மொழிபெயர்ப்பு நேர்காணல் கிம் கி துக் தென் கொரிய இயக்குனர்

மொழிபெயர்ப்பு     நேர்காணல்    கிம் கி துக்   தென் கொரிய இயக்குனர்
சலன சித்திரத்தின் மௌன கலைஞன்
கிம் கி துக்

தமிழில்      ஜா. தீபா.

download (2)

கிம் கி துக் – வாழ்வின் முரண்களை கவித்துவமாகவும், வலி மிகுந்ததாகவும் தனது திரைப்படங்களில் சொல்லிச் செல்லும் கலைஞன். எந்த ஒரு கனமான யதார்த்ததுக்குள்ளும் இருக்கிற எளிமையை புரிந்து கொள்ள செய்கிற அரிய படைப்பாளி. ஓவியத்தை ஒத்த காட்சிகளையும் , காட்சியினூடே ஓவியத் தன்மையையும் இட்டு நிரப்புகிறவர். காதல், காமம், வெறுப்பு, வன்மம் – எதையுமே தனக்குரிய லாவகத்தோடு சொல்ல முடிகிற இயக்குனர். பார்வையர்களின் எந்த ஒரு எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கின்றன இவரது படங்கள்.

தென் கொரியாவின் மறுக்க முடியாத திரைப்பட ஆளுமையான இவர் தந்த நேர்காணல்கள் வெகு குறைவு. வெவ்வேறு கால கட்டங்களின் போது அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டிகளின் மொழிபெயர்ப்பு இது.

கேள்வி : உங்களுடைய படங்கள் அதீத உணர்சியினை கையாள்கிறது. பலநேரங்களில் காதலையும் , வெறுப்பையும் அல்லது இரண்டின் ஒற்றுமையையும் பேசுகிறது. இதற்கான உந்துதல் எங்கிருந்து கிடைக்கிறது? உங்களை இயக்குனராக்கியது எது?

கிம் கி துக் : ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு உணர்வுகள் இருக்கும் என நம்புகிறேன். ஒருவனுக்குள் இருக்கும் காதல், வெறுப்பு, பொறாமை, ரௌத்ரம், கொலை செய்யும் தூண்டுதல் எல்லாம் கலந்தே இருக்கும். ‘‘வெள்ளை நிறமும் கருப்பு நிறமும்’ ஒன்று தான் என்கிற தத்துவத்தின் அடிப்படையிலேயே என் படங்கள் இருக்கின்றன. உலகத்து விஷயங்களை ஒரே அர்த்தம் தரும் விதத்தில் நான் மொழிபெயர்ப்பதில்லை. மாறாக, அதன் எதிர்த்திசையில் பயணிக்கிறேன். இப்படி எடுத்து கொள்ளுங்களேன், ஒரு மனிதன் சிறப்பாக அடிக்கடி சண்டையிட்டு கொண்டே இருக்கிறான் என்றால், அவன் திறமையானவன் என்ற அர்த்தம் மட்டுமல்ல, அவன் பயப்படவும் செய்கிறான்.

கேள்வி : ஏன் உங்கள் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் குறைவாகவே பேசுகின்றன?

கிம் கி துக் : பேசுகிற வார்த்தைகள் எல்லாவற்றிக்கும் தீர்வு சொல்லும் என நான் நினைக்கவில்லை. சில நேரங்களில் மௌனம் உண்மையான உணர்வுகளை சொல்லிவிடும். சொற்கள் சில சூழல்களின் அர்த்தங்களை கெடுத்துவிடும்.

கேள்வி : உங்களின் பெரும்பாலான படங்களின் முடிவை பார்வையாளர்களிடத்தில் விட்டு விடுகிறீர்கள். ஏன் உறுதியான முடிவு ஒன்றினை சொல்ல கூடாது?

கிம் கி துக் : ஒரு இயக்குனர் எல்லாவற்றையும் விளக்கக்கூடாது. என்னைப் பொறுத்தவரை திரைப்படம் என்பது ஒரு கேள்வி. இந்த கேள்வியினை பார்வையாளர்கள் முன் வைக்கிறேன். என் இடத்தில் இருந்து யோசித்து அவர்கள் விவாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். அதனால் தான் திரைப்பட ஊடகம் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. இதனால் தான் என் படங்களில் உறுதியான பதில் இருக்காது. ஆனால் அதற்குரிய பதில்கள் முன்னேறிக் கொண்டே இருக்கும்.

கேள்வி : உங்களின் பின்புலம் படம் இயக்குவது அல்ல. நீங்கள் ஒரு ஓவியர். அதனால் தான் உங்கள் படங்கள் சில சமயங்களில் ஓவியம் போல் தெரிகிறது. ஓவியராக இருந்தது படங்கள் இயக்கும் போது உதவியாக இருந்ததா?

கிம் கி துக் : கண்டிப்பாக உதவியது. நான் படங்கள் வரைவேன். அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வேன். நான் தொழிற்சாலையிலும் வேலை செய்திருக்கிறேன். அதனால் இயந்திரங்கள் எப்படி வேலை செய்யும் என்பது எனக்கு தெரியும். இதுவும் கூட எனக்கு நிறைய உதவியது. படங்களை தொழில்நுட்பமாகவும், வாசிப்பாகவும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதை விட முக்கியம் பல்வேறு விதமான வாழ்கையை வாழ்வது…. அனுபவிப்பது.

கேள்வி : இதே போல் கொரியாவின் ராணுவ பின்புலமும் உங்கள் பட உருவகத்தில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதா?

கிம் கி துக் : நான் கப்பற்படையில் ஐந்து வருடங்கள் செலவழித்தேன். பல அனுபவங்கள் அங்கே கிடைத்தன. வெவேறு பின்புலங்களை கொண்ட மக்களை சந்தித்திருக்கிறேன். கட்டளைகள், வன்முறைகள், கொள்கைகள் இவற்றைக் கற்றுக் கொள்ளும்போது குழம்பியுள்ளேன். குறிப்பாக, வடகொரியாவுக்கு எதிராக நான் தயார் செய்யப்பட்டேன்.. ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்றதும் என் கண்களை மெதுவாக திறந்து திரைப்படங்களில் செலுத்தினேன். மக்கள் ஒருவொருவருக்கொருவர் மரியாதை கொண்டிருக்காதபோது விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் நாம் இக்கட்டில் இருந்து மீள முடியாமல் வலியுடன் இருக்கிறோம்.

கேள்வி : உங்கள் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் சமூகத்திற்கு ஒவ்வாதவர்களாகவே இருக்கின்றனர்.

கிம் கி துக் : சமகாலத்தவர்களால் அவர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என நான் தீர்மானிப்பது தவறு. அவர்களின் வெளிப்படையான வாழ்க்கையை என் படங்கள் மூலம் காட்ட நினைக்கிறேன்.

கேள்வி : சிவப்பு விளக்கு பகுதியை களமாக கொண்டு ‘Bad guy’ இயக்கியுள்ளீர்கள். சிவப்பு விளக்கு பகுதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கிம் கி துக் : இங்கு வேலை செய்பவர்கள் மற்றவர்களைப் போலவே தான் இருக்கிறார்கள். ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் இங்கு வாழும் மக்களுக்கு பகலும், இரவும் ஒன்று தான். அவர்கள் வேலை தான் அவர்களின் வாழ்கை. தங்களின் வேஷமுள்ள வாழ்க்கையிலிருந்து தப்பிக்க மனிதர்கள் இங்கு வந்து போகிறார்கள். இங்குள்ளவர்கள் முக்கியமானவர்கள். என் கதைக்குத் தேவையான மூலபொருட்கள் இங்கு கிடைக்கின்றன.

கேள்வி : நீங்கள் விபச்சாரத்தை தொழில் என்கிறீர்கள். எந்த வகையில் இதனைத் தொழிலாக கருதுகிறீர்கள்?

கிம் கி துக் : நான் பல தொழிற்சாலைகளில் வேலை செய்துள்ளேன். சிறந்த வேலைகள் இல்லையென்றாலும், ஏதோ ஒரு வகையில் செய்வதற்கு இயல்பானதாகி இருந்தது. எனக்கு அதில் அவமானம் ஏதுமில்லை. ஏனென்றால் அது தான் என்னுடைய எதிர்காலம் என நினைத்திருந்தேன். என்னுடைய இறந்த காலங்கள் எனக்கு ஒரு விஷயத்தை கற்றுக் கொடுத்தன. ஒருவர் கடினமான வாழ்க்கையை பழகிக் கொண்டால் அது தான் வாழ்வதற்கான ஒரே வழி என நினைத்துக் கொண்டால் இந்த உண்மை அவர்களின் வாழ்க்கையாக மாறிவிடும். ஷியாங்க்சல் என்கிற புகழ்பெற்ற கொரிய ஞானி ஒருவர் ஒருமுறை, ‘மலைகள் என்பது மலைகள் தான்’ என்றார். ஒருவர் மலையினை மாற்ற முடியாது. அது அதுவாகவே இருக்கும். அது போல தான் வாழ்க்கையும். ஒருவரைக் கேட்டுக்க் கொண்டு வாழ்க்கை இருக்காது. மற்றவர் மதிக்கிறார்களோ இல்லையோ ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ அவன்/அவளின் அன்றாட வாழ்க்கை மாற்றம் பெறாது.

கேள்வி : உங்கள் படங்கள் பார்வையாளர்களை உணர்ச்சிவயப்படுத்திவிடுகிறது. அதற்கு முழு பொறுப்பும் நீங்கள் தான்.

கிம் கி துக் : உண்மை தான். திரைப்படத்தை உருவகமாக மாற்றுவது முக்கியம் என நினைக்கிறேன். சத்தியமான, முகத்தில் அறையைக் கூடிய உண்மைகளை உருவகங்கள் மூலமாக எடுத்து வைக்கிறேன். ஒரு இயக்குனர் பேசுவதை விட அவர் படைப்பு பேச வேண்டும். பார்வையாளர்களிடம் இருந்து இயக்குனர் தன் படைப்பை முன்னிறுத்தி அவன் காணாமல் போய் விட வேண்டும். நான் ஒரு படைப்பாளி….கலைஞன்.

கேள்வி ; உங்கள் படங்களில் சமூகம் பற்றிய உங்களின் மொத்தக் கருத்து வெளிப்படுவதாக நினைக்கிறேன்.

கிம் கி துக் : என் படங்களைப் பார்க்கும் மக்கள் அதில் யதார்த்தம் இருப்பதாக சொல்கிறார்கள். என் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், பின்புலம் எல்லாமே உண்மையானவற்றை சேர்ந்தது. இதில் சிறப்பாக என்னால் செய்ய முடியும். சிதறிக் கிடக்கும் கொரிய சமூகத்தையும் ஏற்ற தாழ்வுடன் கூடிய கொரிய ஆட்சியையும் எனது சில படங்கள் விமர்சனம் செய்கின்றன. கொரிய சமூக அமைப்பில் பலவற்றில் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மாற்று சிந்தனைக்கும், நடைமுறைக்கும் உள்ள எல்லையை இல்லாமல் ஆக்கவே நான் விரும்புகிறேன். பல விஷயங்கள் கொரிய வழிமுறையிலேயே பார்க்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு தங்களின் கல்வி, சமூக பின்புலத்தை வைத்தே கொரியர்கள் மற்றவர்களைப் பார்க்கின்றனர்.

என்னை ஒரே நிலையிலேயே மக்கள் பார்க்கின்றனர். ஒரு கற்பனை மிகுந்த படைப்பாளியாக அவர்கள் என்னைப் பார்ப்பதில்லை. முறையான கல்வி கிடைக்காத பிற்படுத்தப்பட்ட சமூக பொருளாதார பின்னணியில் இருந்து வந்தவன் என்ற கண்ணோட்டத்திலே என்னை பார்க்கின்றனர். என்னை விமர்சனம் செய்பவர்கள் தாங்களும் இது போன்ற சமூகத்தின் மத்தியில் தான் இருக்கிறோம் என்பதை மறந்து போகின்றனர். அவர்கள் தங்களின் எண்ணங்களையும், பழக்க வழக்கங்களையும் கண்காணிப்பது இல்லை. சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்ற மனிதர்களைப் போலத் தான் என்பதை ‘Bad guy’ படம் சொல்கிறது. இவர்கள் குப்பைத்தொட்டியில் வசிக்கும் வீணானவர்கள் அல்ல.

கேள்வி : உங்கள் படங்களில் நீங்கள் பெருமைப்படும் திரைப்படம் எது? ஏன்?

கிம் கி துக் : எதையும் நான் பெருமையாக நினைக்கவில்லை. வரும் காலத்தில் நான் எடுக்கப்போகும் படங்கள் தான் என்னை பெருமை படுத்த போகின்றன. ஏனென்றால் அவை பற்றிய எந்த எண்ணமும் நான் இதுவரை கொண்டிருக்கவில்லை. எந்த மாதிரியான திட்டங்களோடும், எண்ணங்களோடும் நான் வாழப்போகிறேன் என்பதை அறிய நான் ஆவலோடு இருக்கிறேன். ஏதாவது ஒன்றை அறிய நான் சொல்லியே ஆக வேண்டுமென கட்டாயபடுத்தினால் ‘address unknown’ படத்தை சொல்வேன். இது அமெரிக்க பார்வையாளர்களுக்கு நான் சிபாரிசு செய்யும் படம். மூன்றாம் உலக நாடுகளின் இளைஞர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அமெரிக்க இளைஞர்கள் பார்க்கவேண்டுமென விரும்புகிறேன்.

கேள்வி : ஹாலிவுட் சென்று வட அமெரிக்காவில் படம் பண்ணும் யோசனை இருக்கிறதா? ஹாலிவுட் உங்களின் பாணிக்கு எப்படி கை கொடுக்கும் என நம்புகிறீர்கள்?

கிம் கி துக் : இதுவரை இல்லை. என்னால் முடிந்தால் பல நட்சத்திரங்களை கொண்டு பெரிய பட்ஜெட் படம் எடுக்க வேண்டும் என நினைத்திருக்கும் விஷயம் ஒன்று உண்டு. ஆசியாவின் புத்த மத போர் பற்றியது.

கேள்வி : கொரியாவிலோ, வட அமெரிக்காவிலோ எந்த நடிகருடனாவது சேர்ந்து பணியாற்ற வேண்டும் என நினைக்கிறீர்களா? ஏன்?

இதுவரை இல்லை. அமெரிக்க நடிகர்களோடு படம் செய்யும் எண்ணம இல்லை. எந்த அமெரிக்க நடிகருக்கு என்னுடைய படத்தில் பணிபுரிய ஆசை இருக்கிறது? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நான் தெரிந்து கொள்கிறேன்..

கேள்வி : ‘’Bad guy’ படம் உங்களின் மற்ற படங்களை விட கொரியாவில் அதிகமாய் பெயர் பெற்றது. இதற்கான காரணமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? இப்போதைய Cho jae hyan நடித்ததாலா?

கிம் கி துக் : கொரியா மக்கள் பலர் இன்றும் திரைப்படங்கள் பார்க்க செல்கிறார்கள். அவர்கள் படங்களில் பிரபலமானவர்களைப் பார்க்க விரும்புகிறார்கள். Cho jae hyan இல்லையென்றால் பத்து பேரில் ஒருவர் தான் படம் பார்த்திருப்பார்கள்.. பலர் வந்து என் படத்தை பார்க்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. கொரியர்களுக்கு என் பெயர் தெரியும். ஆனால் அவர்கள் என் படத்தை விரும்ப மாட்டார்கள். அனைவரும் விரும்பக்கூடிய படம் எடுக்க வேண்டும் என நான் விரும்புவதில்லை. என் படத்தை பார்த்த பின் அழுகிற, வாழ்க்கையை புரிந்து கொள்ள முயல்கிற பார்வையாளர்கள் எனக்கு போதும்.

கேள்வி : உங்கள் படங்களில் அதிக வன்முறை, பாலியல் இருப்பதாக சொல்லும் பட விமர்சகர்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

கிம் கி துக் : இது சாத்தியமானது தான் என நினைக்கிறேன். நான் வளர்ந்த சூழலில் இருந்து அவர்களின் பின்புலம் வேறானதாக இருக்கலாம். இதனாலேயே எஏன் படங்களை அவர்கள் வேறு மாதிரி புரிந்து கொண்டிருக்கலாம். இப்போது விமர்சகர்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். ஏனென்றால் எனக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.. தங்களின் எண்ணங்களைத் திரும்பி பார்க்கிறார்கள் என நான் யூகிக்கிறேன். பல விஷயங்களை உள்வாங்கி கொள்ள அவர்களுக்கு சில காலங்கள் தேவைப்படலாம்.

கேள்வி : தத்துவம் என்பது உங்கள் படங்களைப் பாதிக்கிறதா? உங்கள் படங்களில் உள்ள கடவுள் என்ன பங்களிப்பை செய்கிறார்?

கிம் கி துக் : நாம் கண்களால் பார்க்கவும் , உணரவும் முடிகிற இயற்கை தான் கடவுள். இயற்கை என்பது பிரமாண்டமானது. அதற்குள் கணக்கு, அறிவியல், தத்துவம், விஞ்ஞானம் என எல்லாமே இருக்கிறது.

கேள்வி : நீங்கள் பேட்டித் தர மறுத்திருந்தீர்களே..?

கிம் கி துக் : எல்லாருடைய கருத்துக்கும் நான் மரியாதை தருகிறேன். சிலர் கோழைத்தனமாக நான் சொல்வதை தவறாக வெளியிடுகிறார்கள். என் படங்களை என் அம்மா கூட விரும்பமாட்டார்கள் என ஒரு விமர்சகர் சொல்லியிருந்தார். அதைப் படிக்கும் போது நான் வருத்தப்பட்டேன். என் குடும்பத்தைப் பற்றித் தவறான பிரச்சாரங்கள் செய்பவர்களை நான் மன்னிக்க மாட்டேன். என் அம்மா படிக்காதவர்களாக இருந்தாலும் எங்களைப் பொறுத்தவரை மிக உயர்ந்தவர். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சிப்பதனால் என் படைப்புக்கு ஒரு பங்கமும் ஏற்பட்டுவிடாது.

கேள்வி : மாய கற்பனைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கிம் கி துக் : நான் சிந்தனையில் மிகவும் ஆழ்ந்து போயிருக்கும்போது , ‘இது கனவா?’ என்று கேட்கும் பழக்கம் எனக்கிருக்கிறது. நான் உடலளவில் உறுதியான மனிதன். ஆனால் என் வாழ்க்கை கனவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வெளிப்படையற்றவனாகவே இருக்க முடிவு செய்துள்ளேன். பணப் பற்றாக்குறை, மரியாதை இல்லாமை போன்றவற்றால் சொல்லவில்லை. இந்த உலகத்தில் வாழ்வது கடினமானது.

என் குழந்தை பருவத்தில் மிஷன் பள்ளியில் படித்தேன். அங்கு எனக்கு மூளை சலவை செய்யப்பட்டது. கிறித்தவ மனநிலையில் இருந்து வெளியேற மிகவும் பிரயத்தனபட்டேன். முடிவில் அது நிகழ்ந்தது. அதில் இருந்து வெளியேறிய பின்பு தான் தெரிந்தது கிறித்தவ மதிப்பீடுகள் முக்கியமானது என்பது. என்னைச் சுற்றி அவர்கள் இருந்த போது அவர்களை பின்பற்றுவது கடினமாக இருந்தது. கஷ்டமான சிக்கல்கள் ஒருவர் வாழ்க்கையில் தொடர்ந்தபடி இருந்தால், மாய கற்பனைகளால் ஆன உலகில் வாழ்வது என்பது சிரிதளவாவது ஆறுதல் தரும்.
***

Advertisements