பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் வழிப்பறி

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம்  

வழிப்பறி

 

 

 

 

 

 

 

சந்தியா பதிப்பகத்தினர் சென்னை புத்தக கண்காட்சிக்கு வெளியிடப் போகும் வழிப்பறி என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை மலைகள் இதழ் தன் வாசகர்களுக்காக இங்கே கொடுக்கிறது

இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரை
இந்நூலின் முதற்பதிப்பு வெளியாகி 34 ஆண்டுகள் கழிந்த பின்னர் இரண்டாம் பதிப்பு வெளியிடுமாறு பொதுமக்களால் கேட்கப்பட்டுள்ளேன். இந்தக் கோரிக்கைக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
என்னைவிட இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்ட சில எழுத்தாளர்கள்தான் தங்களது முதல் கட்டுரையைத் திரும்பிப் பார்த்து நன்றியும் நிறைவும் கொள்வார்கள். எல்லிக்பூர் ரெஜி மெண்டில் பெரர் பகுதியில் 1837இல் சேவையாற்றிய போது மீண்டும் மீண்டும் பலமுறை வனக்காய்ச்சலால் தாக்குண்டு பல வீனப்பட்டிருந்தேன். நோயின் வேதனையில் இருந்து கவனத்தைத் திருப்புவதற்காக சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி இரண்டு முட்டிக் காலில் ஒரு பலகையை வைத்து கொள்ளையனின் வாக்குமூலத்தை எழுதினேன். நாளாக நாளாக உட்கார்ந்து யோசிக்கக்கூட முடியாத அளவு மிகவும் பலவீனப்பட்டிருந்தேன். ஆனாலும் இவை அச்சாகும் என்ற நம்பிக்கை இருந்தது. சிகிச்சை பெறுவதற்காக நான் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டேன். 1839இல் முதல் பதிப்பு காலஞ்சென்ற திருவாளர் ரிச்சர்டு பெண்டேலேயால் வெளியிடப்பட்டது. இதில் சொல்லப்படும் விஷயங்கள் முற்றி லும் புதியதாகவும், வினோதமாகவும், வியப்பூட்டுவதாகவும் இருந்ததால் உடனடியாக மக்கள் மனதில் இடம்பிடித்தன. இந்திய மக்களின் பழக்க வழக்கங்களும், சிந்தனைகளும், தக்கின் சடங்குகளும் சுவாரஸ்யமாக இருந்திருக்கிறது. தக்கின் வாக்குமூலம் பயங்கரமாகவும், சொல்லப்போனால் கவர்ச்சி கரமாகவும் இருந்திருக்கின்றன. பழைய பதிப்பு முற்றாகத் தீர்ந்து விட்டது. மறு அச்சு செய்வதற்கும் சாத்தியமற்ற நிலை. வேறு வழியின்றி என்னிடமிருந்த ஒரேயொரு பிரதியையும் கொடுக்க வேண்டியதாயிற்று.
கொள்ளையனின் வாக்குமூலத்தை எழுதுவதற்குக் கொஞ்சம் முன்னர்தான் நூற்றுக் கணக்கான தக்கிக் கொலையாளிகளின் வாக்குமூலத்தைப் பெற்று விசாரணைக்காகவும் – புலனாய்விற் காகவும் -குற்றங்களை பதிவு செய்வதற்காகவும் வழக்குகளை தயாரிக்கும் பணியை ஏற்றிருந்தேன். அதேபோல தக்காணத்தில் இருந்த பல குழுக்களை கைது செய்வதற்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தேன். என் மனம் முழுதும் நான் எடுத்த குற்றக் குறிப்புகளால் நிரம்பி வழிந்தது. தக்கிகளை ஒடுக்குவதற்கான சிறப்புக் காவல்படை ஜெனரல் சர் வில்லியம் ஸ்லீமன் தலைமை யில் முழுவீச்சில் இறங்கியிருந்தது. ஆயிரக்கணக்கான தக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைதாகி நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். பிரிட்டிஷ் அரசின் ஆளுகைக்குட்பட்ட அனைத் துப் பகுதிகளுக்கும் இந்நடவடிக்கை விரிவாக்கப்பட்டது. உள்ளூர் மாகாண அரசுகளின் ஆளுகைப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. தீவிரமாகவும் அதுவரை இல்லாத உறுதியுடனும், மேற்கொண்ட சில ஆண்டுகளிலேயே சிறிய குழுக்களைத் தவிர மிகப்பெரிய அளவிலான தக்கிகள் ஒழித்துக் கட்டப்பட்டனர். இந்திய நெடுஞ்சாலைகளில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த குற்றத்தை அடக்க நானறிந்தவரை இதற்கு நிகரான வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
இவ்வெற்றியைத் தொடர்ந்து காவல்படை தக்காய் கொள் ளைக்காரர்களை ஒடுக்கக் களமிறங்கியது. ஆனால் தக்கிகள் நசுக்கப்பட்டதும் தக்காய்த் குற்றங்கள் இல்லா தொழிந்தது. இப்போது கடந்த பல ஆண்டுகளாக நெடுஞ்சாலையில் எந்தக் கொள்ளைக் குழுவும் குற்றச்செயல்களில் இறங்குவதில்லை.
இப்போது தக்கிகளைப் போலவே விஷம், போதைப்பானம் அல்லது மயக்க மருந்தை பயணிகளுக்குக் கொடுத்து கொள்ளையடிக்கும் குற்றங்கள் தலை தூக்கியுள்ளது. இது அரிதாகவே காணப்படுகிறது. பாரம்பரியத் தொழிலாக இல்லாதபோதும் பஞ்சாபைச் சேர்ந்த ‘முஜ்பீ’ சீக்கியர்களும் மற்ற சிலரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கழுத்து நெறிப்பு செயலில் ஈடுபடுகின்றனர். தகுதிவாய்ந்த கலோனல் ஹார்வே இதைக் கட்டுக்குள் கொண்டுவர தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவருக்கும் அவரது குழுவினருக்கும் இந்திய மக்கள் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும் தருவார்கள் என்று நம்புகிறேன்.
தக்கிகளின் விசித்திரமான முறை மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை விளைவித்திருக்கிறது. நான் எனது வாசகர்களுக்குப் பணிவுடன் தெரிவிக்க விரும்புவது தக்கிகளுக்கு எதிராக தீவிரமான விசாரணைகள் நடைபெற்றபோது அவற்றுடன் தொடர்பான கொடுங்குற்றங்களை நான் மிகையாகவோ அல் லது குறைத்தோ கூறவில்லை. உண்மையில் நான் கேட்டதை மட்டுமே இங்கே கூறியுள்ளேன்.

ஓல்டு கோர்ட், மெடோஸ் டெய்லர் சி.எஸ்.ஐ.
ஹரால்டுஸ் கிராஸ்,
ஏப்ரல், 1873.