பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் வீணையின் குரல்: எஸ். பாலசந்தர் (ஒரு வாழ்க்கை சரிதம்) விக்ரம் சம்பத் தமிழில்: வீயெஸ்வி

 

பதிப்பக அலமாரி   காலச்சுவடு பதிப்பகம்

வீணையின் குரல்: எஸ். பாலசந்தர்  (ஒரு வாழ்க்கை சரிதம்)   விக்ரம் சம்பத்  தமிழில்: வீயெஸ்வி

 

 

தன்னுடைய கம்பெனி அடைந்த நஷ்டத்திலிருந்து மீண்டு வர பாலசந்தருக்கு நீண்ட நாள் ஆனது. தனது குடும்பத்திற்குப் போதிய நிதி ஆதாரம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது, அடையாறு பகுதியில் சிறிது நிலம் வாங்கி, தன் மகன் ராமனின் பெயரில் இரண்டு மாடி வீடு ஒன்றும் கட்டினார் அவர். திரைப்படம் மற்றும் இசை வாழ்க்கைக்கு மயிலாப்பூர்தான் பொருத்தமான இடம் என்று அவர் கருதியதால், அடையாறு வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டார். சினிமா தோல்விக்குப் பின்னர் நிதி விஷயத்தில் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது அவரது மந்திரமானது.

இரண்டு வருடங்களுக்குப் பின்பு, அவரது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பாலசந்தரின் இன்னொரு மாஸ்டர் பீஸான ‘பொம்மை’ வெளிவந்தது. அது, ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் மர்மக் கதைகளில் ஒன்றின் தழுவல். ஒரு பொம்மையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. பொம்மைக்குள் ஒரு டைம் பாம் வைத்துவிடுகிறார், கொடூர மனம் கொண்ட விஞ்ஞானி பிரபாகர். ஆடியன்ஸை விரல் நகம் கடித்தபடி ஸீட் நுனியில் பதைபதைப்புடன் உட்கார வைத்த படம் இது. டைம் பாம் எந்த நேரமும் வெடித்து, பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை கொன்றுவிடப் போகிறது என்ற எதிர்ப்பார்பிலேயே அவர்கள் இருந்தார்கள். இருப்பினும், விபரீதம் தவிர்க்கப்பட, ‘நல்ல வேளை, குழந்தை தப்பித்தது’ என்ற ஆறுதல் வார்த்தைகள் தியேட்டரில் எதிரொலித்தன. இதில் முக்கிய வேடமேற்று நடித்தார் பாலசந்தர். டைரக்ட் செய்தார். வித்வான் லட்சுமணன் எழுதிய ஆறு பாடல்களுக்கு அருமையாக இசை அமைத்தார்.

எல்லா பாடல்களுமே பெரிய ஹிட். குறிப்பாக, சஹானா ராகத்தில் பி. சுசீலா பாடிய ‘எங்கோ பிறந்தவராம் . . . எங்கோ வளர்ந்தவராம்’ மற்றும் ‘நீதான் செல்வம், நீதான் அமுதம்’ பாடல்கள். இருந்தாலும், மிகவும் பிரபலமான பாடல், ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ என்ற நிதானமான, சாந்தமான, தத்துவார்த்தமான பாடல். படைத்தவனின் கைகளில் மனித இனம் முழுதும் வெறும் பொம்மைகளே என்பதை எடுத்துச் சொல்லும் பாடல் இது. இதைப் பாடியவர் இளம் கே.ஜே. யேசுதாஸ் – இன்று மிகப் பெரிய பாடகர்! தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு ‘பிரேக்’ கிடைத்தது எத்தனை பெரிய விஷயம் என்று தான் பூரித்துப் போனதை நினைவு கூர்ந்தார் யேசுதாஸ். ஐம்பது இசைக் கலைஞர்களுடன், பெரிய வாத்தியக் குழுவில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் பாடியிருக்கிறார்கள் என்பது பற்றிய கதைகளையெல்லாம் அவர் கேள்விப்பட்டிருந்தாராம். ஆனால், ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கொஞ்சமான இசைக்கருவிகளின் பக்க வாத்தியத்துடன் எத்தனை மெதுவாக முடியுமோ அத்தனை மெதுவான டெம்ப்போவில் பாடச் சொல்லியிருக்கிறார் பாலசந்தர். “இந்தப் பாடல் எனக்கு பெற்று தந்த வெற்றிக்கெல்லாம் காரணம் பாலசந்தர்தான் . . .” என்கிறார் யேசுதாஸ்.

தான் படம் எடுக்கும்போது ஒவ்வொரு அம்சத்திலும் அதிகபட்ச அக்கறை காட்டக் கூடியவர் பாலசந்தர். உதாரணமாக, ‘பொம்மை’யில் நடிக்க வைக்க ஒரு பக்காவான வாக்கி – டாக்கி பொம்மையைத் தேடி நீண்ட நாட்கள் அலைந்திருக் கிறார் அவர். அமெரிக்காவிலிருந்து ஒரு பொம்மையை வாங்கி வரவும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், கிடைக்கவில்லை. ஒருநாள், அவரும் ஆனந்தனும் பாரீஸ் கார்னரில் நடந்து சென்றிருக்கிறார்கள். அங்கே, விளையாட்டு பொம்மைகள்விற்கும் கடை ஒன்றில்தான் சினிமாவுக்காக கற்பனை செய்து வைத்திருந்த பொம்மை இருப்பதைப் பார்த்திருக்கிறார். குஷியான அவர், கடைக்குள் சென்று, எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு பொம்மைகளாக வாங்கிவிட்டார்! “படத்தில் நீங்களும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வேண்டியிருக்கும்” என்று தன் தொழில்நுட்பக் கலைஞர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்லியிருக்கிறார். நடிப்பைப் பற்றி எதுவுமே தெரியாது என்றாலும், சொன்னதை செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. “எனக்குக்கூட படத்தில் டாக்டராகவும், பி.ஆர்.ஓ.வாகவும் இரட்டை வேடங்கள் . . .” என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் ஆனந்தன்.

ஹிட்ச்காக் தம்முடைய படங்களில் செய்தது போலவே, ‘பொம்மை’ படத்தின் முடிவில் திடீரென்று தோன்றிய பாலசந்தர், ஆடியன்ஸை சில நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருக்க சொல்லிவிட்டு, ஒவ்வொரு நடிகரையும், படக் குழுவினரையும் அறிமுகப்படுத்தினார். படத்தில் இந்த வகையில் அத்தனை பேரையும் அறிமுகம் செய்தது (Rolling Credits) அதுவே முதல் தடவை.

‘பொம்மை’ கமர்ஷியலாக பெரும் வெற்றி அடைந்து, ‘அவனா இவன்’ படத்தில் பாலசந்தர் அடைந்த நஷ்டங்களிலிருந்து அவரை மீண்டு வர வைத்தது. அதே வருடத்தில் இன்னொரு படம் (நடு இரவில்) எடுக்கவும் தூண்டியது. 1939இல் பிரசுரமான ‘Ten Little Niggers’ என்ற அகதா கிறிஸ்டி நாவலின் தழுவல் இது. படம் எடுத்து முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் எந்த விநியோகஸ்தரும் அதை வாங்க முன்வரவில்லை. பாலசந்தர் பதற்றம் அடைந்தார். தானே அதை வெளியிடுவது என்ற முடிவுக்கு வந்தார். ‘நடு இரவில்’ 1970இல் ரிலீஸானது. படம் பெரிய ஹிட். முதலில் நிராகரித்த விநியோகஸ்தர்கள் எல்லாம், தங்களுக்கு வெளியிடும் உரிமையைக் கொடுக்கும்படி பாலசந்தரை கெஞ்சினார்கள்! மெட்ராஸில் பல வாரங்கள் ஹவுஸ் ஃபுல்லாக படம் ஓடியது. நூறு நாள் மைல் கல்லையும் தொட்டது. இந்தப் படத்தின் முடிவில் ஆடியன்ஸ் எழுந்து நின்று டைரக்டருக்கு கைத்தட்டிப் பாராட்டியிருக்கிறார்கள்.

சோகம் நிறைந்த படத்தின் மையக் கருவை பாடல்கள் எதிரொலித்தன. ‘கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்’ என்ற பி. சுசீலா பாடிய பாடலும், எல்.ஆர். ஈஸ்வரி பாடிய, ‘நாலு பக்கம் ஏரி, ஏரியிலே தீவு, தீவுக்கு ஒரு ராணி, ராணிக்கு ஒரு ராஜா’ பாடலும் மனதை வருடின. எல்.ஆர். ஈஸ்வரியின் இந்தப் பாடலுக்கு பியானோ இசை, எதிர்பாராத வயலின் இடைச்செருகல்களுடன் கூடுதல் பலம் சேர்த்தது.

சினிமா உலகில் பாலசந்தரின் அந்தஸ்து வளர, அவருடைய புகழும் உயர்ந்தது. முக்கியமாக, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர் பிரபலமானார். கேன்ட்டீன்களிலும், ஹாஸ்டல்களிலும் அவருடைய படங்கள் அலசப்பட்டன. ஒரு பக்கம் புகழும், முக ஸ்துதிகளும் வந்துகொண்டிருந்தாலும், ‘நடு இரவு’ படப்பிடிப்பு முடிந்ததும், பட உலகிலிருந்து விலகிவிட முடிவு செய்துவிட்டார் பாலசந்தர். 1970களில் பொதுவாக இந்திய சினிமா உலகிலும், குறிப்பாக தமிழ் சினிமாவில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. மையக் கருக்களில், விவேகத்தில், மனோபாவத்தில் மாற்றம் தெரிந்தது. கண்டிப்பும், கடமை உணர்வும் அரிதானது. பாலசந்தர் மாதிரியான பழமைவாதிகள், மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. தவிர, ‘அவனா இவன்’, ‘நடு இரவில்’ போன்ற சொந்தப் படங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்கள், பாலசந்தருக்கு சினிமா உலகில் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருந்தன. அது ஏற்படுத்தக்கூடிய தலைவலிகள் கவலைகொள்ளச் செய்தன. தன்னுடைய சங்கீதம் மன அமைதியும், நிம்மதியும், திருப்தியும் கொடுக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, கச்சேரி ஏற்பாடு செய்பவர்கள், கூட்டம் சேர்க்க தன் சினிமா அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்துவதாக நினைத்தார். வீணை வித்வானாக தன் திறமைகளைப் பற்றி பேசாமல், நாளேடு விளம்பரங்களும், சுவரொட்டிகளும் ‘சிறந்த இயக்குநர், திறமைமிக்க நடிகர், தரமான தயாரிப்பாளர்’ என்ற அடைமொழிகளுடன் கச்சேரிக்கு விளம்பரம் செய்தன. ஒரு முறை, கச்சேரிக்காக ஈரோடு சென்றபோது, மக்களை கவர்வதற்காக பாலசந்தரின் சினிமா பின்னணியை ஆடம்பரமாக விளம்பரப்படுத்திய பேனர் பாலசந்தரின் கண்களில் பட்டது. கோபத்தால் முகம் சிவந்த அவர், உடனே காரைத் திருப்ப சொல்லி மெட்ராஸ் வந்துவிட்டார்! கலவரமான நிர்வாகிகள் போன் செய்து காரணம் கேட்க, கச்சேரிக்காக மலிவான விளம்பரம் செய்திருந்த அவர்களை வறுத்து எடுத்துவிட்டார். வீணை வித்வானாக மட்டுமே தான் அறியப்பட வேண்டும் என்பதே பாலசந்தரின் விருப்பம். தன்னுடைய இசை வாழ்க்கை, தன் சினிமா வெற்றிகள்மீது குதிரை சவாரி செய்வதை வெறுத்தார் அவர்.

எஸ்பி கிரியேஷன்ஸ் மற்றும் வெற்றிகரமான தன் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, முழுக் கவனத்தையும் இசையிலும், வீணையிலும் செலுத்த பாலசந்தர் முடிவு எடுத்ததற்கு இவை எல்லாம்தான் காரணமாக இருக்க வேண்டும்.

(நூலின் ஒரு பகுதி)

தலைப்பு : வீணையின் குரல்: எஸ். பாலசந்தர்

(ஒரு வாழ்க்கை சரிதம்)

ஆசிரியர் : விக்ரம் சம்பத்

தமிழில்: வீயெஸ்வி

ISBN: 978-93-81969-52-6

முகவரி:

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி. சாலை,

நாகர்கோவில் 629001.

E-mail: publications@kalachuvadu.com

Advertisements