சிறுகதை வெள்ளை நிற பாம்பு [நுண்கதை] விஷ்ணுபுரம் சரவணன்

வெள்ளை நிற பாம்பு [நுண்கதை]
விஷ்ணுபுரம் ளசரவணன்

 

download (3)

அந்த அறையில் இருமலொலியை விடவும் குறைவு வெளிச்சம். யாரேனும் கதவை
திறக்கையில் வாசலிலிருந்து உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு சில நொடிகளில்
மறைந்துவிடும் சத்தமும் தடயமின்றியும். அவ்வெளிச்சத்தில் மருந்துப்
பட்டைகளின் பளபளக்கும் மேற்தாள் மின்னிமறையும்.மேற்கூரையின் பொத்தல்களின்
வ்ழியே புகும் வெளிச்சம் அவனுக்கு போதுமாயிருந்தது. அந்த அறையிலிருந்த‌
முகம்பார்கும் கண்ணாடியை அவன் திருப்பிவைத்த நாளில்தான் கடைசியாக
மருத்துவமனைக்கு சென்றது. பலமுறை அம்மா அந்த கண்ணாடியை சரியாக
வைத்தாலும் அடுத்த சிலநிமிடங்களில் அவன் திருப்பிவைத்துவிடுவான்.
அம்மாவின் நசுங்கிய வளையல்களைப்போல கூரைப்பொத்தல் வெளிச்சம் கிடந்தது.
மூன்று பொத்தல்கள் ஆய்த எழுத்தைப்போல கிடந்ததை அவன்
பார்க்கவிரும்பவில்லை. எழுத்துகள் அவனை வெளிச்சத்தை விரும்பவைத்துவிடுமென
முழுதாக அச்சப்பட்டான்.எழுத்தின் வழியே சென்றால் மருத்துவனின் சொற்களை
அடைந்துவிடுவோமோ எனும் பேரச்சமும் கூட. வெளிச்சத்தில் மாத்திரை தாள்
பளபளப்பதைபார்க்கும் கணங்களில் அவனின் கண்களை மூடிக்கொள்வான். கண்களுக்குள்
வெண்ணிற பாம்பு ஒன்று கிடந்துழலும். மஞ்சள் நிற மாத்திரைத்தாளை
பார்க்கையிலே வாய் கசக்க ஆரம்பித்துவிடும். ஊர்சுற்றியான அவன் இத்தனை
நாட்கள் வீட்டில் அதுவும் ஒரே அறையில் தங்கியதில்லை. அதுவும்
பண்டிக்கைக்கு சிலநாட்கள் முன் இப்படி அவனை யாரும் பார்த்தேயில்லை. அம்மா
எப்போதும் அவன் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறாள். எந்நாளும் அவனுக்கு
மிகப்பிடித்த பொன்நிற புடவையையே கட்டியிருக்கிறாள். சிலசமயங்களில் புடவை
மட்டுமிருக்கிறது அம்மாவை காணவில்லை. அவன் அந்த புடவையில் அடிக்கடி முகம்
துடைத்துகொள்வான். அந்த பொன்நிறம் தன்முகத்தில் ஒட்டிக்கொள்ளும் என
பரிபூரணமாய் நம்பினான். ஆனாலும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டதில்லை.

 

கைகளால் துழாவிப்பார்க்கிறான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாவை
காணவில்லை.அருகில் நிழலாட தலை திருப்பி பார்த்தபோது அம்மா கையில்
மாத்திரையோடு நின்றிருந்தாள். வாயில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மாத்திரை
போட்டாள். முகம் கோணலாகுவதை உணர்ந்து சமையலறை நோக்கி சென்றாள் சர்க்கரை
எடுத்துவர. சில நாட்களாய் இப்படித்தான் நடக்கிறது. படுத்திருக்கும்
பெஞ்சின் சுரசுரப்பிற்கு ஏற்றார்போல அவனின் முதுகு இயல்பாக
வளைந்துகொடுக்கிறது.

 

அம்மா இன்னும் வரவில்லை. வாய் முழுதும் கசந்தது.
மெல்ல கண்களை மூட பச்சை கண்கள் நிறைய பச்சை நிறம்.பச்சை நிறஆற்றில்
வெள்ளைப்பாம்பு தண்ணீர் திசையில் நீந்துக்கொண்டிருந்தது. உடனே கண்களை
திறக்கமுயன்றும் முடியவில்லை. அம்மா இன்னும் வரவில்லை. அவனுக்கு இப்போது
பெரும்வெளிச்சத்தில் குளிக்கவேண்டும் போலிருந்தது. அந்த பெரும்
வெளிச்சநிறத்தில் பாம்பு நிறம் மருண்டுவிடும் என முனகினான். கால்
நுனிவிரலிலிருந்து விறைத்துகொண்டு உணர்வற்று போய்க்கொண்டிருந்தது.

 

கைவிரல்களை அசைத்து பெஞ்சின் முனையை இறுக பற்றிக்கொண்டு ஆள்காட்டி விரலால் ”
“ழ ” என்று எழுதினான். பெஞ்சில் பிடிப்பேதுமில்லாது ” ழ‌ ”
உதிர்ந்துவிட்டது. நாக்கை சுழற்றி மேல் தாடையில் “ழ”
என்றெழுதினான்.வாயிற்குள் க‌ச‌ப்பு புய‌ல்நேர‌ க‌ட‌ல‌லை போல
பெரும்மடிப்பில் சுழன்றது.மீண்டும் எழுதினான். மீண்டும்,மீண்டும் எழுத “ழ” பெரிதானது. மீண்டும் எழுதினான். ழஅவன் வாயை விடபெரிதானது, மீண்டும் எழுதினான். ழ அவன் முகத்தை விட
பெரிதானது. அவன் மீண்டும் மீண்டும் எழுத ழ வின் உள்ளே அவன்
படுத்துக்கொண்டான். ழ‌ வின் சுருள்க‌ள் அவனின் குர‌ல்வ‌ளையை
நெருக்கின.அம்மா இன்னும் வரவில்லை. அவ‌ன் ழ‌ என்றெழுதினான்.

 

மூக்கின்முனையிலேயே தொங்கிகொண்டிருந்த‌ ம‌ருந்து வாச‌ம் மெல்ல கீழிற‌ங்கி
உத‌டுவ‌ழியே வாயிற்குள் புகுந்துகொள்ள‌ .. அவ‌ன் குவிந்த‌ நாக்கால் ழ‌
என்றெழுதினான். ம‌ருந்து வாச‌ம் தொண்டை வ‌ழி உள்ளிற‌ங்கிய‌து. அம்மா
இன்னும் வ‌ர‌வில்லை. அவ‌ன் ழ‌ என்றெழுதினான். அவன் இருத‌ய‌ம்
முன்னெப்போதுமில்லாத‌ ல‌ய‌த்தோடு துடிக்க‌லான‌து. மூத்திர‌ பை
நிறைந்துவிட்ட‌து.மூத்திர‌ம் முழுதும் ழ‌ இருக்கிற‌தாக‌வும் மூத்திர‌ம்
க‌ழித்துவிட்டால் போதும் எல்லாம் ச‌ரியாகிவிடும் என‌ நினைத்தான். இப்போது
கால்க‌ள் தொடை வ‌ரை ம‌ர‌த்துவிட்ட‌ன‌. அவ‌னால் எழுதிருக்க‌ முடியவில்லை.
அம்மா இன்னும் வ‌ர‌வில்லை. அவ‌ன் ழ‌ என்றெழுதினான்.

Advertisements