கவிதைகள் கருணாகரன் கவிதைகள் பல்லக்கு

கருணாகரன் கவிதைகள்

பல்லக்கு

 

 

 

 

 

 

 

 

ரஜனிகாந் முப்பது பேரை

வெழுத்து வாங்குகிறார்

சிவாஜி வெற்றிப்படமா தோல்விப்படமா

யாருக்குத் தெரியும்

பிம்பத்துக்கு வெளியே

ரஜனி

சந்நியாசியா அரசியல்வாதியா

 

யாருக்குத் தெரியும்

அவருக்கே தெரியுமா

 

 

அடையாளங்காணப்படாத பிணத்தின் அருகில்

பாணுக்கு கியூவில் நிற்கிறேன்

இலையான்கள் பிணத்திலும் மொய்க்கின்றன

என்னிலும் மொய்க்கின்றன

பாணிலும் மொய்க்கின்றன

 

தேவனே

அந்தோனியார் கோவிலில்

பின்னேரங்களில்

செபம் சொல்ல வரும்

திரேசம்மாக்கிழவி இரண்டு நாளாக வரவில்லையே

அவளுடைய பேரனை

யார் கடத்திச் சென்றது

அவள் ஏன் தேவனிடம் முறையிடவரவில்லை

கடலில்

காணாமற்போன புதல்வனை

கைவிட்டதைப்போல

இப்போதும் தேவன்

பேசாதிருந்துவிடக்கூடுமென்று நினைத்தாளா

 

2007.08.16

ஒரே நாளில் முன்னூறு ரூபாய் விலையேறியது

ஒரு லீற்றர் பெற்றோல்

அப்படியென்றால்

இப்போது என்னவிலை என்று கேட்டான்

விருந்தாளி

அவனுக்கு விலை சொல்லிக்கொண்டிருக்கும்போதே

ஏறியிருந்தது

இன்னும் நூற்றம்பது ரூபாய்

 

இதை எழுதிமுடிப்பதற்கிடையில்

எண்ணூற்றம்பது ரூபாயாகிவிட்டது

அது

 

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை

ஒரு நாளில்

இப்படி ஏறுகிறது

 

எவருடைய குருதிக்கும்

இந்த விலையில்லை

எவருடைய கண்ணீருக்கும்

இந்த மதிப்பில்லை

 

ஒரு அரேபியன் அறிவானா

தன்னுடைய நிலவூற்று

இப்படி

எல்லைக் கோடுகளைத்தாண்டி

பகிரங்கமாக விலைபோவதை

 

அகதிக்கூடாரங்களே நிரந்தரமாகிவிட்ட

பலஸ்தீனத்தில்

குண்டுகள் வெடிக்கின்றன

ஈராக்கிலும்

பாகிஸ்தானிலும்

பொலிகண்டியிலும் குஞ்சுக்குளத்திலும்

குண்டுகள் வெடிக்கின்றன

சனங்கள் கொல்லப்படுகிறார்கள்.

 

ஓலம்

குருதி கொப்புளிக்கும்

சாவோலம்

 

தலைப்புச் செய்திகள்

செய்தி விவரணங்கள்

ஆய்வுகள்

புள்ளி விவரங்கள்

குண்டு வெடிப்புகள் பற்றி

கொலைகள் பற்றி

பி.பி.ஸி, சி.என்.என், அல்ஜஸீரா மற்றும்

எல்லா அலைவரிசையிலும்

 

நெருப்பு

புகை

குருதி

கொலை

 

ஆனால் எதையும் பச்சையாகக் காட்டாதே

பச்சையாகக்  கொல்

உயிரோடு எரி

மரணத்துக்கு உயிரூட்டு

 

ஆனால் எதையும் அப்படியே காட்டாதே

 

 

பசியால் வாடுகிற குழந்தைகளைப்பற்றி

வீடில்லாமல்

தெருநீளம் அலைகின்ற மனிதர்களைப்பற்றி

எதையும் சொல்ல முடியாமல்

தொண்டைக்குழி பெருத்த

அறிஞரைப்பற்றி

யாருக்கும் தெரியவில்லை

 

அதைப்பற்றியெல்லாம் யாருக்கும் தேவையில்லை

 

சிவாஜி படத்தை பத்தாவது தடவையாக

இழுபட இழுபட

பார்த்துவிட்டு

துக்கக்கலக்கத்தோடு

பியரடிக்கப்போகிறார்கள் பள்ளிப்பிள்ளைகள்

 

துவக்கைத்தூக்கிக் கொண்டு போகிறார்கள்

சென்றிக்கு

போராளிகள்

 

சிவாஜியை

முறைபோட்டு பார்க்கிறார்கள்

படைச்சிப்பாய்கள்

 

நாங்கள் மட்டும் தலையிலடித்து

கதறியழுது

நதி பெருகுமா

கானல் தீருமா

 

00

 

 

இரத்தக் கிடங்கு

 

 

 

பெருங்கிடங்கினுள்ளே காத்திருந்தது

ரத்த நிறத்திலொரு நிழல்

 

ஆயிரமாயிரம்

தலைகளை கொண்டுபோகும்

இந்த நாட்களில்

கறுத்திருக்கும் வெயிலுக்குள்

கொப்பளிக்கிறது

இரத்தப் பெருக்கு.

 

சாவின் புன்னகையைக் கண்டேன்

 

அழிவின் காலம்

தீர்க்கதரிசிகளைக் கசையலாடித்தபின்

வெளியே துரத்துகிறது

 

முள்முடிகளின் அலங்காரம்

இதோ

இதோ

 

நெருங்கிவரும் அபாயத்தின்

கரு நிழலுள்

விருந்துக்காகச் செல்லும்

வீரர்களை விலகினேன்

 

பனை மரங்களுக்குக் கீழே

செத்துக்கிடந்தன

நாறிய பிணங்கள் நூறுக்கு மேல்

யாருடையவை

யாரறிவார்

தெரிந்த முகங்களை எப்படிவிலக்குவது

 

‘பொன்னாய் மின்னிய மண்ணில்

பூவாய் உதிர்ந்து போகிறது

துளிராயிருந்த உயிரெல்லாம்’

என்றொருத்தி பாடுகிறாள்

 

புரக்கேறிவரும் அவளுடைய பாட்டில்

தீராத சாபத்தையும்

வசையையும்

ஆற்ற முடியாக் கோவத்தையும்

இறக்கினாள்

இரத்தப் பெருக்காக.

 

 

00

 

தேவசுலோகம்

 

 

‘பிள்ளை பெறாதோரும்

பால் கொடாதோரும்

மகிழ்ந்திருக்கும் காலமிது’

என்று சொல்கிறான் தீர்க்கதரிசி

 

தீர்க்கதரிசிக்கு வழிகாட்டியானது

தேவசுலோகம்

 

அவன் விரும்பாத விருந்தில்

அவன் விருந்தாளியாக்கப்பட்டான்

 

அவர்களுடைய ஒப்புதலின்றியே

அவர்கள் விருந்தாளிகளாகவும்

பரோபகாரிகளாகவும் ஆக்கப்பட்டனர்.

 

கட்டளைகள்

கட்டளைகள்

பெருங்கை கொண்ட கட்;டளைகள்

வானத்தையும் மூடின

 

வழித்தேங்காய்

தெருப்பிள்ளையார்

அடியடா அடி

நடத்தடா நடத்து

இப்போது தெருவும் உனது

தேங்காயும் உனதே

பிள்ளையாரும் உனக்கே

அரோகரா அரோகரா

உனக்கும் அரோகரா

தேங்காய்க்கும் அரோகரா

தெருவுக்கும் அரோகரா

அரோகரா அரோகரா

 

பிள்ளையுடையோரெல்லாம்

பலிபீடத்தில்

பலிபீடமோ குருதிச் சேற்றில்

 

மயான நினைவுளோடு தெருநிறையச் சனங்கள்

வீடுகளிலும் கரு நிழலாய்

படிந்திருக்கிறது கல்லறை ஞாபகம்

 

பிள்ளை பெறாதோரும்

பிள்ளையில்லாதோரும் கூடவே

மயானக் கரையில்

மயானத்தின் நடுவில்

 

அரோகரா அரோகரா

எனக்கும் உனக்கும் எல்லோருக்கும்

அரோகரா

 

‘எல்லாக் கட்டளைகளுக்கும் ஒரு மயானமுண்டு’

எல்லா நிம்மதியின்மைக்கும்

முடிவுப்புள்ளியுண்டு

அரோகரா அரோகரா என்று யாரோ ஒருவர்

புலம்பிப்போகிறார்.

 

இது ஆற்றுமோ

காயப்பட்;ட தேசத்தின்

ஆன்மாவை

தோற்கடிக்கப்பட்ட வாழ்வின்

தீராத்துயரை

 

வேரோடுகிறது

அகதி வாழ்க்கை சொந்த நிலத்தில்

கண்ணீருக்குள்

 

எல்லாவற்றுக்கும் என்னவழி

எல்லாவற்றுக்கும் என்னவழி

 

வழியுடையோரே சொல்லுங்கள்

புலம்பல் ஒரு வழியைத் தருமெனில்

கதறலும்

மண்டியிடுதலும்

ஒரு வழியைத்தருமெனில்

மண்டியிடுங்கள்

கதறுங்கள்

புலம்புங்கள்

 

கதறவும் புலம்பவும்

மண்டியிடவும்

கொடுமை நிகழவேண்டும்

கொடுமை

மாபெரும் கொடுமை

அதுவா வேண்டும்

 

ஒளி கண்ணைக்கூசுமெனில்

இருளிலேயே இரு

இருளே

சுகமானது

இருளே

அற்புதமானது

அரோகரா அரோகரா

கொண்டாடு கொண்டாடு

அரோகராப்போட்டுக் கொண்டாடு

 

உனக்கென்று வந்த

வழியைத் தொலைத்துவிட்டு

அடிமையாகக் கொண்டாடு

அரோகரா அரோகரா

 

உன்னிடம் என்னவுண்டென்று

உனக்குத் தெரியும் நாளில்

உன்னில் வீரம் முளைக்கும்

உன்னிடம் அறிவு முளைக்கும்

அப்போது

உனது துயரெல்லாம்

சிறுதுரும்பாகிவிடும்

உன்னுடைய புலம்பல்

உன்னை அவமானப்படுத்தும்

அன்றறிவாய்

யார் உன் பகையென்றும்

யார் உன் நட்பென்றும்

 

கண்களைத்திறக்கும்போது

தெரிகிறது

சூரியோதயமும் நிறங்களும்

கண்களைத்திற

காதுகளைத்திற

அப்போது தெரியும் வழிகாட்டியின்

மகிமையும்

வழியின் புதுமையும்

 

உன்னிடமேயிருக்கிறது

உனது காலமும் உனது ஞானமும்

 

00

 

 

குழந்தை

 

 

மரத்தின் இனிய சங்கீதத்தை மிஞ்சுமோர்

கீதத்தோடு பாடுகிறது குயில்

மரம் அறியும், குயிலின் பாட்டு

இனியது, தன் கனியிலும்

கருணை மிகக் கொண்;ட கனிவிலும் மிக என்று

 

நான் கேட்டேன்

குயிலின் கீதத்தை மரம் பாடியதை

அலைந் தலைந்து

கண்கள் குயிலைத் தேடியபோதும்

தோன்றவேயில்லைக் குயில்

 

மரமே பாடியதா குயிலின் பாடலை?

 

குயிலை மறைத்த மரம்

பாடலை மறைக்க முடியாமல்

கைவிரித்துச் சிரித்த குழந்தை.

 

00