பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் குன்னிமுத்து குமாரசெல்வா

குன்னிமுத்து
குமாரசெல்வா

(நாவலின் ஒரு பகுதி)

 

 

கண்ணீர்த்துளி ஊற்றுக்குத் தெற்கே உயர்ந்தோங்கி நின்ற மகாகனி மரங்களில் படர்ந்து தெறித்தன குன்னி முத்துக்கள். ஒரு பாறையையே முழுசாக மூடி இரத்த மலையின் தோற்றம் தந்த அதனைப் பார்க்கும்போது கிழவிக்கு அழுகை அழுகையாக வந்தது. கண்களுக்கெட்டும் தொலைவில் அது போன்ற பாறைகள் நிறைய இருந்தாலும் குறிப்பிட்ட அந்த குன்னிமுத்துக்கள் மூடிய பாறையை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தன கண்கள். பாறையின் அடிவாரம் பெருங்குகை. அதில் இறந்துபோன மனிதர்களின் எலும்புக்கூடும், மண்டையோடுகளும் கிடப்பதாக வந்து ஆட்கள் கூறுவார்கள்.

அவள் ஒரே ஒருநாள்தான் அந்தக் குகையினுள் நுழைந் திருக்கிறாள். அதன்பிறகு அந்தப் பயங்கரத்தைக் காணக்கூடிய சக்தி அவளுக்கு இல்லை. எனவேதான் அதற்கு மேலிருக்கும் பாறையைப் பார்த்துக்கொண்டிருப்பதை வழக்கமாகக்கொண்டாள். சிலநேரங்களில் அவளுக்கு அது சமாதி போலத் தெரியும். சிலநேரங்களில் மனித தலைபோலத் தெரியும். காலங்காலமாக அவள் அதைப் பார்த்து அழுதுகொண்டிருக்கிறாள். முப்பது வருடங்களுக்கு முன்பு இருளியாக இருந்து அழுதாள். இப்போது கிழவியாக இருந்து அழுகிறாள்.

அவளுக்குப் பெயரில்லை. உடல்தான் அடையாளம். தலை நரைக்காமல் இளமையான தோற்றத்தில் இருந்தபோது மற்ற பெண்களைப் போல அவள் அழகாகத்தான் இருந்தாள். நேரடிப் பார்வையில் எந்த வித்தியாசத்தையும் மற்றவர்கள் அவளிடம் காணமுடியாது. அவளிடம் குறையைக் கண்டவர்கள் ‘இருளி’ என்று அழைத்தபோது உலகமும் அவளை அவ்வாறு அழைத்தது. அந்தப்பெயரையும் அவள் ஏற்றாள். கிழவி என்று தற்போது அழைத்தபோதும் அதையேதான் ஏற்றுக்கொள்கிறாள்.

அந்தப் பாறையில் சிதறி இருந்த இரத்தத் துளிகளை அவளுடையதாகவே நினைத்தாள். இயற்கை அவளுக்குள்ளிருந்து இரத்தம் கக்குவதாக கற்பித்துக்கொண்டாள். அதன்மூலம் விலகிப்போன ஒன்றோடு அவள் இயைந்தாள். அந்தத்துளிகள் பாறையினடியில் நிஜத்துளிகளாக ஒருநாள் உதிர்ந்து கிடந்ததைக் கண்டபோது தனது இரத்தம்தான் என்ற உறுதி இன்னும் அதிகமாக அவளுக்குள் ஏற்பட்டது. தகப்பன் பாச்சாடியின் இரத்தம் தனது இரத்தம்தானே. தாயை அவள் கண்டதே இல்லை. பிறப்பிலேயே முடிந்துபோன உறவு அது. அப்பாவின் வியர்வைத்துளிகள் தன்னைப் போஷித்த காலத்தில் அவர்களுக் கிடையில் இருந்த உயிர்சம்பந்தம் ஒளியாகத் துளிர்த்தது. அந்த வெளிச்சத்தையே விளக்காகப் பற்றி அவள் தனது இருளை நீத்தாள். அந்த விளக்கு ஒரு நாள் அணைக்கப்பட்டது இந்தப் பாறைக்குகையின் அடியில்தான் என்பது அவள் உணர்வோடு சங்கமித்த இருளாகிப்போனது.

வண்டாளம் ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் அவளிடம் அன்பாகவே இருந்தான். திருமணமான நாட்கள் என்ற போதிலும் ஒரு வேறுபாடு தெரிந்தது. அவன் குணநலன்களில் பெரியதாக வித்தியாசம் தென்படாவிட்டாலும் குடும்ப வாழ்க்கைக்குள்ள ஒழுங்கு சிலநேரங்களில் வெளிப்பட்டதுதான் எல்லோருக்குமான ஆச்சரியம். பங்கிராஸ் வைத்தியர் போட்ட மோதிரத்தைக் கழற்றி விற்றுக் குடித்தாலும், வீட்டுக் கூரையை மாற்றி ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்டான். பாதிரியார் ஒருவரைப் பலதடவைகள் நெருக்கி அவரது தயவால் கழிவறையையும் கட்டிமுடித்தான். வீட்டு வளாகத்தில் அது அமைந்த போதிலும் ஒருநாள் கூட அவன் அதனைப் பயன்படுத்தியது இல்லை. பழையதுபோல விளைகளையும், திறந்தவெளிகளையுமே நம்பினான்.

திருமணமான புதிதில் நடராசனுடனான கூட்டுக்கட்டை நிறுத்தியதான ஒரு இடைவெளி தெரிந்ததும் வீடும், உறவும் கொஞ்சம் உருப்பட்டது போன்ற தோற்றம் பெற்றது. பிறரை அவ்வளவு சீக்கிரத்தில் நல்லாக விட்டு விடுவானா நடராசன்? வீடு தேடிவந்து வண்டாளத்திடம் நட்பு பாராட்டத் தொடங்கினான். கூடவே ஜாடை மாடையாகப் பேசவும் செய்தான்.

“ஆளு முன்னையவிட கலர்வச்சிருக்கு.”

“யாரு?”

“ஒன்னத்தான், வேற யாரை செல்லியேன்?”

“நான் கலர்வைக்க முடியுமா நடராசா? என்ன வேளம் சொல்லிய?”

“கல்யாணத்துக்குப் பெறகு நல்ல சாப்பாடோ?”

“இது என்னடேய் கேள்வி?”

“ஊக்கமான சாப்பாடு போலத் தெரியிது.”

“என்ன தெரியது?”

“மினுக்கம் வரவர கூடுது.”

“மினுக்கமா?”

“ஆமா. மிருக்கு வளரியது போல உள்ள மினுக்கம்.”

“நீ என்னடே செல்லிய?”

“முள்ளுமிருக்கு மினுமினுப்பு மூணுநாளுதான்ணு அய்யா வைகுண்டர் பாடி இருக்காரு.”

“அத என்னத்துக்கு செல்லிய?”

“மிருக்கு பருத்தா சாளத்தடிக்குத்தான் ஒதவும்.”

“நீ சொல்லியது எதுவுமே மனசிலாகல்ல. காலத்தே தண்ணி போட்டியா?”

பிறகொருநாள் வயலங்கரையில் வைத்து இருளியை வழிமறித்த நடராசன் சிலவிஷயங்கள் பேச உள்ளதாகத் தெரிவித்தான். எதுவானாலும் வீட்டில் வந்து பேசுமாறு அவள் கூறவே முகங்கறுத்து நோக்கினான்.

அவளை விடாமல் வழிமறித்து நின்றான் அவன்.

“எனக்குப் போணும், வழிவிடுங்க.”

“ஏன், நிண்ணு பேசமாட்டியா?”

“பாக்கியவிய தப்பா நெனைப்பினும்.”

“ஒன்ன யாரும் அப்பிடி நெனச்சமாட்டினும்.”

“எனக்குப் போகணும்.”

“பெரிய யோக்கியம் காட்டாதே.”

“நான் ஒண்ணும் அப்பிடி நெனச்சல்ல.”

அவள் பேசத் தொடங்கியதும் அவன் சற்றுதளர்ந்து குழைவாகப் பேசினான். அவளை எப்படியாவது தனது வழியில் கொண்டுவந்து வீழ்த்துவது அவன் நோக்கமாக இருந்தது.

“வீட்டில சும்மா கெடக்கியதுக்கு வேலைக்கு என்னதாவது போவப்பிடாதா?”

“எனக்கு என்ன வேலை தெரியும்?”

“எல்லாரும் தெரிஞ்சிட்டா வேலைக்குப் போவினும்? பெய் படிச்ச வேண்டியதுதான்.”

“யாரு வேலை தருவா?”

“நான் தாறேன், எனக்கிட்ட வாறியா?”

“ . . . . . . . .”

“ஏன் மிண்டாத நிக்கிய?”

“எனக்கு வேண்டாம்.”

“பின்ன யாரு தருவாண்ணு கேட்டே? நான் தந்தா வேண்டாம், வேற யாராவதுண்ணா போவியா?”

“வழிய விடுங்க.”

“ஒனக்கு எந்தப் பயமும் வேண்டாம். ஏண்ணா, மற்ற பெண்ணுவ போல இல்ல நீ.”

“ . . . . . . . . . .”

“ஒன்ன என்ன செய்தாலும் எந்த அபகடமும் வராது. அதினால மாப்பிள அறியமாட்டான்.”

அவள் அவனை தள்ளிக்கொண்டு பாய்ந்து முன்னேறிச் சென்று வேகமாக நடந்தாள். அவளை நிற்குமாறு அவன் சத்தம்போட்டு கூறினான். அவள் காது கொடுக்காமல் ஓடித் தப்பியது மேலும் அவன் கோபத்தைக் கிளறியது.

“ஓடுடி, ஓடு. வண்டாளம் ஒன்ன எப்பிடி கெட்டினாண்ணு உள்ள விஷயம் ஒலகத்துக்கே தெரியும்டி. பெரிய இவ! எண்ணைக்காவது ஒருநாள் ஒன்ன நான் பாக்காம விட மாட்டேண்டி . . .”

அவன் பேசியதை நின்று கேட்க அருள்வாக்கா ஓதினான்? அவள் கம்பி நீட்டிவிட்டாள்.

அன்று மாலை வண்டாளம் நிறைந்த போதையோடு வீட்டுக்கு வந்தான். கதவை ஓங்கி மிதித்ததும் மீன்கறி வைத்துக்கொண்டிருந்த அவள் என்ன எதுவென்று தெரியாமல் எழும்பி நின்றாள். அவளது தலைமயிரைப் பற்றி இழுத்தவன் சரமாரியாக அடிக்கத் தொடங்கினான். ஒருவாறாக பிடியிலிருந்து விடுபட்டு ஒரு மூலையில் போய் பதுங்கிக் கொண்டாள். அவன் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி அவள் மீது வீசி எறிந்தான். அவனிடம் அப்படி ஒரு வெறியையும், ஆவேசத்தையும் அவள் முன்னெப்போதும் கண்டதில்லை. தடுக்க வந்த அவள் தகப்பன் பாச்சாடியைக் கெட்ட வார்த்தை களால் அர்ச்சனை செய்தான்.

“அய்யோ . . . எம்பிள்ளைய எதுக்குப் போட்டு இந்த அடி அடிக்கிதிய? எனக்கு காண பொறுக்கல்லியே . . .”

“லேய் பாச்சாடி! ஒனக்க மொவள ஒலகத்துக்கே கூட்டிக் கொடுத்துதான் வளத்தியோ?”

“இதென்ன பேசுதிய? தின்ன குடிச்ச இல்லாட்டாலும் மரியாதியாத்தானே வளத்தேன்.”

“நல்லா வளத்தே!”

“ஏன் அப்பிடி சொல்லுதிய?”

“இவா செஞ்சத சொன்னா நீயும் அடிப்பே. கையில்லாதவன் வெலைக்கு வாங்கியாவது அடிப்பான்.”

“அப்பிடி என்ன தப்பு எனக்க பிள்ள செய்திட்டு?”

“நடராசனுட்டெ பெய் எனக்கொரு வேலை தருவியாண்ணு கேட்டிருக்கா. அவன் எப்படிப்பட்டவன்ணு ஒலகத்துக்கே தெரியும். வேலைண்ணா என்னாண்ணு மனசிலாச்சா கெழவா?”

“இல்ல.”

“த்தூ . . . நாறப்பயலே! சூடிருந்து பெத்தா இல்லியா அவளுக்கும் சொணை இருக்கும். நாலு பெண்ணுவளுக்கு நடுவில நிக்க யோக்கியதை இல்லாத்த இந்த நாய்க்கு எம்பிடு கொழுப்பு இருக்க வேணும்?”

“அய்யோ, அப்பிடி நான் கேக்கல்ல. அவன்தான் என்ன வழிமறிச்சி நெறுத்தீட்டு வேலைக்குப் போகருதாண்ணு கேட்டான் பாருங்க. சத்தியமா அவனுட்டெ நான் பேசப் போகல்ல.”

“கள்ளத் தேவிடியா, அதவந்து எனக்கிட்ட நீ ஏன் சொல்லேல? அதிலே இருக்கில்லியா கிறுத்திருமம்.”

“பெரீய சண்டை வரும்ணு நெனச்சி பயந்தாக்கும் சொல்லாம இருந்தது.”

“சண்டை வரும்ணு இல்லடி, நல்ல ஒரு பொம்பளைக்கு எதுவும் நடந்தா ஒடனே தெரியும். ஆயிரம் கள்ளமாப்பிள பிடிச்சாலும் இந்த சவத்து ஒடம்பில அது வெளியத் தெரியாதுண்ணு செல்லித்தானே சும்மா இருந்தேடி?”

அவளை ஓங்கி மிதித்து வெளியே தள்ளினான். வீட்டு முற்றத்தில் உதைக்கப்பட்ட பந்துபோல சுருண்டுவந்து அவள் விழுந்தாள்.

“தள்ள இல்லாம வளந்த எக்க மவள நான் ஒருநாளு அடிச்சதில்ல. அவள இப்பிடிப் போட்டுக் கொல்ல என்ன பாவம் செஞ்சா? ஒரு காரணம் வேண்டாமா?”

“லேய் கெழவா, கரையத நெறுத்தீட்டு நான் செல்லியத கவனமா கேளு. இன்னும் நாலு நாள்ல ஆறாயிரம் ரூவாயும் எனக்க கைக்கு வரணும், கேட்டியா?”

“அதப் பெறவுதானே தருவேன்ணு சென்னேன்.”

“பெறவுண்ணா எப்பம்? குழியில எறங்கின பெறவுதான் தருவியோ?”

“இது நியாயம் இல்லாத காரியம்.”

“தல்லு கொள்ளம்ப தெரியும், எது நியாயம், எது நியாயம் இல்லாத்த காரியம்ணு. அப்பனும், மொவளுமா சேந்து எனக்க வாழ்க்கைய தொலச்சிப்போட்டியளே . . .”

அவன் போலியாக ஒப்பாரி வைத்துவிட்டு வெளியே இறங்கி நடந்தான்.

அதன் பிறகு ஒருவாரகாலம் வண்டாளத்தை ஊரில் எவரும் காணவில்லை. ஏதோ கலெக்டரைக் காணாத அக்கறையில் ஊரார் பலரும் அவனைத் தேடி விசாரித்தனர். அன்றாடம் காணக்கூடிய விசேஷகாட்சிகள் பல தவறிப்போனதால் இருக்குமோ அந்த விசாரிப்புகள் என்று சிலர் நினைக்கவும் செய்தனர். நடராசன் இருளியை வழி மறித்ததையோ, வண்டாளம் அவளை அடித்த சம்பவத்தையோ எவரும் அறியவில்லை.

அந்த இடைவெளியில் நடராசன் உள்ளே புகுந்து பலகதைகளை அவிழ்த்துவிட்டான். அது ஊர்முழுக்க கனஜோராக வலம் வந்தது. கேரளாவில் கோயில் ஒன்றில் நடந்த திருவிழாவின் போது வாணவேடிக்கை நடத்தும் குழுவினருடன் சேர்ந்து வண்டாளமும் படுத்துக்கிடந்தான். யாரோ குடித்துப்போட்ட பீடித்துண்டினால் ஏற்பட்ட வெடிவிபத்தில் அவன் இறந்துபோனான் என்ற தகவல் முதலில் வந்தது. பிறகு பைங்குளத்தில் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறான் என்ற தகவல் தொடர்ந்து வந்தது. எல்லாவற்றிலும் சுவாரசியம் கண்ட ஊர்மக்கள் அடுத்த கதை கேட்கத் தயாராக காத்திருந்தனர்.

இருளிக்கு உயிர் போய்விட்டு வந்து கொண்டிருந்தது. அவளைவிட அதிகதுக்கம் பாச்சாடிக்கு. பங்கிராஸ் வைத்தியர் பொறுப்பெடுத்துக் கொண்டதால்தான் இந்தத் திருமணத்திற்கு அவன் சம்மதித்தான். அவர் தேசாந்தரம் போனபிறகு யாரிடம் சென்று முறையிட முடியும்? அவரது மனைவி எல்லா துன்பத் திற்கும் இருளியைக் காரணமாக நினைக்கும்போது அவளை எப்படி சாட்சிக்கு அழைக்கமுடியும்? ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அழமட்டுமே அவர்களால் முடிந்தது.

ஒருவாரம் கழித்து நடராசன் வீடுதேடி வந்தான். பாச்சாடி புத்துயிர் கிடைத்ததைப் போல அவனை எதிர்பார்த்தான். புதிய தகவல் எதாவது தெரியுமா என்று கேட்டான்.

“வண்டாளம் வேற எங்கும் இல்ல. நம்ம ஊரில தான் உண்டு. காணணும்ணா எனக்ககூட வாரும்.”

“எங்க? நான் ஒடனே அவனக் காணணும்.”

“அப்பா போவண்டாம், இதில ஏதோ சூழ்ச்சி இருக்குது.”

“நீ எப்ப என்ன நம்பி இருக்கே? சந்தேகம் இருந்தா நீயும் கூட வாயேன்.”

“மக்கா, ரெண்டுவேரும் போவமே.”

“வேண்டவே வேண்டாம் அப்பா, அவரு இஞ்ச வரட்டும்.”

“பாத்தீரா ஓய், மாப்பிளைக்கு தாற மரியாதை? இப்பிடி ஒரு பெண்டாட்டி இருந்தா எவன்தான் விட்டுட்டு ஓடமாட்டான்?”

“அவா சின்னபிள்ளை, தெரியாம பேசுகா. நீங்க வாங்க. நாம ரெண்டுவேருமா பெய் மாப்பிளைய கூட்டிக்கொண்டு வரலாம்.”

“அவன் பேசியதக் கேட்டா பணம் என்னவோ நீரு பாக்கி வச்சிருக்கீராம். அதக் குடுத்தாத்தான் இனிமே இஞ்ச வருவாம் போல இருக்கு.”

“எப்பம் பிந்தி தரலாம்ணு சென்னேன். அவன் விரும்பினா ஒடனே குடுத்திரலாம். எனக்க மகள் நல்லா இருந்தா அதுவே எனக்குப் போதும்.”

நடராசனும், தகப்பனும் நடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டே நின்றாள் இருளி. தூரத்தில் ஒரு பிளசர் கார் நின்றது. அதில் அவர்கள் இருவரும் ஏறினர். அந்த காட்சி சிறிதுநேரத்தில் மறைந்து போனது.

அந்த இரவு நிலவில்லாத வானமாக இருந்தது. வாழ்க்கையில் முதன்முதலாக தகப்பன் இல்லாத இருளை அவள் கண்டாள். தூரக்கேட்கும் சிறுசத்தமும் அவளிடம் எதிர்பார்ப்பை வரவழைத்தது போலவே பயத்தையும் தந்தது. தகப்பனாக இருக்குமோ என்று எதிர்பார்க்கும்போதே நடராசனாக இருந்தால் என்ற முள் மனதில் தைக்கும். ஒரு ஆணை எதிர்பார்க்கும் வாழ்க்கை அவள் இருளியாக அமைந்த போதிலும் தொடர்ந்தது.

நள்ளிரவு தாண்டியபிறகு அவள் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த காலடி சத்தத்தைக் கூர்ந்து கவனித்தாள். கலவரப்பட்டு நடுங்கியபோது கதவில் கைவிரல் மறித்து தட்டப்படும் ஓசை. வந்தது ஒரு நபராகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதும் அவள் பதட்டம் அதிகமானது. நிச்சயமாக தகப்பன் இல்லை.

“வீட்டில யாரிருக்கா?”

“ . . . . . . . . . .”

“கதவத்தெற”

நடராசன் குரல் கேட்டதும் அவள் கதறி அழுதாள்.

“இங்க வராங்கா, போயிடுங்க!”

வார்த்தைகள் குழற சத்தம் போட்டவள் மயக்கம் வரும் நிலையை அடைந்துவிட்டாள். சுவரில் கையை வைத்துக்கொண்டு நிற்கமுடியாமல் கால்கள் மடங்க ஜன்னலைப் பார்த்தாள். அங்கு நடராசனின் முகம் தெரிந்தது.

“கொப்பன பாம்பு கடிச்சிற்று.”

“அப்பனையா? எங்க வச்சி?”

“ஈயக்குண்டு பாறையில செத்து கிடக்காரு.”

“இருக்காது!”

அவள் அலறினாள்.

“நான் கள்ளம் செல்லேல. வண்டாளம் குகையில படுத்துக் கெடந்தத பாக்கப் போனாக்கில பாம்பு கொத்திச்சி. காதிலெயும், மூக்கிலெயும் ரெத்தம் பாய மயங்கி விழுந்தாரு. நான் பாம்ப அடிச்சிக் கொல்ல வெரட்டீற்று போனேன். அது மாயமா மறஞ்சிப் போச்சி. திலிச்சு வந்து பாத்தா பாச்சாடி செத்துக் கிடந்தார்.”

“அய்யோ . . . எனக்க அப்பா! யாரு உண்டு எனக்கு?”

“கரைஞ்சி விளிச்சு ஊரக் கூட்டாத. போலீஸ் கேசாயிடும். தாகமா இருக்குது. கதவத்தெற, ஒரு கிளாஸ் வெள்ளம் குடிச்சட்டு.”

அவள் தரையில் உருண்டு தலைவிரிக்கோலமுடன் கதறி அழுதாள். அந்த துயரத்தின் குரல் காட்டைத்தாண்டி வெளியே வரவில்லை. உலகம் கண்களை மூடி உறங்கிக்கிடந்தது. மிருகங்கள் இருட்டில் நடமாடிக்கொண்டிருந்தன. வெளிச்சம் வந்தாலும் அவைகளுக்கொன்றுமில்லை. யாரையும் விழுங்கத் தயாராக அலைந்து திரிந்தன.

அதிகாலையில் வெளுக்கும் முன்பு நடராசனும் வண்டாளமும் சேர்ந்து பாச்சாடியின் உடலைத் தூக்கிக் கொண்டு வந்தனர். அவள் கதவைத் திறந்ததும் உள்ளே கொண்டுவந்து கிடத்தினர். முகத்தைப் பார்த்தவள், கண்கள் அவளைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதாகக் கருதினாள். கண்களின் வழியாக உயிர் பிரிந்து சென்றிருக்க வேண்டும். வாய் தன்னை ‘சுந்தரி . . .’ என்று அழைத்த நிலையில் அவர் மரித்தார் போலத்தோன்றியது. அவர் வியாகுலப்பட்டுதான் இறந்திருப்பார் என்ற எண்ணம் எழுந்ததும் கண்களின் வழியாக வெள்ளம்போல வடிந்தது இதயம். வெகுசிரமப்பட்டு அழுகை வெளிப்படாதவாறு பார்த்துக்கொண்டாள். வண்டாளம் அடித்துவிடுவான் என்ற பயம் அவளை சத்தம்போட்டு அழுவதற்கு விடவில்லை.

“கொப்பன பூத்தணும், பைசா என்னவும் வச்சிருக்கியாடி? கல்லுபோல இருக்கியா, கரைச்சி வருதா பாரு?”

“வண்டாளம்! அவளுட்டெ என்னத்துக்கு இப்ப சண்டைக்குப் போற? தள்ளைய பெறக்கம்பளே விழுங்கினா. இப்ப தவப்பனையும் பறிகுடுத்தாச்சி. அடுத்தது நீயாக்கும். பாத்தெடுத்து பரிமாறு.”

“என்ன நொட்டுவா.”

“கொப்பனுக்க பணம் என்னெங்கிலும் கையில உண்டாண்ணு கேளு. ஒருவேள கடைசி காலத்துக்குண்ணு எதாவது குடுத்து வச்சிருப்பான்.”

“ஏண்டி பேசாம இருக்கிய?”

“கெழவனுக்க பெட்டி படுக்கைகள சோதிச்சு பாரு.”

வண்டாளம் எல்லாவற்றையும் கடைந்து பார்த்தான். எதுவும் கிடைக்கவில்லை. கிழவனின் ரேஷன்கார்டு கண்ணில் பட்டதும் நடராசன் அதைக் கையில் எடுத்தான்.

“இது என்னத்துக்கு?”

“என்னத்துக்கா? கெழவன் செத்தாண்ணுள்ள மரண சர்ட்டிபிகேட் இதில்லாம கெடைக்குமாக்கும்?”

நடராசன் அதனை இரண்டாக மடக்கி தனது சட்டைப் பையில் வைத்தபோது வண்டாளம் எதுவும் சொல்லவில்லை. செத்துப்போனவனின் ரேஷன்கார்டு இருந்தாலென்ன, போனால் என்ன என்று நினைத்தான். இருவரும் எங்கோ கிளம்பிச் செல்வதைக் கண்ட இருளிக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது. தகப்பன் நெஞ்சில் தலைவைத்து குமுறிக்குமுறி அழுதாள்.

காலை ஐந்துமணிக்கு பொன்னையா பிரசங்கியாரின் வீட்டுக் கதவைத் தட்டினான் வண்டாளம். பிரசங்கியாரோ, மனைவியோ கதவைத் திறக்காததுடன் வீட்டில் இருந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவன் விடாமல் தட்டவே ஸ்டீபன் கதவைத் திறந்து வெளியே வந்தான்.

“என்னது இந்த நேரத்தில வந்து நிண்ணு கதவத் தட்டுதீரு? ஒமக்கென்ன வேணும்?”

“வாத்தியாரே, எனக்க மாமனாரு பாம்பு கடிச்சி இறந்துட்டாரு. ஊர் பிரிச்சிதான் அடக்கம் செய்யணும். ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன், சகாயிக்கணும்.”

“பாம்பு எங்கவச்சி கடிச்சி?”

“வீட்டிலத்தான். சும்மா ஒறங்கிக் கெடக்கம்ப வந்து கடிச்சிபோட்டுது.”

“ஆஸ்பத்திரிக்கொண்ணும் கொண்டு போகல்லியா?”

“அதுக்குள்ள செத்தாச்சி பாரும்.”

“ஓகோ . . .”

உள்ளே சென்ற ஸ்டீபன் மேசை டிராயரைத் திறந்து இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை எடுத்துக் கொண்டு வந்து வண்டாளத்தின் கையில் கொடுத்தான். வாங்கிவிட்டு பெரிய கும்பிடுகளில் இரண்டு மூன்றுவைத்து வணங்கிவிட்டு ஊரிலுள்ள மனிதர்களிடம் கையேந்த புறப்பட்டான் வண்டாளம்.

நடராசன் செத்துப்போன பாச்சாடியின் பெயரைச் சொல்லி இன்னொரு புறத்தில் பணம் பிரித்தான். இருவரும் சிலநேரங்களில் ஒருவரையொருவர் சந்திக்கவும் செய்தார்கள். இருவருக்குமே அன்று நல்ல கலெக்ஷன்.

“சம்பவம் தெரியும் இல்லியா? பாச்சாடிக்கு ஒரு உதவி செய்யுங்க.”

நடராசன் திருச்சபையைச் சேர்ந்த ஒருவரிடம் இரக்கமான குரலில் கேட்டுப்பார்த்தான்.

“கொஞ்சம் முன்னால்தான் வண்டாளம் வந்துகேட்டான். அவனுட்டெ நான் குடுத்திற்றேனே. . .”

“அவன் கள்ளன். ஒங்களுட்டெ இருந்து பைசா வேண்டீற்று பெய் தண்ணி அடிப்பான். அவனுட்டெ எதுக்கு பைசா குடுத்திய?”

வண்டாளம் வெறொரு மனிதனிடம் பணம் கேட்டபோது அவன் நடராசனிடம் நேரமே கொடுத்ததாகத் தெரிவித்தான். அப்போது அவனும், ‘நடராசனிடம் எதுக்கு பைசா குடுத்திய? செத்தது எனக்க வீட்டாளு. அவன் தண்ணி அடிச்சி தீத்துப் போடுவானே எல்லாத்தையும்’ என்று யோக்கியம் பேசினான்.

இருவரும் ஓரிடத்தில் சந்தித்தபோது நேரம் மதியத்தை தொட்டுக்கொண்டிருந்தது. அது ஒரு புளியமரத்தின் மூடு. வண்டாளம் வாங்கிக்கொண்டு வந்த மதுவை இருவருமாகச் சேர்ந்து அருந்தினர்.

“நடராசா! கலெக்ஷன் ஒருவாடு உள்ளதுபோலத் தோணுது. எம்பிடு கிட்டிச்சி?”

“ஒனக்கு எம்பிடுடேய் கிட்டிச்சி?”

“நமக்கு கொறவுதான்.”

“நமக்கும் கொறவுதான். செத்துப்போனவனப் பூத்தணும்ணு கேட்டா கூட நம்ம ஜனங்களிட்டெ பணம் எளவுதில்லியே வண்டாளம்.”

“நமக்குத்தான் யாரும் தரல்ல. ஒனக்கு இப்ப வேதக்கார உண்டு. வாரி தந்திருப்பினுமே?”

“வேதக்காரளா? காணிக்கை வாரிகோரி குடுப்பினும். செத்தவனுக்கோ, பசிச்சவனுக்கோ பத்து ரூவா தரமாட்டினும்ணு உள்ளது ஒனக்குத் தெரியாததா என்ன?”

“செரி ஒனக்கு கிட்டினத வச்சிக்க. கேட்டா தரப்போறியா என்ன?”

“வண்டாளம்! இது நியாயந்தானா? பாச்சாடிய நான் இல்லாட்டு நீ ஒற்றைக்கு கைகாரியம் செய்திருப்பியா? ஒனக்குப் பணமாடேய் இப்ப முக்கியமா போச்சி?”

“வாய மூடுலே நடராசா! ஒனக்கிட்டெ இப்ப நான் பணம் கேட்டனா? எல்லா செலவையும் நான் செய்யிலாம். நீ எங்கெயாவது வாயத் தெறந்தே, ரெண்டுபேரும் நாறிப் போயிடுவோம்.”

உண்ணாமலைக்கடை சென்று மாம்பலகைப்பெட்டி வாங்கி துணிமணிகளோடு வீட்டுக்கு வந்தபோது ஸ்டீபன் தோழர்களோடு அமர்ந்திருப்பதைக் கண்டான் வண்டாளம். நடராசனுக்கு கொதிப்பாய் இருந்தாலும் அதனை அடக்கிக்கொண்டான். ஸ்டீபனைக் காணும் போதெல்லாம் அவன் மனதில் ஏனோ சிறிதாக ஒரு அச்சம் படர்வதை தவிர்க்க இயலவில்லை.

அன்று அங்கு ஸ்டீபன் இருந்ததால் பெரிதாக வண்டாளம் அலம்பவில்லை. நடராசனும் நேருக்கு வராமல் பதுங்கியபடியே திரிந்தான். மரணவீட்டில் ஒரு அடி உண்டாக்கி இருளியைப் பயப்படுத்த வேண்டும் என்ற அவனது நினைப்பு நிறைவேறாமல் போய்விட்டது. ஸ்டீபன் அங்கு இருந்து அடக்கம் முடியும்வரை எல்லா காரியங்களையும் கவனித்தது இருளிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

“வண்டாளம்! சின்னதில இருந்தே தகப்பன் அருகாமையில் வளர்ந்த பிள்ள. இனி அவளுக்கு நீதான் உண்டு. கொஞ்சம் பொறுப்பா இருந்து கவனிச்சணும், கேட்டியா?”

“செரி தோழரே.”

“பழையதுபோல கண்டதே கோலம்ணு திரியப்பிடாது. என்னதெங்கிலும் வேலை செய்யணும். சின்னதா ஒரு கடை கூட போடலாம். நான் ஒதவி செய்யிலாம்.”

“ஓட்டு ஒங்க கட்சிக்குத்தான் போடுவேன்.”

“ஒனக்க ஓட்டைக் கொண்டு அடுப்பில போடு. அதுக்கு நான் சொல்லல்ல.”

“இருந்தாலும் நான் செய்யணும் இல்லியா.”

“மொதல்ல ஒனக்க வாழ்க்கையப் பாரு. பெறவு அடுத்ததப் பற்றி யோசிக்கலாம்.”

திரும்பிச் செல்லும்போது இருளியின் கையில் நூறு ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றான். தூரத்தில் சீலாந்தி மரத்தின் நிழலில் நின்ற நடராசன் உன்னிப்பாக அதனைக் கவனித்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். ஸ்டீபனின் தலை மறைந்ததும் ஓடோடி வீட்டுக்குள் வந்தான்.

“கெழவன வெட்டிப் புதைக்க காலத்த முதல் நீ அங்கெயும் இங்கெயும் கெடந்து மெனக்கெட்டியே வண்டாளம், ஒங்கையில யாரெங்கிலும் நயா பைசா தந்தினுமா? பெட்டச்சி கையில நோட்டு நோட்டா இல்லியா ஓரோருத்தரும் கொண்டு வந்து குடுக்கினும்.”

“மாப்பிள நிக்கம்பளே குடுக்கினும்ணா, நான் இல்லாத்த நேரங்களில என்னெல்லாம் குடுத்திருப்பினும்?”

“வேண்டட்டும் ஓய் அவா, ஒமக்கு கோளுதானே?”

“இஞ்ச எடுடீ தேவ்டியா மவளே . . .”

அவள் பயந்து நடுங்கியவாறு கையில் சுருட்டிவைத்திருந்த நூறுரூபாய்த்தாளை அவனிடம் கொடுத்தாள்.

“ஒனக்கு வீட்டில இருந்தே தின்னலாம் வண்டாளம். நீ குடுத்துவச்சவன். இப்பிடி தெனம் நாலுபேரு கொண்டுவந்து அவ கையில குடுத்தா போருமே.”

“சவத்த விட்டுத்தள்ளு. நடக்கிய காரியம் பாப்போம்.”

இருவரும் வெளியே இறங்கிச் சென்றார்கள். நடையை விட்டுக் கீழே இறங்கும்போது நடராசன் அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான். தலைகுனிந்த அவள் கண்களிலிருந்து அழுகை உதிர்ந்து விழுந்தது. அவர்கள் வீட்டில் இல்லாதது ஆறுதலைத் தந்தாலும் தனிமையும், தகப்பன் இல்லாத வெறுமையும் பயத்தை ஏற்படுத்தியது. அடுத்து வரப்போகும் நாட்களை எண்ணிய பாதுகாப்பு உணர்வு அவள் திகிலை மேலும் அதிகரித்தது.

குடம்நொறுக்கியின் கடையை அடைந்ததும் நடராசன் வண்டாளத்திடம் நூறுரூபாய் கொடுத்தான். அவன் வாழ்நாளில் அடுத்தவர்களுக்கு கொடுத்த பணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும். தன்னையே நம்பமுடியாமல் குடம் நொறுக்கியின் முகத்தைப் பார்த்தான் வண்டாளம். அவனுக்கும் அதனை நம்பமுடியாமல் நடராசனைப் பார்த்தான்.

“ஆயில்லியம் வைத்தியன் வீட்டில் மலைவாற்று இருக்காம். கூட பைசா போட்டு ஒரு கன்னாசு வேண்டீற்று வா. சாப்பிடவும் என்னதாவது வேண்டு.”

“வைத்தியன் எனக்குத் தரமாட்டான். கேட்டா இல்லேண்ணு சொல்லுவான்.”

“நான் மின்னகூட்டியே செல்லியாச்சு, கேட்டியா? நேத்து வாற்றீட்டு வரும்ப நாள வண்டாளம் வருவான்ணு சென்னேன். அதினால தருவான்.”

“நீயும் கூட வாயேன்.”

“நானா? எனக்கு முஞ்சிறை பக்கம் ஒரு சிறிய வேலை இருக்கு.”

“எதுக்கு?”

“ரெஜிஸ்டர் ஆபீஸ்ல வேலை செய்யிற ஒருத்தனப் பாக்கணும்.”

வண்டாளம் அதன்பிறகு அவனைப் பிரிந்து சென்றான். விழுந்தயம்பலம் பஸ்ஸில் ஏறிய நடராசனை குடம்நொறுக்கி சந்தேகத்துடன் பார்த்தான். முன்சிறை போகவில்லை என்பது தெரியவந்தது. விழுந்தயம்பலம் வந்த நடராசன் பாச்சாடியின் ரேஷன் கார்டை அடகு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். மசாலைகடை தாசையன் ஆயிரம் ரூபாய் அதிக பட்சமாகத் தருவதாகச் சொன்னான். அவனிடம் பேரம் பேசி ஆயிரத்தி இருநூறு ரூபாய் பெற்றுக்கொண்டு திரும்பினான்.

நள்ளிரவு தாண்டிய பிறகு வண்டாளமும், நடராசனும் பெருங்குரலெடுத்து பக்கத்து விளையில் சண்டை பிடிக்கும் சத்தம் இருளிக்கு கேட்டது. ஜன்னலை, பார்க்கும் இடைவெளி விட்டுத் திறந்து ஒதுங்கி நின்றபடி பார்த்தாள். பணம் பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறுபோலத் தெரிந்தது. கையை நீட்டி ஒருவரை ஒருவர் அடிக்கமுடியாத அளவுக்கு நிறை போதையில் தளும்பினர். தரையில் சம்மணமிட்டுக் கொண்டிருந்த கன்னாசில் இன்னமும் சாராயம் இருப்பதுபோலத் தெரிந்தது. வால்டியூபின் வழியாக வாய் வைத்து அடிக்கடி உறிந்து இருவரும் குடிப்பதிலிருந்து அதனைத் தெரிந்து கொண்டாள்.

 

சற்றுநேரத்தில் இருவரும் எழும்ப முடியாத அளவுக்கு தரையில் விழுந்து உருண்டனர். ஒருவரை ஒருவர் ஆவேசத்தில் அடிக்க முனையும்போது கை கால் எழும்பாமல் வெறும் அசைவே அரைகுறையாக வெளிப்பட்டது. வார்த்தைகள் குழறினாலும் சத்தம் கணீரென ஒலித்தது.

“லேய் வண்டாளம், நாயடமவனே! பாச்சாடிக்க பணம் ஆறாயிரம் ரூவாயில எனக்க பங்கு எங்கலே?”

“நீ ஆருபிலே பாச்சாடிக்கு?”

“லேய் நாயே, நான் யாராட்டும் இருக்கட்டு. ஒன்ன பாறைக்கூட்டத்தில பதுங்கி இருக்கச் செல்லீட்டு பாச்சாடிய வண்டிபிடிச்சி வீட்டில இருந்து கொண்டுவந்தது நாம்பிலே. அதுக்கு என்ன தந்தலேய் எனக்கு நீ?”

“பாச்சாடிய வெட்டி பூத்தணும்ணு செல்லி ஊரு பிரிச்சி எடுத்தியலே, அதுல எனக்கு நீ என்ன பங்கு தந்தே? நூறு ழூவா!”

“கெழவனுக்க சீலைய உரிஞ்சி கழுதையா நெறுத்தி அவன் அண்டிராயரு பாக்கெட்டில பாஸ்புக் இருந்தத கண்டு பிடிச்சவன் நான். எனக்கு ஆயிரம் ரூவா தரப்பிடாதலே?”

“பாஸ்புக் எடுத்தே, சரிதான். போஸ்ட் ஆபீசில சரிகட்டி பணம் எடுத்தது யாரு, கொப்பனா?”

“பெரியவரே! ஒங்க முழுசம்மதத்தோடதானே பைசா எடுக்கிதிய எண்ணு போஸ்ட்மாஸ்டர் கேட்டாக்கில பாச்சாடி ஆமாண்ணு சென்னது இருக்கட்டும், மொவா ஒருத்தி உண்டு. அவளுட்டெ கேக்கணும்ணு ஒரு வார்த்த நான் சொல்லி இருந்தேன்ணு வச்சிக்க, நீ ஒருவாடு அந்தப் பணத்த எடுத்திருப்ப.”

“அப்பளும் எனக்கு எப்பிடி எடுக்கணும்ணு தெரியும். நீ செல்லித் தரவேண்டிய அவசியம் இல்ல.”

“புளுத்தி இருப்ப நீ.”

இருளிக்கு கதறி அழ வேண்டும்போல இருந்தது. பணத்துக்காக அவள் தகப்பனைக் கொன்றுவிட்டு பாம்பு கொத்தியது என்று சொல்லி நாடகமாடிய அவர்களின் ஈனச்செயல் நெஞ்சை உருக்கியது. உயிர் என்பது அவர்களுக்கு மயிர் நீப்பதுபோல என்ற எண்ணம் ஏற்பட்டதும் தன்னையும் ஒருநாள் இவ்வாறு கொன்று பணம் பிரித்து குடித்து மறிவார்கள் என்பதான ஒரு தோணல் உருவானது. அந்த இரவே அங்கிருந்து ஓடித் தப்பிவிட வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

“வண்டாளம், எல்லாம் இருக்கட்டும். பாச்சாடியக் கொன்னது யாருபிலேய்?”

“வேற யாரு? நான்தான் கொன்னேன்.”

“நீ மைத்தினவிலே, நான் மண்டையில ஒருஅடி வச்சேம்பாரு, கெழவன் அதோட சுருண்டான்.”

“நீ புண்டேல வச்சதெல்லாம் பெறவு. நான் கழுத்து நெட்டடக்கி மொதல்ல ஒண்ணுபோட்டேம் பாரு, கெழவன் அதுக்குப் பெறவுதான் எளிச்ச முடியாம கொளஞ்சான்.”

“நெலா, வானத்தில இருக்கிய அம்புளி! வண்டாளம் செல்லியது ஒக்க கள்ளம்! பச்ச கள்ளம்! பாச்சாடியக் கொன்னது இந்த நடராசன்.”

“லோகமெங்கும் திரிஞ்சி வேசத்தனம் செய்யும் நெலா! இந்தப்பய நடராசன் செல்லியத நம்பாத. பாச்சாடியக் கொன்னது நானாக்கும்.”

அவர்களின் அலம்பலைப் பார்த்து வேடிக்கையாகச் சிரித்தது நிலா.

“லேய் நடராசா! பாச்சாடிய நீதான் கொன்னேண்ணு வச்சிக்க, நான் ஒனக்கொரு உபகாரம் அண்ணு செஞ்சேன். நீ அதுக்குப் பெறகு எனக்கொரு உபகாரம் இண்ணு செஞ்சே. அண்ணு நீ எனக்குப் பணம் தந்தியாலே? இண்ணும் அதுபோல நெனச்சி பேசாம இருக்கணும்.”

மறுநாள் ஈயகுண்டு பாறைக்குகைக்குச் சென்று தகப்பனின் இரத்தத்துளிகள் சிதறிக்கிடப்பதைக் கண்டாள் இருளி. இன்று குன்னிமுத்துக்கள் சிதறிக்கிடப்பதைப் பார்த்து அந்த நிகழ்வின் நகலை மௌனமாக அமர்ந்து அசைபோடுகிறாள் கிழவி.

***

 

நூல் பெயர் : குன்னிமுத்து
ஆசிரியர் பெயர் : குமாரசெல்வா
பக்கம் : 432
விலை : 345

ISBN : 978-93-81969-63-2

தொடர்புக்கு : காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை
நாகர்கோவில் 629001.
E-mail : publications@kalachuvadu.com