கவிதைகள் மகுடேசுவரன் கவிதைகள்

கவிதைகள் மகுடேசுவரன் கவிதைகள்

 

 

 

 

எழுத்தாளனைச் சந்தித்தல்
————————————————–
ஓர் எழுத்தாளனைச் சந்திக்க
நினைக்கிறேன்.
அவனுடைய முகவரி வேண்டும்.
யாரிடமுள்ளது ?

எழுத்தாளனின் முகவரியைத்
தேடித் துழாவுகிறேன்.

எதிர்ப்பட்டோரிடமெல்லாம்
கெஞ்சி விசாரிக்கிறேன்.

ஊரையே அறிந்த
தானி ஓட்டியர்கூட
உதடு பிதுக்குகின்றனர்.

உள்ளூர் காவல் துறைக்கு
கிரிமினல்களின் சின்ன வீடுகள்
தெரிந்திருக்கிறது.

பொதுஜனங்கள்
க்ளெர்க்குகளைக் கைகாட்டுகிறார்கள்.

வாசகனிடம்
எழுத்தாளன் முகவரியாகத் தங்குவதில்லை.

நூலகத்தில்
அவனைப் பற்றிய குறிப்பே இல்லை.

அரசுகள்
அவனை இரகசியக் கோப்புகளில்
சேகரித்திருக்கலாம்.

எழுத்தாளன்
பயணியைப்போல் அலைந்துகொண்டிருப்பவனோ !
நாடோடியாகச் சுற்றித் திரிபவனோ !
இல்லை இல்லை
எழுத்தாளன் மண்ணில் வேர்பற்றியவன்.

பேனா நிறுவனங்களுக்கு
அவன் விளம்பரத் தோற்றம் தந்ததுண்டா ?

மை தயாரிப்பாளர்கள்
அவனைக் கண்டுகொண்டதுண்டா ?

காகித ஆலைகளேனும்
அவனைக் கணக்கிலெடுத்தனவா ?

பத்திரிகை நிறுவனங்கள்
எழுத்தாளனின் முகவரிப் பட்டியல் வைத்துள்ளனவா ?

இல்லை.
எங்கும் அவன் முகவரி இல்லை !

அவனுக்கும்
மனைவி மக்கள் வீடு வாசல் உற்றார் உறவுகள்
இருக்கும்.

அவனுக்கும்
குடும்ப அட்டை, பசி, பற்றாக்குறை,
மாசக் கடைசி, கடன், கவலைகள்
மிகுந்திருக்கும்.

அவற்றோடு அவன்
கும்பலில் ஒருவனாக நின்றிருக்கிறான்.

தான் ஓர் எழுத்தாளன் என்று
எங்கும் விளம்பாமல்
என்மீது உரசிக்கொண்டே
தலைகவிழ்ந்து நடந்துபோகிறான்.

 

***