பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் செர்வான்ட்டிஸும் டான் குயிக்ஸாட்டும் ஓர் அறிமுகம் கி. அ. சச்சிதானந்தம்

 

செர்வான்ட்டிஸும் டான் குயிக்ஸாட்டும்
ஓர் அறிமுகம்

 
கி. அ. சச்சிதானந்தம்

 

 

 

கடந்த நானூறு ஆண்டுகளாக மேலைநாட்டு இலக்கியப் படைப்பாளிகளைப் பாதித்து வருகிறது டான் குயிக்ஸாட் என்ற இந்த ஸ்பானிஷ் மொழி நாவல். இதன் ஆசிரியர் செர்வான்ட்டிஸ்; இவரும் ஷேக்ஸ்பியரும் சமகாலத்தவர்கள். இருவருமே ஒரே நாளில் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. செர்வான்ட்டிஸ் பல நாடகங்களை எழுதினார். ஆனால் அவருக்குப் பணமோ, புகழோ கிடைக்கவில்லை. மாறாக ஷேக்ஸ்பியர் எண்ணற்ற நாடகங்களை எழுதிப் பணமும், புகழும் பெற்றார். செர்வான்ட்டிஸ் தனது டான் குயிக்ஸாட் நாவலினால் மட்டுமே புகழ் பெற்றார். இறுதிவரை செர்வான்ட்டிஸ் வறுமையில் வாடினார். பல்வேறு காரணங் களுக்காக அவர் பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
மிகுல் டீ செர்வான்ட்டிஸ், 1547ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் நாள் ஸ்பானிஷ் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டிலிருந்து வெகுதூரத்தில் உள்ள அல்கலா என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ரோட்டிகோ ஓர் அறுவை சிகிச்சை நிபுணர்; தாயார் லியோநார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள்; செர்வான்ட்டிஸ் நான்காவது பிள்ளை. செர்வான்ட்டிஸின் இளமைப்பருவத்தில் அவரது குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டே யிருந்தது. 1550இல் அல்கலாவில் இருந்து வல்லடோலட்டுக்குச் சென்றனர். பிறகு அங்கிருந்து 1555இல் செவில்லி என்ற நகருக்கு இடம்பெயர்ந்தனர். அந்த நகரத்தில் லோப் டீ ரூடா என்பவரின் நாடகக் குழு முகாமிட்டிருந்தது. அவரது நாடகக் குழுதான் ஸ்பெயின் நாட்டில் முதன் முதலாகத் தோன்றிய கலைக்குழு. இக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் செர்வான்ட்டிஸின் கலையார் வத்தைத் தூண்டிவிட்டன. செர்வான்டிஸின் குடும்பம் 1566ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டுத் தலைநகரான மேட்ரிட் நகருக்குச் சென்று அங்கேயே வாழ்ந்துவரத் தொடங்கியது.
மேட்ரிட் நகரில் ஜுவன் லோபிஸ் டீ ஹோயோஸ் என்ற மனிதாபிமானமிக்க ஆசிரியரிடம் கல்வி பயின்றார். கல்வி கற்றபின், மறைந்த வேலாய்ஸ் இராணி எலிஸபெத்திற்காக இரங்கற்பா எழுதும் பணி செர்வான்ட்டிஸிடம் ஒப்படைக்கப் பட்டது. மறைந்த இராணி எலிஸபெத் அரசர் இரண்டாம் ஃபிலிப் அவர்களின் மனைவி. அவர் எழுதிய இரங்கற்பாக்களே செர்வான்ட்டிஸின் முதல் இலக்கியப் படைப்புகள். 1569ஆம் ஆண்டு திடீரென்று செர்வான்ட்டிஸ் ஸ்பெயின் நாட்டை விட்டு இத்தாலிக்குச் சென்றுவிட்டார். இதற்கான உண்மைக் காரணம் தெரியவில்லை. நகரில் நடந்த ஒரு கை கலப்பில் தன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என சந்தேகிக்கப்பட்டே அவர் இத்தாலிக்குச் சென்றிருக்க வேண்டும். இத்தாலி சென்ற செர்வான்ட்டிஸ் ரோம் நகரில் கார்டினல் அக்குவா விவா அவர்களின் இல்லத்தில் பணி செய்துவந்தார். அவர் ஸ்பெயினைவிட்டு வெளியே பதினேழாண்டுகள் வாழ்ந்திருக்கிறார். துருக்கிய ஆட்டோமான் பேரரசை எதிர்த்துக் கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதியில் போரிட, ஸ்பெயின் இராணுவம், இத்தாலியின் சுதந்திர மாநிலங்களின் இராணு வங்கள், போப்பாண்டவரின் இராணுவம் ஆகியவை இணைந்த ஒரு ‘புனிதக்குழு’ (ஹோலி லீக்) அமைக்கப்பட்டது. அந்தக் கூட்டு இராணுவப்படையில் 1570ஆம் -ஆண்டு சேர்ந்தார் செர்வான்ட்டிஸ். லிபேன்கிரிஸ்டோ என்ற இடத்தில் 1571ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் நேரடியாக ஈடுபட்டுச் சண்டை யிட்டார் செர்வான்ட்டிஸ். இந்தச் சண்டையில் செர்வான்ட்டிஸ் படுகாயம் அடைந்தார். அவரது இடதுகரம் செயலிழந்து போனது. 1575ஆம் ஆண்டு தனது தாய்நாட்டிற்குத் திரும்ப கப்பலில் பயணம் செய்த போது அவர் பயணம் செய்த கப்பல், மூர் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டது. ஒரு பிணைக்கைதியாக செர்வான்ட்டிஸ் அல்ஜியர்ஸ் கொண்டு செல்லப்பட்டார். தப்பிச் செல்ல அவர் எடுத்த பல முயற்சிகள் பலனளிக்கவில்லை. அல்ஜியர்ஸில் செர்வான்ட்டிஸ் ஐந்து ஆண்டுகள் அல்லல்பட்டார். இப்படி செர்வான்ட்டிஸ் அவதிப் பட்டிருந்தபோது ஃபிரே என்ற கிறித்துவ பாதிரியார் பிணைத் தொகை கொடுத்து செர்வான்ட்டிஸை அடிமைத்தளையில் இருந்து விடுதலைசெய்தார். இத்தொகையில் பெரும்பகுதியை செர்வான்ட்டிஸ் குடும்பத்தினர் அரும்பாடுப்பட்டு கொடுத்தனர். பிறகு 1580ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய செர்வான்ட்டிஸ்க்கு ஃபிரான்கோ டீ ரோஜா என்ற ஒருத்தி யுடன் தொடர்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் இஸபெல் டீ சாவேத்ரா. செர்வான்ட்டிஸ், ஃபிரான்கோ டீ ரோஜாவைத் திருமணம் செய்து கொள்ள வில்லை. அதற்கு இவரது ஏழ்மை ஒரு காரணமாக இருந்திருக் கலாம் அல்லது அந்தப் பெண் ஸ்பானிஷில் அக்காலத்தில் இருந்த மரியாதைக்குரிய பரத்தையர் சமூகத்தில் ஒருத்தியாக இருந்திருக்கலாம். திருமணம் செய்துகொள்ளாமல் ஆண் களுடன் உறவு வைத்துக்கொள்ளும் பரத்தையர்கள் ஸ்பானிஷில் இருந்தார்கள். அத்தகைய பெண்கள் அந்த சமூகத்தில் மதிப்புக் குரியவர்களாகவும் இருந்தனர். அச்சமூகத்தில் இது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஏற்பாடாக இருந்தது.
பிறகு செர்வான்ட்டிஸ், கேட்டலினா டீ சலாஸர் என்ற, தன்னைவிட இருபது வயது குறைந்த ஒரு பெண்மணியை மணந்துகொண்டார். இத்திருமணத்தின் மூலம் அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. செர்வான்ட்டிஸ் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அருகில் இளம்பரத்தை கொலையுண்டு இறந்து போனார். இவளின் மரணத்திற்கு செர்வான்ட்டிஸ் குடும்பம் உடந்தையாக இருந்தது என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது குடும்பத்தினர் முழுவதும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மணமான சில ஆண்டுகளிலேயே தம்பதிகள் பிரிந்து வாழத் தொடங்கினர். செர்வான்ட்டிஸின் அலைந்து திரியும் வாழ்க்கைமுறை, தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தது போன்றவையே அவர்களது பிரிவுக்கான காரணங்கள். தம்பதியரிடையே காணப்படும் பொருத்தமின்மை, மண முறிவு, பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் போன்றவை அவரது சிறுகதைகளிலும், இடைப்பட்ட சிறு நாடகக் காட்சிகளிலும், ‘டான் குயிக்ஸாட்’ புதினத்தின் பல இடங்களிலும் இடம் பெறுவதை நம்மால் காணமுடிகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் 30க்கும் மேலாக நாடகங்கள் எழுதியும் செர்வான்ட்டிஸிக்குச் சரியான வருமானம் கிடைக்க வில்லை. எப்பொதும் பணத்திற்குத் தட்டுபாடுதான். பின்னர் படைக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக்கொடுக்கும் தரகராக வேலைசெய்தார். இந்தத் தொழிலும் ஏமாற்றம்தான். பின்பு வரிவசூலிக்கும் வேலையை மேற்கொண்டார். அத்தொழிலையும் அவர் சரிவரச் செய்யாததால் 1592ஆம் ஆண்டில் ஒருமுறையும் 1597ஆம் ஆண்டில் ஒருமுறையும் செர்வான்ட்டிஸ் சிறைச் செல்லநேர்ந்தது. 1603ஆம் ஆண்டு செர்வான்ட்டிஸ் தன் மனைவி, மகள் மற்றும் உடன்பிறந்தவர் களுடன் வல்லாடோலட் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார்.
செர்வான்ட்டிஸ் டான் குயிக்ஸாட் நாவலின் முதல் பாகத்தை 1604ஆம் ஆண்டு எழுதிமுடித்தார். இந்த நூல் 1605ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. டான் குயிக்ஸாட் நாவல் ஒரே ஆண்டில் ஏழு பதிப்புகளைக் கண்டது என்றாலும் செர்வான்ட்டிஸிக்குப் போதிய பணம் கிட்டவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அவரது நூல் திருட்டுத்தனமாக அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதுதான்.
1606இல் மீண்டும் அவர் மேர்ட்டிக்குத் திரும்பினார். அங்கு அவரது 12 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பு வெளியிடப்பட்டது. டான் குயிக்ஸாட் நாவலை செர்வான்ட்டிஸ் எழுதாமலிருந்திருந்தாலும் இந்தத் தொகுப்பு அவருக்கு இலக்கியப் புகழைக் கொண்டுசேர்த்திருக்கும் தகைமை கொண்டது.
1619ஆம் ஆண்டு டான் குயிக்ஸாட் நாவலின் இரண்டாம் பகுதியை ஒருவன் எழுதி வெளியிட்டுவிட்டான். இப்படிப் பட்ட இலக்கிய மோசடிகளையும் செர்வான்ட்டிஸ் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. பிறகு இந்த நாவலின் உண்மையான இரண்டாம் பாகம் 1615ஆம் ஆண்டு செர்வான்ட்டிஸால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. 1616ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செர்வான்ட்டிஸ் இயற்கை எய்தினார். அவரது கடைசி புத்தகமான ‘பெர்ஸைல்ஸ் மற்றும் சிகிஸ் முண்டாவின் சாகசங்கள்’ 1617ஆம் ஆண்டு, அவரது மறைவுக்குப் பின் பதிப்பிக்கப்பட்டது.
டான் குயிக்ஸாட் என்கிற சாதரண கனவானும் அவனது நண்பன் சான்க்கோ பான்ஸாவும் மேற்கொள்ளும் கிறுக்குத் தனமான ‘வீரதீர’ நடவடிக்கைகளை இந்த நாவலில் செர்வான்ட்டிஸ் சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார். இந்நாவலுக்கு ஒவ்வொரு நூற்றாண்டிலும் புகழ்மிக்க எழுத்தாளர்களால் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு விளக்கங்களுக்கு இடம் கொடுப்பது தான் ஒரு உயர்ந்த நாவலின் இலக்கணம். அப்படிப்பட்ட ஒரு விளக்கத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.
செர்வான்ட்டிஸ் காலத்தில் ஸ்பானிஷ் நாடு பல்வேறு போர்களைச் சந்தித்து தோல்வியைத் தழுவி தனது செல்வங் களை இழந்து சிதிலமாகக் கிடந்தது. ஆனால் அதன் ஆன்மா தோல்விகளை மறந்து, வீரம் நிறைந்து காணப்பட்டது. இதன் உருவகம் தான் டான் குயிக்ஸாட் என்று சொல்லப்படுகிறது. அக்கால ஸ்பானிஷ் சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றமாய் இந்த நாவல் வெளிப்படுகிறது.
டான் குயிக்ஸாட் நாவல் இளைஞர் முதல் முதியவர் வரை அனைத்துத் தரப்பினரும் படித்து மகிழக்கூடிய சுவாரஸ்யமான நாவல். இந்நாவல் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக 1900லிருந்து 1937வரை உள்ள காலக்கட்டத்தில் 19 ஜப்பானிய மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன.
நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் முதன் முதலாக இந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி யிடப்படுகிறது.