கட்டுரை கவிதை பட்டறை நிகழ்வின் சில குறிப்புகள்

குமாரநந்தன்

 

வாழ்வினிலே ஒருநாள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மலைகள் இணைய இதழ்  சேலத்தில் 14/10/2012 அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடத்திய கவிதை பட்டறை நிகழ்வின் சில குறிப்புகள்

 

( நிகழ்வின் எல்லா விஷயங்களையும் குமாரநந்தன் பதிவு செய்யாத போதும் அவரின் மனதில் விழுந்த அபிப்பிராயங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் எந்த எடிட்டும் செய்யாமல் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துப்பிழைகளைக் கூட நீக்காமல். முழுமையான பதிவுகள் பல்வேறு வகையில் தொகுத்து மலைகள் இதழில் வழங்கப்படும் )

 

 

மலைகள் இதழின் கவிதைப் பட்டறை பற்றிய அறிவிப்பைப் பார்த்துவிட்டு சிபிச்செல்வனிடம் பேசும் போது தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள் என்று சொன்னார். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் மறுநாள் போன் செய்து நீங்கள் கலந்து கொள்ளலாம் குமாரநந்தன் என்றார். தீவிரமான கவிதைப் பட்டரை நிகழ்வுகள் எதிலும் நான் இதுவரை கலந்து கொண்டது இல்லை. இதிலும் கலந்து கொள்ள முடியாது என்ற நிலையில் கிட்டத்தட்ட எதிர் மனநிலைக்குத் திரும்பிவிட்ட நான்(வேண்டிய ஆட்களை மட்டும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு இவங்க என்ன பேசுவாங்க!) மீண்டும் எதிரும் புதிருமாக மனதைக் குவித்துக் கொண்டு தான் சென்றேன்.

முதலில் ரோட்டரி கிளப் தலைவர் மற்றும் நகைக் கடை உரிமையாளரின் தொடக்க உரை பீதியூட்டுவதாகவே இருந்தது. ஆனால் அவர்கள் வெளியேறியதும் கதவு இறுக்கி சாத்தப்பட்டது. வரவேண்டியவர்கள் அனைவரும் வந்துவிட்டனர்

(நிலா ரசிகன், கதிர் பாரதி, ந. பெரியசாமி, வா. மணிகண்டன், வேல் கண்ணன், இசை, ஸ்ரீநேசன், தேவதச்சன், சமயவேல்,ஷாஅ, பாபு, அகச்சேரன், பா. ராஜா, கணேசகுமாரன், சாகிப் கிரான் மற்றும் நான்)

 

முதலில் கவிதையில் நிலைபெறும் காலம் அல்லது கவிதையை காலத்தில் இருந்து விடுவித்தல் பற்றிய விவாதங்களோடு தொடங்கலாம் என்று சிபிச்செல்வன் முறைப்படித் தொடங்கினார்.

 

மற்ற படைப்புகளில் வெளி உலகம் இடம் பெறுகிறது. கவிதையில் வெளி உலகம் இடம் பெற்றாலும் உண்மையில் அது இந்த உலகம் அல்ல அவன் வேறு ஒரு உலகத்தைக் கட்டமைக்கிறான். கவிதையில் இடம் பெறும் ஒரு மரம் உண்மையில் அந்த மரத்தைத்தான் குறிப்பிடுகிறது என்று சொல்லமுடியாது. எனவே அவன் ஒரு உலகத்தைக் கட்டமைக்கும் போது அதற்கே உண்டான காலத்தையும் அவனே உருவாக்கி அதில் நிறுத்தி வைக்கிறான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது ஒரு மகத்தான பொய் உலகம் அப்படியில்லை. ஆனால் படிக்கும் போது நாம் அப்படி நினைப்பதில்லை. அது ஒரு மகத்தான உண்மையின் தரிசனமாகவே இருக்கிறது. என்று கவிதையில் நிலைபேறும் காலத்தைப் பற்றி தேவதச்சன் பேசினார்.

 

ஒருவன் புனிதத் தன்மைகளிலிருந்தும் கட்டமைப்புகளிலிருந்தும் வெளியேறி இருக்கும் இந்தக் காலகட்டத்தின் பலம் பலவீனம் பற்றிய விவாதங்களை வா. மணிகண்டனும், நிலா ரசிகனும், சமயவேலும் கொண்டு சென்றனர். சமயவேல் பேசும் போது ஞானத்தன்மை, முதிர்ச்சி, போன்ற வெளிப்பாடுகள் இல்லாமல் பேசியவிதம் மிகவும் ஈர்ப்புடையதாய் இருந்தது. (தேவதச்சன் ஞானத்தன்மை, முதிர்ச்சி, கொண்ட ஒரு தன்மையோடு பேசினாரா என்று எடுத்துக் கொள்ளவேண்டாம். அவரிடம் ஒரு அரவணைத்துச் செல்லும் பண்பு இருந்தது. வெற்றிலைச் சீவலின் செம்பின்னனியில் வெளிப்படும் நேந்திரன் சிப்ஸ் போன்ற லேசான மொறுமொறுப்பான குரலும் மற்றவர் பேச்சு கொண்டு செல்லும் வெளிக்குள் கண்களை மூடி பயணம் செய்வதும் அவரின் கவித்துவ வாழ்வை சித்திரமாக்கிக் கொண்டிருந்தது)

 

 

கவிதை என்பதை எவ்வளவுதான் அறிவார்த்தமாக இருந்தாலும் செயற்கையாக உருவாக்க முடியாது அது தன்னை மீறித்தான் நடக்க வேண்டும் அல்லது நடக்கிறது என்கிற இடத்திற்கு உரையாடல் நகர்ந்தது.

 

 

கவிதையின் பிம்பத்தின் மீது புனிதத்தையும் கடவுள் தன்மையையும் ஏற்றுகிறார்களோ என்று ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தாலும் இன்னொரு நிலையில் நான் எப்படிக் கவிதை எழுதுகிறேன் என்பதையும் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

 

 

 

கவிதை எங்கிருந்து உருவாகிறது என்கிற போது நம்முடைய வாசக அனுபவத்திலிருந்தே அது உருவாகிறது என்கிற கருத்தை ஸ்ரீநேசன் விளக்கினார், சில கவிதைகளில் ஏற்படும் போதாமை வாசிப்புப் பயிற்சியின் போதாமை என்றுதான் நானும் கருதுகிறேன். ஓரான் பாமுக் தன்னுடைய செவ்வி ஒன்றில் ஒரு எழுத்தாளன் எவ்வளவு பரந்த பட்ட வாசிப்பு உள்ளவர் அல்லது இல்லாதவர் என்பதை அவரின் கதைகளில் அறியலாம் என்கிறார்.

 

 

க. வை. பழனிச்சாமி நிறைய வாசிப்பதால் மட்டுமே ஒருவர் கவிஞராகி விட முடியாது என்பதையும் அது கவிதையின் வெளிப்பாட்டுக்கான ஒரு சிறந்த பயிற்சியை அளிக்க வல்லது என்பதை சமயவேலும் விளக்கிச் சென்றனர்.

 

 

கவிதையில் இடம் பெறும் இசை குறித்த விவாதத்தை இசை துவங்கி வைத்தார். (அது தானே பொருத்தமானது!)

 

கவிஞனுக்கு இசை பற்றிய எந்த ஒரு உணர்வும் புரிதலும் இல்லாவிட்டாலும் கூட அவனுடைய தொல் மனக் கிடங்கிலிருந்து அல்லது தமிழ் சமூகத்தின் கூட்டு நனவிலியிலிருந்து அவன் அதில் ஒரு இசையைக் கட்டமைக்கிறான். பொதுவாகவே ஒவ்வாரு மொழிக்கும் ஒரு இசையமைதி உண்டு என்று தேவதச்சன் குறிப்பிட்டார்.

 

 

ஒரு நீண்ட வாக்கியத்தை முதல் வரியாகவும் அடுத்து ஒரே ஒரு வார்த்தையை இரண்டாவது வரியாகவும் அடுக்கும் படி செலுத்துவது கவிதையின் இசை தான் என்கிற புரிதலுக்குப் பின் என்னுடைய நீண்ட கால சந்தேகம் ஒன்று விடை பெற்றது.

 

 

தற்போது பல கவிஞர்களாலும் முன்னெடுத்துச் செல்லப்படும் உரைநடைக் கவிதை எனக்க உவப்பளிக்க வில்லையே ஏன் என்கிற சந்தேகமே அது. ஏனென்றால் உரைநடைக் கவிதையில் அந்தக் கவிதைக்கே உரிய இசைத் தன்மை இல்லாமல் போவதுதான் காரணமாய் இருக்கக்கூடுமல்லவா? உரைநடைக் கவிதை பற்றிப் பேச வேண்டும் என்றார்கள் ஆனால் உரையாடல் அதை நோக்கி கடைசி வரை திரும்பவில்லை.

 

 

பெண் கவிஞர்கள் தங்களின் பெண் அடையாளத்தைக் கவிதைக்குள் வைக்கும் போது கவிதையின் பொதுத் தன்மை அடிபட்டுப் போவதும் பெண் அடையாளமற்ற கவிதைகளில் பெண்ணின் தனித்துவப் பார்வை இல்லாத அவை முழுமையற்ற உணர்வின் சிக்கலுக்குள் சிக்கிக் கொள்வதால் அவர் மீண்டும் பெண் அடையாளக் கவிஞராகிற சிக்கலும் பற்றி உரையாடல் சென்றது.

 

 

வே. பாபுவும் கணேச குமாரனும் பெண் கவிஞர்களின் தனித்தன்மையான கவிதைகளை அவர்கள் பெண்களாய் இருப்பதாலேயே எழுத முடிந்தது என்று பேசினர். ஒரே தொகுப்போடு காணாமல் போகும் பெண் கவிஞர்களைப் பற்றி வா. மணிகண்டன் நினைவு கூர்ந்தார். இந்த இடத்தில் பட்டரையில் இரண்டு பெண் கவிஞர்களாவது கலந்து கொண்டிருந்தால் இன்னும் கூர்மையான பரிமாணத்தை எட்டியிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

 

 

கவிதையில் இடம் பெறும் உவமைகள் திட்டமிடுதலால் வருவதல்ல அப்படி வந்தாலும் அதன் செயற்கைத் தனம் புறக்கணிக்கப்படும் என்றும் தன்னுடைய கவிதையில் இடம் பெற்ற தொடர்ந்து இரண்டு சிகரெட் பிடித்ததைப் போன்ற மனநிலை என்கிற உவமை திட்டமிட்டு வந்ததல்ல என்றும் அதைப் பற்றி எப்பொழுதும் தான் சிந்திக்கவில்லை என்றும் கவிதை எழுதிய அந்தக் கணத்தில் தோன்றிய கச்சிதமான உவமை என்றும் ஸ்ரீநேசன் குறிப்பிட்டார். எனில் அந்த அனுபவம் வாசகனுக்குத் தேவையில்லை என்றாலும் அவன் அந்த மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட ஷாஅ மற்றும் சமயவேல் கவிதையைப் புரிந்து கொள்ள கவிஞனின் எல்லா அனுபவத்தையும் வாசகனும் பெற்றிருக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு தேவையற்றது என்கிற கருத்தின் மீது விவாதித்தனர்.

 

 

ஒரு சம்பவத்தின் மீது கவிஞன் கொள்ளும் துக்கம் அந்தச் நிகழ்வினால் அவனுக்குள் உண்டாகும் அவனுக்கேயான துயரம் அது அந்த செயலின் துன்பமல்ல என்றும், உதாரணமாக இலங்கைத் தமிழர்களின் துயரம் பற்றிக் கவிஞன் அடையும் துயரம் தன்னுடைய எதுவும் இயலாததனால் ஏற்படும் குற்ற உணர்வின் துயரமே ஆகும் அது இலங்கைத் தமிழர்களின் துயரத்தை இவனும் அனுபவிப்பதாக ஆகாது. அப்படி கவிஞன் அந்தத் துயரத்தை அப்படியே அடைவதாகப் பிரதிபலிப்பதாக இருந்தால் அது போலித்தனமானது என்றுதான் சொல்ல முடியும் என்று சமயவேல் குறிப்பிட்டார்.

 

 

இப்படிப் பல்வேறு தளங்களில் மிதந்து சென்ற உரையாடல் மதிய உணவிற்காக நிறுத்தப்பட்டது.

 

 

உணவிற்குப் பின் கவிஞர்கள் அவரவர்களும் தங்களுடைய சிறந்த கவிதை அதை எழுத உண்டான மனநிலை போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

 

 

ஸ்ரீநேசன் சொன்ன நூறு கிமி தொலைவின் நடுவே தனக்கும் தன் மனைவிக்கும் இடையே ஆடும் குழந்தைத் தூளியின் சித்திரமும்

 

 

கதிர் பாரதி குறிப்பிட்ட கோவில்களில் தன்னை ஈர்த்த ரதி சிலையையும் பிறகு ஒரு கிராமத்தில் காணநேரிட்ட பிரம்மாண்ட ரதி சிலையின் மார்பைக் கொத்தும் குருவியின் சித்திரமும்

ந பெரியசாமி குறிப்பிட்ட மதுக்குப்பியிலிருந்து வழியும் மது பெண்ணின் உறுப்பிலிருந்து வழிவதைப் போன்ற சித்திரமும்

 

 

கணேச குமாரன் குறிப்பிட்ட சிந்துபாத் லைலாவைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையும் ஒவ்வொருவரையும் பலவாறாகப் பறக்கும் மனநிலையை உண்டாக்கியது.

 

 

வே பாபு தன்னுடைய அம்மு கவிதையைக் குறிப்பிட்டு உக்கிரமான தன்னுடைய தற்கொலை மனநிலையை அந்தக் கவிதை சமண் செய்ததை விவரித்தார். அவர் கொடுத்த இடைவெளியும் தீவிரமும் பெரும் சக்தியாக விரிந்து எல்லோரும் சாவை நோக்கிச் செல்வதைப் போன்ற ஒரு மரண அமைதியை அறைக்குள் ஏற்படுத்தியது.

 

 

வா. மணிகண்டன் குறிப்பிட்ட தன்னுடைய மூன்றாவது மாடி அலுவலகத்தின் எதிரில் ஜன்னல் வழியே காட்டுக்குள் காண நேர்ந்த பிரேதம் மூன்று நாட்களாகத் தன்னை தத்தளிக்க வைத்தத் தவிப்பின் வழியே வந்தடைந்த கவிதையை விவரித்தார்.

 

 

வேல் கண்ணன் சென்ற ஆண்டில் புற்று நோயால் மறைந்த தன்னுடைய அண்ணனின் மரணம் தந்த மனநிலையில் உண்டான அவசம் கவிதையாக வெளிப்படுவதைக் குறிப்பிட்டார். மறைந்த அவருடைய அண்ணனின் நினைவில் தோய்ந்த அவரின் குரலைத் துயரம் பந்தாய் அடைத்துக் கொண்டது. அது மேலும் பரவி அந்த அறையையும் அடைத்துக் கொண்டு பிரம்மாண்டமாய் நின்றது என்றாலும் அவர் உடனடியாகத் தன்னுடைய மனநிலையிலிருந்து வெளியேறி வந்துவிட்டார்.

 

 

நான் அப்பாவின் மறைவுக்குப் பிறகும் தூரத்தில் யாரையும் அப்பாவைப் போலக் கண்டபோது அவர்தான் வருகிறாரோ என்று எதிர்பார்க்க ஆரம்பித்த மனநிலையிலிருந்து உருவான கவிதையைக் குறிப்பிட்டேன்.

 

அகச் சேரன் தன்னுடைய அக்காவின் திருமணத் தடைக்காக பரிகாரம் வேண்டிச் சென்ற கோயிலில் நதிக்கரையில் தென்பட்ட நந்தியின் சிற்பமும் அக்காவின் சலித்த மனநிலையும் தன்னுடைய கவிதையாய் வெளிப்பட்டதை விவரித்தார்.

 

 

பா. ராஜா கல்யாண்ஜியின் கவிதையில் இடம் பெற்ற பற்சக்கரமும் தன்னடைய தறி எந்திரத்தின் பற் சக்கரமும் சேர்ந்து உந்தித் தள்ளிய கவிதையைக் குறிப்பிட்டார்.

 

இப்படியான உரையாடலில் இருந்து கவிதை என்பது குறிப்பிட்ட தனியான மனநிலையில் இருந்து உருவாவதல்ல அது எந்தவிதமான மனநிலையில் இருந்தும் தோன்றுவதை என்னால் உணரமுடிந்தது. இதற்கு வலு சேர்ப்பதைப் போல ஷாஅ உண்மையில் கவிதை என்பது என்ன? அது தன்னுடைய தன்மையில் நிலைபேறாக இருக்கிறது. கவிஞன் தன்னுடைய நிகழ்வுகளையும் உணர்வுகளையும் கொண்டு மொழியில் ஒரு அச்சைப் போல உருவாக்கி வைக்கும் போது கவிதை அந்த வடிவத்தை ஏற்றுக் கொண்டு அதில் வெளிப்படுகிறது. என்றார் இப்படியான ஒரு பார்வை உண்மையில் எனக்குப் பரவசத்தை உண்டாக்கியது.

 

 

அதே போல இறைவன் தொட்டிலை சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஆட்டுவிக்கிறான் என்று விவரித்தபோது அக்குழந்தை ஆணுக்கும் பெண்ணுக்குமான பால்வெளியில் ஆடுவதாக எண்ணலாமா என்று தேவதச்சன் கேட்ட போது அங்கே தன்னுடைய கவிதைக்குத் தானே நினைத்துப் பார்க்காத ஒரு கோணம் உண்டானதை ஸ்ரீநேசன் வியப்புடன் ஆமோதித்தார்.

 

 

கவிதையில் பெயர்கள் குறிப்பிடப் படலாமா என்ற வாதத்தை சிபிச் செல்வன் துவக்கினார். உதாரணமாக நகுலனின் கவிதையில் இடம் பெறும் சுசீலா மொழி மாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்திற்குச் செல்லும் போது என்ன ஆவாள்? சுசீலா புரிந்து கொள்ளப்படவில்லை என்றால் கவிதை புரிந்து கொள்ளப் படுமா அப்படிப் புரிந்து கொள்ளப்படாத பட்சத்தில் அது ஒரு வட்டத்திற்கான கவிதையாகப் போய்விடாதா என்ற கேள்வியை சிபிச் செல்வன் வைத்தார்.

 

 

கவிதையில் இடம் பெறும் பெயர்கள் அந்தக் கவிதை தனக்கும் கவிஞனுக்குமானது அல்லது தனக்கானது என்கிற மனநிலையைக் காலி செய்து அது அந்தக் கவிஞனுக்கும் அவன் குறிப்பிடும் அந்த நபருக்குமானது என்கிற தோற்றத்தைத் தருவதால் அது வாசகனைக் கவிதையில் இருந்து வெளியேற்றிவிடுகிறது என்று வா. மணிகண்டன் குறிப்பிட்டார்.

 

 

கவிதையில் இடம் பெறும் பெயர்கள் அதன் பொதுத் தன்மைக்கு எதிரானது என்றாலும் பெயர்கள் இடம் பெற்றே ஆக வேண்டிய கவிதையில் பெயர் இடம் பெறுவதே சரியானதாக இருக்கும் என்பதே எல்லோரின் நிலைப்பாடாகவும் இருந்தது.

 

 

மாலை ஆறுமணி ஆகிவிட்டது. உரையாடலும் தன்னுடைய மாலைநேரத்தை அடைந்து மங்கத் தொடங்கியது.

 

பின் அறைக்குச் செல்பவர்களும் வீட்டுக்குச் செல்பவர்களும் என பரஸ்பரம் விடை பெற்றுக் கொள்ள ஆரம்பித்தோம் அநேகமாக நான் க.வை. பழனிச்சாமி, சாகிப், வா. மணிகண்டன் தவிர மற்றவர்கள் எல்லோரும் தேவதச்சனின் அறைக்குச் சென்றுவிட்டனர். அங்கு இன்னும் கூட கட்டற்ற ஒரு உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும் என்கிற நினைவோடே நான் கிளம்பினேன்.

 

 

1. இங்கே கவிதை பற்றிய கட்டுரைகள் பக்கம் பக்கமாக மூளைச் சோர்வை உண்டாக்கும் படி எழுதிக் கொண்டு வந்து வாசிக்கப்படவில்லை. சமயவேல்தான் இதைக் குறிப்பிட்டு அதனாலேயே இவ்வளவு ஒரு திறந்த மனநிலை இங்கே உண்டானதென்றும் இதுவரை தான் கலந்து கொண்ட கவிதை நிகழ்வுகளிலேயே இவ்வளவு மனநிறைவை வேறு எங்கும் அடையவில்லை என்றும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

 

 

2. அறையின் கச்சிதத் தன்மை உரையாடலுக்கான தடையை உடைத்து வீசுவதைப் போல அமைந்துவிட்டதை தேவதச்சன் குறிப்பிட்டார்.

 

 

எனக்கு காலையில் இருந்து மாலை வரை கவிதையைப் பற்றியே சிந்திப்பதும் பேசுவதும் ஒரு நிகழ்த்துக் கலை மாதிரியான இன்பமான மனநிலையை எனக்குள் உருவாக்கியிருந்தது. இந்த மனநிலை ஒரு கவிதைப் புத்தகத்தை வாசிப்பது அல்லது ஒரு கவிதையை எழுதுவதைக் காட்டிலும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல. அல்லது ஒரு வாழ்க்கை முழுவதுமே வெறும் கவிஞனாக வாழ்ந்ததைப் போன்ற உணர்வை தந்திருந்தது என்றால் உண்மையிலேயே மிகையில்லை.அனைவருமே திருப்தியும் மனநிறைவையும் அடைந்திருப்பதைக் காண முடிந்தது.

 

 

சிபிச் செல்வனின் மகனுடைய நண்பரும் மலைகள்.காமின் வடிவமைப்பாளரில் ஒருவருமான அடைக்கலம் நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவிலும் ஆடியோவிலும் பதிவாக்கி தனக்கு அறிமுகமில்லாத துறையில் பொறுமையோடும் புரிதலோடும் செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் மதிப்பையும் பெற்றுக்கொண்டார்.

 

சிபிச் செல்வனின் துணைவியார் நிகழ்ச்சி அன்று காலையில்  மயங்கிவிழுந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற  பின் அருகே இருக்கவேண்டிய நிலையிலும் அவர் இந்த நிகழ்விற்குத் தன்னுடைய சமநிலையை இழக்காமலும் நம்பிக்கையோடும் வந்திருந்தது எனக்கு மதிய உணவின் போது சாகிப் கிரான் சொல்லிதெரிய வந்தது. அவரை வெறுமனே பாராட்டுவது போதாது என்றாலும் வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.

 

**