சிறுகதை இருமுடிசேர பொன்னம்பலத்தாழ்வார் குளச்சல் மு. யூசுப்

சிறுகதை

இருமுடிசேர பொன்னம்பலத்தாழ்வார்

குளச்சல் மு. யூசுப்

images (1)

அண்மையில், பழையாற்றின்கரையிலிருந்து சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலையை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் மதுசூதனப் பெருமாள், தனது ஆய்வில் அது, பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பழையாற்றின் கரையோரப் பகுதிகளாக இருந்து, ஆற்றுப்பெருக்கில் மூழ்கிப்போன, மூசி நாட்டரசன் இருமுடிசேர பொன்னம்பலத்தாழ்வாரின் காலகட்டத்தைச் சேர்ந்தது என்றும் அதன் தலைப்பகுதி யின் சிதைவுண்ட பாகத்தில் கொற்றக்குடை இருந்திருக் கலாமென்றும் கூறியிருக்கும் கருத்தை, வரலாற்றாய் வாளரும் கல்வெட்டாய்வாளருமான பீட்டர் சி. முத்தையா மறுத்தார். தன்னுடைய உரையொன்றில் அவர்: “இதை வெறுமொரு புனைவாக மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மறுப்புரையில்: வாய்மொழி மரபுகளின் அடிப்படையில் மட்டுமே வரலாற்றைக் கட்டியெழுப்பும் இவ்வகைப் போக்குகள் குறித்தும், குறிப்பிட்ட பகுதியில் நிலவுவதாகச் சொல்லப்படுகிற வாய்மொழிக் கதையை முன்வைத்து அவர், மூசி நாட்டை இருமுடி சேரன் என்பவன் ஆண்டு வந்தான் என்பதான முடிவுக்கு வந்ததையும் குறை கூறினார்:

“இ.மு.சே., சமண சமயத்தைச் சார்ந்தவரென்று தொல்லியல் ஆய்வாளர் ஏற்கனவே தெரிவித்த ஆய்வுடன் கொற்றக்குடை பற்றி குறிப்பிட்டதன் மூலம் தானாகவே முரண் பட்டுக்கொள்கிறார். மேலும், அவரது காலகட்டத் தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் மேற்படி சிற்பத்தின் தலையின் பின்பகுதியிலிருக்கும் சிதிலமடைந்த பகுதியில் கொற்றக் கொடை இருந்திருக்கலாம் என்று சொல்லப்படு வதற்கான எந்த அடிப்படைக் காரணிகளும் கிடையாது; குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முந்தியதும், சமணர்களின் நாக வழிபாடு சார்ந்ததுமான ஒரு சிற்பத்தை தனது சேர மரபுடன் இணைத்து தொல்பொருள் ஆய்வாளர் ஆய்வுக்குட்படுத்தியிருப்பது அவரது நோக்கங்களுக்கு ஒருவேளை உதவியாக இருக் குமே தவிர வரலாற்றுடன் ஒருபோதுமே ஒத்துப் போக முடியாது” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அவர்: “வரலாற்றைத் திரிபுபடுத்தும் இவ்வகை அரசியல் காரணிகள் சார்ந்த ஆய்வுகள், ஆய்வு நோக்குகளை ஒரு குறிப்பிட்டக் கட்டங்களுக்கு மேல் நகர்த்திச் செல்லமுடியாத சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது” என்று குறிப்பிட்டார்.

ஐம்பொன் சிலை சம்பந்தமாக சில நேரடித் தகவல்கள் அவனுக்கும், இது சம்பந்தமான ஆய்வுகள் குறித்த விவரங்கள் பேராசிரியர் மலுக்குமா பிள்ளைக்கும் தெரியுமென்பதால் அவரிடம் இதைப்பற்றி பேச விரும்பினான். சந்திப்பதற்கான நேரம் கேட்டபோது பல் ஆஸ்பத்திரியின் பத்து நிமிடக் காத்திருப்பின்போது வரச் சொன்னதன் பேரில் பேராசிரியரை சந்தித்தான். அந்தக் காத்திருப்பு அரைமணி நேரத்திற்குமதிகமாக நீளுமென்று முன்னமே தெரிந்திருந்தால் அவர் இன்னொருவருக்கும் அப்பாயின்மென்ட் கொடுத்திருப்பாரோ? பேராசிரியர் கவிதையெழுதுவதில்லையென்பதால் தங்களுக் கிடையே ஆரோக்கியமான உறவிருந்து வருகிறதெனும் நம்பிக்கை சமீபகாலம்வரைக் கும் அவனிடமிருந்து வந்தது. பேராசிரியரின் முகத்தில், அவனது ஆய்வு நோக்கமற்ற தகவல்கள் குறித்த ஆர்வமின்மை வெளிப்படையாகத் தெரிந்தாலும் அமைதியாக உட்கார்ந்து செவிமடுத்து விட்டு, அன்பொழுகத் திரும்பி, புன்னகையுடன் விசாரித்தார்:

“இப்போது புதிதாக ஏதாவது எழுதுகிறீர்களா?”

பழையாற்றின்கரையில் சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன்னாலான, சமண மரபைச் சார்ந்த பெண் துறவியொருவர் குழந்தையுடனிருக் கும் சிற்பத்தை சேயுடை அம்பாள் என்றும், குறிப்பிட்ட அந்தச் சிற்பம் கிடைத்த இடத்தி லேயே பிரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென்றும் சிறுபான்மையினர் பெரும்பான்மை யினராக வாழும் அந்தப் பகுதியில், வேண்டுமென்றே கலவரத்தைத் தூண்டுகிற சதிகளின் முயற்சிகளை திரை நீக்கிக் காட்டுவதற்காகவும், மதுசூதனப் பெருமாளின் கொற்றக்குடை யையும், பீட்டர் சி. முத்தையாவின் வாய்மொழி மரபுகளைப் பற்றிய தவறானப் புரிதலை யும் மட்டும் அரசியல் நீக்கம் செய்து ஆய்வாளர்களது மற்றைய ஆய்வுகளுடன் இணக்கமாகவும் – குறிப்பாக, தாய்தெய்வ வழிபாடு, தமிழ்ச் சமணம் பற்றிய ஒரு ஆய்வரங்கு பெசிலியா மார்த்தோ அரங்கில் தைத்திங்கள் முதலாம் ஞாயிறன்று நடைபெற்றது. இவ்வாய்வரங்கில் சமர்ப்பித்த கட்டுரைகளிலொன்றில் புனித வேதாஸ் கல்லூரி, நாட்டார் வழக்காற்றுத் துறையின் பேராசிரியரான முனைவர் திரு மலுக்குமாபிள்ளை, சேயுடை அம்மன், சேயுடை அம்பாள் என மேனிலையாக்கம் செய்யப்பட்டிருப் பதாக கொள்வதற்கும், குறிப்பிட்ட அந்த சிற்பம், கன்னி மரியாளின் தோற்றத்துடனிருப்பதையும் குறிப்பிட்டு ஆய்வை இந்த நோக்கில் முன்னெடுத்துச் செல்வதற்கான காரணங்களையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஆய்வரங்கில், அச்சடிக்கப்பட்ட நான்கு ஏ ஃபோர் சைஸ் காகிதங்களை சமர்ப்பித்த பேராசிரியர், அவனை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தார். கேள்வி நேரம் வந்தபோது அவன் கேட்டான்: “சார், ஆய்வு நோக்கம், அரசியல் நீக்கம், மேனிலையாக்கம் எல்லாவற்றையும் கடந்து இதைப் பற்றிய சில தகவல்கள் எனக்குத் தெரியும் என்கிற நிலையில் ஒரு உண்மையை உங்களுடன்…”

“உண்மை – பொய் எனும் முரண் கூறுகளினுள் பல்வேறு கருத்தியல் தளங்களைத் தேடும் ஆய்வாளரின் பணியென்பது இதற்கான வாய்ப்புகளை ஆராய்வதும், ஆய்வு முறை களினுள்ளிருக்கும் பன்முகப் பார்வைகளை உள்வாங்கிக்கொள்வதும்தான். ஒற்றைப் புரிதலென்பது ஃபாசிசம் சார்ந்தப் பார்வை. ஒரு நபருக்கு சில தகவல்கள் தெரியுமென்றால் மற்றொரு நபருக்கு வேறு சில தகவல்களும் தெரிந்திருக்கிற வாய்ப்பு, நாம் மறுதலித்து விட முடியாததாக இருந்தாலும் புரிந்துகொள்ளப்பட முடியாத விஷயங்களை உண்மை யின் தொலைதூரத்தில் அல்லது உண்மையின்மையின் அண்மையில் வைத்துப் பார்ப்பது நிறுவப்பட்ட ஆழ்மன உணர்வின் கூறுகள் என்பதை ஃப்ராய்ட்… சரி, இதைப் பற்றி நாம் விரிவாக விவாதிக்க வேண்டியதிருக்கிறது
***