கவிதை நிஷா கவிதைகள்

நிஷா கவிதைகள்

இருள் கவிதை

இருட்டில் இருளைப் பார்த்தேன்
இருள் என்பது குறைந்த வெளிச்சம்

இருளே நிரந்தரம்
வெளிச்சம் தற்காலிகம்

இருளே இயற்கை
வெளிச்சம் செயற்கை

கருக் கொள்வது இருளில்
வெளிப்படுவது வெளிச்சத்தில்

இருளே ஆதி
இருளிலிருந்துதான் வெளிச்சம்

இருள் வெளிச்சத்தின் தாய்
இருள் ரகசியங்களின் பொக்கிஷம்
இருள் ஆச்சர்யங்களின் கடல்
இருள் மர்மங்களின் புதையல்
இருள் சூட்சுமங்களின் ஆழ்கடல்
இருள் துரோகங்களின் பொதிமூட்டை

இருளே துவக்கம்
இருளே முடிவு

இருள் இருள் இருள்
*
பள்ளி ஆண்டுவிழா

பரிசைத் தவறவிட்ட குழந்தை
தன் தோழி பரிசுபெறும் நிகழ்வை
உற்சாகத்துடன் கொண்டாட…..

தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தது,
இரவு பகலாய் பயிற்சி கொடுத்திருந்த
அம்மாக் குழந்தை..!!

**
உறங்கும் தேவதைகள்

தேவதைக் கதைகளின்
குதூகல நினைவில்
உறங்கும்
குழந்தைகள்
சிணுங்கும் வார்த்தைகளில்
உயிர்பெற்று புன்னகைக்கிறான்,
நூறாண்டுகாலம்
கல்லாகச் சமைந்திருந்த
குள்ளன் !!
***