கவிதைகள் மனோ மோகன் கவிதைகள்

கவிதைகள் மனோ மோகன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அகாலம்
வாலும் தலையும் அருகருகே வைத்து
அமைதியாய்ப் படுத்திருக்கும்
நாகமென சுருண்டு கிடக்கிறது காலம்
அதன் வாலை மிதித்தால் கணுக்காலருகே
பற்கள் பதிவதிலிருந்து உன்னால் தப்பவே முடியாது
தூக்கில் தொங்கும் கடவுளின் உருவம் வரையப்பட்டு
நமதறையில் மாட்டியிருக்கும் நாட்காட்டியில்
தேதி கிழிக்கும் ஒவ்வொரு நாளும் உன்னையொரு
நாகம் தீண்டுவதாய்ச் சொல்வாயே
கிழிபடாத தேதியில் ஒளிந்து
உன்னையொரு கணமும் என்னையொரு கணமும் தீண்டும்
அந்த நாகம் ஒன்றல்லவென்று உனக்குத் தெரியுமா
பசி மிகும்போது தானீன்ற குட்டிகளையே புசிக்கும்
நாகமொரு அரசியல் விலங்கு
ரோஜாவின் பெயர் கொண்ட உம்பர்டோ ஈகோவின்
நாவலை வாசித்து முடித்த இரவில்
ஒரு பின் நவீனக் கவிஞன் சொன்னான்
வரலாறென்பது நஞ்சு தடவப்பட்ட காகிதம்

************
பலூன் வெடிக்கும் தருணம்
எந்த இரவையும் போலில்லை
இந்த இரவு
எல்லா உயிர்க்கும்
உறக்கத்தைத் தரும் இரவு*
எனக்கதைத் தருவதில்லை

மாத்திரை வடிவில் பத்திரமாயிருக்கிறது
சட்டைப் பையில் எனது உறக்கம்
அணைக்கப் படாத மின் விளக்கொளியில்
மதுவருந்துகிறோம்
நானும் என் நிழலும்

அழுத்தம் கூடிய எனது அறை
காற்றடைத்த கல்பலூனென
வெடிக்கப் பார்க்கிறது
அந்த பலூனை
மேலும் ஊதி விளையாடுகிறது
இந்த மின் விசிறி

*ரமேஷ் – பிரேமிடமிருந்து எடுத்தாளப் பட்டது

************.

வரைவதை நிறுத்து
சுற்றுவட்ட மதில் சுவரோடு
கறித்துண்டின் நிறத்தில்
ஒரு கட்டிடம் வரைந்திருக்கிறாய்
அதன் வாசல் தூணில் பிணைத்து
முழங்கை எலும்பின் நிறத்தில்
நிக்கல் முலாம் பூசப்பட்ட
இரும்புச் சங்கிலி ஒன்றும்
வரைந்திருக்கிறாய்
அதுகூடப் பரவாயில்லை
பிஸ்கட்டின் வண்ணத்தில்
ஒரு கழுத்துப் பட்டையும்
வரைந்து வைத்திருக்கிறாய்
தயவு செய்து
வரைவதை நிறுத்து
நான் வரையச் சொன்ன
நாய்க்குட்டி இதுவல்ல

******************
செம்புலப் பெயல்நீர்

நீ பிடிக்கும் சிகரெட்டின் புகையைப் போல
என் மார்புக்கூட்டுக்குள் நுழைகிறது
உனது துரோகம்
நீயும் சலிப்பதாயில்லை
குடியிருப்புகளின் மீது வீசப்படும்
ரசாயன வெடிகுண்டின்
லாவகத்துடன் அடிக்கடி புகைத்து
சூடுதணியாத
கங்குடன் சாம்பலை என்மீது தட்டுகிறாய்
ஒவ்வொரு பகலும் துரோகத்துக்கானது
சவரக்கத்தியின் கூர்மையுள்ள
ஒன்றிரண்டு வார்த்தைகளாலோ
தோட்டாவின் அழுத்தம் கொண்ட
சிறியதொரு மௌனத்தாலோ
என்றாவது ஒரு பகலில்
என்னை முழுவதுமாய்க் கொன்றுவிடுவாய்
மதுநெடி வீசும் அன்றைய இரவில் மட்டும்
நமக்குள் புணர்ச்சி நிகழாது
***