கவிதையியல் கவிதை எழுதும் தருணம் சிபிச்செல்வன்

கவிதையியல்

கவிதை எழுதும் தருணம்

சிபிச்செல்வன்

 

கவிதையை எப்போது வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்பவரும், இல்லை குறிப்பிட்ட ஒரு மனநிலை வாய்க்கும் தருணங்களில் மட்டுமே எழுத முடியும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.இதில் இரண்டாவது கட்சியைச் சேர்ந்தவன் நான். கறுப்பு நாய் தொகுப்பு 1998 இல் எழுதி அதை ஒரு மாதிரி காப்பியாக எடுத்து வைத்த பிறகு  அந்தப் பத்தகம் 2002இல் புத்தகமாக வெளிவரும் வரையிலும் கவிதை எழுதுவதற்கான தருணங்களே வாய்க்கவில்லை அல்லது மனத்தடை ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே எழுதிய கவிதைகளே புத்தக வடிவம் பெற முடியாமல் இருக்கிறதே என்ற எண்ணம்கூட மனதில் தடைகளைப் போட்டிருக்கலாம். 2002 டிசம்பரில் புத்தகம் தயாராகிவிட்ட பிறகும் ,  மே 17 ஆம் தேதி வரையிலும் கவிதை எழுத முடியும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்து போன நிலை ஏற்பட்டது. சுமார் நான்காண்டுகளாகக் கவிதை எழுதும் மனநிலையே வாய்க்காததால் இந்த மனநிலை ஏற்பட்டிருக்கலாம்.

எந்தத் தடையும் உடையும் ஒரு சந்தர்ப்பம் வருமல்லவா? மே 17 ஆம் தேதி அதிகாலையில் மனம் விழித்துக்கொண்டது. இனம் தெரியாத பரபரப்பும்,மன அழுத்தமும் இருந்தது. விடியும்வரை காத்திருந்து காலை உலாவிற்காகக் கிளம்பினேன். மனதின் இறுக்கம் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது. நண்பர் அழகியசிங்கரைப் பார்ப்பதற்காக அவர் வீட்டிற்குப் போனேன். என்னைப் பார்த்ததும் என்ன ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்டார். இனந்தெரியாத மன அழுத்தத்தால் அவஸ்தையாக இருப்பதாகக் கூறினேன். இருப்பு கொள்ளாமல் தவித்தேன். அவரோடு காலை நடைப் பயணம் தொடங்கியது. இலக்கியம்,சமீபத்தில் படித்த புத்தகங்கள் எனப் பேச்சுடன் நடைஉலா தொடர்ந்தது. ஆனால் அந்தப் பேச்சு என்னை ஈர்க்கவில்லை. உரையாடலிலிருந்து என் மனம் விலகிக்கொண்டேயிருந்தது.

நடைமுடிந்து திரும்பும் வழியில் அழகியசிங்கரின் வீட்டு புத்தக அலமாரியில் நல்ல புத்தகங்களைத் தேடினேன். திலிப்குமாரின் கடவு சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. அதை எடுத்துப் பிரித்தவுடன் கடிதம் என்ற சிறுகதை வந்தது. அதை உடனே வாசிக்கத் தொடங்கினேன். அக் கதையில் ஒரு குஜராத்தி தாத்தா படுக்கையிலிருந்து எழுந்து நடமாட முடியாதவர். தன் செலவுகளுக்காக உறவினரிடம் பணம் கேட்டு கடிதம் எழுதுகிறார். சாவிற்காகக் காத்திருக்கிறார். ஆனால் கடிதம் வாங்கிப் படித்த உறவினர் எதிர்பாராத வகையில் இறந்து விடுகிறார். இதுதான் அக்கதையின் மையம். கதை சொல்லியிருந்த விதமும், கதைக்கான சூழலும்  என் மனதில் ஏற்கனவே இருந்த பரபரப்பையும், இனந்தெரியாத மன அழுத்தத்தையும் மேலும் அதிகப்படுத்தியது.

வீட்டிற்குத் திரும்பியபோது காலை ஏழே முக்கால் மணியிருக்கும்.  என் வீட்டிற்குத் திரும்பும் சாலையில் திரும்பியதும் வேகவேகமாக நடந்தேன். எதிர்ப்பட்ட பழகிய முகங்களைக் கண்டு ஒரு புன்னகையைக்கூட உதிர்க்காமல் நடையில் துரிதத்தைக் காட்டினேன். பேச்சுக் கொடுப்பது தடையாக இருக்குமோ என நினைத்தேன். என்னையும் அறியாமல் வேகத்தைத் தடைபோடும் எந்த விஷயத்தின் மீதும் ஒரு வெறுப்பு வந்தது.என் வீட்டு மாடிப்படி ஏறத் தொடங்கியபோது மேல் வீட்டிலிருந்து ஒரு பாட்டி வயோதிகத்தின் காரணமாக மெதுவாக மிக மெதுவாக இறங்கி வந்தார். அதுவரை பெரும் அவஸ்தையோடு காத்திருந்தேன்.

கொதிநிலையில் வெடிக்க தயாராக இருக்கும் பிரஷர் குக்கர் போல இருந்தேன். அறைக்குள் நுழைந்ததும் பிரஷர் வெடித்தது. பேனாவும் , பேப்பரும் கையில் பதட்டமாகத் தேடி எடுத்தேன். அவ்வளவுதான் தெரியும். நான்கு வருடங்களாகத் தடைபட்டிருந்த தருணம் இப்போது வாய்த்தது.குட்டிப் போட்ட பூனையாக அவஸ்தைப்பட்ட மனம் வெளியேற தனக்கானத் திறப்பைக் கண்டுபிடித்துவிட்டது.   எட்டு மணிக்கு எழுத ஆரம்பித்த பிறகு எழுதி முடிக்கும் வரையில் ( ஆறு கவிதைகள் ) இடம்,நேரம் எதுவும் விளங்கவில்லை. முற்றிலும் வேறான இடத்தில்,முற்றிலும் வேறு உலகத்தில் இருந்தது போலவும். ஏதோ ஒன்று என்னைப் பிடித்துஉலுக்கியதுபோலவும், என் சுயத்தின் விழிப்புநிலை மறந்திருந்ததைப் போலவும் உணர்ந்தேன்.

ஆறாவது கவிதையை எழுதிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தேன். ஒன்பதரை என்றது கடிகாரம். அலுவலகத்திற்குப் போக வேண்டிய நேரம் கடந்து விட்டதையும், உடனே அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதையும் தொடர்ந்து விழிப்புநிலை மறைந்தது.  மேலும் கவிதைகள் எழுதும் மனநிலை தொடர்ந்தது. ஆனால் அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் வேறு வழியிருக்கவில்லை. இப்பொழுது மனதின் அவஸ்தை சற்று குறைந்திருந்தது. ஆனால் முற்றிலும் அது குறைந்திருக்கவில்லை. சற்றுமுன் வரை பிடித்திருந்த ஆவியின் அழுத்தத்தின் சாயல்களின் குணங்கள் மிச்சம் மீதி என்னில் படிந்திருந்தன.

நான்கு வருங்களாக கவிதை எழுத முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அது திடீரென்று திலீப்குமாரின் கதையைப் படித்ததும் வெடித்து விட்டது. எழுதிய கவிதைகளை நண்பர்களிடம் காட்டினேன்.கவிதையைப் படித்த நண்பர்கள் கவிதைகள் ஆறும் மிக நன்றாக இருப்பதாகக் கூறினார்கள். அவர்களிடம் இந்தக் கவிதை எழுதிய தருணத்தைப் பற்றிய கதையை அப்போது நான் சொல்லவில்லை. ஆனாலும் அக்கவிதைகளின் தன்மைகளை வாசித்த அனைவரும் உணர்ந்தார்கள் என்பதை அனைவரும் நன்றாக இருப்பதாக சொன்னதிலிருந்து தெரிந்துகொண்டேன்.அந்த ஆறு கவிதைகளும் சாவைக் குறிப்பதாகவே இருந்தன. திலீப்குமாரின் மரணத்தைக் குறிக்கிற கதையைப் படித்ததாக இருந்தாலும்  , அதுவரை என் மனதில் இருந்த கவிதை உணர்வுகளைக் குத்திக் கிளறிவிட்டிருந்தது., இக்கவிதைகளைப் படித்த நண்பர்கள் அனைவரும் நான் ஏற்கனவே எழுதியிருந்த கவிதைகளின் பாணியில் இல்லாமல் இவை ஒரு தனித்த பாணியில், தனித்த வடிவில் இருப்பதாகச் சொன்னார்கள்.

ஆறு கவிதைகளும் சாவு பற்றியே இருந்தாலும், கவிதைகளில் வெளிப்பட்டிருந்த துக்கமும்,அவமானத்தின் வலியும், வேதனையும், மரணத்தை அழைக்கும் குரலையும், கவிதை எழுதிய என் என்னோடு இணைத்தே நண்பர்கள் பார்த்தார்கள். கவிதைகள் நன்றாகவும், சிறப்பாகவும் வந்திருப்பதற்காக என்னைப் பாராட்டியவர்கள்  என்னைப் பற்றிய அவர்களின் கவலைகளையும் வெளிப்படுத்தினார்கள். என் மீது அவர்களுக்கிருந்த அன்பினால் என்னை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் காட்டி கவுன்சிலிங்கிற்குப் பரிந்துரைத்தார்கள்.

கவிதைகள் எழுதுவது அடிக்கடி வாய்க்காது என்று நினைக்கிற எனக்கு இது ஒரு நல்ல தருணம். இந்த பிரணர் குக்கரின் கொதிநிலை  அடிக்கடி வாய்க்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன். கவிதைகள் எழுதுவதைவிட ஒரு நல்ல கவுன்சிலிங் எனக்கு வாய்க்காது என நம்புகிறேன். அதைவிட சிறந்த ஆலோசனையை யாரும் எனக்கு வழங்கிவிட முடியாது என நினைக்கிறேன். அந்த ஆறு கவிதைகள் எழுதிய உற்சாகத்தில் இப்போது அடிக்கடி கவிதைகள் எழுதும் மனநிலைக்குள் போகிறேன். குறிப்பாக தமிழின் மூத்த கவிஞர்கள் பலருக்கும் அந்த ஆறு கவிதைகள் பிடித்திருந்ததால் , அவர்கள் கூறிய பாராட்டுகளால் இப்போது அடிக்கடி கவிதைகள் எழுதும் தருணங்கள் வாய்த்துக் கொண்டிருக்கின்றன. கவிதை எழுதும் மனதிற்கு இதைவிட வேறு என்ன வடிகால் இருந்துவிட முடியும்.

•••