கவிதை வித்யாஷங்கர் கவிதைகள்

வித்யாஷங்கர் கவிதைகள்

 

 

 
ஜனனி ஜகம் நீ
———————–
நேற்று நள்ளிரவில்
குரல் கேட்டு
ஜன்னலில் பார்த்தேன்
நகுலனின் பூனையோடு சுசிலா

மௌனியின் வரிகளுக்குள்
ஒழிந்திருந்தது
தாமரை மொக்கு ஏந்தி
யாளியோடு
முகம் மறைத்திருந்த நிர்வாண பெண்

வண்ணநிலவன் சொல்லிடையே
அல்ங்கரிக்கமறந்த அவஸ்தை பெண்கள்
அழுகுரல் அற்று

ஜானகிராமன் பெண்கள்
சாமான்யத்தில் வசப்படுத்த முடியாதவர்கள்
ஈர்ப்பு குறையாத ஈர இதழ் தேவதைகள்

லா .சா. ராவின் பெண்கள்
கர்ப்பகிருகத்திலிருந்து வந்து
இல்லத்தில் உலவுகிறவர்கள்

பூமணியின் பெண்களின்
கண்ணீர் உப்போடை
அம்பையின் பெண்கள்
அறிவால் செய்யப்பட்டவர்கள்

சல்மாவின் பெண்களின்
இரண்டாம் ஜாமங்களில்
வழிகிறது தீராத காமமும்
ரத்தமும்
குட்டிரேவதியின்
விரிந்து கிடக்கும்
உலகம் கோப வெறி

எனக்கு தெரிந்த
ஒரே பெண்
இறந்து போனாள்
இருப்பதெல்லாம்
தேவதைகளும்
ராச்சசிகளும்
மட்டுமே
***