கவிதைகள் சின்னப்பயல் கவிதைகள்

கவிதைகள்  சின்னப்பயல் 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்றும் மழை வரவில்லை

 

வீட்டில் காண்பிக்க இயலாத

மதிப்பெண்களை சிலேட்டிலிருந்து அழித்துவிட

இன்று மழை வரவில்லை

 

சாலைகளின் மேடு பள்ளங்களை நிரப்பி

குதித்துத் தாண்டிக்கொண்டே வீடு செல்ல

இன்று மழை வரவில்லை

 

ஆசிரியரின் ‘ஏண்டா லேட்டு’ க்கு

‘மழைல நனைஞ்சிட்டேன் சார் அதான்

உடுப்பு மாத்தப்போயிருந்தேன்’

என்று சாக்கு சொல்ல

இன்று மழை வரவில்லை

 

வகுப்பறையில் மூன்று பேர் அமரும் இடத்தில்

நெருக்கியடித்துக்கொண்டு ஐவராக அமர்ந்து

உடற்சூட்டை பரிமாறிக்கொள்ள

இன்று மழை வரவில்லை

 

ஓட்டிலிருந்து தொடர்ந்து விழும் மழைத்துளிகள்

உண்டாக்கும் சிறுகுழிகளைக் கண்டு மகிழ

இன்று மழை வரவில்லை

 

‘ஈரத்துல போய் விளையாடாதே

காய்ச்சல் வந்துரும்’ என்று

அம்மாவிடம் ஏச்சு வாங்கவைக்க

இன்று மழை வரவில்லை

 

‘அம்மா இன்னிக்கு மழை பெய்யுது

அதனால பள்ளிக்கூடம் போகமாட்டேன்’

என்று சாக்கு சொல்ல

இன்று மழை வரவில்லை

 

தொடர்ந்தும் போடும் பந்துகளில்

சொற்ப ரன் கூட எடுக்க முடியாமல்

திணறும் போது சாக்கு சொல்லி

எப்படியாவது விளையாட்டை நிறுத்திவிட

இன்று மழை வரவில்லை

 

இங்கனம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்

என்னை எழுத விடாமல் தடுக்க

இன்றும் மழை வரவில்லை

 

ஆழ்ந்தபுரிதல்

 

வெளிவரும் இதழ்களில்

கவிதை என்ற தலைப்பின் கீழ்

இடப்படுவதால்

வரிகள் மடிக்கப்பட்ட

என் உரைநடைகள்

அனைத்தும் கவிதை என

தவறாகப்புரிந்து கொள்ளப்படுகின்றன.

 

மேற்கண்ட சொற்கள்

மடங்கிய உரைநடையை

அனுப்பிவைத்திருக்கிறேன்

இதழ்களுக்கு

உங்களோடு சேர்ந்து

எனக்கும்

ஆவலாயிருக்கிறது

எந்தத்தலைப்பின் கீழ்

இது வெளியாகுமென..

 

 

வழியோரக்காட்சிகள்

வெளிக்கிளம்பும் எனக்கு

எவையெல்லாம் காணக்கிடைக்கிறது ?

 

காலுடைந்த எப்போதும்

அதே தெருவைச் சுற்றிக்கொண்டிருக்கும் நாய்,

வழியில் தென்பட்டும் கண்டுகொள்ளாமல்

சென்று விடும் நண்பன்,

உண்டியல் குலுக்கிக்கொண்டு வரும் திடீர் பக்தன்,

ஆறு மாதமாகியும் கட்டாத குடிநீர்க்குழாய்ச்

சந்தாவை ஒரேயடியாக வசூலித்துக்கொள்ள

நினைக்கும் முனிசிபாலிட்டி ஓவர்சீயர்,

சந்திக்கவே கூடாதென

தவிர்த்துக்கொண்டிருந்த நபர்,

இதுவரை அவனுக்காகவே

காத்துக்கிடந்தும் வராத வண்ணான்,

எத்தனை முறை மணியடித்தாலும்

நகரவே நகராத எருமைகள்,

 

அதுவும் சரிதான்.

நம்மையெல்லாம் எதிர்ப்பட வேறு யார்

வந்துவிடப்போகின்றனர் ?

 

தபால் பெட்டி

 

இதுவரை தமக்கென

ஒரு கடிதமும் வரவில்லையென்ற

ஏக்கத்தில் சிவந்து கிடக்கிறது

தபால் பெட்டி

 

 

**

Advertisements