருந்து திருத்தணி, திருக்காளத்தி, திருப்பதி, சித்தூர், புத்தூர், புங்கனூர், சந்திரகிரி, பலமனேரி ஆகிய தாலுக்காக்கள் அல்லது பிரதேசங்களையும் ஒன்றாக்கி சித்தூர் ஜில்லா உருவாக்கப்பட்டது. சித்தூர் ஜில்லாவின் மொத்த விஸ்தீரணம் 5951 சதுர மைல்கள். அதில் சுமார் 4313 சதுர மைல்கள் தமிழகத்துக்குரியதாகும்.

சித்தூர் ஜில்லாவின் சிருஷ்டியைப்பற்றி  அந்த ஜில்லா மக்களின் அபிப்ராயத்தைக் கேட்கவே இல்லை. ஆளுவோராயிருந்த ஆங்கிலேயரின் ஆணைப்படி நடந்த  செயலே இது. ஏகாதிபத்தியம், ஆந்திரருக்கும் தமிழருக்கும் இடையே பகைமையை மூட்டச் செய்த ஏற்பாடே இது என்றால் மிகையாகாது. தமிழ் நிலத்தைத் துண்டாடும் இந்த அநீதியைத் தமிழ்ப் பெருமக்கள் பலர் அன்றே எதிர்த்தனர்.

தமிழகத்தின் வடக்கெல்லையைப் பற்றி தமிழரிடையே கூட ஒரு  தெளிவான அபிப்ராயமும் திடமான உணர்ச்சியும் இருப்பதாகத்  தெரியவில்லை. காரணமென்ன? சித்தூர் ஜில்லாவின் சிருஷ்டியைப் பற்றிய வரலாறு தெரியாததேயாகும். எனவே, திருப்பதி மீண்டும் திரும்புவது கடினம் என்ற முடிவுக்கே இவர்கள் வந்துவிடுகின்றனர். இந்த மயக்கத்தைப் போக்கி தமிழகத்தின் வடக்கெல்லையை மீண்டும் கைப்பற்ற தமிழரிடையே ஊக்கமும் உறுதியும் தோன்றச் செய்ய வேண்டியது இன உணர்ச்சியுள்ள ஒவ்வொரு தமிழரது கடமையாகும்.

சித்தூர் ஜில்லாவில் திருப்பதி  மலை வரை உள்ள மக்களிடையே தெலுங்கு மொழி பேசுவோர் அதிகமாகக்  காணப்படுகின்றனர் என்று  வாதிக்கப்படுகின்றது. இது  ஓரளவு உண்மைதான். என்றாலும்  தெலுங்கு பேசுவோரெல்லாம் ஆந்திரர்கள் என்று முடிவு செய்வது பொருந்தாக் கூற்றேயாகும். திருப்பதிவரை உள்ள தெலுங்கு பேசும் மக்களில் பெரும்பாலோருக்குத் தமிழும் நன்கு தெரியும். அதுமட்டுமல்ல. அவர்களது வாழ்க்கைப் பண்பாடும் தமிழ்ப் பண்பாட்டோடு  தொடர்புடையதேயாகும். சான்றாகத்  தமிழ் நாட்டிலுள்ள ரெட்டியார், நாயுடு, செட்டியார் போன்ற சாதியினர் தமிழையே வாழ்க்கை மொழியாகக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அவர்கள் தெலுங்கு பேசுவதினாலேயே அவர்களைத் தமிழகத்துக்கு அந்நியராகவோ அவர்கள் வாழும் நிலத்தை ஆந்திர நாட்டின் ஒரு பகுதியாகவோ நாம் எண்ணுவதில்லை; எண்ணவும் முடியாது. அது போலத்தான் சித்தூர் ஜில்லாவிலும் தமிழர்க்குரிய நிலத்தில் வாழும் மக்கள் தெலுங்கு மொழியைப் பேசுகிறார்கள் என்ற காரணத்தால் அவர்களை ஆந்திரராகவும் அவர்கள் வாழும் நிலத்தை ஆந்திர நாட்டின் ஒரு பகுதியாகவும் எண்ணுவது கூடாது. அவர்கள் தமிழர்கள்; அவர்கள் வாழும் பகுதி தமிழ் நிலம்; தமிழினத்தின் தாயகம். இதில் யாதொரு ஐயமுமில்லை.

வேங்கடத்தைச் சுற்றியுள்ள  மக்கள் தெலுங்கு பேசக் காரணம் என்ன? அது அவர்களது தாய்மொழி என்பதனால்ல. அந்தப் பகுதி ஆந்திர நாட்டின் எல்லையாக இருப்பதாலும் அங்கு வாழும் தமிழ் மக்கள் ஆந்திரர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தமையாலும் தெலுங்கு மொழியை அவர்கள் கற்றே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனாலேயே அவர்கள் வாழும் நிலம் ஆந்திரர்களு டையதாக ஆகி விடுமா?

மேலும், திருப்பதி மலையை இழந்து விட்டால் தமிழகத்தின் வடக்கெல்லை பாதுகாப்பாற்றதாக ஆகிவிடும். ஏற்கனவே வட ஆற்காடு ஜில்லாவில் ஆந்திர மொழியும், ஆந்திரர்களது நாகரீகமும் அதிகமாகப் பரவி வருகிறது. கடல், மலை ஆகியவை போன்ற  இயற்கை அரண்கள் ஒரு நாட்டின் எல்லையாக அமைந்தாலொழிய பக்கத்து நாட்டின் பண்பாட்டிலிருந்தும் படையெடுப்பிலிருந்தும் அந்த நாடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சக்தியற்றுக் கிடக்கும். இது உலகறிந்த உண்மை. எனவே தமிழகத்தின் தெற்கெல்லைப் பாதுகாப்புக்காக திருவிதாங்கூர் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டியது எவ்வளவு அவசியமோ அதைவிட வடக்கெல்லையைப் பாதுகாக்கத் திருப்பதி மலையைத் திரும்ப பெறுவதும் மிக மிக அவசியமும் அவசரமும் ஆகும்.

 

புதுக்கோட்டைத் தமிழரசு

புதுக்கோட்டை சமஸ்தானத்தையும்  புதிய தமிழகத்தோடு சேர்த்தேயாக  வேண்டும். அது ஒரு தனி  சமஸ்தானமாக இருப்பதால் சில  அரசியல் சிக்கல்கள் எழலாம். என்றாலும் எப்படியேனும் சிக்கல்களைத் தீர்த்து அதைத்  தமிழகத்தோடு சேர்த்தேயாக  வேண்டும். புதுக்கோட்டையின் விஸ்தீரணம் 1185 சதுர மைல். அதன் மக்கள் தொகை 438348 பேர். அங்குவாழும் மக்களும், ஆளும் மன்னவரும் தமிழினத்தைச் சேர்ந்தவர்களாதலால் வேறு சில இடங்களைப் போன்று அங்கு மொழித் தகறாரோ, இனத்தகறாரோ எழுவதற்கு நியாயமில்லை.

 

பிரெஞ்சுத் தமிழகம்

புதுவை, காரைக்கால் ஆகிய இரண்டு தமிழ்ப் பிரதேசங்களும் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றன. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் அகன்ற பின்னரும் கூட பிரஞ்சுத் தமிழகம் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து இன்னமும் விடுபட்ட பாடில்லை.

புதுச்சேரி, தென்னாற்காடு ஜில்லாவின் மத்தியில் இருக்கிறது. இது சுமார் 123 சதுர மைல்கள் கொண்டது. இதில் வாழுவோர் 187870 பேர். அங்கு மூன்று ஆலைகள் இருக்கின்றன.

காலைக்கால் பிரதேசம் தஞ்சை  ஜில்லாவின் நடுவில் இருக்கிறது. சுற்றளவு சுமார் 60 சதுர மைல்கள். மக்கள் தொகை 60447 பேர்.

பிரெஞ்சுத் தமிழகத்தில்தான்  இந்தியாவில் எங்குமே இல்லாதவாறு பூமிக்குழாய்ப் பாய்ச்சலில்  உழவுத் தொழில் நடைபெறுகிறது.

 

சென்னை நகரம்

தமிழகத்தின் தெற்கெல்லை வடக்கெல்லையைப் பற்றிய தகராறுகள் மட்டும்  அல்லாமல் தமிழ்நாட்டின்  தலைநகரான சென்னையைப் பற்றியும்  தாவா வந்துவிட்டது. ஆந்திரர்கள்  சென்னை தங்களுடையதென்று  சொல்லுகின்றனர். சொல்லுவது  மட்டுமல்ல. சென்னை ஆந்திர நாட்டின் தலைநகராயிருந்ததால் அங்கு  ஆந்திரர்கள் எவ்வளவு ஆதிக்கம் பெற இயலுமோ அவ்வளவுக்குக்  குறையாமல் அவர்கள் இன்றே  ஆதிக்கம் பெற்றுள்ளனர்.

சென்னை நகரில் ஆந்திரர்களுக்கு  எவ்வித உரிமையும் இல்லை. 1941ல் சென்னையின் மக்கள் தொகை எட்டு லட்சம். அதில் ஒன்றரை லட்சம் பேர்தான் தெலுங்கு பேசுவோர். அவர்களிலும் மிகப்பெரும்பாலோர் நாயுடு, செட்டியார் போன்ற சாதியினரேயாவர். அவர்கள் தமிழ் நாட்டாரே ஒழிய ஆந்திரநாட்டார் அல்ல. ஏனெனில் தமிழே அவர்கள் வாழ்க்கை மொழி. தமிழகமே அவர்கள் தாயகம். தமிழர் பண்பாட்டின் வழியே அவர்கள் பழக்க வழக்கங்களும் அமைந்துள்ளன. அவர்கள் தமிழகத்தில் குடியேறிய ஆந்திரர்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட வீட்டில் தெலுங்கு பேசுவது ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் அவர்களுக்கும் ஆந்திரர்களுக்கும் எவ்வித உடன்பாடும் இல்லை. எனவே, ஆந்திர ஆதிக்கவாதிகள் அவர்களின் எண்ணிக்கையைக் காட்டி சென்னையில் உரிமை கொண்டாடுவது நாணயமற்ற செய்கை.

மேலும், சென்னையிலுள்ள தெலுங்கர்களின் எண்ணிக்கையைக் காட்டி சட்டசபை போன்ற பொதுவிடங்களில் பெறக்கூடிய பதவிகளை குண்டூர் நரசிம்மராவ், டங்கட்டூர் பிரகாசம் போன்ற ஆந்திர நாட்டைத் தாய் நாடாகக் கொண்டு தலைநகரம் என்ற காரணத்தால் சென்னைக்குக் குடியேறி வாணிபமும் வக்கீல் தொழிலும் புரியும் ஆந்திரர்கள் அடைகின்றனரே யொழிய தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு சென்னையில் நிரந்தரக் குடிகளாக வாழும் நாயுடுகளுக்கோ, செட்டியார்களுக்கோ கிடைப்பதில்லை. இது ஒன்றே ஆந்திர ஆதிக்கவாதிகள் சென்னைத் தெலுங்கர்கள் மீது சொந்தம் பாராட்டுவது சுய நலத்திற்காகவே என்பதை விளக்கும்.

சென்னையின் வரலாற்றைப் பார்த்தாலும் கூட தமிழகத்தின்  வரலாற்றோடுதான் ஒட்டியிருக்கிறது. பண்டைத் தமிழகத்தில் சென்னை நகரம் தொண்டை மண்டலத்தில்  ஒரு பகுதியாகவே இருந்து  வந்திருக்கின்றது.

பூகோள அமைப்புப்படி பார்த்தாலும் கூட சென்னை நகரம் தமிழகத்திற்கு  உள்ளடங்கிய கடற்கரைப் பிரதேசமாக  இருந்து வருகிறதேயொழிய  ஆந்திர தேசத்தின் எல்லைப்  பிரதேசமாக இருக்கவில்லை.

சென்னை நகரத்தில் நாகரீகமும் தமிழருடையதேயாகும். சைவ  நாயன்மார்களில் தலைசிறந்த  திருஞானசம்மந்தரின் தேவாரத்தில்  “மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சுர மமர்ந்தான்” என்ற வரிகளில் வரும் மயிலை சென்னை நகரைச் சார்ந்ததல்லவா?

திருக்குறளை உலகத்தின்  பொதுமறையாக்கி தமிழினத்துக்கு வான்புகழ் தேடிய வள்ளுவப் பெரியார் வாழ்ந்ததும் அதே  மயிலையில் அல்லவா?

சாதி, சமயச் சழக்கெல்லாம் கடந்தேறி சமரச சன்மார்க்க சமயத்தைத் தோற்றுவித்த இராமலிங்க வள்ளலார் வாழ்ந்ததும், ‘தருமமிகு சென்னை’யென்று அவர் வாயார வாழ்த்தியதும் இதே சென்னை நகரத்தையல்லவா?

சென்னையில் காணும் சிற்பக்  கலைகளும்கூட ‘சென்னை தமிழருடையதேயென’ முழக்கமிடுகின்றன. மக்கள் கலை உணர்வோடு ஒழுக்கத்திலும் உயர்ந்து வாழட்டும் என்று நம் முன்னோர் கட்டிய மயிலை கபாலீசுவரர், திருவல்லிக்கேணி பார்த்தசாசதி, ‘ஜார்ஜ் டவுன்’ கந்தப் பெருமானார் ஆகிய கடவுளர் ஆலயங்களெல்லாம் தமிழ்ச் சிற்பிகளின் கலைத் திறனை – தமிழ்ப் பாட்டாளி மக்களின் கையுழைப்பைக் காட்டவில்லையா?

‘சென்னையை முற்றும் தராவிட்டாலும் பாதியாகவேனும் பகிர்ந்து கொடுங்கள்’ என்று பரிதாபமாகக் கெஞ்சுகின்றனர் ஆந்திரர். அந்தப் பாதியும் வட சென்னையாகத்தான் இருக்க வேண்டுமாம். இதற்குக் காரணமென்ன? கூவத்துக்கு வடக்கே தான் கோட்டையிருக்கின்றது. வெளிநாட்டு வாணிபத்திற்கேற்ற துறைமுகம் இருக்கின்றது. உள்நாட்டு வாணிபத்துக்குத் துணை செய்ய கொத்தவால்சாவடி போன்ற நாளங்காடிகளும் சீன பசார் போன்ற அல்லங்காடிகளும் அங்கேதான் இருக்கின்றது. அதனாற்றான் ஆந்திரர்கள் வட சென்னையைக் கேட்கின்றனர். தமிழர்கள் சென்னையில் பாதியைப் பறிகொடுத்தாலும் கூட தமிழகத்தின் வளம் முழுவதும் பறிபோகும்; தமிழரின் வாழ்வு பாழாகும். இதை நினைத்தாலே ஆத்திரம் பொங்குகிறது.

சென்னையைப் பொறுத்தவரையில் ஆந்திரர்கள் இன்னொரு தந்திரத்தைக் கையாளுகின்றனர். அதாவது ‘சென்னையில் ஆந்திரர்களுக்குரிய பங்கு எவ்வளவு என்பதை எல்லைக்குழுவின் தீர்ப்புக்கு விட்டுவிடுவோம்’ என்பதே அந்தச் சூழ்ச்சி. தமிழ்த் தலைவர்களும், தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிக்கைகளும் இந்தக் கருத்தை ஆமோதிக்கின்றன. இவர்களின் அறியாமைக்கு, ஆண்மையற்ற தன்மைக்கு இதை விட வேறு ஆதாரம் வேண்டியதில்லை.

சென்னையில் ஆந்திரர்கள்  உரிமை கொண்டாடுவதே நேர்மையற்றது; அறிவுக்குப் பொருந்தாதது. சென்னையைப் பற்றிய வரலாறு, மக்கள் தொகை, பண்பாடு, மக்கள் மனப்பான்மை ஆகிய எதுவும் அவர்கள் வாதத்துக்குத் துணை செய்யவில்லை. அப்படியிருக்க இந்தப் பிரச்சினையை எல்லைக் குழுவுக்கு அனுப்புவது எப்படி நியாயமாகும்?

மேலும் எல்லைக் கமிஷனின் ஒரே வேலை மாகாணத்திற்கும்  இன்னொரு மாகாணத்திற்கும்  இடையேயுள்ள எல்லையைப்பற்றி தீர்ப்புக் கூறுவதேயாகும். சென்னை நகரம் ஆந்திரநாட்டின் எல்லையில் இல்லை. பல மைல்களுக்கு  அப்பால் எட்டியிருக்கிறது. எனவே, எல்லையில்லாத மக்கள் எண்ணத்திற்குப் பொருந்தாத எழுதிவைத்த எட்டிலுமில்லாத சென்னையைப் பற்றி எல்லைக் கமிஷன் தீர்ப்பளிக்க என்ன நியாயமுண்டு?

ஆந்திரர்கள் சென்னையைப் பற்றிய பிரச்சினையை எல்லைக் கமிஷனுக்கு அனுப்ப வேண்டுமெனக் கேட்பது  எதனால்? ஒருக்கால் சென்னையைப் பாதியாக பங்குபோட முடியவில்லை யென்றால் ஆந்திரத்துக்கும் தமிழகத்திற்கும் பொதுநிலமாகவேனும் செய்துவிடலாம் என்ற எண்ணத்தாலேயாகும். எல்லைக்கமிஷனும் இந்த முடிவுக்கு வரும் என்று நம்புவதற்கு இடமிருக்கின்றது. பி.என்.ராவின் திட்டமே இந்த எண்ணத்தில்தான் எழுந்தது.

ஒருவேளை எல்லைக்கமிஷன்  நகரமக்களிடையே வாக்கெடுத்து முடிவுசெய்ய விரும்பலாம். இதுவும் நீதியற்றது. மிகமிக அபாயமானதும் கூட. வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஆந்திரர்களுக்கும்  தமிழர்களுக்கும் தான் உரிமையுண்டா? அல்லது நகரக் குடிமக்கள் என்ற காரணத்தால் மலையாளிகள், கன்னடர்கள், குசராத்திகள் போன்ற பிற இனத்தவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுமா என்பது தெளிவாகவில்லை. ஒருவேளை அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை அளிக்கப்படுமானால் என்ன ஆகும்? சென்னையைப் பொதுவாக்க வேண்டுமென்ற கொள்கைக்கே அவர்கள் ஆதரவு அளிப்பர். கொள்ளையடிப் போரிடையே கூட்டுறவு தோன்றுவது இயற்கைதானே? இந்நிலையில் நகரப் பொதுமக்களிடையே வாக்கெடுப்பது என்பது சென்னையில் தமிழருக்குள்ள உரிமையைத் தட்டிப் பறிப்பதற்குப் பயன்படுமே ஒழிய பாதுகாப்பதற்கு வழிகாட்டாது. எனவே, சென்னை விஷயத்தில் எல்லைக் கமிஷன் தலையிடுவதற்கு தமிழர்கள் இடமளிக்கக்கூடாது. அவசியமானால் எல்லைக் கமிஷனை பகிஷ்கரிக்கவும் தயாராக வேண்டும்.

இதுவரை  நாம் கூறியவற்றிலிருந்து தமிழகத்தின் எல்லை குமரி  முதல் வேங்கடம் வரை என்பதற்கு  இலக்கியம், வரலாறு, தற்போதைய நிலை ஆகியவையாவும் துணை செய்கின்றன என்பதை நடுநிலைமையுடன் நோக்குவோர் எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். எனவே திருப்பதியை ஆந்திரர்களிட மிருந்தும் திருவிதாங்கூர் தமிழகத்தை மலையாளிகளிடமிருந்தும், பிரஞ்சுத் தமிழகத்தை பிரான்சு ஆதிக்கத்திலிருந்தும் மீட்டு புதியதோர் தமிழகத்தைக் காண தமிழர் முயற்சி செய்ய வேண்டும். அந்தப் ‘புதிய தமிழகம்’ நம் கண் முன்னே தோன்றிக் கொண்டிருக்கிறது. நாம் கற்பனையில் காணும் அந்தத் தமிழகத்தை தமிழினத்தார் கண்ணெதிரே காணப்போவது திண்ணம். அந்த நாள் வெகு தூரத்திலில்லை.

•••

Advertisements