மொழிபெயர்ப்பு சிறுகதை பனிக்கட்டியை விடக் குளிர்ந்து போய்… சாதத் ஹசன் மண்டோ ஆங்கிலத்தில்-காலித் ஹசன் தமிழில்- உதயசங்கர்

பனிக்கட்டியை விடக் குளிர்ந்து போய்…

 சாதத் ஹசன் மண்டோ

 ஆங்கிலத்தில்-காலித் ஹசன்

 தமிழில்- உதயசங்கர்

 

 

 

 

 

 

 

 

சாதத் ஹசன் மண்டோவின் 100 ஆண்டை முன்னிட்டு மலைகள் இதழ் அவரின் சிறுகதைகளைத் தொடர்ந்து வழங்குவதில் பெருமையடைகிறது.

 

ஐஷர்சிங் அறைக்குள் நுழைந்தவுடன் கல்வந்த்கவுர் கட்டிலிலிருந்து எழுந்து கதவை உள்பக்கமாகத் தாழிட்டாள். நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ஒரு விநோதமான ஆழமான அமைதி நகரின் மீது கவிந்திருந்தது.

 

கல்வந்த்கவுர் கட்டிலுக்குத் திரும்பி கட்டிலின் நடுவே சம்மணம் போட்டு உட்கார்ந்தாள். ஐஷர்சிங் ஞாபகமறதியாக கிர்பானைக் கையில் பிடித்தபடி மூலையில் அமைதியாக நின்று கொண்டிருந்தான். அவனுடைய அழகிய முகத்தில் பதட்டமும் குழப்பமும் நிறைந்திருந்தது.

 

கல்வந்த்கவுர் அவனுடைய விரைப்பான தோரணையில் அதிருப்தியடைந்தவளாய் கட்டிலின் ஓரத்திற்கு நகர்ந்து வந்து உட்கார்ந்துகொண்டு கால்களை இணக்கமாக ஆட்டிக் கொண்டிருந்தாள். ஐஷர்சிங் அப்போதும் எதுவும் பேசவில்லை.

 

தாராளமான இடையும், சதைத் திரட்சிமிக்க தொடைகளும், அசாதரணமான பெரிய மார்புகளும் கொண்ட மிகப் பருமனான பெண் கல்வந்த்கவுர். அவளுடைய கண்கள் கூர்மையாகவும் ஒளி வீசிக்கொண்டுமிருந்தது. அவளுடைய முகவாய்க்கட்டை அவள் பெரும் வலிமையும் உறுதியும் கொண்டவள் என்பதைத் தெரிவித்தது.

 

ஐஷர்சிங் அவன் நின்று கொண்டிருந்த மூலையிலிருந்து அசையவில்லை. தலையில் எப்போதும் கனகச்சிதமாக இருக்கிற அவனுடைய தலைப்பாகை இப்போது அவிழ்ந்திருந்தது. அவனுடைய கைகள் அவ்வப்போது நடுங்கிக் கொண்டிருந்தன ஆனாலும் அவனுடைய வலிமையும் ஆண்மையுமிக்க தோற்றத்திலிருந்து அவன் தான் இப்போது கல்வந்த்கவுரின் காதலன் என்று தெளிவாகத் தெரிந்தது.

 

நிறைய நேரம் கடந்தது. கல்வந்த்கவுர் பொறுமையிழந்து கொண்டே வந்தாள்.

 

“ ஐஷர்சியான்..” என்று தெளிவான குரலில் அவனை அழைத்தாள் அவள். ஐஷர்சிங் தலையை உயர்த்தினான். பின்பு கல்வந்த்கவுரின் கோபப்பார்வையைச் சந்திக்க முடியாமல் திரும்பிக் கொண்டான். இப்போது அவள் அலறினாள்,

 

“ ஐஷர்சியான்..” பின்பு சற்று குரலைத் தழைத்துக் கொண்டு, “ இவ்வளவு நேரம் எங்கிருந்தாய்?”

 

என்று கேட்டாள். ஐஷர்சிங் உலர்ந்த அவனுடைய உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு,

 

“ எனக்குத் தெரியல..”

 

என்று சொன்னான். அதைக் கேட்ட கல்வந்த்கவுர் தன்னிலை இழந்தாள்.

 

“ இதென்ன ஒங்காத்தாளோக்கிற..பதில்..”

 

ஐஷர்சிங் அவனுடைய கிர்பானைக் கீழே வீசிவிட்டு கட்டிலில் நிலைகுலைந்து விழுந்தான். அவன் நோயுற்றிருந்ததைப் போலத் தெரிந்தான். அவள் அவனை வெறித்துப் பார்த்தாள். அவளுடைய கோபம் அவளை விட்டு அகன்றது போலத் தெரிந்தது. அவளுடைய கையை அவனுடைய நெற்றியில் வைத்துக் கொண்டே மென்மையாகக் கேட்டாள்,

 

” அன்பே..என்னாச்சி..”

 

” கல்வந்த்..”

 

கூரைமுகட்டில் நிலைகுத்தியிருந்த அவனுடைய பார்வையைத் திருப்பி அவளைப் பார்த்தான். அவனுடைய குரலில் இருந்த வேதனை கல்வந்த்கவுரை முழுவதுமாக உருக்கி விட்டது. அவள் கீழுதட்டை அசைத்து,

 

“ சொல்லு அன்பே..”  என்றாள்.

 

ஐஷர்சிங் அவனுடைய தலைப்பாகையை எடுத்து விட்டான். சுளீரென்று அவளுடைய தொடையில் அடித்தான். அவளிடம் என்று சொல்வதை விட அவனிடமே சொல்லிக் கொண்டான்,

 

“ எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..”

 

அவனுடைய நீண்ட தலைமுடி அவிழ்ந்து விழுந்தது. கல்வந்த்கவுர் அவளுடைய விரல்களால் விளையாட்டாகத் தலைமுடியைக் கோதிவிட ஆரம்பித்தாள்.

 

“ ஐஷர்சியான் இவ்வளவு நேரம் நீ எங்கிருந்தாய்..? “

 

“ என் விரோதியின் அம்மாவோட படுத்திருந்தேன்..”

 

என்று வேடிக்கையாகச் சொன்னான். பின்பு அவனை நோக்கி கல்வந்த்கவுரை இழுத்தான். இரண்டு கைகளாலும் அவளுடைய முலைகளைப் பிசைய ஆரம்பித்தான்.

 

“ குரு மேல சத்தியமாச் சொல்றேன்.. உன்னை மாதிரி ஒரு பொம்பிளையும் இல்லை..”

 

என்று சொன்னான். அவள் ஊடலோடு அவனைத் தள்ளிவிட்டாள்.

 

“ எந்தலைமேல சத்தியம் செய்.. நீ நகரத்துக்குப் போயிருந்தியா..?”

 

என்று கேட்டாள். அவனுடைய தலைமுடியைச் சேர்த்துக் கொண்டை போட்டுக் கொண்டே அவன் சொன்னான்,

 

“ இல்லை..”

 

கல்வந்த்கவுர் எரிச்சலடைந்தாள்.

 

“ இல்லை நீ நகரத்துக்குப் போயிருக்கே.. நிறையப் பணத்தைக் கொள்ளையடிச்சிருக்கே.. அதப்பத்தி எங்கிட்ட சொல்லவிரும்பல..”

 

“ நான் உங்கிட்ட பொய் சொன்னேன்னா.. நான் எங்கப்பனுக்குப் பொறக்கலைன்னு வைச்சிக்க..”

 

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பின்பு திடீரென்று ஆத்திரத்துடன்,

 

“ சொல்லு..கடைசியா எங்கூடயிருந்த ராத்திரியில உனக்கு என்னாச்சி. எனக்குப் பக்கத்தில படுத்திருந்தே.. நகரத்திலுள்ள முஸ்லீம்களோட வீடுகளிலிருந்து கொள்ளையடிச்சிட்டு வந்த எல்லா தங்கநகைகளையும் எனக்குப் போட்டுவிட்டே.. என் உடம்புபூரா முத்தம் கொடுத்தே.. அப்புறம்..அப்புறம்.. கடவுளுக்குத் தான் தெரியும் உனக்கு என்னாச்சின்னு.. திடீர்னு எந்திரிச்சி துணியை உடுத்திகிட்டு வெளியே போயிட்டே..”

 

என்று கேட்டாள். அதைக் கேட்டதும் ஐஷர்சிங் வெளிறிப் போனான்.

 

“ பாரு உம்முகம் எப்படி மாறிடிச்சி..” என்று சொல்லிய கல்வந்த்கவுர் பொறுமையிழந்தாள்.

 

“ ஐஷர்சியான்.. “ என்று அவள் பற்களைக் கடித்துக்கொண்டே ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி உச்சரித்தாள்.

 

“ எட்டு நாளைக்கு முன்னாடி இருந்த மாதிரி இப்ப நீ இல்லை..ஏதோ நடந்திருக்கு ”

 

ஐஷர்சிங் பதில் சொல்லவில்லை. ஆனால் அதிர்ந்து போனான். அவன் திடீரென்று கல்வந்த்கவுரை அள்ளியெடுத்து அணைத்துக் கொண்டு ஆவேசமாக முத்தமிட்டான்.

 

“ அன்பே.. நான் முன்பு எப்படியிருந்தேனோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறேன்.. இறுகத் தழுவிக்கொள்..என்னை.. உன் எலும்புகளில் கொதிக்கும் சூடு குளிரட்டும்..”

 

கல்வந்த்கவுர் அவனைத் தடுக்கவில்லை. ஆனால்,

 

“ அன்னக்கி ராத்திரி என்ன கோளாறு உனக்கு.. “ என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

 

“ ஒண்ணுமில்லை..”

 

“ ஏன் எங்கிட்ட சொல்லமாட்டேங்கிற..”

 

“ சொல்றதுக்கு ஒண்ணுமில்லை..”

 

“ ஐஷர்சியான் நீ என்கிட்ட பொய் சொன்னே..என் சவத்தை உன் கையாலயே எரிக்க வேண்டியிருக்கும்..”

 

ஐஷர்சிங் பதில் சொல்லவில்லை. அவனுடைய உதடுகளை அவளுடைய உதடுகளில் புதைத்தான். அவளுடைய மூக்குத்துவாரங்களில் அவனுடைய மீசை உரசியதால் கூச்சமேற்பட்டது. அவள் தும்மினாள். அவர்கள் குபீரென்று சிரித்தனர்.

 

ஐஷர்சிங் அவனுடைய உடைகளைக் களைய ஆரம்பித்தான். கடைக்கண்ணால் கல்வந்த்கவுரை காமத்துடன் பார்த்துக் கொண்டே,

 

“ சீட்டு விளையாடுகிற நேரமிது..”

 

அவளுடைய மேலுதட்டின் மேலே வியர்வைத்துளிகள் அரும்பின. அவள் சரசத்துடன் கண்களை உருட்டிக்கொண்டே,

 

” எங்காவது தொலைஞ்சி போ..”

 

என்றாள். ஐஷர்சிங் அவள் உதட்டைக் கிள்ளினான்.அவள் துள்ளி விழுந்தாள்.

 

“ ஐஷர்சியான் அப்படிச் செய்யாதே.. வலிக்கி..”

 

ஐஷர்சிங் அவளுடைய கீழுதட்டை உறிஞ்சத் தொடங்கினான். கல்வந்த்கவுர் உருகிப் போனாள். அவன் அவளுடைய மீதி உடைகளையும் களைந்தான்.

 

“ துருப்புச்சீட்டை இறக்கற நேரம் வந்தாச்சு..”

 

கல்வந்த்கவுரின் மேலுதடு துடிக்க ஆரம்பித்தது. அவன் அவளுடைய சட்டையை வாழைப்பழத்தை உரிப்பதைப் போல உரித்தெடுத்தான். அவளுடைய நிர்வாணமான உடலைத் தடவிச் சீராட்டினான். அவளுடைய கையில் கிள்ளினான்.

 

“ கல்வந்த் குரு மேல சத்தியமாச் சொல்றேன்.. நீ ஒரு அருஞ்சுவைப் பண்டம்..”

 

என்று அவளை முத்தமிட்டுக்கொண்டே சொன்னான். கல்வந்த்கவுர் அவன் கிள்ளிய இடத்தில் தோலைத் தடவிப்பார்த்தாள். சிவந்திருந்தது.

 

“ ஐஷர்சியான் நீ ஒரு மிருகம்..”

 

ஐஷர்சிங் அவனுடைய அடர்ந்த மீசைக்குள்ளிருந்து புன்னகைத்தான்.

 

“ அப்படின்னா இன்னக்கி ராத்திரி நிறைய மிருகத்தனத்தைப் பார்க்கலாம்..”

 

என்று சொன்னதோடு அதை நிருபிக்கவும் செய்தான். அவளுடைய கீழுதட்டைக் கடித்தான். காதுமடல்களைக் கிள்ளினான். முலைகளைப் பிசைந்தான். பளபளக்கும் அவளுடைய இடையில் சத்தம் கேட்கும்படி அடித்தான். அவளுடைய கன்னங்களில் ஈரமான பெரிய முத்தங்களைப் பதித்தான்.

 

கல்வந்த்கவுர் பெரும் நெருப்பின் மீதுள்ள கெட்டிலைப் போல உணர்ச்சியினால் துடித்தாள். ஆனால்…. ஆனால்… ஏதோ தவறு நடந்து விட்டது.ஐஷர்சிங்கின் தீவிரமான சரசசல்லாபங்களுக்குப் பின்பும் கூட காதலின் உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நெருப்பை உணர முடியவில்லை. வீழ்ந்த மல்யுத்த வீரன் எழுந்து கொள்ள முயற்சிப்பதைப் போல அவன் அவனுக்குத் தெரிந்த அத்தனை தந்திரங்களையும் உபயோகித்து அரையில் நெருப்பைப் பற்ற வைக்க முயற்சி செய்தான். ஆனால் தீப்பிடிக்கவில்லை.அவன் குளிரை உணர்ந்தான்.

 

இப்போது கல்வந்த்கவுர் சுருதி மீட்டிவிட்ட வாத்தியத்தைப் போல இருந்தாள்.

 

“ ஐஷர்சியான்” என்று மெதுவாக முணுமுணுத்தாள்.

 

“ நீ என்னைப் போதுமான அளவுக்குக் குலுக்கிவிட்டாய்.. உன் துருப்புச்சீட்டை இறக்குகிற நேரம் வந்தாச்சி..”

 

ஆனால் அவன் அடுக்கி வைத்திருந்த அத்தனை சீட்டுகளுமே கைகளிலிருந்து நழுவிக் கீழே விழுந்து விட்டதைப் போல உணர்ந்தான். தாறுமாறாய் மூச்சு விட்டுக் கொண்டு  அவளுக்கெதிரே கிடந்தான். குளிர்ந்த வியர்வைத் துளிகள் அவனுடைய புருவத்திற்கு மேலே தோன்றின. கல்வந்த்கவுர் அவனை எழுப்பக் காட்டுத்தனமான முயற்சிகளைச் செய்து பார்த்துவிட்டு முடிவில் அவளும் சோர்ந்து போனாள்.

 

கோபத்தில் படுக்கையை விட்டு துள்ளிக் குதித்தெழுந்து ஒரு துணியினால் உடம்பைப் போர்த்திக் கொண்டு,

 

“ ஐஷர்சியான், உன்னைப் பிழிந்து சக்கையாக்கிய அந்தப் பொட்டை நாயின் பெயரைச் சொல்லு..”

 

என்று கத்தினாள். ஐஷர்சிங் வெறுமனே பெருமூச்சு விட்டுக் கொண்டு படுத்துக்கிடந்தான்.

 

“ யார் அந்தப் பொட்டை நாய்.. சொல்லு..” என்று அவள் மீண்டும் கத்தினாள்.

 

“ ஒருத்தருமில்லை..கல்வந்த்..ஒருத்தருமில்லை…”

 

என்று அவன் கேட்கவே முடியாத குரலில் பதில் சொன்னான். கல்வந்த்கவுர் அவளுடைய இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு,

 

“ ஐஷர்சியான்.. நான் இந்த விஷயத்தை விடப்போறதில்லை.. தோண்டித் துருவப்போறேன்.. குருவின் புனிதப்பேரால என்மேலே சத்தியம் பண்ணு..அங்கே ஒரு பொண்ணு இருந்தாளா? “

 

என்று கேட்டவள் உடனே அவனைப் பேசவிடவில்லை.

 

“ குரு மேலே சத்தியம் செய்றதுக்கு முன்னாடி யோசிச்சிக்கோ.. நான் யாருங்கறத.. மறந்திராத.. நான்  சர்தார் நிகால்சிங்கோட பொண்ணு… உன்னைத் துண்டம் துண்டமாக்கிடுவேன்.. அங்கே ஒரு பொண்ணு இருந்தாளா? “

 

என்று கேட்டாள். அவன் ஆமாம் என்று தலையாட்டினான். அவனுடைய முகத்தில் வேதனை வெளிப்படையாகவே தெரிந்தது. பைத்தியம் பிடித்த காட்டுவிலங்கினைப் போல கல்வந்த்கவுர் ஐஷர்சிங்கினுடைய கிர்பானை எடுத்து உறையைக் கழற்றியெறிந்து விட்டு அவனுடைய கழுத்தில் வைத்து அழுத்தினான். ஆழமான காயத்திலிருந்து நீரூற்று போல ரத்தம் பீய்ச்சியடித்தது. பிறகு அவள் அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்தாள். முகத்தைப் பிறாண்டினாள். அவனைத் தொடர்ந்து அடித்துக் கீறிக் கொண்டே அவளுக்குத் தெரியாத அவளுடைய விரோதியை வைதாள்.

 

“ போதும் கல்வந்த்..போதும்..”

 

என்று ஐஷர்சிங் கெஞ்சினான். அவள் நிறுத்தினாள். அவனுடைய தாடியும், மார்பும் ரத்தத்தினால் நனைந்து விட்டது.

 

“ நீ ரெம்ப அவசரப்பட்டுட்டே.. ஆனால் இது எனக்கு வேணுந்தான்..”

 

என்று அவன் சொன்னான். ஆனால் அவள் ,

 

“ சொல்லு.. அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லு..”

 

என்று கேட்டாள். அவனுடைய வாய்க்குக்குள் ஒரு மெல்லிய கோடு போன்ற ரத்தம் ஓடியிறங்கியது. அதன் ருசியை உணர்ந்ததும் அவன் நடுநடுங்கினான்.

 

“ கல்வந்த்.. இந்தக் கிர்பானை வைத்து நான் ஆறு பேரைக் கொன்றேன்..அந்தக் கிர்பானை வைத்து.. அதை வைத்து..நீ..”

 

“ நான் கேட்டது யார் அந்தப் பொட்டைநாய்..”

 

என்று அவள் மறுபடியும் கேட்டாள்.ஐஷர்சிங்கினுடைய மங்கிய கண்கள் கணநேர உயிர்ப்பினால் ஒளி விட்டது.

 

“ தயவுசெய்து.. அவளைப் பொட்டைநாய்ன்னு சொல்லாதே..”

 

என்று அவன் மன்றாடினான்.

 

“ யார் அவள்? “ என்று மீண்டும் அவள் கத்தினாள். ஐஷர்சிங்கிற்குக் குரல் எழும்பவில்லை.

 

“ சொல்றேன்..”

 

அவனுடைய கை கொதவளையை நோக்கி விரைந்தது. பின்பு அதைப் பார்த்து தேய்ந்த புன்னகையுடன்,

 

“ என்ன பிறவி..மனுஷப்பிறவி..ஒங்காத்தாளோக்கிற பிறவி..” என்றான்.

 

” ஐஷர்சியான் என் கேள்விக்குப் பதில் சொல்லு.”

 

என்று கல்வந்த்கவுர் சொன்னாள். அவன் மிக மிக மெதுவாகப் பேச ஆரம்பித்தான். அவனுடைய முகம் முழுவதும் குளிர்ந்த வியர்வை படர்ந்திருந்தது.

 

“ அன்பே.. கல்வந்த்.. எனக்கு என்ன நடந்ததுன்னு உன்னால கொஞ்சங்கூட யோசிக்க முடியாது. அந்த நகரத்தில் முஸ்லீம் கடைகளையும் வீடுகளையும் கொள்ளையடிக்க அவர்கள் ஆரம்பித்தபோது நானும் ஒரு கும்பலோடு சேர்ந்து கொண்டேன்.. என்பங்குக்குக் கிடைச்ச பணம் நகை எல்லாத்தையும் உன்கிட்டே கொண்டுவந்து கொடுத்திட்டேன்.. ஆனா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உன்கிட்டேயிருந்து மறைச்சிட்டேன்…”

 

அவன் முனக ஆரம்பித்தான். வேதனை தாங்கமுடியாததாக இருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

 

“ ம்… சொல்லு..” என்று இரக்கமற்ற குரலில் அவள் சொன்னாள்.

 

“ நான் கதவை உடைத்து உள்ளே சென்ற வீட்டில் ஏழுபேர் இருந்தார்கள்.. ஆறுபேர் ஆண்கள்.. அவர்களை ஒவ்வொருத்தராக இந்தக் கிர்பானை வைத்துக் கொன்று விட்டேன்.. அங்கே ஒரு பொண்ணு இருந்தாள்.. அவள் அழகாக இருந்தாள்.. நான் அவளைக் கொல்லவில்லை.. அவளை நான் தூக்கிக் கொண்டு ஓடினேன்..”

 

அவள் கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

 

“ அன்பே..கல்வந்த்..என்னால அவள் எவ்வளவு அழகானவள்னு சொல்ல ஆரம்பிக்கக்கூட முடியாது.. நான் அவளுடைய கொதவளையை அறுத்திருக்க முடியும்.. ஆனால் நான் அதைச் செய்யல.. நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.. ஐஷர்சியான்.. கல்வந்த்கவுரை தினசரி முழுங்கிக் கிட்டேதானே இருக்கே.. இன்னிக்கு..இந்த அருஞ்சுவைக் கனியை ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்தா என்ன?

 

அவள் மயக்கமாயிருந்தான்னு நான் நெனச்சேன்.. என்னோட தோளில அவளைத் தூக்கிக் கொண்டு நகருக்கு வெளியே ஓடும் ஒரு வாய்க்காலுக்குக் கொண்டு போனேன்.. புதர்களுக்கு மறைவில் அவளைக் கிடத்தினேன்.. முதலில் அவளைக் கொஞ்சம் குலுக்கலாமான்னு யோசிச்சேன்.. பிறகு நேரே துருப்புச்சீட்டை அவளிடம் இறக்க வேண்டியதான்னு முடிவு செஞ்சேன்..”

 

“ அப்புறம் என்ன நடந்தது?”

 

என்று அவள் கேட்டாள்.

 

“ நான் துருப்புச்சீட்டை இறக்கினேன்.. ஆனால்.. ஆனால்..” அவனுடைய குரல் மூழ்கிப் போனது. கல்வந்த்கவுர் அவனை முரட்டுத்தனமாக உலுக்கினாள்.

 

“ என்ன நடந்தது? “

 

ஐஷர்சிங் கண்களைத் திறந்தான்.

 

“ அவள் ஏற்கனவே செத்துட்டா.. நான் தூக்கிட்டு வந்தது செத்த பொணத்தை.. குளிர்ந்த சதைப்பிண்டத்தை.. அன்பே.. உன் கையைக் கொடு..”

 

கல்வந்த்கவுர் அவளுடைய கையை அவன் உடல்மீது வைத்தாள். அது பனிக்கட்டியை விடக் குளிர்ந்து போயிருந்தது…

***