கவிதைகள் ந.பெரியசாமி கவிதைகள்

.பெரியசாமிகவிதைகள்

 

 

 

 

 
 

 

 

 

 

காகம் ஏதும் வரவில்லை
வருகையைச் சொல்லிச்செல்ல
வேண்டுதலில் விரும்பிய
வண்ணப்பூவும் விழவில்லை
நினைவில் துளிர்த்த விரலை
எக்குழந்தையும் தொட்டுணர்த்தவில்லை
பூவா தலையா பார்க்கவும் இல்லை
காசுகளைச் சுண்டி
காட்சிப் படுத்தவில்லை கனவும்
நினைவலைகளும் சீராகவே
குறி சொல்லிச் செல்லவில்லை கோடாங்கி
விக்கலும் தடுக்கலும் கூடயில்லை
திடுமென்ற உன் வருகையால்
நிலம் கரைந்து
துளிர்க்கத் துவங்கினேன்
பச்சையத்தையும் பூக்களையும்
நறுமணத்தால்
மயக்கம் கொண்டது பிரதேசமே
மதுவாகினி தேவதையாகிக் கொண்டிருந்தாள்…

*

இருளும்ஒளியும்

மரம்
தன் நிழலைக் கிடத்தி
இல்லத்தை இரண்டாகக் கிழித்தது
ஒருபுறம் வெள்ளையும்
மறுபுறம் கருமையாகவும் மாறியது
தாவினேன் கருமையின் பகுதிக்கு
அம்மணச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன் வெள்ளைப் பகுதிக்கு
வெய்யல் சுட உடல் பருத்தது
கூலிச் சீருடை அணிந்து
பிழைப்புக்குத் தயாரானேன்
மரம் தன் நிழல் சுருக்கி
இல்லம் இணைத்தது…