பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் நாஞ்சில் நாடன் சாலப்பரிந்து . . .

காலச்சுவடு பதிப்பக புத்தகம் பதிப்பக அலமாரி
சாலப்பரிந்து . . .

download (10)

 

 

 

(காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை)

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

மண்ணும் மனிதரும் . . .

(முன்னுரை)

 

நாஞ்சில் நாடனின் கதைகளை முதலில் படிக்க நேர்ந்தபோது நான் முதிரா இளைஞன். வாசிப்பில் அதீத ஆர்வமும், அதே சமயத்தில் இலக்கியம் குறித்து திட்ட வட்டமான கருத்தாக்கங்கள் கொண்டவனாகவும் இருந்தேன். எந்த ஒரு நூலையும் படித்த முதல் தடவையி லேயே அதைப் பற்றிய கறாரான ஒரு முடிவுக்கு வந்து விடும் கூருணர்வும் எனக்கு அப்போது அதிகமாகவே இருந்தது. நாஞ்சில் நாடன் என்ற அவருடைய புனை பெயர் எனக்கு அவ்வளவு உவப்பான ஒன்றாக அல்லா மல் சற்றே மனவிலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காரணம், சாதிப்பற்று, மதப்பற்று போலவே ஊர்ப்பற்று, மொழிப்பற்று, இனப் பற்று முதலிய பிற பற்றுகளும் புதுமை நாட்டமற்ற ஒரு மனம் சுமக்க விரும்பும் பழம் பெருமை என்பதான எண்ணமே அன்றிருந்தது.

சிறுகதை என்றதுமே என் மனதில் எழும் ஒரு தோற்ற வரையறையானது இறுக்கம், செறிவு, துல்லியம், ஒருமை, முடிவை நோக்கிய விரைந்த நடை என்பவை போன்ற சில அளவீடுகளைக் கொண்டிருந்தது. நாஞ்சி லின் கதைகள் பலவும் இந்த வரையறைக்குள் பொருந்தா மல் மீறியும், வழிந்தும் ஆங்காங்கே துருத்திக்கொண்டு நின்றன. கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்குத் தகவே கதையின் மொழிநடை பயின்று வரவேண்டும். கவித்துவமான முடிவும், கதை விளக்கப்படுத்தும் மேல்தளப் பிரதிக்கப்பால் ஆழமான மறைபிரதியும் கூடுதல் தகுதியாகக் கொள்ளத்தக்கவை என்பனபோல் என் வரையறைக்கு மேலதிகமான சில எதிர்பார்ப்புகளும் இருந்தன. கதாசிரியனின் பிரசன்னம் இல்லாத கதை என்பது நாஞ்சிலிடத்தில் அரிதாகவே காணக் கிடைப்பது. தவிரவும் அவருடைய கதாபாத்திரங்கள் மண்ணில் காலூன்றி எதார்த்தத்தில் அடிவைத்து நடக்கிறவர்கள். அவர்களால் தங்களது எண்ண விசாரங்களைத் தத்துவார்த்த தளங்களுக்கு நகர்த்தவோ, நம்மால் அவரது கதைகளிலிருந்து நுட்பமான மறைபிரதிகளைப் பெறவோ முடியவில்லை. எனவே அன்றைய அவ்வாசிப்பில் என்னை ஈர்த்தது அவருடைய மும்பை அனுபவத்தையொட்டிய சில கதைகள் மாத்திரமே. மற்றபடி அவர் ஒரு மரபான கதைசொல்லி என்ற மனப்பதிவே என்னிடம் தங்கியிருந்தது.

2000இல் நாஞ்சிலின் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பாக (தமிழினி) வெளிவந்தது. தொடர்ந்து விகடன் தொடர் மற்றும் சாகித்திய அக்காதெமி விருது காரணமாக அவருடைய புகழ் நட்சத்திர மதிப்பை எட்டியது. அவரது வாசகர்களுடைய எண்ணிக்கையும் பேரளவு கூடியது. பல பழைய புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. தவிர நாஞ்சில் நாடனை நேரில் சந்திக்கவும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்களும் வாய்த்தன. இப்பின்னணியில் மீளவும் அவருடைய கதைகளைப் படிக்க விரும்பினேன். அவ்வப்போது அவருடைய கதைகளைப் பத்திரிகைகளில் வாசித்திருந்தபோதிலும், ஒரேமூச்சில் வாசிக்கும்போது மட்டுமே நுட்பமான பல விஷயங்களை அவதானிக்கவும் ஒட்டுமொத்தமாக ஒரு மதிப்பீட்டிற்கும் வர இயலும் என எண்ணினேன். முதல் தடவையாக நாஞ்சிலைப் படித்ததற்குப் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. வாழ்க்கை பற்றியும் இலக்கியம் பற்றியும் எனது பார்வை இன்று வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு வசதிக்காக உருவம், உள்ளடக்கம் என்ற பாகுபாட்டை அனுமதிப்போமெனில், இந்த மத்திம வயதில் நான் இலக்கியப் படைப்புகளில் உருவம் சார்ந்த கவர்ச்சித் தன்மையை இழந்து, உள்ளடக்கம் சார்ந்த விஷயங் களில் மனம் தோயத் தொடங்கிவிட்டேன் என்றே கூற வேண்டும். அன்று கச்சிதமான நடையியலாளர்களின் ஈர்ப்புத் தன்மைக்கு முன்னால் மங்கலாகத் தோன்றிய பல கதை சொல்லிகளை இப்போது புதிய வெளிச்சத்தில் நோக்குகையில் அவர்களுடைய சாரமான உயிர்ப்புத் தன்மையை உணரவியல்கிறது. கு. அழகிரிசாமி, ஆ. மாதவன், கி.ரா., பூமணி, சோ. தர்மன், லெட்சுமணப் பெருமாள், சு. வேணுகோபால், அழகிய பெரியவன், கண்மணி குணசேகரன் முதலியோரின் உலகத்திற்குள் என் வாசிப்பின் பிந்தைய கட்டத்திலேயே நான் வந்து சேர முடிந்தது. நாஞ்சில் கதைகளின் தனி ருசியையும் இவ்வாறாகத் தாமதமாகவே கண்டடைந்தேன். மேற்கண்ட எழுத்தாளர்களின் கதைகளுக்கிடையே பல அம்சங்களிலும் பாரிய வேறுபாடுகள் காணக்கிடைப்பினும் அடிப்படையான ஒற்றுமை ஒன்றுண்டு. அது அவர்கள் தங்கள் கதைகளின் வாயிலாகத் தீட்டிக்காட்டும் வாழ்வின் சித்திரங்கள் அந்தந்த மண்ணின், மனிதர்களின், மொழியின், பண்பாட்டின் உயிர்த் துடிப்புடன் கூடியவையாக அமைந்தவை என்பதேயாகும்.

துளிகள் கூடி அலையென எழுந்து, அடித்து ஓய்ந்தபின் கடலெனக் காணக் கிடைப்பது போலவே நாஞ்சில் நாடனின் கதைகளின் வாயிலாக அறியக் கிடைக்கும் பல்வேறு பண்பாட்டுத் தகவல்கள், பழமொழிகள், உணவுப் பழக்கங்கள், வழிபாடு, சமயச் சடங்குகள், தாவரங்கள், வைத்தியம் போன்ற குறிப்புகள், அப்பகுதியின் பிரத்யேகமான மொழிக் கூறுகளுடன் கூடி முயங்கப் பெற்றமையால் உருவாகும் சிறுசிறு சித்திரங் கள் மொத்தமும் கட்டியெழுப்புவதே அவருடைய நாஞ்சில் நாடு. நாஞ்சிலின் எழுத்துக்கள் மொத்தத்தையும் படித்த வாசக னொருவனின் மனதில் அது கொண்டிருக்கும் விஸ்தீரணம் மிகப் பரந்தது. நாஞ்சில் என்ற சொல் சங்க காலத்திலிருந்தே வழங்கிவருகிறது. நாஞ்சில் பொருநன் என்ற ஆட்சியாளனைப் பற்றிய குறிப்பு ஒரு புறநானூற்றுப் பாடலில் வருகிறது. எனவே கொங்கு நாடு, தொண்டை நாடு, பறம்பு நாடு என்பதுபோல நாஞ்சில் நாடு என்பதுவும் பரந்தவொரு நிலப்பரப்பு. சில, பல குறுநில மன்னர்களும், வேளிர் தலைவர்களும் அதைத் தொன்றுதொட்டு ஆண்டு வந்திருக்கக்கூடும் என்பது போன்ற ஒரு எண்ணமே இருந்தது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத் தின் இரண்டு தாலுகா பரப்பளவே நாஞ்சில் நாடு என்பதை அறிய வரும்போது ஆச்சரியமாகவும், ஏன் சற்று ஏமாற்ற மாகவும்கூட இருந்தது. அந்தக் குறுகிய நிலப் பரப்பு எழுத்தின் வாயிலாக நம் மனதில் எவ்வளவு விஸ்தீரணம் கொள்கிறது என்பதை யோசிக்க வியப்பே தோன்றுகிறது.

சுந்தர ராமசாமியும், நீல. பத்மநாபனும், ஐசக் அருமை ராசனும், ஹெப்சிபா ஜேசுதாசனும், ஜெயமோகனும், தோப்பில் முகமது மீரானும், குமார செல்வாவும் தம் எழுத்துக்கள் வாயிலாக எதிரொலிப்பது ஏகதேசம் ஒரே நிலப்பகுதியின் வாழ்வைத்தானென்றாலும் அவை ஒவ்வொன்றும் உயர்த்திப் பிடிப்பவை ஒவ்வொரு கோணத்திலான ஆடியை அல்லவா! மொழியாலான அந்த ஆடிகளின் தடிமனும் விட்டமும் குவி மையமும் வேறுவேறு. அதில் பட்டுத் தெறிக்கும் வெளிச்சக் கீற்றுகளின் விளைவான வண்ண மாறுபாடுகளும் தனித்தனி அலை நீளம் கொண்டவையே. ஆக நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை வட்டார எழுத்து என ஒரு நிலப்பரப்போடு மட்டும் சம்பந்தமுடையவையாகப் பார்ப்பது என்பது நமது பார்வையைக் குறுகலான ஒன்றாக ஆக்கிவிடும். மாறாக அம்மண்ணில் வேர் ஊன்றி முளைத்தெழுந்தபோதிலும் அவருடைய எழுத்துக்கள் கிளைத்துத் தேட முயலும் திசைகளும், விரிந்து பற்ற முயலும் ஆகாயமும் எவையென நோக்க எத்தனிப்பதே தர்க்கபூர்வமான காரியமாகும்.

நாஞ்சிலின் கதைகளை வகைப்படுத்த விரும்புவோமெனில் எளிமையும் வசதியும் கருதி அவற்றை மூன்று பிரிவுகளாகப் பகுத்துவிடலாம். முதலாவது அவருடைய பால்யத்தை, மண்ணைப் பிரதிபலிக்கும் கதைகள். இரண்டாவது அவருடைய மும்பை வாழ்க்கையை, பயண அனுபவங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கதைகள். மூன்றாவது அவருடைய பிற்கால சிருஷ்டியான கும்பமுனியைப் பிரதான பாத்திரமாகக் கொண்ட கதைகள். நாஞ்சில் நாடனின் கதைகளை மேலெழுந்தவாரி யாகப் படிக்க நேரிடும் வாசகன்கூட அவற்றில் காணப்படும் ஒரு முக்கியமான வேறுபாட்டை உணர முடியும். கிராமம் எளிமையானது, அன்பானது, வெளிப்படையானது. எனவே போற்றுதலுக்குரியது. மாறாக, நகரம் சிக்கலானது. ஒளிவு மறைவு கொண்டது, நட்பற்றது. ஆகவே விமர்சனத்திற்குரியது என்ற வழக்கமான இருமை எதிர்வுப் பண்பிற்குள்ளாக இக் கதைகள் அடங்குவதில்லை என்பதே அவ் வேறுபாடு. அந்த வகையில் நாஞ்சில் நாடன் காட்டும் கிராமம் நேர்மறையானது என்பதைவிடவும் இயல்பானது என்பதே சாலப் பொருந்தும். ஏனெனில் கிராமத்தில் இன்றளவும் விரவிக் கிடக்கும் சாதிப் பற்று, மூடநம்பிக்கை, போலிப் பெருமிதம், வறுமை முதலிய இன்ன பிற குணக் கேடுகளையும் விமர்சனப் பாங்கில் நோக்கும் கதைகளே அவரிடத்தில் ஒப்பீட்டளவில் அதிகம். இதற்கானப் புறவயமான காரணம் ஒன்றும் உள்ளது. அது அவர் இக் கதைகளை எழுத நேர்ந்தது கிராமத்தில் வாழ்ந்த போதல்ல, மாறாகத் தன் சொந்த மண்ணைவிட்டு வெகு தொலைவில் மொழி தெரியாத மாநகரத்தில் வசிக்க நேர்ந்தபோதுதான். இந்தத் தொலைவு மற்றும் தனிமையினால் உருவான மானசீக மான, இடைவெளிக்கப்பாலிருந்து தன் கிராமத்தைப் புரிந்துகொள்ளவும், தனக்காக மீட்டெடுத்துக் கொள்ளவுமான முயற்சியினின்றும் பிறந்தவையே இக்கதைகள்.

நாஞ்சில் நாடனின் படைப்புலகம் சார்ந்த மற்றொரு புறக்கணிக்கவியலாத கூறு, பயணங்கள். அவரது நகர வாழ்வின் தொடர்ச்சியாக அமைந்தவை அவருடைய பணிநிமித்தமான நெடும் பயணங்கள். அவை தன்னையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்ள மிகவும் உதவியாக அமைந்தன எனக் கூறுகிறார். சற்றேறக்குறைய அவருடைய எழுத்து வாழ்க்கைக்குச் சமமான கால அளவு கொண்டது அவருடைய நகர வாழ்க்கை. ஒரு வேரற்ற நீர்த்தாவரம் போல ஒட்டாத மனநிலையுடனே நகர வாழ்க்கையை அவர் மேற்கொள்கிறார். அதற்குக் காரணம் அசலான கிராமத்து மனம் நகர வாழ்க்கையின்போது உணர நேரிடும் வழக்கமான ஒவ்வாமை அல்ல.

‘நகரங்களின்மீது எனது படைப்பு மனம் கொள்ளும் அருவருப்பு, சாக்கடைகள் சார்ந்தோ, குப்பைகள் சார்ந்தோ, தூசும் புகையும் சார்ந்தோ, வாகன நெருக்கடிகள் சார்ந்தோ மட்டுமல்ல. தன் பெண்டுபிள்ளைகளிடம்கூட இயல்பாக இருக்கவிடாத, எத்தைச் செய்தும் சொத்தைத் தேடு என்று அலைகிற, முழுவதும் யாந்திரீக வயமாகிப்போன, தன்னை மிஞ்சிய அறிவு எதுவுமில்லை எனும் மடம் பட்ட, எல்லா சிதைவுகளுக்கும் களனாகிக்கொண்டிருக்கிற மனங்கள் சார்ந்தது. வாழ்தல் என்பது ரசனை அற்றுப் போதல் என்றும் சுயநலமாகச் சுருளுதல் என்றும் நகரம் எனக்கு நாளும் கற்பிக்க முனைகையில் அதில் முகம் அழிந்துபோகாமல் என்னை நான் மறுபடி மறுபடி கண்டெடுத்துக்கொள்ளும் முயற்சிகள் தாம் என் கதைகள்’ என்று தன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். ஒரு விதத்தில் இந்த மனவிலக்கமும் ஒவ்வாமையுமே அவருடைய வாழ்வனுபவங்களைப் புறவயமாக நின்று ஆராயவும், அதைத் தனது கதைகளுக்கான மூலப்பொருளாக மாற்றிப் படைத்துக்கொள்ளவும் ஏதுவாக அமைந்தன எனலாம்.

நாஞ்சிலின் கதைகளில் சமீபமாக இடம்பெறத் தொடங்கியவர் கும்பமுனி. அவர் தனித்துத் தோன்றவில்லை. உடன் அவரது சுயத்தின் எதிர்பிரதிமையான தவசிப்பிள்ளையும் சேர்ந்தே பிரசன்னம் கொள்கிறார். ரிஷி மூலம் ஆராய்ச்சிக்குரியதன்று என்பதனால், இப்பாத்திரத்தில் நாஞ்சிலின் சாயல் எத்தனை சதவீதம் அல்லது வேறு எந்த எழுத்தாளரின் நிழலாவது அதன்மீது விழுந்திருக்கிறதா என்பது போன்ற பூர்வாசிரம விவரங்களை விடுத்து கும்பமுனியின் வரவால் நாஞ்சிலின் கதைகள் அடைந்திருக்கும் பண்புமாற்றங்கள் எவையெனக் காண்பதே பயனுள்ளது. நாஞ்சிலின் படைப்பில் சற்றுத் தூக்கலாகவும் வெளிப்படையாகவும் தென்படுவது அவருடைய விமர்சனக் குரல். கரிப்பும் காரமுமாக வெளிப்படும் அக்குரல் தணிந்து, அங்கதமாக, தன்னிலிருந்து தொடங்கிப் படைத்தவன் ஈறாக சகலத்தையும் நகையாடும் எள்ளலாகக் கும்பமுனி கதை களில் குழியிடுகிறது. இதுவும்கூட அவருடைய தன்மையிலான ஒருவகை விமர்சனம்தான். ஆனால் கொஞ்சம் கோணலாக்கப் பட்ட ஒன்று. பழைய கசப்பிற்கு மாற்றாக இதில் சற்றே கனிவு கூடியிருக்கிறது எனலாம். நாஞ்சிலின் கதையுலகம் நமக்கு நல்கும் அனுபவத்தை மொத்தமாகத் தொகுத்துப் பார்ப்போமெனில், ஒரு கிராமத்துக் கோபக்கார இளைஞன், உதர நிமித்தம் இடம்பெயர்ந்து, பயணங்களால் பண்பட்டு, முதிர்ந்து ஒரு குறும்புக்காரக் கிழவராகப் பரிணமிக்கும் ஒரு மனச் சித்திரத்தையே நமக்கு அளிக்கிறது.

ஓர் எழுத்தாளரின் தனித்துவத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்குவகிப்பது அவருடைய மொழி. வெறும் தகவல் விவரணை என்பதிலிருந்து கூடுதலாக வாசிப்பை ஓர் அனுபவமாக மாற்றுவதும் அதுவே. அவ்வகையில் சிறப்பித்துக் கூறப்பட வேண்டியது நாஞ்சிலின் கதைமொழி. காலத்தின் களிம்பு அவ்வளவாகப் படியாத, பண்பாட்டின் செழுமை மிளிரும் மொழி நாஞ்சிலுடையது. அவருடைய ஆளுமையும் ரசனையும், குறிப்பாக மரபு இலக்கியங்களின் பாற்பட்ட அவரது மனச்சாய்வும் அவருடைய கதைகளின் வரிகளுக்குக் கூடுத லான வண்ணங்கள் சேர்ப்பவையாகின்றன.

நாஞ்சிலின் கதைகளைப் பொருத்தவரையில் அவற்றின் மீது வைக்கப்பெறும் விமர்சனங்களில் பிரதானமானவையென இரண்டைச் சுட்டலாம். ஒன்று அவருடைய அதிகப்படியான விவரணைத் தன்மையால் கதையின் வடிவம் சமயங்களில் குலைவுபட்டு ஒருவகைக் கட்டுரைத் தன்மை மிகுகிறது. மற்றது அவருடைய கதைகள் முழு முற்றாக லௌகீக தளம் சார்ந்து மட்டுமே இயங்குவது. அதற்கப்பால் மனித அகம் சார்ந்த தத்துவார்த்த அடிப்படைகள், உளவியல் ஆழங்கள், ஆன்மீக நெருக்கடிகளை அவை கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை என்பது.

முதலாவது விமர்சனத்தைப் பொருத்தவரையில் தன்னியல்பாக மட்டுமல்லாது பிரக்ஞைபூர்வமாகத் தெரிந்தே அத்தகைய விவரணைத் தன்மையை நாஞ்சில் தன் கதைகளில் மேற் கொள்கிறார் எனப்படுகிறது. ஆனால் அதற்கான நியாயம் ஒன்றை அவர் தன்னிடத்தே கொண்டிருக்கிறார். “எனக்குத் தெரிந்து சுமார் 27 வகைக் கடல் மீன்கள் நாஞ்சில் நாட்டில் விற்பனைக்கு வருகின்றன. இந்த எல்லா வகை மீன்களின் பெயரும் அங்குள்ள பெண்களுக்குத் தெரியும். அந்தந்த மீன்களின் முள்ளின் போக்குகள் தெரியும். உலும்பு வாடையின் வேறுபாடுகள் தெரியும். தோல் உரிக்க வேண்டுமா கூடாதா என்பது தெரியும். சுவை வேறுபாடுகள் தெரியும். எல்லா வகை மீன்களையும் அவர்கள் ஒரேவிதமாகக் கறி சமைப்பதில்லை. மீனின் தன்மைக்குத் தகுந்தவாறு பக்குவம் மாறும். மாற்றிச் செய்தால் குடிமுழுகிப்போவது ஒன்றும் இல்லை. என்றாலும் குறிப்பட்ட பக்குவத்தில் அந்த மீனைச் செய்யும்போதுதான் அதன் சுவை மேலோங்கி நிற்கும். எழுதிக்கொண்டு போகிற போக்கில் ஏதோ ஒரு மீனையோ அதன் பக்குவத்தையோ சொல்லிச்செல்வது என்பது இயல்பான விஷயம். கடல் மீனையே காணாத பகுதியில் வாழும் மனிதர்களுக்கு இவை நூதனமாக இருக்கும். ஏன் தேவையற்ற விஸ்தரிப்பாகக்கூட இருக்கும். ஆனால் எனக்குப் பொத்தாம் பொதுவாக, ‘மீன் வாங்கிக் குழம்பு வைத்தாள்’ என எழுதிச்செல்வதில் சம்மதமில்லை. அந்த வாக்கியத்தை மீன் காட்சிசாலையில் மட்டுமே மீன்களைப் பார்த்த ஒருவரால்கூட எழுதிவிட முடியும். அதை எழுதுவதற்கு நாஞ்சில் நாடன் வேண்டாம்” என்பது அவருடைய தீர்மானமான முடிவு.

தொடக்கத்தில் நாஞ்சில் நாடனின் கதைகளில் காணப் படும் உணவுப் பதார்த்தங்களின் விலாவாரியான பட்டியல், அவற்றிற்கான சமையல் குறிப்புகள் ஆகியவற்றைப் படிக்கும் போது இது ஒருவகையான மனப்பீடிப்போ என்றுகூட அதிகப் படியாக எண்ணியதுண்டு. ஆனால் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில் நம்மிடையே பாரம்பரியமான அரிசி வகைகள் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமாகப் புழக்கத்தில் இருந்து வந்ததாகவும், அவற்றின் எண்ணிக்கை இப்போது வெறும் முப்பதுக்கும் குறைவாக அருகிவிட்டதாகவும், அவற்றின் பெயர்கள்கூடத் தெரியவரவில்லை என்றும் படித்தபோதுதான் நாஞ்சில் நாடன் மாதிரியான எழுத்தாளர்கள் தேவைக்கும் அதிகமாகத் தங்கள் படைப்புகளில் அள்ளித் தெளித்துவிட்டுப் போகும் பண்பாட்டுத் தகவல்களின் அருமையும் அபூர்வமும் உறைத்தன.

இரண்டாவது விமர்சனக் கருத்தையொட்டி நோக்கும் பட்சத்தில் நாஞ்சிலின் கதாபாத்திரங்கள் தினசரி பூசை நியமங் கள், கோவில் வழிபாடு, திருவிழாக் களியாட்டங்கள் என்பதைத் தாண்டி பெரிய ஆன்மீகத் தேட்டங்கள் அல்லாதவர்களே. அவர்கள் அந்த மண்ணில் பிறந்து, உழன்று, உதிர்ந்து மட்கி அம்மண்ணிற்கே உரமாகிறவர்களேயன்றி ஆகாயத்து விண்மீன் களைக் கருதி அவாவுறுகிறவர்கள் அல்லர். இன்னும் சொல்லப்போனால் இகம் பற்றிய சுகதுக்கங்களில் ஆழ்ந்துபோய் அவர்கள் தங்கள் வாழ்வில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் தருணங்களே அதிகம் வாய்க்காதவர்கள் என்று கூறுலாம். மண்ணின்மீதும் சக மனிதர்கள்மீதும் பற்றுகொண்ட, வெற்றி தோல்விகளுக்கப்பால் வாழ்வின்மீது நேர்மறையான பிடிப்பு உடைய எழுத்தாளர்கள் பலரும் அவ்வளவாக ஆன்மீக நாட்டம் அற்றவர்களாகவே தம் எழுத்தில் வெளிப்படுகிறார்கள். மாறாக அவர்களிடம் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படும் மனிதாபிமானமும் நீதியுணர்வும் உண்டு. இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ள ‘யாம் உண்பேம்’ என்கிற கதையில் வரும் அந்தப் பசித்த கிழவரின் குரலில் வெளிப்படும் அந்த அருள் உணர்வு எந்த வகையிலான ஆன்மீக உணர்வுக்கும் குறையாதது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

‘எனது சிறுகதைகளின்மீது எனக்கிருக்கும் அபிப்பிராயம் ஒரு போதாமை; ஒரு நிறைவின்மை’ என்று குறிப்பிடும் நாஞ்சில் நாடனுக்கு, வாழ்க்கை தனக்குக் கொடையளித்த அனுபவங்கள் தானுணர்ந்து உள்வாங்கிக்கொண்ட விதத்தில் எழுதிச் செல்லுதல் என்பது தனக்கு உவக்கும் பணி என்பதைத் தாண்டி தனது எழுத்துக்கள் குறித்து ஊதிப் பெருக்கப்பட்டப் பிரமைகளோ (அ) கழிவிரக்கத்துடன் கூடிய தடுமாற்றங்களோ கிடையாது. தனிப்பட்ட வாழ்வில் தானடைய முடியாத உயரங்களைத் தன் எழுத்தின் வழி அடைந்துவிடலாம் என்ற அவாவில் தன் நிழலைத் தானே தாண்ட முயலாதவர் அவர். இந்தத் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் அவருடைய எழுத்திற்கு நல்கியுள்ள வசீகரத்திற்கும் அப்பால் அவருடைய படைப்புகள் நமக்குக் கையளிக்க விரும்பும் சங்கதி ஒன்றுண்டு. நாஞ்சில் தன் தந்தையுடனான தனிப்பட்ட உரையாடல் ஒன்றினைப் பதிவுசெய்துள்ளார்.

வயல் அறுவடையின்போது காலில் மண்ஒட்டாத, ஆனால் காலடித்தடம் பதியும்படி உலர்ந்த வயலில், ஏராளமாக நெல்மணிகள் தொளிவதைப் பார்த்து அப்பாவிடம் கேட்டேன்:

“இவ்வளவு நெல்லும் நமக்கு சேதம்தானே? இப்பிடி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய விஞ்ஞானிகள் வழி கண்டுபிடிக்கக் கூடாதா?”

அப்பா சொன்னார், “இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்? நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மை சுத்திக் காக்கா, குருவி, எலி, பாம்பு, தவளை, புழு, பூச்சி எல்லாம் சீவிக்கணும். அதை மறந்திரப்பிடாது.”

வாழ்வைத் தொடர் ஓட்டப்பந்தயமாகக் கருதித் தமக்கான இடத்தை அடைவதற்காகப் பிறரை முந்திக்கொண்டு ஓடும் நம் தலைமுறையினர் மறந்துவிட்ட அல்லது நினைவுபடுத்திக்கொள்ள விரும்பாத சேதி இது. நாஞ்சிலின் கதைகள் அளிக்கும் இலக்கிய அனுபவத்திற்கும் மேலாக நான் மதிப்பது அவரது கதைகளில் உள்பொதிந்திருக்கும் பண்பாட்டின் சாரமான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் இத்தகைய சேதிகளையே.

ஈரோடு க. மோகனரங்கன்

4.12.2012

தலைப்பு: சாலப்பரிந்து . . .

(காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை)

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

தேர்வும் தொகுப்பும்: க. மோகனரங்கன்

மொத்தப் பக்கங்கள்: 240

விலை:190

ISBN : 978-93-81969-30-4

முகவரி:
காலச்சுவடு பதிப்பகம்
கே.பி சாலை,
நாகர்கோவில் 629001
Email: publications@kalachuvadu.com

Advertisements