ஜெராந்துட் நினைவுகள் – மலேசிய நாடகம் கே.பாலமுருகன்

images (4)

 

கே.பாலமுருகன்

ஜெராந்துட்  நினைவுகள் – மலேசிய நாடகம்

 

 

 

“பிரகாசமாக  எரிந்து பின் அழிந்துவிடும்

கணநேர தீக்குச்சி இல்லை  வாழ்க்கை”

 

மலேசிய இளம் இயக்குனர் செந்தில் அவர்களின்  இயக்ககத்தில் ஐந்து பாகங்களாக ‘ஜெராந்துட் நினைவுகள்’ நாடகம் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசிய தமிழ் நாடக வரலாற்றில் காட்சிப்படுத்தப்படாத பல விசயங்களைச் செந்தில் கவனப்படுத்தியிருப்பதே நாடகத்தின் தனித்துவம் எனக் கருதுகிறேன். நாடகம் தொடங்கும் இடமும் முடியும் இடமும் அழுத்தமான நினைவுகளை நம்மீது விட்டுச் செல்கின்றன. எந்தப் பரப்பரப்புமின்றி தொடங்கும் நாடகம் ஐந்தாவது பாகத்தில் முடியும்போது பார்க்கப்படாத எத்தனையோ கதைகள் இந்த மண்ணில் ஜெராந்துட் சிறுநகரத்தைப் போல எங்கேங்கோ உறங்கிக் கொண்டிருப்பதை நினைவுப்படுத்துகின்றது. வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் கதைகளைத் தூண்டிவிட்டு சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வருபவன்தான் கலைஞன். செந்தில் இந்த மண்ணில் உருவாகியிருக்கும் நல்ல கலைஞன் என்பதை ‘ஜெராந்துட் நினைவுகள்’ நிறுபிக்கின்றது.

கதைக்களம் – பெருநகர்

கோலாலம்பூரின் பெருநகரத்தில்  கதை ஆரம்பமாகின்றது. பெருநகர் வாழ்க்கை என்பது மலேசியாவின் இலக்கியத்திலும், சினிமாவிலும் அதிகம் காட்டப்படாத வாழ்க்கை ஆகும். ஒரு கலைப்படைப்பு வாழ்வெனும் ஒட்டுமொத்த வரைப்படத்தின் தரிசனத்தையும் எந்தத் தயக்கமுமின்றி பச்சையாகக் காட்டக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த நாடகம் அப்படியொரு பெருநகரத்தில் சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர் கூட்டத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. “kl menjerit” போன்ற மலாய் படங்கள் சட்டவிரோத மோட்டார் பந்தயம் பற்றியும் mat rempit கலாச்சாரத்தைப் பற்றியும் படத்தின் வழி சமூகத்திடம் கொண்டு போய் சேர்த்தன.

மலேசியாவில் இயக்கப்பட்ட  எந்த நாடகமும் சமூகத்தின் மேலோட்டமான பிரச்சனையைக்கூட  விமர்சனப்பூர்வமாக அணுகவதிலிருந்து தவறியிருக்கின்றன. ஆனால், ‘ஜெராந்துட் நினைவுகள்’ இரண்டு கதைக்களங்களிலும் சில முக்கியமான வாழ்வைத் தனக்குள் பதிவு செய்திருக்கின்றன. செந்திலின் பார்வை ஒரு கொண்டாட்டத்தை அவசரமாகத் தந்துவிடவேண்டுமென்று அமைந்திருக்கவில்லை. அது மிக நிதானமாக வாழ்வின் ஓரங்களை உராய்ந்துகொண்டு செல்கின்றது. முதல் பாகம் மொத்தமாக சட்டவிரோத மோட்டார் பந்தயத்தைப் பற்றியது. இந்திய இளைஞர்கள் அதனைப் பந்தயமாகவும் வியாபாரமாகவும் பெருநகர் சாலையில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த நீரோட்டத்தின் ஒரு மையத்தைத் தனி கிளையாகப் பிரித்து ‘ஜெராந்துட் நினைவுகள்’ சொல்லிச் செல்கின்றது.

‘ஒரு காலத்தில்  பெகாங் பண்ணிருக்கான்..”, “அந்தப் பக்கம் ஜோக்கி யாரு”

“ஒரே ரவுண்டு.. அடிச்சா  நாலு உனக்கு”

 

பெருநகர்  சீனக்கடை ஒன்றில் அமர்ந்து சட்டவிரோத பந்தயத்திற்கு  உறுதி செய்யப்படும் உரையாடல் இவை. ஒரு துறையின் அடிப்படையான ஆளுமைகளுள் அந்தத் துறை சார்ந்து கலைச்சொற்கள் கண்டறியப்படுவதும் ஒன்றாகும். அந்த வகையில் கதைக்களத்திற்கும் அது முக்கியத்துவப்படுத்தும் வாழ்க்கைக்கும் ஏற்ற சொல்லாடல்களைப் புகுத்தி கதையின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதிலும் இந்த நாடகம் கவனம் செலுத்தியிருக்கின்றது. இன்னொரு வகையான வாழ்க்கை சூழலுக்குள்ளிருந்து அது இயல்பாகப் பாவிக்கும் சொற்களையும் தொனியையும் நாடகம் முழுக்க வியாபிக்கச் செய்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக, படம் மீனவக் கிராமத்தைப் பற்றியதாக இருப்பின், அப்படியொரு வாழ்க்கைக்குள்ளிருந்து வரும் உரையாடல்களும் மீனவர்கள் பேசும் அவர்களின் தொழில் சார்ந்த வசனங்களும் கலைச்சொற்களும் கதைக்களத்தை வளப்படுத்தும் அம்சங்களாகக் கவனிக்கப்படும்.

‘ஜெராந்துட் நினைவுகள்’ இரண்டு பாகங்கள் வரைத்தான் சட்டவிரோத மோட்டார் பந்தயத்தைப் பற்றி காட்சிப்படுத்துகிறது. ஆகவே, பெருநகர் வாழ்வை முழுமையாகக் காட்டவும் வாய்ப்பில்லை. அந்தக் கதைக்களத்தில் வாழக்கூடிய இளைஞர்களின் உரையாடல்கள் கதைக்களத்தை உயிர்ப்பிக்கின்றன என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, சட்டவிரோத மோட்டார் பந்தய வியாபாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் பேசுவது அனைத்தும் யதார்த்தமான சூழலை வலிமைப்படுத்திக் காட்டுகின்றன. சரக்கு, கோளாறு பண்ணாதே, ஜக்குன்னு தூக்கிட்டு ஜகாட்னு வந்துடுவேன்’, ‘மண்டைக்கு ஏத்தாதே, மூஞ்சை உடைச்சிடுவேன்’, ‘கேஸ் பெராட் ஆயிடும்’, ‘அப்பா டக்கரு’ எனும் வசனங்கள் கேட்பதற்கு உறுத்தலாகவும் முகம் சுழிக்கும் வகையிலும் இருந்தாலும் அவைகள்தான் அந்த வாழ்க்கையை எந்த ஜோடனையுமின்றி உண்மையாய் காட்டிச் செல்கின்றன.

“பைக்க ஓட்டத் தெரிஞ்சவன்லாம் பைக்கர் இல்லை.. எவன் ஒருத்தன் பைக்குக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறானோ அவந்தான் உண்மையான பைக்கர்” எனும் வசனத்தின் ஒட்டுமொத்தமான சாரம்தான் கோலாலம்பூர் பெருநகரைச் சேர்ந்த சட்டவிரோத மோட்டார் பந்தய வீரர்களின் வாழ்க்கை. ஒரு சிறு வசனத்திற்குள் நாம் காட்ட விரும்பும் வாழ்க்கையின் மொத்த சாரத்தையும் நுழைக்க முடியும் என இப்படத்தின் இயக்குனர் செந்திலும் வசனம் எழுதிய ம.நவீனும் காட்டியுள்ளார்கள். கதைக்களத்திற்கேற்பவும் நாடகம் காட்டும் வாழ்வைக் கவனப்படுத்தும் வகையிலும் வசனங்கள் எழுதப்பட்டிருப்பது மற்றுமொரு சிறப்பம்சம்.

கதாநாயக வாழ்க்கை

எல்லோரும் தான் வாழும் வாழ்க்கையில் கதாநாயர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். கதாநாயகன் எப்பொழுது பிறக்கின்றான்? அவன் எப்படி வளர்க்கப்படுகின்றான்? இறுதியில் எப்படி அழிந்து போகிறான்? என்பதே கதாநாயகனின் முழு வாழ்க்கை. சாகசங்களைக் கனவு காண்பதும், அதனைச் செய்ய முனைவதும் என்பதற்குக்கிடையில் தன்னை நிறுபிக்க நினைக்கும் ஒருவனின் போராட்டம் துவங்கிவிடுகின்றது.

சட்டவிரோத மோட்டார் பந்தயம் சாகசங்களை மட்டுமே நம்பி வாழும் இளைஞர் கூட்டத்திற்கான களத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்குள் நுழையும் ஒவ்வொருவனும் சாகசங்களின் வழி தனக்கான ஓர் அர்த்தத்தைத் தேடிக் கொண்டு கதாநாயகன் ஆகிவிடலாம் என அழுத்தமாக நம்புகின்றான். ஆனால், இந்த நாடகத்தின் கதாநாயகன் தன் வாழ்வு அர்த்தமற்றுப் போய்விட்டதாக முடிவு செய்த பிறகே காதல் தோல்வியினால் சட்ட விரோத மோட்டார் பந்தயத்திற்குள் நுழைகின்றான். தான் ஒரு கதாநாயகனக இருக்க முடியவில்லை எனும் தோல்வியை ஒப்புக்கொண்ட விரக்தியிலேயே சாகச உலகத்திற்கு வந்து சேர்கிறான். எல்லோரும் கதாநாயகன் ஆகிவிடலாம் எனும் நம்பும் ஒரு களத்திற்குள் தன்னை அழித்துக்கொள்ள வந்து சேரும் நாடகத்தின் கதாநாயகன் நமக்கு வித்தியாசமானவனாகத் தெரிகின்றான். அவனைச் சுற்றியே அடுத்தடுத்து கதை நகர்கின்றது.

கதைக்களம் – ஜெராந்துட் சிறுநகரம்

இரண்டாவது பாகத்தின் இறுதியில் ஜெராந்துட் சிறுநகரத்தை நோக்கி வந்தடையும் நாடகம் அங்கொரு வாழ்க்கை ஒளிந்திருப்பதைக் காட்டுகின்றது. ஜெராந்துட் குகைப்பகுதிகளில் மலைத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பற்றி மேலோட்டமாக நாடகம் பதிவு செய்திருப்பதை நான் முக்கியமான முயற்சியாகக் கருதுகிறேன். இதைத்தான் ஒரு கலைஞன் செய்ய வேண்டும். தான் வாழும் சமூகத்தின் பலத்தரப்பட்ட வாழ்க்கைமுறையையும் பல்வேறுபட்ட மனிதர்களையும் காட்டுவதுதானே கலை முயற்சி.

மலையில் தொங்கி தேன் எடுப்பதென்பது மிகவும்  ஆபத்தான செயலாகும். ஜெராந்துட்டில் முந்தைய காலங்களில் தேன் இப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுதெல்லாம் அங்கு மலைகளில் ஏறி தேன் எடுப்பதில்லை. இருப்பினும், செந்தில் தேன் எடுக்கும் மரபான முறையைப் பற்றி கொஞ்சமாவது சொல்ல முனைந்திருப்பது மலேசிய வாழ்க்கையைப் பதிவு செய்ய நினைக்கும் அவரின் நேர்மையைக் காட்டுகின்றது. சந்தைக்கு வந்து சேரும் அனைத்தையுமே ஒரு சாதாரண நுகர்வோர் அதன் விலையையும் தரத்தையும் மட்டுமே முக்கியத்துவப்படுத்துவான். ஆனால், ஒவ்வொரு பொருளின் உற்பத்திக்கும், கண்டிபிடிப்புக்கும் பின் ஒரு மனிதனின் உழைப்பும் அல்லது ஒரு மனித கூட்டத்தின் தியாகமும் இருப்பதை யாரும் கவனிப்பதில்லை.

ஜெராந்துட்டில்  மரபான முறையில் எடுக்கப்படும்  தேன் என்பதற்குப் பின் தன்  உயிரைப் பணையம் வைக்கும் மனிதர்களின் வாழ்வு இருப்பதைப் பற்றி சொல்லி, ஒரு சராசரியான  நுகர்வோனின் பார்வையை மாற்றியமைக்க முயல்கிறது நாடகம். வாழ்க்கைக்கு நாம் எந்த விலைப்பட்டியலையும் ஒட்ட முடியாது. பிரகாசமாக எரிந்து பின் அழிந்துவிடும் கணநேர தீக்குச்சி இல்லை வாழ்க்கை என்பதையே செந்தில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜெராந்துட் நினைவுகள்’ நமக்கு உணர்த்துகின்றது.

இந்த நாடகத்தின் ஒளிப்பதிவுக்கு கண்டிப்பாக நாடகக்குழு நிறைய உழைத்திருப்பதை உணர முடிகின்றது. ஒவ்வொரு காட்சியின் உயிர்ப்பையும் யதார்த்தங்களையும் காமிராவில் கச்சிதமாகச் சொல்வதற்கான திறனை அவர்கள் பெற்றுள்ளார்கள். ஒளிப்பதிவில் இருக்கும் இன்னொரு சவால், படத்தின் சில பகுதிகள் மோட்டார் பந்தயத்தைப் பதிவு செய்திருப்பது ஆகும். சாலையில் மற்ற வாகனங்களுக்கு மத்தியில் வேகமாக ஓடும் மோட்டார் பந்தயத்தைக் கடுமையான உழைப்புக்குப் பிறகே காட்சிப்படுத்த முடியும். மிகவும் சவாலான ஒளிப்பதிவு.

நாடகத்தின்  பலவீனமாக நான் கருதுவது கதாநாயகனான சிவபாலன் அவர்களின் நடிப்பு. தனக்கு முன்னே நிகழும் அனைத்துவிதமான சம்பவங்களையும் சலனமற்று எதிர்க்கொள்வது என்பதும் ஒரு தனி வகையான நடிப்புத்தான். ஆனால், காட்சிகளுக்கு ஏற்றவகையில் உணர்வு ரீதியான பிரதிபலிப்பை வெளிப்படுத்தத் தெரியாமல் தடுமாறுவதோ அல்லது அமைதியாக இருப்பதோ நடிப்பல்ல. அது பயிற்சியின்மை. தன்னால் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படும் கதாநாயகியை எதிர்க்கொள்ளும் கதாநாயகனின் முகத்தில் மிகப் பலவீனமான வெளிபாடே எஞ்சி இருக்கின்றது. அது காட்சியின் உக்கிரத்தைச் சாகடித்து பார்வையாளனுக்குக் கிடைக்கவிருந்த அனுபவத்தைப் பறித்துக்கொள்கிறது. நடிப்பு என்பதும் கலைத்தானே. தன் அடுத்த படைப்புகளில் செந்தில் அதனை முக்கியத்துவப்படுத்துவார் என நம்புகிறேன்.

சினிமாதுறை சார்ந்த  அறிவையும், சினிமா தொழில்நுட்பம்  சார்ந்த தன் ஆற்றலையும் இயக்குனர் செந்தில் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஜெராந்துட் எனும் ஒரு நினைவு மலேசியாவின் நல்ல கலை ஆர்வமிக்க இளைஞர் கூட்டத்தையும் அடையாளம் காட்டியுள்ளது. வாழ்த்துகள்.