கவிதை குமாரநந்தன் கவிதைகள்

குமாரநந்தன்

images (3)

 

 

 

 

 

 

 

ஏதுமற்றவன்

நடுநடுங்கும் குரலில்
பாடல்களைப் பாடிக்கொண்டு
பட்டுப் பூச்சிகள்
நாடாத மலர்ச் செடிகளை அவன்
வளர்த்து வருகிறான்
தித்திப்பில்லாத மிட்டாய்களை
வார்த்துவைக்கிறான்
நிறமற்ற ஆடைகளைப்
புனைந்து கொண்டு
ஏதுமற்ற வெளியைப்
பார்த்துக்கொண்டு இருக்கிறான்
அவனுடைய சிறிதளவேயான
பொருட்களைக் கொண்டு
அவனை
மதிப்பிடாதீர்கள்
அவன் எல்லையில்லாத
பிரபஞ்சத்தை விடவும் பெரிதான
வெறுமையை
தன்னுள் வைத்திருக்கிறான்
***

லோதியும் ஆறும்

லோதி துணி துவைக்க
ஆற்றுக்குப் போன போது
எதிரே ஒருத்தி
அழுக்குத் துணியுடன் வந்து
ஆறு
அழுக்காய் இருக்கிறது
என்றாள்
ஆறு கொஞ்சம்
அழுக்காய் இருந்தாலும்
அது நம் துணிகளை
வெளுப்பாக்கும்
என்றாள் லோதி
ஆறு
ஆக்ரோசமாய் இருக்கிறது
என்றாள்
ஆறு எவ்வளவு
ஆக்ரோசமாய் இருந்தாலும்
அது குளிர்ச்சியானது
என்றாள் லோதி
ஆறு நம்மை அடித்துக் கொண்டு
போய்விடும் என்றாள்
அப்படியானால்
நாம் ஆறாக மாறிவிடலாம்
என்றாள் லோதி
***

நாம் பிரிந்துவிட்டோம்

நாம் பிரிந்துவிட்டோம்
எதுவும் மாறவில்லை
சூரியன் கிழக்கேதான் உதிக்கிறது.
உன்னுடைய முகத்திலும்
என்னுடைய முகத்திலும்
சிரிப்பு வரத்தான் செய்கிறது
மீண்டும் சேர்ந்துவிடுவோம்
என்று நம்பவில்லை
இந்த வாழ்க்கை என்னுடையதுதான்
அதை நான் உனக்கு
அர்ப்பணிக்கவில்லை
இந்த மூளையில் இருந்து
உன்னைப் பெயர்க்க
முடியவில்லை
அவ்வளவுதான் போகட்டும்
உன்னுடைய பேச்சு
கேட்டுக்கொண்டே இருக்கிறது
சரி தொலையட்டும்
ஆனால்
நாம் முதன் முதலில் சந்தித்தபோது
உண்டானதே
ஒரு உணர்ச்சி
அந்தப் புதுமைதான்
இன்னும்
என் இன்பத்தின் ஊற்றாக இருக்கிறது
***