பதிப்பக அலமாரி NH அவிநாசி- திருச்சி சாலை சித்திரங்கள் இளஞ்சேரல்

பதிப்பக அலமாரி  NH அவிநாசி- திருச்சி சாலை சித்திரங்கள்  இளஞ்சேரல்

 

download (15)

 

 

 

முன்னுரை

 

 

வாழ்வில் ஒரு கதைத் தொகுப்பு வெளியிடுவேன் என்பதை நினைத்துப் பார்த்தி்ருக்கவில்லை. நவீன மனிதனின் சமூக வாழ்வில் திரைக்கதைகளின் பாதிப்புதான் எண்பதாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு குடும்பங்களும் திரைக் காட்சிகளை அமைப்பதைப் போலவே தமது சம்பவங்களைக் கோர்க்கிறது. அத்திரைக்கதைகளின் பரிணாமங்களை ஒவ்வொரு பத்தாண்டுகளின் வளர்ச்சி-சிதைவுகள் பற்றிய பெருந்தொகுப்பை தயாரிப்பது என்னுடைய ஆவலாக இருந்தது. மாறாக அதுபோலவே தற்காலத்தின் திரைக்கதைகளின் மொழி பற்றியும் விரிவாக எழுதிக் கொண்டிருந்தேன். ஆயினும் தற்போதைக்கு அது எப்போது முடியும் என்பது தெரியவில்லை.

அத்திரைக்கதைகளின் கச்சாவான கதைகளின் மீதான ஆர்வத்தை எனக்கு பால பிராயத்திலேயே வளர்த்து விட்ட கா.சு வேலாயுதன் அவர்களையும் என்பதுகளின் மத்திய காலத்தில் தமுஎச இருகூர் எட்டாவது ஒன்பதாவது வார்டு கிளைகளின் தோழர்களையும் இந்த நூல் வெளியாகும் காலத்தில் நினைத்துக் கொள்கிறேன். இயக்கத்தில் உள்ள இலக்கியப் பேரன்பர்களின் மனதில் தங்கி விட்ட கூட்டு வண்டி, நதிச்சருகு போன்ற சிறுகதைகளை இதில் சேர்க்க முடியாமல் போனது வருத்தமே. சமன்படுத்தப்படாத மேய்ச்சல் நிலமாக தான் போகும் போக்கில் போகும் மக்களின் வாழ்கதைகள் பிரத்யேகமானது. தொன்னூறுகளின் மத்தியில் எனது கதையை முழுமையாக பிரசுரம் செய்த செம்மலர் இதழ் மற்றும் தாமரை தீக்கதிர் வண்ணக்கதிர் இதழ்களையும் இப்போது நினைக்கிறேன்.

ஒரே மாதிரியான மனநிலையுடன் கால் நூற்றாண்டாக இருப்பது என்பது ஒரு மாதிரியான நவீன மனநோய்தான். அல்லது சூழல்கள் ஒன்றும் மாறிவிடவில்லை என்றுதான் கொள்ள வேண்டும். இப்போதும் கூட பவுண்டரிக்கு வேலைக்குப் போகிறவர் அங்கேயும் கழிவுப் பஞ்சாலைக்குப் போகிறவர் அங்கேயும் கேரம் போர்டு ஆடிக்கொண்டிருப்பவர் அதே இடத்திலும் எங்கள் ஊர் பெண்டிர்கள் இன்னும் அப்படியே தான் குடிதண்ணீருக்கு அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் மலம் கழிப்பதற்காக அதிகாலையில் எங்கெங்கோ திரிகிறார்கள்..

நவீன பின் நவீன இலக்கியம் எனக்கு முழுமையாகக் கைவரப் பெற்றபோது இடதுசாரி அரசியல் இயக்கங்களுடன் விலக நேர்ந்தது மட்டுமின்றி அதே அளவு மார்க்சீயத்தின் மீதான அன்பும் அவசியமும் அதிகமாகவும் ஆகிக்கொண்டி ருப்பதையும் நான் உணராமலில்லை. இடதுசாரிகளின் மீது பொதுப் படையான மனோநிலையுடன் விமர்சனம் செய்கிற திராவிட மனோநிலை மீது கடுங்கோபம் வரும்போது இப்படித்தான் யோசிக்கிறேன். மாறாக அவர்கள் நியாயப்படி ஆட்சி அதிகாரத்தை இடதுசாரிகளிடம் தந்திருக்க வேண்டும். காரணம் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில அமர வைத்து ஒரு கவுன்சிலர் சொந்த விமானம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தமிழ்த்திராவிடக் கழகங்களை வளர்த்தவர்கள் அவர்கள்தான்.

இலக்கியத்தில் அரசியலை முழுமையாகச் சேர்ப்பதுதான் நவீன பின் நவீனத்துவம். அதில் அரசியல் செய்வது என்பது நவ முதலாளித்துவக் காலனியம்

இந்தக் கருமாந்திரத்தைச் சொல்லக் கூடாது என்றாலும் முடியவில்லை. உலகத்தில் லாட்டரிச் சீட்டு வாங்கிப் பழகிய கூட்டம் வாழ்ந்து கொண்டுதான் இரக்கிறது. அதே பாணியில்… அப்டிங்களா எப்ப எங்க..நான் இன்னும் படிக்கலைங்களே.. நடந்துட்டு இருக்குங்களா..ஓ..அவருதானா..என்று கேள்வி கேட்டு சிங்கள ராணுவத்தை விடவும் சித்ரவதை செய்து விடுகிறவர்கள் உலவும் சூழலில்தான் வாழ்கிறோம். தொடர்ந்து இச் சமூகத்திற்காக சிந்திக்க வேண்டியவர்கள் டாஸ்மாக்கில் இருக்க தன்வாழ்நாள் முழுவதும் சோசியகாரன்தான் மனிதனின் ஏற்றம் குறித்து சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இந்தக் கால் நூற்றாண்டில் பிறந்தவர்களில் புதியதாக ஒருத்தன் கூட அரசியலுக்கோ சமூகக் கலாச்சார நடவடிக்கைக்கோ இலக்கிய இயக்கங்களுக்கோ வந்து சேரவில்லை. செம்மறி யாட்டுக் கூட்டதினில் வாழ்கிறான்.

ஒருவகையில் கல்வித்துறையில் இருந்த கிருத்துவ டாமினேசனை தகர்த்ததற்காக சந்தோசம் கொண்டாலும் முழுமையான பேராலய நடவடிக்கையில் இயங்குவதான் நவீன புரட்சியோ என்னவோ.. ஒரு வேளை முன்னூறு ஆண்டு பழியைத் தீர்க்கவும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றி பதிலுக்கு அருநூறு ஆண்டுகள் ஆள்வதற்கு முயற்சி செய்கிறார்களோ என்ன எழவோ..

இந்தியத் தமிழ் நவீன பின்நவீன இலக்கியச் செயல்பாடுகளில் இருக்கும் அனுபவமின்மை மற்றும் பாதி வெந்த நிலை வாசிப்பு மற்றும் எழுத்து பற்றிய எனது கடுங்கோபத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு சிலருடன் பழகும் போது பேரதிர்ச் சியாகவும் இருந்தது. எங்கள் ஊர் பம்பை-உடுக்கைக் கலைஞர்கள்-புரோட்டா மாஸ்டர்-இட்லி சுட்டு விற்கும் பாட்டிகள் கூட அதிநவீனமான முறைகளை பயண்படுத்துகிறார்கள். யோசிக்கிறார்கள் புதுமையைக் கவனிக்கிறார்கள். ஜவுளிக் கடைக்குப் போனால் பிளாஸ்டிக் செடி கொடி மலர்களை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

ஆயினும் சளைக்காமல் தனது சேமிப்பை, தங்கம். நகை, நிலம், செங்கல், மணல்,சிமெண்ட் பெயிண்ட் என்று செலவழிக்காமல் இலக்கியத்திற்காக இயங்கும் ஒரு சில நூறு நவீன இலக்கிய வாசிப்பு, எழுத்து, இதழியக்கம் என்று தனது வாழ்நாளைக் கழிக்கும் இலக்கியவாதிகளின் அன்பிலும் நிழலிலும் வாழலாம் என்கிற சரணாகதியுடன் எனது எழுத்தும் வாழ்வும் கழிகிறது.

என்னை எல்லா ஊர்த் திருவிழாவிற்கும் சந்தைக்கும் அழைத்துப் போகிற தாய்மை கொண்ட தோழமையையும் தோழமையாக மாறிப் போன நண்பர்களையும் நண்பர்களாகிவிட்ட தோழர்களும் எனது ஆகாயப் பந்தல். கைதட்டும் போது ஏற்றுக் கொள்கிற மனோநிலை கண்ணத்தில் அறையும் போதும் அதே மனோநிலை இருக்கவேண்டும்

இணைய காலச் சூழலில் என்னுடன் முகமறியா நட்பு கொண்டாடும் முகநூல் நண்பர்களையும் அப்படியே வணங்கி மகிழ்வேன்.

இந்தக் கதைகள் வெவ்வேறு காலச் சூழல்களில் ஒவ்வொரு வகைமையான வசந்தம் கோடை இலையுதிர் நாட்களில் எழுதப்பட்டவை. மட்டுமின்றி எந்த இதழிலும் பிரசுரம் ஆகாத கதைகள். அகத்துறவு இதழில் சில கதைகள் வந்தது. ஊக்கப்டுத்திய நவீன இலக்கியப் படைப்பாளர்கள் மயுரா ரத்தினசாமி, மயுரா அச்சக நண்பர்கள், பொன் இளவேனில் மற்றும் நூலாக்கிடக் காசு கொடுத்து உதவிய தம்பிகள், மைத்துனரகள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இலக்கியம், சினிமா, அரசியல் என்று பலநாள் கெட்டுப் போன பலூன் உடலுடன் அதே நோய்மையுடன் வாழந்து கொண்டிருக்கும் யுவராஜ்,கார்த்தி,விஜியை அச்சேறாமால் போகும் எழுத்துகள் பின் நாளில் சோறூட்டும் என நம்புகிறேன்.

ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பிறகு தமிழ் நவீன இலக்கியத்தில் சரத்பாபு, சந்திரசேகர், நிழல்கள் ரவி, மேஜர் சுந்தர ராஜன், டெல்லி கணேஷ் ரோல்களை செய்து கொண்டிருக்கக் கூடாது. அல்லது செய்யவும் முடியாது என்பதை உணர்த்திய இந்தோ-ஐரோப்பிய இலக்கிய விமர்சகர்களுக்கு நன்றி..

அப்பா யாருக்காக அந்த பத்தாயிரத்துச் சொச்சத்தைச் சேமித்தார் என்று தெரியவில்லை. அவர் காலமானதிற்குப் பிறகு மூத்தவன் என்கிறதால் என் கைக்கு வந்து சேர்ந்தது. அதன் மூலம் நூல்கள் சிலவற்றைக் கொண்டு வந்ததில் மனசாட்சியும் சில காகஙகளும் ஓயாமல் வீட்டிற்கு வந்து அவ்வப்போது கத்துவதால் வேறு வழியின்றி இந்தத் தொகுப்பை மரியாதையாக அப்பாவிற்கு சமர்ப்பிக்கிறேன்..

போதிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காத தமிழச் சமூகத்தின் ஒப்பற்ற கலைஞர்கள்

 

மதுரை சோமுவும் இருகூர் கலைமணி முத்துவும்

என்னை மன்னிப்பார்களாக..