பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் காந்தி புத்தகம்

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம்
காந்தி புத்தகம்

 

download (14)

 

 

 
முதற்பதிப்பின் முன்னுரை

 

 

சுமார் பத்து வருஷங்களுக்கு முன்பு எழுதிய வரலாறு இச்சிறிய நூல். எழுதிய எனக்கே இதை இப்போது படிப்பதற்குப் புதுமையாகத் தோன்றியது. தமிழர்களின் ஆற்றலையும் உள்ளத்தையும் ஒருவாறு அறிந்துள்ள கலைமகள் காரியாலயத்தார் இதைப் பிரசுரிக்க விரும்பிய பொழுது அதன் உண்மை எனக்கு விளங்கவில்லை. இப்பொழுது நன்கு விளங்குகிறது.

தமிழில் பிரயாணங்களில் உண்டாகும் தோற்றங்கள், உணர்ச்சிகள், கற்பனைகள், பொது வாழ்வில் காணப்படும் காட்சிகள் – இவைகள் அடங்கிய நூல்கள் இருக்கின்றனவோ என்பது எனக்குச் சந்தேகம். அப்படி ஒரு சமயம் ஒன்றிரண்டு இருந்தாலும், அநேகமாகத் தமிழர்களின் மத்தியில் உலவக் காணவில்லை. புது மலர்ச்சி பெற்றுச் செழித்து வளர்ந்து வரும் தமிழ் நடையில், காதற் கதைகளும் இன்பக் கனவுகளும் நிறைந்திருக்கின்றன. படிக்கும் அவாவிற்கு அளவில்லை. இத்தகைய மனோபாவம் நிறைந்து ஊக்கம் உடையவர்களுக்கு, கருத்துப் பொருந்திய நிகழ்ச்சிகள் தகுதியுடையவை.

காந்திஜி சுற்றுப்பிரயாணத்தில் ஓயாது பறை சாற்றிய ஒரு சித்தாந்தம் மறக்க முடியாதது. “தீண்டாமை என்னும் பழக்கத்திற்குச் சாத்திரத்தில் ஆதாரம் இல்லை” என்று சொல்லிய வாக்குறுதியின் காரணத்தால் ஹிந்து மதத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவு குறைந்துவிட்டது. உலகப் போக்கு பலவிதத்திலும் மாறுபாடு அடைந்து வருகிறது. பழைய கொள்கைகள் உருமாறியும் மறைந்தும் வருகின்றன. காலத்தின் தன்மையால் நம்மை அறியாமலே நாம் மாறி வந்து கொண்டிருக்கிறோம். இதை வலியுறுத்தியும், உண்மையை வெளிப்படையாக எல்லா மக்களும் அறியும் வண்ணமும் எடுத்துரைப்பது சான்றோர் கடமை.

சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த வைணவ சித்தாந்த ஸ்தாபகராகிய ஸ்ரீமத் ராமாநுஜர் அக்காலத்திலேயே தாம் குருவினிடம் கற்ற ரகசியத்தைத் திருக்கோட்டியூர்க் கோபுரத்தின் மீது ஏறி, மக்கள் அனைவரும் உய்யும் வண்ணம் உரக்க எடுத்துக் கூறினார். “இந்த ரகசியத்தை மக்கள் உய்யும் பொருட்டு நான் வெளிப்படுத்தினேன். இச் செய்கையால் எனக்கு நரகம் கிடைக்குமென்று என் குருநாதர் சொல்லியிருக்கிறார். நான் ஒருவன் நரகம் போனாலுங் கூட, பல்லாயிரக் கணக்கான மக்கள் நற் பதவி அடைவதால், எனது நரக வேதனை எனக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்று சொன்னார் என்பது சரித்திரம். இக்காலத்தில் உயர்வு பெற்ற
ஸ்ரீ வைஷ்ணவரான மகாத்மா காந்தியும் அதே உண்மையைத் தமிழ் நாடெங்கும் தமது சுற்றுப் பிரயாணத்தின் பொழுது ஒரு கோடி தமிழ் மக்களுக்கு உரக்க எடுத்துக் கூவினார். “ஸநாதன தர்மம் என்று சொல்லப்படும் ஹிந்து மதம் உயிர் வாழ வேண்டுமானால் தீண்டாமை என்னும் கொடிய வழக்கம் ஒழிய வேண்டும். தீண்டாமை ஒழியாவிட்டால் ஹிந்து மதம் ஒழிந்துவிடும்” என்று ஐயந்திரிபறப் பறை சாற்றினார் காந்தியடிகள். பலர் மனம் மகாத்மாவைப் பின்பற்றியது. சிலர் மனம் துடித்தது. பல ஆண்டுகளாகப் பரவி, வேரூன்றிய கொடிய பழக்கம் வேரோடு ஆட்டம் கொடுத்தது. வேரும் ஒடிந்து விட்டது. மரம் சிறுகச் சிறுகச் சாய்ந்து வருகிறது. தீண்டாமை கிராமங்களில் கூட மறைந்து வருகிறது. இந்தச் சுற்றுப் பிரயாணம் சரித்திரத்தில் இடம் பெற்றது. இதைக் “காந்தி சகாப்தம்” என்றே சொல்லலாம். பின்வரும் சந்ததியார் களும் மறக்காமலிருக்க வேண்டி இச்சரித்திரம் திரும்ப எழுதப்பட்டிருக்கிறது.

இதை மறுபடியும் ஒரு புத்தக உருவத்தில் வெளியிட இசைந்து, ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளைப் பதிப்பிக்க உதவி செய்து தமது உரிமையை எனக்கு அளித்த ஸ்ரீ எஸ்.எஸ். வாஸன் அவர்களுக்கு என் மனமார்ந்த வந்தனம். இதை அச்சிட்டு வெளியிட்டுப் பிரசுரம் செய்துள்ள கலைமகள் பிரசுராலயத்தார் அவர்களுக்கும் எனது நன்றி உரியது. தமிழ் மக்கள் இந்நூலை அன்புடன் வரவேற்பார்களென்று நம்புகிறேன்.

தி.சே.சௌ. ராஜன்
**
Sandhya Publications
Nutech Vaibhav,
New No. 77, Old No. 57A,
53rd Street, 9th Avenue,
Ashok Nagar, Chennai – 83.
044-24896979

Advertisements