கவிதை மழையைக் கண்டால் பிடித்துத் தாருங்கள் பைசால்

மழையைக் கண்டால் பிடித்துத் தாருங்கள்

பைசால்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எனக்குப் பின்னால் பெய்துகொண்டிருந்த மழையை
திரும்பிப் பார்க்கிறேன்
மழை என் முதுகிற்குப் பின்னால் ஒழிந்துகொண்டு
நிர்வானமாகப் பெய்கிறது

சில நிமிடங்களின் பின்
ஆடையுடன் எனக்கு முன்னால் வந்து பெய்தன
சில மழை

பின்னால் பெய்த மற்றைய மழை நின்றுவிட்டன

மழை நின்றுவிட்ட கிராமத்தில்
சிலரைக் காணுகின்றேன்
அவர்கள்
குடையை மடித்துக்கொண்டு செல்கிறார்கள்.

எனக்கு முன்னால் பெய்துகொண்டிருக்கும் மழையில்
சிலர் நனைந்துகொண்டு செல்வதையும்
சிலர் குடை பிடித்துக்கொண்டு செல்வதையும்
சிலர் சிறு கடைக் கூரையின் கீழ்
ஒதுங்குவதையும் காணுகின்றேன்.

மழையில் நனைந்து
குளிரில் நடுங்கிக்கொண்டு நிற்கும்
ஐந்து வயதுச் சிறுவனை
எனக்குப் பின்னால் இருக்கும்
கிராமத்திற்கு கொண்டுவந்து சேர்த்ததில்
எனது ஆடைகள் நனைந்து தொப்பாகிவிட்டன

“இங்கே மழையில்லை”என்று
என் ஆடை நனைந்து தொப்பாகினதை
நம்ப மறுக்கின்றனர் அக்கிராம வாசிகள்.

மழை தப்பித்துவிட்டது

இத்தருணத்தில்
மழை எனக்கு முன்னால் வந்து நின்றால்
பிடித்துவிடுவேனா? மாட்டேன்.
மழை நின்றால் எப்படி பிடிப்பது?