மொழிபெயர்ப்பு சிறுகதை அற்ப விஷயங்கள் ரேமாண்ட கார்வர் தமிழில் க, மோகனரங்கன்

அற்ப விஷயங்கள்

 

ரேமாண்ட கார்வர்

 

தமிழில் க, மோகனரங்கன்

 

 

 

 

 

 

 

 

 

 

அன்று பகலில் விரைவாகவே  கால நிலை மாறி விட பனி  உருகி கலங்கிய நீராக  ஆகிக் கொண்டிருந்த்து, பின்புற  வாசலை ஒட்டி தோளுயரத்திற்கு அமைந்திருந்த சிறிய ஜன்னலின் மீதிருந்து அத்தண்ணீர் சிறு தாரைகளாக விழுந்து கொண்டிருந்த்து, வெளியே இருட்டிக் கொண்டிருந்தபோது தெருவில் கார்கள் விரைந்து கொண்டிருந்தன, உள்ளேயும் இருண்டுகொண்டு வந்த்து,

அவள் கதவருகே வந்தபோது, அவன் படுக்கையறையினுள் ஒரு  சிறிய கைப் பெட்டியில் ஆடைகளை அள்ளித் திணித்துக் கொண்டிருந்தான்,

‘நீ போகப்போறத நெனச்சு  நான் ரொம்ப,,,, ரொம்ப,,, சந்தோஷப்படறேன், கேட்டியா?“ என்றாள் அவள்,

அவன் கைப்பெட்டியில் தன்  பொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தான்,

“நாய்மகனே, நீ கௌம்பறத நெனச்சு  நான் ரொம்பவுமே சந்தோஷப்படறேன்“  அவள் அழத் தொடங்கினாள்,

“நீ என்ன நிமிந்து நேராக்கூட  பாக்க மாட்ட இல்லையா?“  அப்போதுதான் படுக்கை மீதிருந்த குழந்தையின் படத்தை கவனித்தவள் அதை எடுத்துக் கொண்டாள்,

அவன் அவளை ஏறிட்டுப் பார்க்கையில் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள் திரும்பி, கூடத்துக்கு  செல்லுமுன் அவனை வெறித்தாள்,

“அதைத் திரும்பக் கொடுத்துவிடு“  என்றாள்,

உன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே போ என்றாள், அவன் பதிலெதுவும் சொல்லவில்லை, கைப்பெட்டியை மூடியவன் தன் மேலங்கியை அணிந்துகொண்டான், மின் விளக்கை அணைப்பதற்கு முன் படுக்கையறையை ஒரு முறை சுற்றி வர பார்த்தான்,  குழந்தையை அணைத்துப் பிடித்தபடி அவள் சிறிய சமையலறையின் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

எனக்கு குழந்தை வேண்டும் என்றான்,

உனக்கு என்ன பைத்தியமா  பிடிச்சிருக்கு?

இல்ல, எனக்கு குழந்தை வேண்டும், அவனுடைய பொருட்களை எடுத்துவர  நான் யாரையாவது அனுப்புவேன்,

நீ இந்த குழந்தைய தொடக்கூடாது  என்றாள்,

அந்தக் குழந்தை அழத் தொடங்க அவள் அதன் தலையைச் சுற்றிப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கினாள்,

“ஓ,,ஓ,,“ குழந்தையை சமாதானப்படுத்தினாள்,

அவன் அவளை நோக்கி வந்தான்,

“கடவுள் சத்தியமா பக்கத்துல  வராதே” சொன்னவள் சமையலறைக்குள்  ஒரு எட்டு பின்னகர்ந்தாள்,

எனக்குக் குழந்தை வேண்டும்,

இங்கிருந்து போயிடு,

அவள் திரும்பி அடுப்பிற்குப் பின்னால் இருந்த மூலையில் குழந்தையை  வைத்துக் கொள்ள முயன்றாள், ஆனால் அவன் வந்துவிட்டான், அடுப்பைத் தாண்டி குழந்தையை  இறுகப் பிடித்தான்,

பையனைத்  தந்து  விடு என்றான்,

விலகிப்போ, போயிடு அவள் அழுதாள்,

அந்தக் குழந்தை  முகம் சிவந்து கதறத் தொடங்கியது,

நடந்த தள்ளுமுள்ளுவில்  அவர்கள் அடுப்பின் பின்புறமாக மாட்டிவைத்திருந்த பூந்தொட்டியை கீழேத் தள்ளிவிட்டார்கள்,

அவன், அவளை சுவரோரம் நெருக்கித் தள்ளி அவளுடைய  பிடியைத் தளர்த்த முயன்றான், குழந்தையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு முழு பலத்தையும் பிரயோகித்துத் தள்ளினான்,

குழந்தையைக் கொடுத்துவிடு,

வேண்டாம், நீ பையனை  கஷ்டப்படுத்துகிறாய்,

நான் ஒன்றும் குழந்தையை  கஷ்டப்படுத்தல, என்றான்,

சமையலறை ஜன்னல் வழியே வெளிச்சம்  எதுவும் வரவில்லை, ஏறக்குறைய  முழுஇருட்டில் ஒரு கையால் மூடியிருந்த அவளது விரல்களை பிரிக்க முயன்றபடி மறு கையால், கத்திக் கொண்டிருந்த குழந்தையின் தோள்பட்டைக்கருகில் இறுகப் பிடித்தான்,

தன் விரல்கள் பலவந்தமாக  திறக்கப்படுவதை அவள் உணர்ந்தாள், குழந்தை அவளிடமிருந்து  பிடுங்கப் படுவதையும் உணர  முடிந்த்து,

வேண்டாம். அவள் கைகள் தளர்ந்து விழுந்தவுடன் அவள் கதறினாள்,

அவள் அதை, அக்குழந்தையை திரும்ப்ப் பெறவேண்டும், அவள் குழந்தையின் மற்றொரு தோளைப் பற்றி இழுக்க முயன்றாள், அவள் குழந்தையின் மணிக்கட்டை இறுக்கிப் பிடித்தபடி பின்பக்கமாய் சாய்ந்தாள்,

ஆனால் அவன் விட மறுத்தான், குழந்தை அவன் பிடியை விட்டு நழுவுவதை எண்ணி அதை முரட்டுத்தனமாக திரும்ப பிடித்து இழுத்தான்,

இவ்வாறாக இந்தப் பிரச்சினை  முடிவு செய்யப் பட்டது,

***

( ரேமண்ட் கார்வாரின் நேர்காணல் மலைகள் முதல் இதழில் பதிந்திருக்கிறோம். அதை வாசிக்க இங்கே சொடுக்கினால் அவரின் விரிவான நேர்காணலை வாசிக்கலாம். )

 

https://malaigal.wordpress.com/2012/05/04/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-_-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2/