பதிப்பக அலமாரி ஆழி பதிப்பகம் தூரத்து மணியோசை நா.கண்ணன் தென்கொரியா

பதிப்பக அலமாரி ஆழி பதிப்பகம்

தூரத்து மணியோசை

நா.கண்ணன்

தென்கொரியா

 

 

 

 

 

 

[புத்தக கண்காட்சி  2013  ஜனவரியில்  வரவிருக்கும் புத்தகம்]

 

4. கொரிய நளபாகம்!

நான் இங்கு வந்த புதிதில் எங்கள் ஆய்வக காவல்காரன் ஒரு சின்ன நாய்க்குட்டியைக் கொண்டு வந்தான். அதற்கு “சிந்தோ” என்று பெயரிட்டு அழைத்தான். மனித இனம் நாடோடிகளாய் திரிந்த காலத்தில் ஓநாய்களில் ஒரு வகை மனித இனத்துடன் ‘சிம்பயாடிக்’காக ஒட்டிக்கொண்டது. (ஓ)நாய்க்கு வேண்டிய உணவு மனிதர்களிடமிருந்து கிடைத்தது. மனிதர்களுக்கு வேண்டிய காவல் (ஓ)நாயிடமிருந்து கிடைத்தது. இப்படி ஆரம்பித்த தொடர்பு காலப்போக்கில் நாய்ப்பண்ணை வைத்து கையடக்க நாய்களை உருவாக்கும் வரை வந்துவிட்டது. இந்த ஆதித்தொடர்பு வீண் போகாமல் எங்கள் காவல்காரனும் சிந்தோ வகை நாய்குட்டிக்கு சோறு போட்டு வளர்த்தான்.

அது கொஞ்ச காலத்தில் எங்கள் எல்லோரின் பிரியமான நாயாகப்போய்விட்டது. எல்லோர் பின்னாலும் ஓடும். ஒரு நாள் பஸ் ஸ்டாண்ட்வரை வந்து என்னை விட்டுவிட்டுப் போனது. காணாமல் போய்விடுமோ என்று கவலை. அடுத்த நாள் ஆய்வக வளாகத்தில் பார்த்த பின்தான் நிம்மதி.

ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் அந்த நாயைக்காணவில்லை. நம்மவூரில் காணாமல் போனால் நாலு தெரு தேடினால் கிடைத்துவிடும். இங்கு அப்படியில்லை. யார் வயிற்றுக்குள் போயிருக்கிறது என்று காண்பது எப்படி? இந்துக்களுக்கு எப்போதுமே ரொம்ப அதிர்ச்சி தரும் சேதி இது! சீன வம்சாவளியினரான கொரியர்கள் நாய்க்கறி சாப்பிடுகிறார்கள். ஆடு, மாடு என்றாலும் சதை இருக்கிறது. இந்த நாயில் என்ன சதை இருக்கிறது என்று தெரியவில்லை? சிந்தோவிற்கு போட்ட சாப்பாட்டை வைத்து கணக்குப் பண்ணினால் அதன் கறி நிச்சயமாக லாபகரமான வியாபாரமில்லை! இருந்தாலும் இவர்களுக்கு இப்படியொரு வழக்கம். அன்று நேஷனல் ஜியாகிராபிக் சானலில் ஒரு ஆவணப்படம். பல நூற்றாண்டுகள் தொன்மையான சீன சமையலில் 20 வகையான விலங்குகளை மனிதர்கள் உண்ணலாமென்றும். அதற்கான சமையல் குறிப்புகள் எழுதிவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிகிறது. பறவைகள், பன்றி, ஆடு, மாடு இவை போக நாயும், பாம்பும் அதில் இடம் பெறுவது நமக்கு என்னமோ செய்கிறது.

என்ன செய்ய இதுவொரு கலாச்சார அதிர்ச்சிதான். இவர்கள் உணவுதரும் அதிர்ச்சியில் இன்னும் பலவகையுண்டு! அன்று நண்பர்களுடன் சாப்பிட போனால் எட்டுக்கால் ஆக்டோபுஸ்ஸை உயிருடன் உலையில் போடுகிறார்கள். நண்டு, நத்தை, கடல் பஞ்சு, கடல் வெள்ளரி, கடல் முள்ளுப்பூச்சி என்று சகலமும் இவர்களுக்கு புரத உணவாகிறது. தீவிர சைவர்கள் இங்கு வந்தால் முதலில் இந்த விசித்திர உணவு நாற்றத்திற்கு பழகிக்கொள்ள வேண்டும். அடுத்து உயிர்கள் வதைபடும் காட்சிகளுக்கு பழகிக்கொள்ள வேண்டும்! பிறகு தனியாக சமையல் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஒரு யோகி போல் உணவு அருந்தாமல் வாழப்பழகிக்கொள்ள வேண்டும்!

கோயம்புத்தூர் கவுண்டர் ஒருவர் இங்கு வந்திருக்கிறார். தண்ணீர் அருந்தக்கூட உடம்பை அசைக்காமல் வாழ்ந்து பழகியவர். ஆனால் அவருள் ஒளிந்திருக்கும் சமையற்கலையை வெளியே கொண்டு வந்திருக்கிறது கொரியா! ஒரே ரைஸ் குக்கரை வைத்துக் கொண்டு மனிதர், சோறு, குழம்பு, வறுவல், தோசை என்று சகலமும் செய்து விடுகிறார். சில நேரங்களில் இத்தகைய சோதனைகளில் மனிதனின் ஆக்கம் பீரிட்டுக்கொண்டு வருவதற்கு இந்தக் கவுண்டரே சாட்சி.

ஜப்பானில் வாழ்ந்த போது இப்படித்தான் ஒரு சைவர் வந்து படாதபாடு பட்டார். வெறும் வெள்ளைச் சோறை வாயில் போட்டவுடன் அவருக்கு உமட்டிக்கொண்டு வந்தது இன்றும் ஞாபகத்திற்கு வருகிறது! சமாளித்து விடுகிறேன் என்று ஒரே வாரத்தில் சிக்கன் சாப்பிட ஆரம்பித்தார். அடுத்த வாரம் வாய் பேசமுடியாமல் முடங்கி விட்டார். டாக்டர் சைக்கோசோமடிக் என்று சொல்கிறார். மனது உடலைப் படுத்தும் பாடு.

மூன்று வேளை அம்மா கையில் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு கொரியா ஒரு பெரும் சோதனை! என் நண்பர் ஒருவர் எங்கு போனாலும் ஆத்துக்காரி கொடுத்தனுப்பிய புளிக்காய்ச்சலுடன் அலைகிறார். ஆனாலும், காசு வருகிறது என்றால் இந்தக் காலத்தில் இதையெல்லாம் பார்த்தால் ஆகுமா?

இந்தியர்களைப் பொறுத்தவரை வளைகுடா நாட்டிற்கு அடுத்த படியாக அதிக இந்தியர்கள் வேலைக்குப் போகும் இடமாக கொரியா மாறி வருகிறது. யார் கண்டார்? ஒரு காலத்தில் பஞ்சாபி டாபா இந்தத் தெருக்களில் வந்தாலும் வரலாம்!

**

Advertisements