மொழிபெயர்ப்பு சிறுகதை அமெரிக்காவிலிருந்து வந்த மகன் ஐ.எஸ்.சிங்கர் I.S.Singar) ஆங்கிலம் வழியாக தழிழில்: சு. மகேந்திரன்

 

அமெரிக்காவிலிருந்து வந்த மகன்

ஐ.எஸ்.சிங்கர் I.S.Singar)
ஆங்கிலம் வழியாக தழிழில்: சு. மகேந்திரன்

 

 

 

 

 

 

 

ஐ.எஸ்.சிங்கர், ஜிடிஸ் மொழியில் எழுதும் அமெரிக்க எழுத்தாளர். “ஒரு எழுத்தாளர் தனது சொந்த மொழியில் எழுத வேண்டும் அல்லது எழுதவே தேவையில்லை” என்று சொன்னவர். போலந்தில் யூத அடிப்படைவாதக் குடும்பமொன்றில் 1904 ஆம் ஆண்டு பிறந்தார் சிங்கர். இளமையில் யூத மதப் பாடசாலையொன்றில் கல்வி கற்றார். ஆனால், பின்னர் கடவுளின் சக்தியைவிட, ஐதிகங்களும், ஏன்? என மறு கேள்விகள் கேட்க முடியாத வாதங்களுமே மதங்களை ஆள்கின்றன எனக் கண்டு கொண்டவர். மதச் சார்பற்ற எழுத்தாளரானார். 1926 இல் முதலாவது கதைத்தொகுதியும், விமர்சனக் கட்டுரைகளும் வெளியாகின. 1935 இல் அமெரிக்காவுக்குச் சென்றார். 1945 இல் ஆங்கிலத்தில் வெளியான “தி பீப்பிள்ஸ் மொஸ்கெற்’ என்ற நூலின் மூலம் பிரபலமானார் சிங்கர். பல நாவல்கள் தொடர்ந்து வெளியாகின.

1984 இல் ‘காதலும் புலம்பெயர் வாழ்வும்’ நாவல் வெளிவந்தது. போலந்தில் வாழும் யூதர்களின் வாழ்க்கையே பெரும்பாலான நாவல்களின் கருப்பொருளாகும். யூதக் கட்டுக்கதைகளும் அவர்களது சம்பிரதாயங்களும் கதைகளில் பரவிக்கிடக்கும். பிசாசுகளும் கெட்ட தேவதைகளும் கதைகளில் வரும் – சமீபகால எழுத்துக்களில், அமெரிக்காவும் நியூயோர்க்கும் வருகின்றன. “எனக்கு இங்கும் வேர்கள் அடிவிட்டுவிட்டன.” என்றார் சிங்கர். ‘ஜிம்பிள் என்ற மடையன்’ ‘இவரது சிறுகதைத் தொகுப்புக்களில் பிரபலமானது. “அமெரிக்காவிலிருந்து வந்த மகன்” என்ற கதையில் இருவேறான சமூகங்களின் முரண்பாடுகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. 1975ஆம் ஆண்டு சிங்கர் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
லென்ற்சின் ஒரு மிகச் சிறிய கிராமம். மணற்பாங்கான சந்தையில் குடியானவர்கள் வாரத்துக்கு ஒருமுறை கூடுவர். சிறு குடிசைகள் அதனைச் சூழ்ந்திருந்தன. அவற்றின் கூரைகள் வைக்கோலால் வேயப்பட்டிருந்தன. அல்லது மொஸ் மரத்தின் ஓலைகள்; அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும். வீடுகளின் புகைக் கூடுகள் பானைகள் போலிருக்கும். குடிசைகளிடையே வயல்களிருந்தன. அங்கு கிராமத்தவர்கள் விவசாயம் செய்தனர். அல்லது தமது ஆடுகளை மேய்த்தனர்.

அங்குள்ள மிகச்சிறிய குடிசை ஒன்றில் வயதான பேர்ல் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியை பேர்ல்சா (பேர்லின் மனைவி) என எல்லோரும் அழைத்து வந்தனர். பேர்ல் தனது எண்பதுகளிலிருந்தான். ரஷ்யாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதனால், போலந்தில் குடியேறிய யூதன் அவர். அவர் பலமான குரலில் பிரார்த்தனையில் ஈடுபடும்போது, லென்ற்சினில் உள்ளவர்கள் அவனைப் பரிகாசம் செய்வர். பேர்ல் பேசும்போது ‘R’ ஐ அழுத்திப் பேசுவான். அவன் விரிந்த தோள்களும் குள்ளமான தோற்றமும் கொண்டவன். கால்களைத் தரையில் தேய்த்தபடி நடப்பான். ஒரு சிறிய தாடி அவனுக்கிருந்தது. கோடையிலும் மாரியிலும் ஆட்டுத் தோலால் ஆன தொப்பி ஒன்று அவன் தலையில் இருக்கும். தடித்த காலணிகளும், அளவில்லாத மேலாடையும் (சௌகரியத்திற்காக) அணிந்திருப்பான்.

பேர்ல் தம்பதியினருக்கு சாமுவெல் என்ற பெயருடைய மகனொருவனிருந்தான். அமெரிக்காவுக்குப் போய் நாற்பது வருடமாகிறது. அங்கு அவன் ஒரு மில்லியனர் ஆகிவட்டான் என லென்ற்சினில் பேசிக்கொண்டார்கள். ஒவ்வொரு மாதமும், தபால்காரன் கடிதமும் மணி ஓடரும் வயதான பேர்லிற்கு கொண்டுவருவான். கடிதம் ஆங்கிலத்தில் வருவதால் யாருமே அதனை வாசிக்க முடிவதில்லை லென்ற்சினில் யாருக்குமே ஆங்கிலம் தெரியாது. சாமுவெல் பெற்றோருக்கு மாதாமாதம் எவ்வளவு பணம் அனுப்புகிறான் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. பேர்லிடம் அரை ஏக்கர் நிலமும் ஒரு மாடும் ஒரு ஆடும் சில கோழிகளுமிருந்தன. இருவரும் வருடத்தில் மூன்று தடவைகள் சக்ரோக்சிமிற்கு போய் மணி ஓடர்களை மாற்றிக்கொண்டு வருவார்கள். அவர்கள் அப்பணத்தை உபயோகிக்கவில்லை. தோட்டமும் ஆடும் மாடும் அவர்களுடைய தேவைகளை பூர்த்திசெய்து வந்தன. பேர்ல்சா முட்டையிடும் கோழிக்குஞ்சும் விற்று வந்தாள். அதனால் கிடைப்பது, பாணுக்கான மாவை வாங்கப் போதுமானதாக இருந்தது.

பேர்ல் பணத்தை எங்கு வைத்திருக்கிறான் என லென்ற்சினில் யாருமே கருத்தில் கொள்ளவில்லை. லென்ற்சினில் திருடர்களும் இல்லை. குடிசையில் ஒரு அறைமட்டுமே இருந்தது. அதில் மேசை, இறைச்சி வைக்கும் இறாக்கை, பாலாடை வைக்கும் இறாக்கை, இரண்டு கட்டில்கள் என்பனவற்றுடன் ஒரு மண் அடுப்பும் இருந்தது. சிலவேளைகளில் கோழிகள் மரக் கூடுகளில் தங்கும். குளிர் காலங்களில் அடுப்புக்குப் பக்கத்திலுள்ள தொட்டிக்குள் வந்துவிடும். காலநிலை மோசமானால், ஆடும் கூட வீட்டுக்குள் ஒதுங்குவதுண்டு. கிராமத்தில் வசதி படைத்தவர்கள் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பாவித்தனர். பேர்லோ அல்லது அவனது மனைவியோ புதுநாகரீகத்துடன் கூடிய பொருட்களில் ஆசை கொண்டதில்லை. ஒரு கிண்ணத்தில் எண்ணெயும் திரியும் இருந்தால் போதாதா? சபத்துக்காக மட்டும், கடையில் மூன்று மொழுகுதிரிகளை பேர்ல்சா வாங்குவாள். கோடை காலங்களில் சூரியன் உதயமாவதற்கு முன்னரே இருவரும் எழுந்துவிடுவார்கள். கோழிகள் அடையும்போதே நித்திரைக்குப் போய்விடுவார்கள். குளிர் காலத்தில் வரும் நீண்ட மாலை வேளைகளில் பேர்சா ராட்டினத்தில் சணல்நூல் நூற்பாள். அவளுக்கு முன்னால் அமர்ந்தபடி ஓய்வை அனுபவிப்பான் பேர்ல். ஒருநாள் மாலைப் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு சைனகொக்கிலிருந்து திரும்பிய பேர்ல், தான் கேள்வியுற்ற செய்திகளை மனைவிக்குக் கூறினான்.

சார் பதவியிலிருந்து விலகவேண்டுமென வேர்சோவில் வேலை நிறுத்தக்காரர்கள் கூறி உள்ளனர். சமயப் போதகரான டொக்ரர் ஹெசல் என்பவர், யூதர்கள் பாலஸ்தீனத்தில் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இவற்றை எல்லாம் பேர்ல்சா அவதானத்துடன் கேட்டாள். சதைப்பற்றுக் குறைந்த தனது தலையை ஆட்டினார். அவளது முகம் மஞ்சள் நிறமுடையது. சுருக்கங்களுடன் முட்டைக்கோசு இலைகளைப் போலிருக்கும். அவளது கண்களுக்கு கீழே உள்ள பகுதி, நீல நிறத்துடன் திறந்த சாக்குகள் போல் போல் தெரியும். அவளோ அரைச்செவிடு. அதனால் பேர்ல் தான் கூறிய எல்லாவற்றையும் திரும்பவும் கூறவேண்டியிருந்தது. அவற்றைக் கேட்டபின் “இவையெல்லாம் பெரிய நகரங்களில் நடக்கும் விசயங்கள்” என்றாள் போர்ல்சா.

லென்ற்சினில் வழமையாக நடைபெறும் காரியங்களைத் தவிர வேறு எதுவுமே நடைபெறவில்லை. மாடு ஒன்று கன்று ஈன்றது. ஒரு இளம் சோடிக்கு விருத்த சேதனம் நடந்தது. விருந்தும் வைக்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்காக விருந்தொன்றும் வைக்கப்படவில்லை. எப்போதாவது ஒருவர் இறந்தார். லென்ற்சினில் சவக்காலை இல்லை. பிணத்தைப் புதைப்பதற்காக சக்ரோக்கிமிற்கு எடுத்துச் செல்வார்கள். இப்போது குறைந்த அளவு இளைஞர்களே லென்ற்சினில் இருக்கிறார்கள். இளைஞர்கள் நொவிடேர் என்றும் சக்ரொக்சிம் என்றும் வோர்சோ என்றும் போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் சாமுவெல் போல் அமெரிக்காவுக்குப் போகிறார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களை வாசித்துப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஜிடிசுடன், அவர்கள் எங்கு சொன்றார்களோ அந்த நாட்டு மொழிகளும் கலந்து விட்டிருக்கின்றன. அவர்கள் அனுப்பும் படங்களில் ஆண்கள் நீண்ட பட்டுத் தொப்பிகளையும் பெண்கள் நிலச்சுவாந்தர்களின் மனைவிமார் அணிவது போல் ஆடம்பரமான உடைகளுடனும் இருக்கிறார்கள்.

பேர்லிற்கும், பேர்ல்சாவுக்கும் கூட இவ்வகையான புகைப்படங்கள் வந்தனதான். அவர்களது பார்வை மங்கிக் கொண்டே வருவதனால், அவர்களால் அப்படங்களிலுள்ளவர்களை சரியாக மட்டிடமுடியவில்லை. இருவரிடமும் கண்ணாடி இல்லை. சாமுவெலிற்கு பிள்ளைகளும் பெண்களுமிருந்தனர். அவர்களின் பெயர்கள் யூதப்பெயர்களாக இருக்கவில்லை. பேர்லின் பேரப்பிள்ளைகள் கூட மணமுடித்து தமது வசந்த காலத்தைக் கடந்திருந்தனர். அவர்களின் பெயர்கள் பேர்லிற்கோ பேர்ல்சாவிற்கோ மனதில் நிற்கவில்லை. அவை புதுமையானவையாக இருந்தன. ஆனால் பெயர்களில்தான் என்ன இருக்கிறது. அமெரிக்கா நீண்ட தூரத்திலிருக்கிறது. கடலின் மறு கரையில் அது உள்ளது. லென்ற்சினிற்கு வந்த யூதமதப்போதகர் ஒருவர், அமெரிக்காவில் மனிதர்கள் தலை கீழேயும் கால் மேலேயும இருக்கும் வகையில் நடக்கிறார்கள் எனச் சொன்னார். அதில் பொதிந்திருந்த கருத்தை பேர்ல்சாவாலோ பேர்லாலோ சரியாக கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அது உண்மையாகத்தான் இருக்க முடியும். சிறிது நேரம் பேர்ல்சா சிந்தனையில் சூழ்ந்தாள். பின், “ஒருவன் எல்லாவற்றிற்கும் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வான்” என்றார். கடுமையாகச் சிந்தனை செய்யத் தொடங்கினால் – கடவுள் கோவித்துக் கொள்வார் – அது நகைச்சுவை உணர்வையும் குறைத்துவிடும்.

ஒருநாள், அன்று வெள்ளிக் கிழமை, காலையில் செபத்துக்கான ரொட்டிகளை தயாரிப்பதற்காக பிசைந்த மாவிற்கு மேலும் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, அறைக் கதவைத் திறந்து ஒரு கனவான் உள்ளே வந்தான். அவன் மிகவும் உயரமானவனாக இருந்தான். உள்ளே நுழையக் குனியவேண்டியிருந்தது. அவனது முகத்தின் அரைவாசியை மறைத்துக்கொண்டிருந்தது அவன் அணிந்திருந்த தொப்பி, கோட்டின் ஓரங்கள் கம்பளி வைத்துத் தைக்கப்பட்டிருந்தன. சக்ரொக்சிமைச் சேர்ந்த சாஸ்கல் என்ற வண்டி ஓட்டி செப்புப் பூட்டுக்களுடன் கூடிய தோலால் ஆன இரண்டு பிரயாணப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு கனவானின் பின்னே வந்து கொண்டிருந்தான். பேர்ல்சா திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள்.
அந்தக் கனவான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஜிடிசில் “இதை வைத்துக்கொள்” என ஒரு வெள்ளி ரூபாவினை அவனிடம் கொடுத்தான். வண்டில்காரன் மிகுதியை கொடுக்க முனைந்தான். “வேண்டாம் நீ இப்போது போகலாம்” என்றான் கனவான்.

வண்டில்காரன் கதவைச் சாத்திய உடனேயே கனவான், “அம்மா நான்தான் உங்களது மகன் சாமுவெல், சாம்” என்கிறான்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே பேர்ல்சாவின் கால்கள் உணர்வை இழந்தன. மாத்துணிக்கைகள் ஒட்டிக்கொண்டிருந்த அவளது கைகள், செயல் திறனை இழந்தன. கனவான் அவளைத் தழுவிக்கொண்டான். அவளது கன்னத்தையும் நெற்றியையும் கனவான் முத்தமிட்டான். போர்ல்சாவின் வாயிலிருந்து கோழி கொக்கரிப்பது போன்ற சத்தம் கேட்டது. “எனது மகனே” அந்த நேரம் பார்த்து பேர்ல் விறகுக் கொட்டிலில் இருந்து வெளியே வந்தான். அவனது கைகள் விறகை அணைத்தபடி இருந்தன. ஒரு கனவான் தனது மனைவியின் நெற்றியில் முத்தமிடுவதைக் கண்டவன் விறகைக் கீழே போட்டுவிட்டு, “இங்கு என்னதான் நடக்கிறது’ என கூக்குரலிட்டான்.

பேர்ல்சாவிலிருந்த பிடியை விட்ட சாமுவெல், பேர்லை ஆரத் தழுவினான். “அப்பா”

நீண்ட நேரத்திற்கு பேர்ல் ஒரு சொல்லையும் உதிர்க்கவில்லை. தான் படித்திருந்த யூடிஸ் பைபிளிலிருந்து, பரிசுத்தமான வார்த்தைகளைக் கூற நினைத்தான். ஆனால் அவனுக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை. சற்றுப் பின்னர் “நீ சாமுவெல்தானே” எனக் கேட்டான்.
“ஆம் அப்பா நான்தான் சாமுவெல்.”
“என்றும் உன்னுடன் அமைதியிருக்கட்டும்” மகளின் கைகளைப் பற்றிக் கொண்டான். அவனால், தான் ஏமாற்றப்படுகிறேனோ என்ற எண்ணத்திலிருந்து மீளமுடியவில்லை. இங்கு நிற்கும் இந்த மனிதனைப் போல் சாமுவெல் பருமனாகவோ உயரமாகவோ இருக்கவில்லையே. ஆனால் சாமுவெல் பதினைந்து வயதிலிருந்த தோற்றமே பேர்ல்லிற்கு நினைவில் இருந்தது. அப்போது தான் அவன் வீட்டைவிட்டு அமெரிக்காவுக்குப் போனான். மிகத் தொலைவிலுள்ள அந்த நாட்டிருந்தபோது அவன் பெருத்துவிட்டான்.

“இங்கு வருவது பற்றி நீ எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லையே”?
“என்னுடைய கேபிள் உங்களுக்கு கிடைக்கவில்லையா?”

பேர்லிற்கு கேபிள் என்றால் என்ன என விளங்கவில்லை.

கைகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்து அதிலிருந்த மாவை நீக்கிய பின், பேர்ல்சா தனது மகனைக் கட்டிப்பிடித்தாள். அவளை சாமுவெல் மீண்டும் முத்தமிட்டான்.

“அம்மா கேபிள் கிடைக்கவில்லையா?”

“என்ன?” எனக் கூறியவள் “இவற்றை எல்லாம் பார்த்த பின்னர் சாவதில் கூட மகிழ்ச்சி அடைவேன்” என்றாள். அவளது குரலில் திகைப்படைந்த தன்மை காணப்பட்டது. அவள் கூறிய அந்த வார்த்தைகள் பேர்லிற்கும் ஞாபகம் வந்திருக்குமேயானால், அவனும் அதைத்தான் கூறி இருப்பான். சில கணங்களில் தன்னிலை அடைந்த பேர்ல் “பெஸ்சா இம்முறை சபத்திற்கு ஸ்ருவுடன் ஸ்பெஷலான புடிங்கும் செய்யவேண்டியிருக்கும்’ என்றான்.

பேர்ல் பல வருடங்களுக்குப் பின் இன்றுதான் மனைவியைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறான். அவன் அவளை அழைப்பதென்னவோ ‘இங்கே கவனி, சொல்லேன்’ என்ற வார்த்தைகள் மூலமே. இளம் வயதினரும், பட்டணங்களில் வசிப்போரும் மனைவிமாரை பெயர் சொல்லி அழைக்கின்றனர். இப்போது பேர்ல்சா அழத் தொடங்கிவிட்டாள். அவளது கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளிகள் மஞ்சள் நிறமாகத் தெரிந்தன. அவளுக்கு எல்லாம் மங்கலாகத் தோன்றியது. “இன்று வெள்ளிக்கிழமை. சபத்திற்கான ஆயத்தங்களைச் செய்யவேண்டும்.” என பலமாகக் கூறினாள். மாவைப் பிசைந்து ரொட்டியைச் சுட்டெடுக்கவேண்டும். வந்திருப்பவன் எவ்வளவு முக்கியமான விருந்தாளி. சிறந்த வகையில் சபத்திற்கான ஸ்ருவைச் செய்யவேண்டும். குளிர்கால மாலைப்பொழுதுகள் குறுகியவை. அவள் விரைவாகச் செயல்பட வேண்டும்.

மகனுக்கு அவள் எவற்றை எல்லாம் நினைத்து வருத்தப்படுகிறாள் என்பது புரிந்துவிட்டது. “அம்மா நான் உனக்கு உதவுகிறேன்”

பேர்ல்சா சிரிக்க முயன்றாள். அடைபட்ட விம்மல் ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. “நீ என்னதான் கூறுகிறாய் கடவுள் மன்னிப்பாராக”
அந்தக் கனவான் தனது மேல் கோட்டையும் உள் கோட்டையும் கழற்றினான். உள் அங்கி மட்டும் உடம்பிலிருந்தது. ஒரு கெட்டியான மணிக்கூட்டுடன் கூடிய, தங்கத்தாலான செயின் ஒன்று அதன் மேல் கிடந்தது. உள் அங்கியின் கைகளை சுருட்டி விட்டான். நீண்ட தொட்டிக்குப் பக்கத்தில் வந்தான். “அம்மா நான் நியூயோர்க்கில் பல காலமாக பேக்கராக இருந்தவன்” எனக் கூறிக்கொண்டு தண்ணீரைப் பிசைந்த மாவின்மேல் மேலும் விட்டு, அதனைப் பிசையத் தொடங்கினான்.
“என்ன எனது அருமை மகனே! யார்தான் எனக்குக் கடைசிப் பிரார்த்தனையைக் கூறப்போகிறார்களோ” என அழத்தொடங்கினாள். அது மனதைத் தொடுவதாக இருந்தது. அவளது பலம் முழுவதையும் இழந்திருந்தாள். கட்டிலில் முடங்கியபடி படுத்தாள்.

பெண்கள் எப்போதும் இப்படித்தான் என பேர்ல் தனக்குள் சொல்லிக்கொண்டான். மேலும் விறகு கொண்டு வருவதற்காக கொட்டகைக்குச் சென்றான். அடுப்படியில் ஆடு படுத்துக் கொண்டது. அது, வினோதமான உடைகளுடன் திகழும் அந்த நெடிய மனிதனை விறைப்புடன் நிலையாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.

அயலவர்கள், பேர்லின் மகன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான் என்ற நல்ல செய்திகேட்டு, அவனை வரவேற்க வந்தனர். சில பெண்கள் சபத்திற்கான உணவைத் தயாரிப்பதற்கு பேர்ல்சாவுக்கு உதவினர். சிலர் சந்தோச மிகுதியால் அழுதனர். ஒரு திருமணத்தின் போது இருப்பது போல் அந்த அறை திகழ்ந்தது.

அவர்கள் “இங்கில்லாத வகையில் என்ன புதுமைகள் அமெரிக்காவில் இருக்கின்றன” எனக் கேட்டனர்.

“அமெரிக்காவில் எல்லாமே ஒழுங்காக இருக்கின்றன” என்றான் சாமுவேல்.

“யூதர்களுக்கு அங்கு நல்ல வாழ்வு அமைந்துள்ளதா?”

“கிழமை நாட்களிலும் அங்கு ஒவ்வொருவரும் கோதுமைப் பாண் சாப்பிடுகிறார்கள்”
“அவர்கள் யூதர்களாகவே உள்ளார்களா?”

“நான் ஒரு உண்மையான யூதனாக இல்லைத்தான்”

“போர்ல்சா மெழுகுவர்த்திகளைத்தந்து ஆசிர்வதித்த பின் தகப்பனும் மகனும் தெருவின் மறுபக்கத்திலிருந்த சைனகொக்கிற்குச் சென்றனர். புதிதாக பனி பெய்து கொண்டிருந்தது. மகன் நீண்ட தடங்களை வைத்து நடந்தான். “மெதுவாக நட” என பேர்ல் எச்சரிக்கை செய்தான்.

சைனகொக்கில் யூதர்கள் பாடல்களை ஒப்படைத்துக்கொண்டிருந்தனர். “இராசாவே வருக. எம்மை உவகை அடையச் செய்யும்.” இவை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் வெளியில் பனி பெய்துகொண்டிருந்தது. பிரார்த்தனை முடிந்தது போலும். சாமுவேலும் வெளியே வந்த போது, கிராமம் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தது. எங்கும் பனி படர்ந்திருந்தது. வீடுகளின் கூரைகள் தெளிவற்றுச் சாங்கமாகத் தெரிந்தன. வீடுகளிலிருந்த மெழுகுவர்த்திகளை மட்டும் காணக்கூடியதாக இருந்தது. வேறு எதுவுமே தெரியவில்லை.

“இங்கு எதுவுமே மாறுதலடையவில்லை” என்றான் சாமுவேல்.

பேர்ல்சா பாரை மீனாலான கறியும் கோழிச்சூப்பும் இறைச்சியும் கரட்ஸ்ருவும் சோறும் சமைத்திருந்தாள். இறுதியான ஆசீர்வாதம் முடிவடைந்த பின் “அப்பா நான் அனுப்பிய பணத்தை என்னசெய்தீர்கள்” என சாமுவேல் கேட்டான்.

பேர்ல் தனது நரைத்த புருவத்தை உயர்த்தி “அது இங்க தான் இருக்கிறது என்றான்.”

“நீங்கள் பணத்தை வங்கியில் இடவில்லையா?”

“லென்சினில்தான் வங்கிகளில்லையே?”

“அப்பொழுது அதை எங்குதான் வைத்திருக்கிறீர்கள்”

போல் சிறிது தயக்கம் காட்டினான் “செபத்தின் போது காசைத் தொட யாரும் அனுமதிக்கப்படவில்லை ஆனாலும் உனக்கு நான் காட்டுகிறேன்” பேர்ல் கட்டில் பக்கமாகச் சென்று முதுகை வளைத்து ஏதோ ஒரு பாரமான பொருளை கட்டிலின் அடியிலிருந்து இழுத்தான். ஒரு சப்பாத்து வெளியே வந்தது. பேர்ல் வைக்கோலை வெளியே எடுத்தான். சாமுவெல் சப்பாத்தக்குள் இருந்த தங்க நாணயங்களைக் கண்டான். சப்பாத்தைத் தூக்கினான்.
“அப்பா, இது ஒரு புதையல் தான்”

“நல்லது”

“நீங்கள் ஏன் இதனைச் செலவு செய்யவில்லை”

“என்ன? கடவுளுக்கு நன்றி. எம்மிடம் எல்லாமே இருந்தன”

“நீங்கள் எங்காவது ஊர் பார்க்கச் சென்றிருக்கலாம் தானே?”

எங்கே நாம் செல்வது. இது தான் எமது வீடு”

மெதுவாக பேர்ல்சாவும் மகனையும் அவனது அமெரிக்க ஜிடிசையும் புரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தனர். அவன் பேசுவதை பேர்ல்சாவால் இப்போதெல்லாம் விளங்கக் கூடியதாகவும் இருந்தது. அவனது குரலை இப்போது இனம் கண்டு கொள்கிறாள்.

கேள்விகளுக்கு மேல் கேள்வியாக மகன் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் பேர்லின் பதில்கள் ஒரே மாதிரியாகவே இருந்தன.

திருடர்களுக்கு இது தெரிந்தால் உங்களது உயிருக்கு ஆபத்தாக முடியுமே”

“இங்கு தான் திருடர்கள் யாருமில்லையே”

‘கடைசியில் இந்தப் பணத்துக்கு என்ன நடக்குமோ?”

“நீயே அதனை எடுத்துக்கொள்”

“நாம் பெரிய சைனகொக் ஒன்றைக் கட்டலாம்” என்று சாமுவெல் பேசத் தொடங்கினான்.

“இங்குள்ளதே போதுமான தொன்று” என்றான் பேர்ல்.

“வயதானவர்களுக்கான இல்லம் ஒன்றைக் கட்டலாம்”

“இங்குயாரும் தெருக்களில் இல்லையே”

அடுத்த நாள் சபத் சாப்பாடு முடிந்த நேரத்தில் ஒரு கடதாசியுடன் யூதனொருவன் சக்ரொக்சிமிலிருந்து வந்தான் – அது ஒரு கேபிள். சிறுதூக்கத்திற்காக பேர்லும் பேர்ல்சாவும் சாய்ந்தார்கள். உடனேயே குறட்டையும் விடத்தொடங்கினார்கள். சாமுவெல்கோட்டையும் தொப்பியையும் அணிந்துகொண்டு வெளியே கிளம்பினான். அவன் தனது நீண்ட சுவடுகளை வைத்து நடந்து சந்தையை அடைந்தான். அதற்கப்பாலும் சென்றான். சாமுவெல் கையை நீட்டி ஒரு வீட்டின் கூரையைத் தொட்டான். சுருட்டுக்குடிக்க நினைத்தான். செபத்தின் போது அது தடை செய்யப்பட்ட செயல் என அவனுக்கு நினைவு வந்தது. அவனுக்கு யாருடனாவது பேசவேண்டும் போல் இருந்தது. ஆனால் முழுலென்ற்சினும் ஆழ்ந்த துயிலில் இருந்தது. அவன் சைனகொக்குள் சென்றான். ஒரு வயதான மனிதர் அங்கு அமர்ந்திருந்தார். தோத்திரப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். சாமுவெல் அவரைப் பார்த்து “பிரார்த்தiனையில் ஈடுபட்டிருக்கிறீர்களா?” எனக்கேட்டான்.

“ஒருவன் வயதான பின்பு எதைத்தான் செய்வது”

“உங்களுக்கு வருமானம் எதுவும் வருகிறதா?”

சாமுவெல் கூறியதற்கான அர்த்தம் அவருக்கு விளங்கவில்லை. அவர் சிரித்தார். பற்கள் இல்லாத வெறுமையான முரசுகள் தெரிந்தன. “கடவுள் சுகத்தைக் கொடுத்தால், ஒருவனது வாழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கும்”

சாமுவெல் வீட்டுக்கு வந்தான். பேர்ல் சைனகொக்கிற்குப் பிரார்த்தனை செய்யப் போனான். தாயும் மகனும் தனித்திருந்தனர். அறை எங்கும் நிழல் பரவியது.

பேர்ல்சா பக்தி சிரத்தையுடன் பாடல்களைப் பாடத் தொடங்கினாள். கடவுள்களாகிய ஆபிரகாம், ஐசக், ஜெக்கப் இஸ்ரவேலின் எளிய மனிதர்களைக் காப்பாற்றுங்கள். உங்கள் பெயரால் புனிதமான இந்த சபத் விலகிச் செல்கிறது. அடுத்த வாரத்தையும் வரவேற்கிறோம். அது பூரண சுகத்தையும் செல்வத்தையும் கொடுப்பதாகவும் நல்ல கருமங்களையுடையதாகவும் அமையட்டும்.

“அம்மா நீ செல்வத்திற்காக பிரார்த்தனை செய்ய வேண்டியதில்லை” என சாமுவெல் கூறினான். “நீ இப்போது மிகுந்த செல்வத்;துடன் தான் இருக்கிறாய்”
பேர்ல்சாவுக்கு கேட்கவில்லையோ – அல்லது கேட்காதது போல் பாசாங்கு செய்தாளோ தெரியவில்லை. அவனது முகம் எண்ணற்ற பல் நிழல்களால் கௌவப்பட்டது போல், இருளடைந்தது.

அந்திக்கருக்கல் வெளிச்சத்தில் சாமுவெல் தனது மேல்சட்டைப்பைக்குள் கை விட்டு பாஸ் போட், செக் புத்தகம், தனக்குச் சேர வேண்டிய கடன் பத்திரங்கள் எல்லாவற்றின் மேலும் கைகளை ஓடவிட்டான். அவன் பெரிய திட்;டங்களுடன் இங்கு வந்தான். அவனது தோல் பெட்டி பெற்றோர்களுக்காக அவன் கொண்டு வந்திருந்த பொருட்களால் நிரம்பி இருந்தது. கிராமத்திலிருந்த எல்லோருக்கும் நன்கொடையாக வெகுமதிகள் கொடுக்க நினைத்தான். தனது பணத்துடன், கிராமத்தின் முன்னேற்றத்திற்காக நியூ யோர்க்கில் ‘லென்ற்சின்’ கழகம் ஏற்பாடு செய்த ‘போல்’ நடனத்தின் போது, கிடைத்த பணமும் அவனிடமிருந்தது.

ஆனால் மறுகரையில் உள்ள இந்தக் கிராமத்தில் தேவைகள் எதுவும் இல்லை. சைனகொக்கிலிருந்து கரகரப்பான குரலில் கீPதங்கள் கேட்டபடி இருந்தன. நாள் முழுவதும் அமைதியாக இருந்து விட்டு சுவர்க்கோழிகள் மீண்டும் கீச்சிடத் தொடங்கி இருந்தன. தாய்மாரிடமிருந்தும் வழிவழியாக வந்த புனிதச் செய்யுள்களை, பேர்ல்சா பக்தி பூர்வமாகச் சொல்லத் தொடங்கினாள்.

‘தூய செம்மறிப் புருவையே – ரோராவுக்கு அமைந்து நடக்கவும் நல்ல காரியங்களைச் செய்யவம் – எம்மில் பூரணமான கருணையுடன் இரு – காலணிகள் உடைகள் உணவு எல்லாவற்றிலுமே – எமது தேவைகளை நிறைவேற்று – அத்துடன் மெசியாவின் பிரசங்கத்தை கேட்பதற்கும் – ஒழுங்கு செய்தனர்.

சபத் – புனிதநாள். இங்கு யூதர்களாகையால் சனிக்கிழமை.

சைனகொக் – யூத ஆலயம்
ஸ.ரு – கோதுமை மாவுடம் இறைச்சி, கரட் என்பன சேர்த்துச் சமைக்கும் கறி
ரோரா – யூதமதச்சட்டங்கள்

***

Advertisements