கவிதைகள் தாய் சுரேஷ் கவிதைகள்

கவிதைகள்   தாய் சுரேஷ்

 

 

 

 

 

 

 

 

 

1.
சில மென் இறகுகளை உதிர்த்தவாறு

பறந்து கொண்டிருக்கிறது

ஒரு மஞ்சள் பறவை

வானத்தின் நீலத்திற்க்குள் சற்று மெதுவாய்

மறையும் போது

அவை கீழே எரியும்

பூவொன்றில் பொதிந்து கிடக்கிறது

பறவையின் மொழி ரகசியம்

பின்னொருநாளில்,

யாருக்கும் புலப்படாமல் போன

ரகசியத்தை தன் சிறகு விரித்து மெதுவாய்

சொல்லிக்கொண்டே செல்கிறது

ஓர் அடர் வனத்துக்குள்……

2.
அவன் வீட்டுப்பாடம் முடிக்கும் அந்த கடைசி

எழுத்துவரை அமிழ்திக்கொண்டிருந்தது அப்பாவின்

நிர்பந்தம்

வேகமாய் எழுதுபவனின் கைகள் அவ்வப்போது

இடறிவிழ கண்கள் சுழன்று விழுகிறது அப்பாவின்

மேல் பல முறை

எல்லாம் எழுதி முடித்த பிறகு அவன்

கண்ககளில் கொப்பளித்து வரும் தண்ணீர் சுனையை

சற்று தடுத்து நிறுத்தவே

யோசிக்கிறது அப்பாவின் வலிமையிழந்த கைகள்

பின்,

மடக்கென்று குடித்துக் கொள்கிறது

அவனது தண்ணீர் சுனையை

அவன் நீண்ட நாளாய் கேட்டு அவன் அப்பா

வாங்கித்தந்த

“HERO” பேனா ஒன்று….
***