கவிதைகள் ஈழக்கவி கவிதைகள்

ஈழக்கவி கவிதைகள்

பாரதி கவிதை நிலம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நேற்று பெய்த மழைக்கு
முளைத்த காளான்கள்
கவிதை எழுதத் தொடங்கியிருந்தன

காளான் கவிதைகளில் கனமிருந்தது

கவித்துவ ரணமும் பிரகாசித்தது
நவீனத்துவத்தின் புரிதலும் விரிந்தது

கரகோசத்தால்
காளான்கள் வீரியம் பெற்றெழுந்தன
தேடலை தொலைத்து
வன்புணர்ச்சியில் ஆர்வம் காட்டின
ஜனித்தவைகள் வெறும் ஜடங்கள்

பிசாசுகளாய் மாறிய செத்த ஜடங்கள்
பாரதி கவிதைகளின் கழுத்தைகடித்து
இரத்தம் உறிஞ்சத் தொடங்கின

பாரதியின் சில கவிதைகள்
குருதி வழிந்தோட விழுந்தன

பாரதியை மகாகவியாக்கிய கவிதைகள்
பிசாசுகளை சுண்டுவிரலில் வைத்து ஆட்டின
பாரதி சிரித்தான்
நிலம் பிளந்து காளான்கள் புதைந்தன
புதைகின்ற தருணத்தில் கூட
காளான்கள் பாரதி கவிதைகளின்
கைகளை இழுத்தெடுக்க முனைந்து தோற்றன

.*

நாசமாய்ப்போதல்

 

 

நாலு பேருக்கு தீமை செய்கின்றவகள்
ஆறேழு காரில் வந்து கொண்டிருந்தார்கள்
எப்பவும் போல மக்கள்
வீதி ஓரத்தில் நின்று கை அசைத்தார்கள்

கறுப்புக்கண்ணாடி காரில் இருப்பவர்களுகக்கு
அது தெரியவில்லை
தெரிந்தாலும் தெரியப்போவதுமில்லை
இது தேர்தல் காலம் இல்லையே!

கார்களின் முன்னாலும் பின்னாலும்
பறந்து வந்த பாதுகாப்பு துப்பாக்கிகள்
வீதி ஓர மக்களை பயமுறுத்தின
அடுத்த தேர்தல் வரும் வரையில்
அமைச்சரின் இந்திர சுகத்திற்கு இடமளித்து
ஒதுங்கியிருக்குமாறு கூறுவது போல

என்னருகில் இருந்த முதியவரிடம்
அமைச்சர் எங்கே போகிறார் என்றேன்
‘நாசமாய்ப்போக’ என்றார்

.***

Advertisements