கவிதை ப. தியாகு கவிதைகள்

ப. தியாகு கவிதைகள்

 

 

 

 

 

 

 

1)

அப்போது நாம்

 

பின்னூட்டமாய்
நம்மை
பால்யத்திற்கு இட்டுச்செல்கின்றன
தூர நிலங்களில் நின்று
சுழலும்
காற்றாலைகளின் ராட்சச காற்றாடிகள்

அப்போது நாம்
பழைய நம் பனையோலை காற்றாடிகளை
புதுப்பித்து
கைகளிலேந்தித் திரிகிறோம்

வேகமெடுக்கும் அவைகளின்
றெக்கைகள் பீய்ச்சும் காற்றில்
முன்னின்று ஒருவருக்கொருவர்
மூச்சுத் திணறுவதில் சுகித்திருந்துவிட்டு
திரும்பவும் இந்த
நெடுஞ்சாலை பயணத்தை தொடர்கிறோம்.

 

 

2)

ஊடல்

 

சற்றே தகிக்கிறது
என்றாலும்
மறுக்கவியலாது
அது
ஒவ்வொரு மிடறிலும்
இனிப்பதையும்.
தேநீர் போலும்
காதலில் வருமிந்த
ஊடல்

 

Advertisements