பதிப்பக அலமாரி காலச்சுவடு சுரேஷ்குமார் இந்திரஜித்

பதிப்பக அலமாரி  காலச்சுவடு சுரேஷ்குமார் இந்திரஜித்

என் கதைகள்

‘மாபெரும் சூதாட்டம்’ தொகுப்பிலும், ‘அவரவர் வழி’ தொகுப்பிலும் உள்ள கதைகள், காலரீதியாக இறங்குவரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். கடைசியாக எழுதப்பட்ட கதை முதலிலும், முதலில் எழுதப்பட்ட கதை கடைசியிலும் இருக்கும். இத்தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டவை. எனவே காலவரிசைப்படி அல்லாமல் என் விருப்பப்படி வரிசையை அமைத்திருக்கிறேன்.

ஒவ்வொரு தொகுப்பிலும், என் எழுத்துப் பாணி மாறிக்கொண்டே வந்துள்ளது என்பதை உணர்ந்திருக்கிறேன். பொதுவாக இத்தொகுப்பிற்கு முன் வந்த தொகுப்புகளில் உள்ள சிறுகதைகளில் ‘கதை’ என்பது வெளிப்படையாக இருக்காது. சமூகச் சிக்கலை, மனத்தின் சிக்கலை, ஆண் பெண் உறவுச் சிக்கலை காலமாற்றத்தில் ஏற்படும் சிக்கலை முன்வைத்து, ‘கதை’ அச்சிறுகதைகளில் மறைந்திருக்கும். சம்பவங்களைச் சித்தரித்து, சம்பவங்களின் தொகுப்பாக ‘கதையை’ அமைத்து முடிவுக்குக் கொண்டுவருவது பொதுவாகக் கதை கூறும் பாணியாக உள்ளது. நவீனச் சிறுகதைகளில் ‘கதை’ மறைந்திருக்கும்; அல்லது மங்கலாகத் தெரியும்; அல்லது ‘கதை’ எங்கேயிருக்கிறது என்று யோசிக்கும்படி இருக்கும்.

இத்தகைய சிறுகதைகளின் மூலம் பல சாத்தியங்களை எழுத்தாளன் திறக்க முடியும். உதாரணமாக, ‘மாபெரும் சூதாட்டம்’ என்ற என் சிறுகதையைக் கூற முடியும். எண்ணங்களின் கொலாஜ் பல நிகழ்வுகளாக வெளிப்பட்டு, நவீனச் சிறுகதையாக ஆகியுள்ளது.

சூரியின் பாட்டனார் எழுதிய 90 பக்கக் குறிப்புகளைப் பற்றி கதைசொல்லி கூறுவதே ‘கதை’. சூரியின் பாட்டனாரால் மகா உத்தம ஜாதகம் என்று குறிப்பிடப்பட்டிருந்த சூரியின் தந்தை, சூரியைக் கருக்கொண்டிருந்த மனைவியுடன் பஸ்ஸில் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தபோது, அரசியல் தலைவர் இறந்த துக்கம் தாளாது அவரது ஆதரவாளர்கள் எறிந்துகொண்டிருந்த கல்லில் அடிபட்டு, அபத்தமான முறையில் இறக்கிறார். 90 பக்கக் குறிப்புகளுக்கு, முன்னதாக வரும் வாசகங்களின் சிறு பகுதி:

“எந்தப் போக்கும் வாழ்வினுடைய, காலத்தினுடைய சூதாட்டங்களினால் கணிப்பிற்குட்படுவதில்லை . . . நடந்ததை நடக்க விதிக்கப்பட்டதாக நினைத்து ஏற்றுக்கொள்ள சூதாட்டம் வெற்றிகரமாக ஆட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது . . .”

சீட்டாட்டத்தின் போக்கே யூகமற்றது. ஒவ்வொருவர் எடுக்கும் சீட்டினாலும், இறக்கும் சீட்டினாலும் ஆட்டத்தின் போக்கு மாறிக்கொண்டேயிருக்கிறது, வாழ்வைப்போல. கணவனும் மனைவியும் சீட்டாடுகிறார்கள். வெற்றி தோல்வி பற்றிய அக்கறையின்றி ஆடுகின்றனர். ஒருவர் வெற்றியடைவது பற்றி மற்றவருக்குக் கவலையில்லை. பிறகு பணயம் வைத்து ஆடுகின்றனர். ஒருவருடைய வெற்றி மற்றவருக்கு ஆத்திரத்தைத் தருகிறது. குழந்தைக்குத் தாய், தந்தையாக உறவு மாற்றமடைந்த பின்னர் ஆடும் சீட்டாட்டத்தில் சேரும் என்று நினைத்து வைத்திருக்கும் சீட்டுகள் சேர்வதில்லை. ஜோக்கர் வருவதில்லை. சீட்டுகள் சேர்ந்து வெற்றிபெறுவது தாமதமாகிக்கொண்டே இருக்கிறது. இறுதியில் வெற்றி பெற்றவருக்கும் களைப்பு ஏற்படுகிறது. பிறகு ஆடும் சீட்டாட்டத்தில் ஒருவர் சீட்டை மற்றவர் பார்க்கும் போக்கு ஏற்படுகிறது. இவ்வாறு இருவரும் முனைய, குழப்பமும் சண்டையும் ஏற்படுகின்றன. இறுதியில் இறக்கும் தறுவாயில் ஒருவன் எதிரில் ஆள் இல்லாமல், அவனே இரண்டு நபர்களாய் மாறி ஆடுகிறான். இருவருக்கான சீட்டுகளையும் அறியும் நிலையில், அவன் யாருக்கும் நியாயம் செய்பவனாக ஆடுவது என்று தவிக்கிறான். வாழ்வு, சீட்டாட்டம் என்ற குறியீட்டு நிகழ்வு மூலம் பார்க்கப்படுகின்றது.

இக்கதையில் சீட்டாட்டம் தவிர்த்து வாழ்வின் இரண்டு பெரும் நெருக்கடிகளும் காண்பிக்கப்படுகின்றன. ஒன்று அரசு அலுவலகம் மனிதர்களை அலைக்கழிப்பது; இரண்டு, காமம். அலுவலக அலைக்கழிப்பு, நீதிமன்றக் கட்டிடங்களில் ஒருவன் வழிதெரியாது அலையும் விஸ்தாரமான காட்சி மூலம் காண்பிக்கப்படுகிறது. மனிதன் இறக்கும் தறுவாயிலும், காமம் இருந்துகொண்டேயிருக்கும். கடற்கரையில் நிற்கும் பெண்ணின் வர்ணத் தோற்றம், பல்வேறு கட்டங்களில் குறிப்புகளினூடே வந்துகொண்டிருப்பதாகக் காண்பிக்கப்படுகிறது.

– இதுதான் ‘மாபெரும் சூதாட்டம்’ சிறுகதையின் ‘கதை’. ஏற்கனவே கூறியதுபோல் எண்ணங்களின் கொலாஜ் சிறுகதையாக உருப்பெற்றிருக்கிறது. நவீனத்துவம் என்பதற்கான உதாரணமாகவே இக்கதையைக் கூறினேன்.

தேசிய புத்தக டிரஸ்ட் வெளியிட்ட ‘இந்திய சுதந்திரப் போராட்டம்’ புத்தகத்தின் மூலம் நான் அறிய வந்த சூர்யாசென், ஜதீன்தாஸ், குதிராம்போஸ் ஆகியோரைப் பற்றிய செய்திகளே, சுதந்திரப் போராட்ட காலத்துடன் மனம் உறைந்துவிட்ட ஒரு கிழவனைச் சந்திக்கும் மாயக்காட்சி உள்ள ‘மறைந்து திரியும் கிழவன்’ ‘கதை’யை உருவாக்கியது.

ஒரு அபத்தமான சினிமாக் கதையைக் கூறிக்கொண்டே வந்து, கிளைமாக்ஸில் கதையை நிறுத்தி, இந்திய மக்களின் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட இந்திய பட்ஜெட் பற்றிய குறிப்புகளை விவரமாகச் சொல்லி – அக்குறிப்புகள் பிரசுரமான பத்திரிக்கையின் பக்கங்களை – குப்பை பொறுக்கும் சிறுவன், கோணிப்பைக்குள் திணிப்பதை கிளைமாக்ஸாகக் காட்டும் ‘கதை’ அறிக்கை என்ற சிறுகதை.

இவையெல்லாம் ‘மாபெரும் சூதாட்டம்’ தொகுப்பில் இடம்பெற்ற சில ‘கதைகள்’. இவ்விதமான பல ‘கதைகள்’ அத்தொகுப்பில் உள்ளன. இவற்றை வசதி கருதி நவீனத்துவக் கதைகள் (பின்நவீனத்துவ?) என்று கூறலாம். இவை உத்திகளின் விளையாட்டு அல்ல. பல திறப்புகளுக்காக இக்கதைகள், உத்திகளை இவ்விதமாகத் தேர்வு செய்துகொண்டன. இத்தகைய சிறுகதைகள் அவற்றின் புதுத்தன்மையால், புதுமையை விரும்புகிறவர்களின் கவனத்தைப் பெற்றன.

ஆனால் நான் இதேவிதமாக எழுதிக்கொண்டிக்க முடியாது. ‘மாபெரும் சூதாட்டம்’ தொகுப்பிற்குப்பின் வெளிவந்த ‘அவரவர் வழி’ தொகுப்பு வழியாக, நான் இத்தொகுப்பிலுள்ள கதைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இக்கதைகளில் சம்பவங்களும் உள்ளன. ‘கதையும்’ உள்ளது. ஆனால் அவை ‘வித்தியாசமான’ சம்பவங்களாகவும், ‘வித்தியாசமான’ கதைகளாகவும் உள்ளன. அவற்றின் வழியாக நான் என் பார்வையையும் நிறுவியுள்ளேன்.

இங்கு நான், குறிப்பாகச் சில கதைகளைப் பற்றிக் கூற வேண்டும். ‘கணியன் பூங்குன்றனார்’ கதையைப் பொறுத்தவரை, அக்கதையைப் பிரசுரம் செய்த தீராநதிக்கு எப்படிப்பட்ட கடிதங்கள் வந்தன என்று எனக்குத் தெரியாது. இக்கதை பிடித்திருப்பதாக எனக்குப் பல அலைபேசி அழைப்புகள் வந்தன. “உள்ளதைத்தானே எழுதியிருக்கீங்க” என்றார் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி.

‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ கதையைப் பொறுத்தவரை, இ – மெயிலில் வந்த வசைகளை அனுப்பிவிடவா என்று ஹமீது (மனுஷ்யபுத்திரன்) கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சிலர் அலைபேசியில் கூப்பிட்டு திட்டியதாகவும் கூறினார். பின்நவீனத்துவவாதிகளின் அதிகாரம் பின்நவீனத்துவக் கோட்பாட்டுக்கு உகந்ததுதானா? பின்நவீனத்துவம் பல நிலைப்பாடுகளை கேள்விகளுக்கு உள்ளாக்குகிறது. எள்ளல் செய்கிறது. ஆனால் பின்நவீனத்துவம் தன்னைத்தானே எள்ளல் செய்துகொள்ளக் கூடாதா? என் பல கதைகள் பின்நவீனத்துவக் கதைகள் என்று சொல்லப்படுகின்றன. மேலும் இக்கதையின் இறுதிப் பாராவில் வரும் பின்நவீனத்துவம் அறிந்த பேராசிரியர்களான ஆல்பிரட் சின்னத்துரையும், ஜெனிபர் மங்கையர்க்கரசியும் இக்கதையைச் சரியான பின்நவீனத்துவக் கதை என்று ஒப்புக்கொள்கிறார்கள். மேலும் இளைய தம்பதிகள் இவ்வாறு பரிகாசமாகப் பேசி, பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்க்கக்கூடியவர்கள்தான். அக்கதையில் வரும் சூரியசந்திரனைத் தவிர பிற இருவரும் பெரும் அளவில் பாவனைகளைக் கொண்டவர்கள். பலரிடமும் நான் பாவனைகளையே காண்கிறேன். ஒருவர் கம்யூனிசம் பேசுவார். வாழ்க்கையில் அவருக்கும் கம்யூனிசத்திற்கும் தொடர்பு இருக்காது. ஆனால் அவர் கம்யூனிஸ்ட். ஒருவர் தன் வாழ்க்கையில் இயல்பாகவே அக்கோட்பாட்டை அனுசரித்து இருந்துகொண்டிருப்பார். ஆனால், அவர் கம்யூனிசம் பேசாததால் அவர் குட்டிப்பூர்ஷ்வா ஆகிவிடுவார். உலகமயமாதலை எதிர்த்துக் குரல் கொடுத்து அரசியல் செய்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்பொருட்களைப் பகிஷ்கரிக்க வேண்டாமா? நோக்கியா மொபைலுடனும் (பின்லாந்து) அக்வா பினா தண்ணீர் பாட்டிலுடனும் (அமெரிக்கா) அலையலாமா? (வெளிநாட்டு மது வேறு.) அந்நியத் துணிகளைப் பகிஷ்கரித்து சௌகரியமற்ற முரட்டுக்கதரை அணிந்த மனிதர்கள் இருந்த பூமிதானே இது. பாவனைகளை எள்ளல் செய்யும் கதை இது.

‘நானும் ஒருவன்’ கதையில் சண்டையை விரும்புபவனும், சூழ்நிலையைத் தந்திரமாகக் கையாளக்கூடியவனுமான அவன், வெட்டுப்பட்டு சாவது போன்ற முடிவு நமது அறநெறியைக் கற்பனையாக நிலைநாட்டுவதற்குத்தான் பொருத்தமாக இருக்கும். யதார்த்த நிலை அப்படியா இருக்கிறது என்ற உள்கேள்வியுடன் இன்னொரு முடிவு, கதையின் இறுதியில் முந்தையை முடிவுடன் பிணைகிறது.

இதேபோல்தான் இன்னொரு தளத்தில் ஆண்டாளின் திருமணம் பற்றிக் கூறும் ‘ஒரு திருமணம்’ கதை ஒரு முடிவில் ரங்கநாதர், ஆண்டாளை அழைத்துச்செல்ல, இது நடக்கக்கூடியதுதானா என்ற உள்கேள்வியுடன் இன்னொரு முடிவு, அம்முடிவுடன் பிணைகிறது.

‘மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனன்’ கதையை எழுதிக்கொண்டிருந்தபோது, ஒரு பாத்திரத்திற்கு மலையாளப் பெயர் தேவைப்பட்டது. கவிஞர் சுகுமாரனைத் தொடர்புகொண்டேன். ஊர்ப்பெயருடன் மலையாளப்பெயர் வேண்டும் என்றேன். அவர் இந்துவா, முஸ்லிமா என்று கேட்டார். பின் உயர்ஜாதியா, கீழ்ஜாதியா என்று கேட்டார். அவர் சொன்ன பெயர்தான் இது. இதிலுள்ள ஓசை எனக்குப் பிடித்திருந்தது. அப்பெயரையே தலைப்பாக்கிவிட்டேன். இக்கதைக்குப் பரவலான வரவேற்பு இருந்தது. அநேகமாக இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளையும், பிரசுரமான பிறகு, யாராவது சிலர் அலைபேசியில் பாராட்டிக்கொண்டிருந்தனர். இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஏற்படுத்திய சலனங்கள் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தன.

இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளைப் பத்திரிகையில் வாசித்துவிட்டு அக்கதைகளை சிலாகித்து வண்ணதாசன் குறுஞ்செய்தி அனுப்பினார். பின்னர் நான் அலைபேசியில் அவருடன் பேசினேன். அவர் பேசியது எனக்கு உற்சாகத்தையும் மேலும் தொடர்ந்து எழுதுவதற்காக உந்துதலையும் அளித்தது. அவருக்கு என் நன்றி.

கதைகளை எழுதிய பின், நண்பர் சிவராமனிடம் வாசிக்கக் கொடுத்து, விவாதித்து சீர்திருத்துவது வழக்கம். அவருக்கு என் நன்றி.

இத்தொகுப்பிலுள்ள கதைகளைப் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இத்தொகுப்பைக் கொண்டுவரும் கண்ணன் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தில் பணிபுரிபவர்களுக்கும் என் நன்றி.

இத்தொகுப்பிலுள்ள கதைகள் மனத்தின் ரகசியங்களையும் வாழ்வின் ரகசியங்களையும் கூறிக்கொண்டிருக்கின்றன. இத்தொகுப்பை என் தந்தை ராமநாதபிள்ளை தாயார் காந்திமதி அம்மாள் ஆகியோருக்கு வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

மதுரை         சுரேஷ்குமார இந்திரஜித்
22.10.2012

(நானும் ஒருவன் சிறுகதைத் தொகுப்புக்காக எழுதப்பட்ட முன்னுரை)

நூல்   : நானும் ஒருவன் (சிறுகதைகள்)

ஆசிரியர்  : சுரேஷ்குமார இந்திரஜித்

தொடர்புக்கு : காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை,
நாகர்கோவில் – 629 001
அலைபேசி : 9677778863

மின்னஞ்சல் : nagercoil@kalachuvadu.com