பதிப்பக அலமாரி சப்த ரேகை ராணிதிலக்

பதிப்பக  அலமாரி

சப்த ரேகை

ராணிதிலக்

சென்ற நூற்றாண்டின் கடைசியில் நவீனனைப் பார்த்தேன்.

 

 

 

 

 

 

 

 

 

சென்ற நூற்றாண்டின் கடைசியில் நவீனனைப் பார்த்தேன். இதற்குமுன் நான் சந்திக்க விரும்பிய நபர்கள் இரண்டு பேர் மட்டுமே.  ஒருவர், பிரமிள். மற்றவர் நகுலன்.  கடைசி காலத்தில் வறட்டுக் கௌரவம், அகங்காரம், சண்டைச் சச்சரவு இவற்றில் உழன்றபடி வாழ்ந்த பிரமிளைச் சந்திக்க எனக்கு இஷ்டமில்லாமல் இருந்த்து.  அவரைச் சந்திப்பதிலிருந்து விலகிவிட்டேன்.  இதற்கு அடுத்தே நகுலனைப் பார்க்க விழைந்தேன்.  நகுலனைக் காண்பது என்பது என் திட்டம் அல்ல.  அகஸ்மாத்தாக அவருடைய நாவல்கள், தொடர்ச்சியாக சங்கிலிபோல் கிடைக்கத் துவங்கின, வாசிக்கமுடிந்தது. அவருடைய எழுத்தின் மீது ஒரு பித்து நிலையில் வாழ்ந்த காலம் அது.  அந்த மனோநிலையில் அவரைச் சந்திக்க ஏற்பட்ட நிர்பந்தத்தைத் திட்டம் எனலாமா? தெரியவில்லை.  சந்திக்கச் சென்றேன்.  பச்சைநிற தென்னைகள், செம்மண் நிற ஆறுகள், மஞ்சள்நிற பெண்கள் கொண்ட கேரளநிலம் எனக்கு அலுப்பூட்டக்கூடியதாக இருந்தது.  எங்கும் தெறிக்கும் பச்சைத்தன்மை எனக்கு அயர்ச்சியைத் தந்தது. எவ்விடத்திலும் ஒரு துண்டு ‘வறட்சியையும்’ காண முடியாததால் மனம் சலிப்புற்றது.  கேரளத்தின் பசுமை என்பதைக் கடந்து மனதில் நகுலனின் முகம் மட்டுமே அப்போது நிழலாடியது.   அம்பலமுக்குவில் இறங்கி, அவரின் வீட்டை அடைந்தேன்.  எனக்காகக் காத்திருந்ததுபோல, அவர் சாய்வு நாற்காலியில்  சாய்ந்திருந்தார்.  திண்ணையில் ஒரு பூனை சுருண்டிருந்தது. அப்போது அவருக்கு  மறதி கொஞ்சம் கூடியிருந்தவேளை.  என்னைப் பற்றிச் சிறிய அறிமுகத்துடன் நடுநிசி வரை பேசிக் கொண்டிருந்தேன்.

 

 

 

நகுலன்  கவிதைகளை வாசிக்கும்போது ஒருவித போதையும் சாந்தமும் கூடிவிடுகிறது.  மனதில் பதைபதைப்பும் இடைவிடாத துள்ளலும் பரவசமும் ஏற்பட்டுவிடுகிறது.  அவருடைய கவிதைகள் ஏதோ ஒன்றை உணர்த்துகின்றன.  அந்த ஏதோ ஒன்று என என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியவில்லை.  அது மனதில் கரைந்திருப்பது.  எளிமையும் இருண்மையும் ஒரு சேர அமைந்த கவிதைகள் வாசிக்க லகுவானவை என்பதுமட்டுமல்ல, நினைவில் அப்படியே பதிபவையும்கூட.  வாய்விட்டுச் சொல்லி, பகிர்ந்து, சந்தோஷம் கொள்ள வைப்பவை.  வாழ்வின் அனுபவத்திலிருந்து கிடைக்கும்  சில அபிப்ராயங்கள், மனதின் விகாரங்கள், கனவுகள் இவற்றை அதிகமாகப் பேசுகின்றன நகுலன் கவிதைகள்.  தர்க்கத்தின் பின்னணியில் அ-தர்க்கத்தைப் பேசுபவை அவை. நகுலனை வாசிப்பது என்பது மனோநிலையில் ஒருவித லயிப்பு மட்டுமல்ல, முழுமை கொள்ளாத தியானம்.  அதுவே அவரின் கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது. மனோநிலையில் செல்லும் யாத்திரையாகக் கூடும் நகுலனின் வரிகள்.  என்னைப் பொறுத்தவரை நகுலன் கவிதை, எழுத்து என்பது எல்லாம் நடந்துகொண்டிருக்கும் யாருமற்ற பிரதேசம். சஞ்சரிப்பது மட்டுமல்ல, வாழ்ந்து பார்ப்பதும் அவசியமானதும்கூட.  அப்படி வாழ்வது நகுலனின் நிழலைத் தீண்டுவதற்கான ஒரு வாய்ப்பு.

 

பல வருடங்களுக்கு முன்பாக, நானும், கவிஞர் ஸ்ரீநேசன்  உள்ளிட்ட சில கவிஞர்களும்  நகுலன் கவிதைகளைக் குறித்து விவாதித்தபடியே இருந்தோம்.  ‘நீலப் பரவசம்’ எனற் வார்த்தைக்காகவே, அவ் வனுபவத்திற்காகவே பிராந்தியின் சில முழுங்குகள் தரையில் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டன.  எங்கள் கண்முன், ‘நீலநிறக் கடல், ஒரு பூவைப்போல் விரிந்து, நடனமாடி அடங்கியது.  பல நீல நிற சர்ப்பங்களின் ஒன்று சேர்ந்த நடனம் எனலாமா, இதை? ‘ இதுவே ஒரு கவிதை தரும் இன்பம்.  தமிழ் நவீன கவிதையில் வாசிப்பவர்களுக்குப் பெரிதும் மயக்கமூட்டும் நகுலன், எப்போதும் போகத்தை அளிப்பவராகவே இருப்பவர்.   ஒரு அனுபூதி நிலையை எப்பொழுதும் கொண்டிருக்கும் பல கவிதைகள் திரும்ப திரும்ப நம்மை, லௌகீகத்தின் எல்லையைக் கடக்க செய்பவை.  பித்துநிலையும் ஏகசிந்தனையும் உடைய யாராலும் நகுலனை உணர்ந்து கொள்ளமுடியும்.  அறிவின் எல்லையிலிருந்து பைத்தியத்தின் எல்லைக்குள் நம்மை அழைத்து வருபவர் அவர்.  இன்னும் சொல்லப்போனால், ‘யார் தான் யார்?’, ‘நான் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’, ‘எனக்கு யாரும் இல்லை/ நான் கூட’ ஆகிய மூன்று வரிகளிலேயே நகுலனை முழுவதுமாக உணர்ந்து கொள்ள போதுமானவை என்று உணர்கிறேன்.  மூன்று வரிகளும் நகுலன் குறித்த தேடலுக்கான மூன்று புதிர்கள்.

நகுலனை நான் சந்தித்த கணம் ஓர் அனுபூதி தன்மைக்கானது.  அன்று மாலை சிறிது வெளிச்சமே  இருந்த்து.   ஒரு குளிர்ச்சியான  காற்று வீச, மஞ்சளானபொழுது  சாயும்வேளை.  சாய்வு நாற்காலியில் அவர்.  நான் படிக்கட்டில்.  “அச்சுதன் வந்துவிட்டானா?“ என்றார்.  எனக்கு அச்சுதன் என்பது ஒரு மனிதன் என்பதைத் தவிர்த்த வேறு எண்ணம் இல்லை.  ஆனால் அதற்கு மாறாக ஒரு மரங்கொத்தியாய் இருந்தது.  சிரித்தார்.  வாழைமரத்தின் கருஞ்சிவப்புக்குலையை அது கொத்திக் கொத்திக் கொண்டிருந்தது.  அச்சுதனுக்கும் எனக்கும் சண்டை.  இரண்ட மூன்று நாட்களாகவே அவன் என்னைப் பார்ப்பதில்லை.  அதனால் நானும் அவனைப் பார்ப்பதில்லை.   ‘அவன் என்னைப் பார்க்கிறானா?’ வினவுகிறார் நகுலன்.  நான் பார்த்தபோது அச்சுதன் நகுலனைப் பார்க்கவில்லை.  ‘அச்சுதன் பார்க்கிறானா?‘ என்ற கேள்வி எங்கள் உரையாடலில் அவ்வப்போது வந்த ஒரு வரி. இதற்கான விடை என்பது வெற்று வார்த்தை மட்டுமே.  சராலென அச்சுதன், நகுலன் அருகில வந்து உரசியபடி கடந்துவிட்டது.  நகுலன் உரக்கச் சிரித்தார்.  இதுதான் நகுலன்.

 

‘பல விஷயங்களிலிருந்து

 

விடுபட்டாலொழிய

 

காற்று  சலிப்பது

 

இலை அசைவது

 

திடீரென்று  சூரிய பிரகாசத்தில்

 

இலைகள்

 

வாடித்  தாழ்வது

 

நமக்குத்  தெரியாது’

 

ஆகிய ‘மரம்:மழை:காற்று’ கவிதையின் வரிகளே, நகுலனை அனுபவிக்க உதவும் ஒரு வாயில்.   அவரின் எழுத்தை நாம் வாசிக்கும்போது, நம்மை நாம் அறியாமல், லௌகீகத்திலிருந்து விலகி ஒருவித மாயத் தன்மைக்குள் வாழத் தொடங்குகிறோம்.  அல்லது நாம் சிலவற்றிலிருந்து விடுபட்டு நம்மைக் கண்டடைகிறோம்.  ‘அவன் எல்லைகளைக் கடந்துகொண்டிருந்தான்’ என்பதில் ‘அவன்’ என்பது நகுலன் மட்டுமல்ல, நாமும்தான்.  ஏனெனில் நகுலனை நாம் வாசிக்கும்போது, நமக்குத் தெரியாமல் நாம் நம் எல்லைகளைக் கடந்து கொண்டிருக்கிறோம்.  அங்கேதான் நவீனன் நகுலனாக, சாய்வு நாற்காலியில் சாய்ந்து, பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

 

 

{சப்த ரேகை / ராணிதிலக் / அனன்யா / தஞ்சாவூர் /  டிசம்பர் 2010 / ரூ.100/-)

 

***