பதிப்பக அலமாரி மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் _ கதிர்பாரதி —- புது எழுத்து பதிப்பக வெளியீடு

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் _ கதிர்பாரதி —- புது எழுத்து பதிப்பக வெளியீடு

 

download (16)
புத்தக பின்னட்டைக் குறிப்பு
==============================
எளிமையும் வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு
தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்பாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின்.
இந்நிலத்தின் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் அற்புதங்களையும்
விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர்கின்றன. பெருங்காமப்
பேராற்றுத் தீரத்தில் ஒரு கைநீரள்ளி கோபியர் மீது தெளித்து விளையாடும்
கிருஷ்ணனின் கரங்கள் வாய்த்திருகின்றன இவரின் சில கவிதைகளுக்கு.
சமகாலச் சூழலில் மொழியையும் அதன் இறுக்கத்தையும் தளர்த்திய கவிதைகள்
இவை.

– நரன்

 

சில கவிதைகள்
==================
குளத்தில் அலைகின்றன கவிதைகள்
1.
யவ்வனம் சொட்டும் அவள் பார்வையில்
ஒரு குளம் விரிகிறது.
வழுக்கும் பாசிகளிலிருந்து
பச்சை தேவதை எழும்புகிறாள்.
மேனியெங்கிலும் வழிந்து பரவுகிறது
மகரந்தக் காடு.
தாழ்ந்துயரும் அவளது பருவ மூச்சு
பட்டாம்பூச்சியாகச் சிறகசைக்க
உதிர்ந்து நகர்கின்றன
தேவதைத் துகள்கள்.
இப்போது தேவதை குளமாகி
மகரந்தமாகத் ததும்பிக்கொண்டிக்கிறாள்.
தாகம் போக்க குளத்தில் இறங்கும்
அவன் கரைந்துபோகிறான்
ஒரு மகரந்த அலையில்.

2.
முன்மாலைக்கும்
பின்மாலைக்கும் இடையே
மிதவேகத்தில் ஓடுகிற ரயில்
ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திக்குளத்தில்
பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்
பயணிக்கிற
அவளின் முலைகளை
தாலாட்டி தாலாட்டி.

3.
நிச்சலனமுற்று
இருந்த தெப்பக்குளத்தில்
கொத்துக்கொத்தாக
பார்வைகளை அள்ளி
வீசிவிட்டு வந்துவிட்டாள்.
சலனமுற்ற மீன்களில் சில
நீந்திக்கொண்டிருக்கின்றன
அவனது ஈசான மூலையில்.
4.
இரவு தளும்பிக்கொண்டு
இருக்கிற குளத்தில்
நெளிந்துகொண்டு
இருக்கிற பௌர்ணமியை
கொத்தும் கொக்கு
றெக்கை விரிக்க
நிலவு பறக்கிறது.

5.
கால் புதைய கனிந்திருக்கும்
அந்த நிலத்தின் அந்தரங்கத்துள்
புதைத்து வைத்திருக்கிறான்
புத்தன் தன் கனவை.

கிளைகளற்ற தருவாக
காய்த்து இறுகிய மலையாக
குளிர்பொருந்திய ஊற்றாக
விடம் கக்கும் பாம்பாக
எதுவாகவும் வெளிப்படலாம்
எதிர்பாரா தருணத்தில்.

கனவுக்கும் புத்தனுக்கு இடையில்
ஏக்கம் தொனிக்கக் காத்திருக்கிறது
சலனிக்காத கர்ப்பக் குளத்து இரவு.

6.
மரங்கொத்தி,
தன் சபலத்துள் பதியமிட்டு வளர்க்கும்
பச்சையகாலத்துத் தளிர்மரமொன்று
கொக்கின் கூர்மூக்குக் கனவில் தளும்பும்
மாரிக்காலக் குளத்தில்
வேர்களை இளைப்பாற்றுகிறது.
7.
புணர்ச்சிக்குப் பரிச்சயமான யோனியை
மிருதுவாக மலர்த்தி
அதிரப் புணர்கையில்
மேலெழும்பி மிதக்கும் இசையை
ஒத்திருக்கிறது
தவளைகள் தத்தித்தத்திச் செல்ல
ஒலி எழும்பி அலைமோதும்
மாரிக்கால குளம்.
இருக்கிறது
உச்சி ஆகாயத்துக்குப் பக்கத்தில்
காற்றுவெளியில் நிச்சலனமுற்று
நீந்திக்கொண்டு
இருக்கும்
அந்தப் பருந்து,
நடுநெற்றியில் தீயெரிய
போதிமரத்தடியில்
ஆழ்நிஷ்டையில்
இருக்கும்
சாக்கிய புத்தனின்
மனமாக இருக்கிறது.

காலத்தின் மீது விரைகிறது பொறுப்பு

பகலைக் கடந்து
முன்மாலைக்குள் விரைகிற இந்தப் பேருந்து
பேரூராட்சியின் பின்னிரவிலிருந்து வருகிறது.
மறுநாள் மாநகரத்தின் முன்னிரவுதான் இலக்கு.
மிகமிகப் பொறுப்பான பேருந்து இது.
பயணிகள் இருக்கைக்கு வந்துவிட்டால்
தாயின் கருவறை கதகதப்போடு தூங்கலாம்.
இதோ… இதயநோயாளி நோகாவண்ணம்
பேருந்து விரைகிறதைக் கவனிக்கிறீர்களா.
கர்ப்பிணியின் ஐந்துமாத வயிற்றில்
அவள் தாய் பூசிவிட்ட விபூதிகூட அழியவில்லை பாருங்கள்.
தகப்பன் மார்போடு அப்பிக்கொண்ட பிஞ்சுமலர்
கனவில் பொம்மைக்கு இடுகிற முத்தத்தையும்
லாகவமாகச் சுமந்து போவதை அறிகிறீர்களா.
வேங்கைப் பாய்ச்சலை இடைநிறுத்தி
அது சாலப் பரிந்தூட்டும் தேநீர், இளநீர்…
பேருந்தின் பேரன்பு என்பது புரிந்திருக்குமே.
கவனத்தோடு மாநருக்குள் நுழைகிறது.
வரவேற்பது அதன் முன்னிரவுதான்.
இதோ பாருங்கள்
அலுங்காமல் இறக்கிவிடுகிறது இதயநோயாளியை.
குலுங்காமல் இறங்குகிறாள் கர்ப்பிணி.
தூக்கத்திலிருந்து புன்னகைக்குத் தோள்மாற்றி
இறக்குகிறது சிறுமியை.
கடைசியாக, பேரூராட்சியின் பின்னிரவை
மாநகராட்சியின் முன்னிரவு
கைகொடுத்து இறக்குவதையும் பார்த்துவிட்டீர்களா.
நான்தான் சொன்னேனே
மிகமிகப் பொறுப்பான பேருந்து இதென்று.

என் தெய்வமே… தேவதையே… மோகினியே

என் மோகினிக்குப் பித்தவெடிப்புகள் மலர்ந்திருக்கின்றன
அதிலென் கனவினை இட்டு நிரப்புகிறேன்.
ஏனெனில் அவற்றிலிருந்து கவிதைகள் முளைக்கின்றன.
வழியும் மூன்றே மூன்று நரைமுடிகளில்
பால் பௌர்ணமி இறங்கி வருகிறது
அதை வணங்கி ஆராதனை செய்கிறேன்
அவற்றில் வெளிச்சம் பெறுகின்றன கண்கள்.
காற்றுக்கு அசையும் கூந்தல் கீற்றுகள் முன்
முழந்தாழிடுகிறேன்
அவைதாம் மனதை மேலெழும்பச் செய்கின்றன.
சரியும் சதையமுதங்களுக்கு என் இளமை சமர்ப்பணங்கள்
ஏனெனில் அவை குழந்தையாக்கி உறங்க வைக்கின்றன.
அவளருகே முத்தமாகிக் கிடந்த

Advertisements