பதிப்பக அலமாரி – நற்றிணை பதிப்பகம் – சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) – கால சுப்ரமணியம்

பதிப்பகஅலமாரி

சாத்தானுக்குப் பிரார்த்தனை  விண்ணப்பங்கள் (மொழிபெயர்ப்புக்  கவிதைகள்)

கால சுப்ரமணியம்

 

 

 

 

 

 

 

 

 

 

ராபர்ட்பிரௌனிங்          

இரவுக் குறி

நரைத்த கடல்;

விரிந்த கருநீலத்தில், தனியாக

பெரிய அரைவட்ட மஞ்சள் நிலா.

கழிமுகத்தை அடைந்து

சேற்று மணலில் படகின் முகப்பைச் செலுத்தி

அதன் வேகத்தைத்  தணிக்கையில்,

தம் தூக்கங் கலைந்து  திடுக்கிட்ட சிற்றலைகள்

உக்கிரச் சுருள் அலைகளுக்குள் தாவும்.

பின்பு

மைல் நீளம் கடல் மணக்கும் வெதுவெதுப்பான  தரை;

மூன்று வயல்வெளிகளைக்  கடந்ததும் தோன்றுமொரு பண்ணை.

ஜன்னல் கண்ணாடியில்  ஒரு தட்டல்;

அவசரமாய்க் கேட்கும் சட்டென்ற உரசலில்

ஒளிபெற்ற தீக்குச்சியின் நீலச் சுடர்ப் பாய்ச்சல்

ஆனந்தமும் பயமும் கலந்து வர

ஒரு குரல்

சன்னமாய்ச் சத்தங் கொடுக்கும்.

பின், இரு இதயங்கள்

ஒன்றில் மற்றொன்று  கலந்து துடிக்கும்.

 

எட்கர் ஆலன்போ

ஹெலனுக்கு

 

அந்தப் பண்டைக்காலத்து

நிஸென் பாய்மரக்கலங்களைப்  போல்

ஹெலன்,

நீ என் மனதை மயக்குகிறாய்.

நீண்ட நெடுங்காலமாய்

அபாயக் கடல்களின்  மீது அலைந்து

சொந்தத் தாயகக் கரை  தேடி

இந்த மாட்சிமை மிகுந்த  பரிமளக் கடலில்

கலங்கித் திரிகிறேன் நாடோடியாக.

உன் பதுமராக மலர்க் கூந்தல்

உன் செவ்வியல் வதனம்

உன் அப்ஸர மூச்சு

என்னைச் சொந்த நிலத்துக்கு  அழைத்து வருகிறது –

அதுதான் அந்தக் கீர்த்தி வாய்ந்த கிரீசுக்கு,

அந்த மகத்துவம்  பெற்ற ரோமுக்கு.

ஓ, மானஸி,

புனிதப் பூமியின் அந்த ஆட்சிப் பகுதியிலிருந்து

உன் பிரகாசமான சாளர மாடத்தில்

வைடூரிய விளக்கு  கரத்துள் துளங்க,

உன்னைக் கண்டு நான் மீளவென்று

எப்படிச் சிலை மாதிரி நீ

காத்து நிற்கிறாய் பார்.

 

டோஸிமி ஹோரியுஷி

ஒருசோக நாடகம்

 

அழகான குஞ்சுகளுக்காக

முட்டைகளை அடைகாத்தபடி

அளவற்ற ஆவலோடு அந்தக் காக்கை

பலநாள் காத்திருந்திருந்திருக்கும்

அநேகமாக…

 

பனி, மழை, காற்று, பசி, களைப்பு வந்திருக்கும்

காக்கையின் உயிரைப் போக்கியிருக்கும்

அநேகமாக…

 

காட்டில் ஒருநாள்

கூட்டிலிருந்த அக்காக்கையைக்

காண நேர்ந்தது.

நுனி விரல்களால் இறகுகளைத் தொட்டேன்

சலனமற்றிருந்தது.

 

ஊளையிட்டுக் கொண்டிருந்தது  காற்று:

பைன் மரங்களுக்கிடையில்

அலைந்து கரைந்தது ஒரு  காக்கை:

என் சிரசுக்கு மேலே வானின் உயரே

பறத்தலின் கதியில்

பரவசங் கொண்டது  ஒரு கருடன்.

 

நலுங்காமல் காக்கையை வெளியிலெடுத்தேன்

அடைகாத்த முட்டைகள்  அடியிலிருந்தன

அவற்றின் நிற வித்தியாசம்

சட்டென்று உன்னை  உற்றுப் பார்க்க வைத்தது:

கோல்ப் பந்துகள்..

 

ஸாப்போ 

பாபோஸ் பெருமகளுக்குப்பிரார்த்தனை 

 

பலவண்ணத் தவிசில் அமர்ந்துள்ள

அமரத்துவம்கொண்ட அப்ரோடைட்,

ஜீயஸின் மகளே,

சூழ்ச்சிவலை பின்னுபவளே,

நான் உன்னை வேண்டுகிறேன்,

வசையாலும் தீங்காலும் என்னை

அடித்து  வீழ்த்தாதே,

ஓ, பெருமகளே, என் ஆன்மாவே,  இங்கே வா,

 

தொலைதூரம் நீ செவிமடுப்பாய்,

எப்போதாவது இன்னொரு  சமயம்

எனது குரலைக் கேட்கும்போதும்,

 

உன் பிதாவின் இருப்பிடத்திலிருந்து –

பொன்னிறத்து நீ வருவாய்

தங்க ரதத்தில் நுகம்பூட்டி

 

அடர்ந்த சிறகுகள் விர்ரிட

அழகான, வேகமான புறாக்கள்

வானுலகிலிருந்து கீழே

நடுக்காற்றைக் கடைந்துவந்து

உன்னைக் கருத்த பூமிமேல்

சடடென்று கொணர்ந்து  சேர்க்கும்

 

ஓ, புனித முழுமுதலே,  நீ

உன் அமரத்துவ முகபாவத்துடன் புன்னகைத்து

என்ன உனது துன்பம்,

எதற்காக எனக் கேட்பாய்;

இப்போது நான் கதறுகிறேன்.

 

எனது பித்து இதயத்தில்

அதிகமாய் என்ன நிகழ விரும்புகிறேன்.

“இப்போது யார் உன்னை இணங்கவைத்தது….

உன்னிடம் யார் அதைக்  கொணர்ந்தது, பேரன்பே?

யார் ஸாப்போ உன்னைக்  காயப்படுத்தியது?

 

அவள் விலகி ஓடினால், விரைவில்

பின்தொடர வருவாள்;

 

பரிசுகளை அவள் ஏற்கவில்லையென்றாலும்

அவளே தருவாள்,

அவள் இப்போது காதலிக்கவில்லை யென்றாலும்,

தன்னையே இகழ்ந்துவிட்டுக் காதலிப்பாள்.”

 

இப்போதே என்னிடம் வா,

இந்த சகிக்கமுடியாத  தொந்தரவிலிருந்து விடுவி,

எனது இதயம்

எது நடக்கவேண்டுமென விரும்புகிறதோ,

அதனை செய்துவிடு, மேலும்

நீயே எனது

போர்த்துணையாய் இரு.

 

 

சார்ல்ஸ்  போதலேர் 

மலபார் பெண்ணுக்கு

 

உனது பாதங்கள்,

உனது கைகளைப் போலவே  மெலிந்தவை.

உனது இடுப்பு,

பிரமாதமான ஒரு வெள்ளைக்காரியையும்

பொறாமையில் துவளவைக்கப்

போதுமான அளவு அகன்றுள்ளது.

தீர்க்கமுள்ள ஓவியனுக்கு,

வசீகரத்துக்கும் பிரியத்துக்கும்

உரியதாயிருக்கும்  உனது உடல்.

உனது மேனியைவிடவும்  கருமைகொண்டது,

வெல்வெட்டுப் போன்ற  உனது அகன்ற விழிகள்.

உமது கடவுள் உன்னைப்  பிறப்பித்துவிட்ட

உஷ்ணமும் நீலமும்  கொண்ட தேசத்தில்,

உன் எஜமானனின்

புகைக்குழாயைப் பற்றவைத்தல்,

பாத்திரங்களில் தண்ணீரையும்

பரிமளத் திரவியங்களையும்  நிறைத்தல்,

அவனது ஆசனத்தருகில் படையெடுக்கும்

கொசுக்களை விரட்டுதல்,

விடியலானது

சமதள மரங்களை இசைக்கச் செய்யும் வேளையில்,

கடைவீதிக்குச் சென்று

அன்னாசியும் வாழைப்பழமும் வாங்கிவருதல் –

இவைதாம் உனது வேலைகள்.

நாள் முழுக்க,

உனது வெறும் பாதங்களோடு,

உனது மூச்சுக்குக் கீழே

மறந்துபோன பழம்பாடல்களை ராகமிழுத்துக்கொண்டு,

எங்கெங்கு நீ போக  எண்ணுகிறாயோ

அங்கெல்லாம் செல்வாய்.

அந்திவேளை

தன் செக்கச் சிவந்த அங்கியுடன் இறங்கும்போது,

ரீங்கரிக்கும் சின்னஞ்சிறு  பறவைகளோடும் மலர்களோடும்,

உனது மிதக்கும்  கனவுகள்

எப்போதும் உன்னைப்போலவே

அதிநளினத்தோடு விளங்க,

உன் உடம்பை

கோரைப்பாயில் மெதுவாகக்  கிடத்துவாய்.

சந்தேஷமான குழந்தாய்,

எதற்காக நீ

கடலோடிகளின் கரங்களில்

உனது வாழ்வின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு,

துயரங்களால் நிறைந்த,

அதிக மக்கள்தொகை கொண்ட

எமது பிரான்ஸைப் பார்க்க விரும்புகிறாய்?

ஊடுருவித் தெரியும் பற்றாக்குறை உடையணிந்து,

கொடூரமான உள்ளாடை

உனது விலாக்களைச்  சிறைப்படுத்த,

பனியிலும் ஆலங்கட்டி  மழையிலும்

அங்கு நடுங்கிக்கொண்டு,

எமது சகதியுள்

உனது இரவு உணவின்

மிச்ச மீதியைப் பொறுக்கிக்கொண்டு,

உனது விநோதக் கவர்ச்சியின் வாசனையை விற்று,

உனது விழிகள் எண்ணத்துள் சோர,

உனது பிரியத்துக்குரிய புளியமரங்களுக்கு

இறுதி விடை கூறிவிட்டு,

இன்று இல்லாமல் போன

உன் தென்னைமரங்களின்

மறைந்துபோன உருவெளித்தோற்றங்களை

எமது கடுக்கும்  பனிமூட்டத்துள் தேடியபடி,

உனது கள்ளமற்ற இனிய ஓய்வுநேரத்துக்காக

ஏங்கப்போகிறாய்..

 

ஹீரா பான்சோதே 

யசோதரை

 

ஓ, யசோதரா,

வாழ்நாள் முழுதும் வேதனை செய்யும்

கூர்வலிமேவும்

கனவினைப்போன்றவள்  நீ.

உன்னை நேர்கொண்டு நோக்கும்

உந்தத் துக்கிரித்தனமும் என்னிடமில்லை.

 

நாங்கள் புத்தரின்  ஓளியில்

பிரகாசம் பெற்றோம்.

ஆனால் நீயோ

துண்டாடிய வாழ்வு கரிந்துபோக,

நீலம்பாரித்துக் கருத்துக்

கொப்பளிக்கும்வரை

இருட்டை உன் வாழ்வில் கிரகித்துக்கொண்டாய்.

 

ஓ,  யசோதரா,

எனது வாழ்க்கை ஜொலிக்கிறது

ஆனால் பயனற்றுவிட்டது.

அதைப் பார்த்து,

இளகிய வானம் ஊனது

ஆதரவுக்கு வரும்.

வேதனை கொண்ட நட்சத்திரங்கள்

கண்ணீரைச் சிந்தும்.

 

உன் ஒப்புமையற்ற  அழகினைக் கண்டு,

அந்திவெளிச்சம்

படிப்படியாக மங்குவதுபோல்

உன் பிரியத்திலிருந்து

உன்னைப் பிரித்ததை நினைத்து,

என் இதயம் உடைந்து ஏங்குகிறது.

 

உனது மௌனப் பெருமூச்சுகளைக்  கேட்டு

சொர்க்கபோகத்துக்கான உறுதியின்

சாரமின்மையை உணர்கிறேன் நான்.

ஒரு விஷயத்தை மட்டும்

எனக்குச் சொல்லிவிடு யசோதரா,

உனது சின்னக்கரங்களில் எவ்வாறு நீ

குமுறும் புயலை  அடக்கிக்கொண்டிருந்தாய்,

 

உனது வாழ்வைப் பற்றிய நினைவு

இந்தப் பூமியைக் குலுக்கும்;

கரையை எதிரிட்டு  மோதத் தமது

கொந்தளிக்கும் அலைகளை ஏவும்.

 

அந்தச் சித்தார்த்தரின்  இறுதி விடைபெறலில்

அந்த இளகிய இதழ்களின்  கடைசி முத்தத்தில்

உனது வாழ்வு நழுவியோடியதை

நீ நினைவில் கொண்டிருக்கலாம்தான்

ஆனால்,

இதயத்தை உருக்கும்  அந்த நெருப்பை,

பயத்தைத் தந்து

விழிப்புணர்வு ஊட்டும்

அந்த முத்தத்தின்  சக்தியை,

அன்பானவளே,

நீ உணர்ந்ததில்லையா?

 

நீ துயிலிருந்த  இடத்துக்குத்

தொலைவான தூரம்வரை அவர்

சென்றார் வென்றார் மின்னலாய் மின்னினார்

அவரது வெற்றி முழக்கத்தின் பாடல்களை

நீ கவனித்தக் கேட்டிருக்கும் வேளையில்

உனது பெண்மையானது  விம்மியிருக்கலாம்.

 

கணவனையும் மகனையும் இழந்த நீ

மென்மைகொண்ட வாழைமரத்தை

வேரோடுபிடுங்கி

வீசியதைப்போல நினைத்திருக்கலாம்.

ஆனால், உனது தியாகத்தின்

உன்னதக் கதையினை

வரலாறு ஏதும் பேசுவதில்லை.

 

சமாதிநிலையின் பாசாங்கு அபத்தத்தை

சித்தார்த்தர் கடந்துவந்திருந்தால்

ஒரு மாபெருங் காவியம்

உன்னைப் பற்றியும்  எழுதப்பட்டிருக்கலாம்.

சீதையையும் சாவித்திரியையும் போல

புராணங்களிலும் ஓலைச்சுவடிகளிலும்

நீ புகழ் பெற்றிருக்கலாம் –

 

ஓ, யசோதரா,

எந்த ஒரு புத்த  விகாரையிலும்

நீ காணப்படுவதே  இல்லை

இந்த அநீதிக்கு  நான் வெட்கப்படுகிறேன்,

உண்மையில் அங்கே  உனக்கு இடமேயில்லையா?

 

ஆனால்,

இரு,

வேதனையில் மேலும் மூழ்கிவிடாதே,

உனது அழகிய முகத்தை

அதோ நான் காண்கிறேன்,

சித்தார்த்தரின் மூடிய  இமைகளின்

இடையில் நீ இருக்கிறாய்,

யசோ, நீ மட்டும் இருக்கிறாய்.

..

ராபர்ட் பிரொளனிங் (Robert Browning, 1812-89) :  முக்கியமான ஆ ங்கிலக்கவி.  எட்கர் ஆலன் போ (Edgar Allen Poe, 1809-49) :  அமெரிக்கக் கவிஞர், சிறுகதை முன்னோடி. டோஸிமி ஹோரியுஷி (Toshimi Horiuchi, 1931 -) :  ஜப்பானிய கவிதைச் சங்கத்தின பொருளாளராகவும் டோக்கியோவின் கவிதை வாசிப்புக் குழுவின் ஆலோசனைக் குழு அங்கத்தினராகவும் இருந்தவர். சார்ல்ஸ் போதலேர் (Charles Baudelaire, 1821-67) :   பிரஞ்சுக்கவி / நவீத்துவத்துவக் கவிதையின் பிதாமகர். ஸாப்போ (Sappho): பண்டைய கிரேக்கத்தில், கி.மு. 6ம் நூற்றாண்டில் வாழ்ந்தவள் ஸோப்போ என்ற தன்னுணர்ச்சி கவி; ஆண்கள்மூலமே அறியப்பட்ட பழம்பெரும் உலக இலக்கியத்தில்,  ஒரேயொரு பெண்ணியக் குரல். ஹீரா பான்சோதே: மராட்டியத் தலித் கவிஞர்; பௌத்தர்.

..

சாத்தானுக்குப்  பிரார்த்தனை விண்ணப்பங்கள் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) நூலின் சில கவிதைகள்

கால சுப்ரமணியம்

பக்கம்: 96. விலை: ரூ. 70. டிசம்பர் 2011.

நற்றிணை பதிப்பகம்

எண்: 123 A, திருவல்லிக்கேணி நெடுஞ்காலை,

திருவல்லிக்கேணி, சென்னை 600 005.

Ph: 94861 77208 / 94429 56725/ 044 2498 7700

Email: natrinaippathippagam@gmail.com