கவிதைகள் ஈழக்கவி கவிதைகள்

 

ஈழக்கவி கவிதைகள்

 

 

 

 

காலையில் தூங்குதல் தரித்திரம்

ஒரு ஆப்த நண்பன் போல
சேவல் தட்டியெழுப்பியது
கதவு திறந்து வாசல் வந்தேன்
கூதல் ஊசியாய் குத்தினாலும் இதமாக இருந்தது

கதிரவன் மூடுபனியால் முகம் கழுவிக்கொண்டிருந்தான்
மெல்லிய இருள்
ஒரு இருண்மை கவிதை போல
எதையோ வைத்திருப்பதாய் பாசாங்கு காட்டியது

ஓய்வு பெற்ற ஆசிரியரொருவர்
வைகறை தொழுகைக்காக போய்க்கொண்டிருந்தார்

நாயொன்று சுருண்டுப் படுத்திருந்தது
எத்தனை மனிதர்கள்
காகத்தின் குரல்வளையைக் கடித்தவாறு
கனவில் லயித்திருக்கிறார்களோ தெரியாது
பாடசாலைக்கு எப்பவும் பிந்தி வரும்
அம்மணிகளின் நினைவு வந்தது

காலையில் தூங்குவது தரித்திரம் என
உம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்
உழவுக்கால்கள் சேற்றில் புதைவதைக்கண்டேன்
வயல்வெளியில் பட்சிகளின் பூபாளம்
சோற்றில் கைவைக்கும் ஊரார்எவரையும் காணவில்லை
கவட்டுக்குள் கைவைத்து தூங்கிக்கொண்டிருப்பார்களோ
வாக்கு வாங்கும் அரசியல்வாதிகள் போல

31102012 காலை 5.50
— — —

எதிர்காலத்தை தின்னும் ஐந்தறிவுகள்

மூவர் ஒரு மூலையில்
கழுவிக் கொண்டிருந்தார்கள்
ஒருத்தி சவர்க்காரம் பூச
இன்னுமொருத்தி ஓங்கித்தப்ப
மற்றவள் பிசைந்தாள்

ஆ…. ஆசிரியைகளின் நாக்குகள்
ஆற்றங்கரை கற்களா?

மூவரும் ஒரே நேரத்தில்
செய்நேர்த்தியுடன் பள்ளிக்கொடியில்
குருத்துவத்தை காயவிடும் போது
சிஷ்யபிறைகள்
தேய்பிறைகளாய் அந்தரத்தில்

குஞ்சு வெண்புறாக்கள் கற்றல் இறகுளை விரிக்கும்
ஒரு வகுப்பறையினுள் நுழைந்தேன்
ஆசிரிய அம்மையார்
கையடக்க அலைபேசியில்
குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார்

ஒரு வெண்புறாவின் கண்ணைப் பார்த்தேன்
எங்கள் எதிர்காலத்தை பச்சையாய் தின்னும்
ஐந்தறிவைப் பார்த்தீர்களா என்றது

கும்பகர்ண குருவானவர்
கல்வி அதிகாரிகள் மதம்பிடித்தயானைகளாகி
தன்னை மிதிப்பது போல் கனவுகண்டு
திடுக்கிட்டெழுந்த பேய்முழியோடு
மாடு… மாடு என மாணாக்கர்மேல் சீறிவிழுந்தார்

அவருடைய ஞானஎருமையின் நாற்றம்
ஒரு சமுதாயத்தையே நாறடிக்கின்றது

25102012 காலை 7.45

 

Advertisements