பதிப்பக அலமாரி க்ரியா பதிப்பகம் பூமணியின் அஞ்ஞாடி நாவல்

பதிப்பக அலமாரி

க்ரியா பதிப்பகம்

பூமணியின்  அஞ்ஞாடி நாவல்

 

 

 

 

 

 

 

 

14. மஞ்சணத்திப் பூக்கள்

 

வீரம்மா கருப்பிக்கு முதல் பேத்தி. சொக்கம்மாளுக்கு மூத்த மகள். பிள்ளைகளை ஊட்டி வளர்த்தார்கள். தொட்டிவீட்டுக் கண்ணுக்குட்டிகள் துள்ளி விளையாடுவதைப் பார்த்து ஆண்டியின் மனசு துள்ளியது.

வீரம்மா புதுசாக “அண்ணஞ்ஞ” என்று பாசமாகக் கூப்பிடும்போதெல்லாம் சொக்கம்மாளுக்குச் சந்தோசம் தாங்காது. இதைக் கவனித்த ராக்கன் கேட்டான்.

“இதென்ன புது ஒறவாருக்கு. அப்ப நீ எனக்கு என்ன வேணும்.”

“வௌக்கமாரு வேணும். பெரிசாக் கண்டுபுடிச்சிட்டாக. புள்ள பிரியமாக் கூப்புட்டுட்டுப் போகட்டுமே.”

“சின்னப் புள்ள கூப்புடுறதுல பெரிய புள்ளைக்கு ஒரு சொகம்.”

“அப்படியே வச்சுக்கயேன்.”

பிறகு அவனே சித்தப்பனாக மாறிவிட்டான்.

வீரம்மாளும் சரி வெள்ளாடும் சரி. எந்த நேரமும் அசைபோடணும். எதையும் கழிப்பில்லாமல் தின்பாள். சின்ன மடியில் பண்டம் தொங்கிக்கொண்டேயிருக்கணும். ராத்திரி உறக்கத்தில்தான் வாய் சும்மா கிடக்கும். விடிந்தும் விடியாமல் முட்டைப் பணியாரத்தைக் கவ்விக்கொண்டு ஓடுவாள். எருமைப் பாலைக் கொப்புளித்துக்கொப்புளித்துக் குடிப்பாள். வயசுக்கு மீறின வளர்ச்சி.

அவளுக்கும் பொய்யாளிக்கும் ஏழாம் பொருத்தம். சதா சண்டைதான். அவன் ஒருவார்த்தை சொல்வான்.

“வழிய வுடு கடகாப்பொட்டி.”

அவள் பத்து வார்த்தை அடுக்குவாள்.

“வெலகிப் போடா நோஞ்சான் தேஞ்சான் சிவிஞ்சான் தேவாங்கு…”

“நீதான் அம்மி ஒரலு குலுக்க அண்டா குண்டா மரக்கா…”

சண்டை விளைந்து வழக்கு கருப்பியிடம் போகும். அவள் தீர்த்துவைக்காத வழக்கா. ரெண்டு பக்கமும் பலமான விசாரணை நடக்கும். பொறுமையாகக் கேட்டுவிட்டுப் பொய்யாளியைக் கூப்பிடுவாள்.

“கிட்ட வா நீ. ஒன்னயத் தேஞ்சான்னா சொன்னா.”

“நோஞ்சான்னும் சொன்னா.”

“நல்லாச் சாப்பிட்டுத் தாட்டிக்கமாருந்தாச் சொல்லுவாளா.”

“சொல்ல மாட்டா.”

“அப்ப என்ன செய்யணும்.”

“நல்லாச் சாப்பிடணும்.”

“இப்பயே போயிக் கஞ்சிப் பானைய உண்டுல்லன்னு பாரு.”

அதுக்குமேல் நிற்பானா. பிறகு வீரம்மா வருவாள்.

“ஒன்னய என்ன சொன்னான்.”

“ஒரலு குலுக்கன்னு.”

“ஒரலும் குலுக்கையும் ஓடுமா.”

“நிக்கும்.”

“நீ ஓடுவயா.”

“நல்லா ஓடுவென்.”

“அப்ப நீ குலுக்கயில்ல. நம்ம வீட்டு வீரம்மா… எங்க ஓடு பாப்பொம்.”

அவள் தெரு நிறையத் திங்குதிங்கென்று ஓட்டம்பிடிப்பாள். அந்த அசைவு கருப்பிக்குள் விதவிதமாக ஆட்டம்போடும்.

இனிமேல் வீரம்மாளைப் பிடிக்க முடியாது. வாயாடி முடித்து எப்போது வீடு திரும்புவாளோ. ஓயாத விளையாட்டு. தட்டாங்கல் பண்ணாங்குழி குந்தி என்று காலும் கையும் சும்மா இருக்காது. சொவட்டுப் பிள்ளைகளுடன் கும்மரிச்சம் போடுவாள்.

ஆண்டி மகளுக்குச் செய்துகொடுக்காத விளையாட்டுச் சாமான் கிடையாது. ஆசாரியிடம் சொல்லி மரத்தில் உரல் உலக்கை சுளகு பானை சட்டி அம்மி திருகை எல்லாமே வந்து இறங்கியது. விளைந்த மஞ்சணத்தி மரத்துக்காக அவன் அலைந்த அலைச்சல்தான் கொஞ்சமா. கலப்பைக்குத்திக்கு நாட்டுக்கருவலைச் சம்பாரிக்கக்கூட அப்படிக் கஷ்டப்பட்டிருக்க மாட்டான். அதுக்காகக் கருப்பி யிடம் மருந்து கேட்டான்.

“நடந்துநடந்து நாக்குத்தள்ளிப்போச்சு. கோழிச்சாறு குடிச்சாத்தான் மேலு வலி தீரும். நாளைக்கே ஒரு வெடையத் தட்டிக்குடுத்துரு.”

கருப்பி முறைத்தாள்.

 

“ஊருப்பட்ட காடெல்லாம் ஓடிஓடி வெதைக்கத் தெரியிது. புள்ளைக்காக அலஞ்சா வலிக்குதோ. கருவாட்டுச் சாறுகூடத் தர மாட்டென்.”

“இருஇரு பெறகு பேசிக்கிறென்.”

“நல்ல தட்டாங்கல்லு வேணும்னு புள்ள கேட்டு எம்புட்டு நாளாச்சு. அதப் பெறக்கீட்டுவரத் துப்பில்ல. நமக்கு வாயி மட்டும் இல்லன்னா நாயிகூடச் சீந்தாது. இண்ணைக்குக் கொண்டுவந்து குடுத்தாத்தான் வீட்ல கஞ்சி. இல்ல வண்ணாக்குடிக்குப் போயிக் கையேந்த வேண்டியதுதான்.”

“ஒனக்கு வண்ணாக்குடிக் கஞ்சின்னா அம்புட்டு எளக்காரமாப் போச்சா. அதுக்குக் குடுத்துவச்சிருக்கணும்.”

“ஆரு கண்டது. அனந்தியிட்ட வாங்கிக் குடிச்சாலும் குடிச்சிருப்ப. அவ வரட்டும் வெசாரிச்சுக்கிறென்.”

ஆண்டியின் நினைவெல்லாம் மாரி நிறைந்திருந்தான். முனங்கிக்கொண்டே நடந்தான்.

“அந்தக் கத அவளுக்கும் தெரியாது இவளுக்கும் தெரியாது.”

அவர்கள் பேச்சைக் கவனித்துக்கொண்டிருந்த ராக்கனுக்குச் சுதாரிப்பு வந்தது. உடனே ஓடைப்பக்கம் போய் வழுவழுத்த கல்லாகப் பொறுக்கி வந்தான். வீரம்மா மடிகூட்டி வாங்கிக்கொண்டாள். ஆண்டிக்கு உள்ளூரச் சந்தோசம்.

“அடபுலே தங்கச்சிமேல பாசத்தப் பாரு.”

கருப்பி பெருமையாகச் சொன்னாள்.

“அது மட்டுமா. மகளுக்கு லச்சணமான மரப்பாச்சியும் செஞ்சு கொண்டு வந்துருக்கான்.”

வடிவுக்கு மரப்பாச்சியைக் கொஞ்சி விளையாடவே சரியாக இருந்தது. அதுக்கு மஞ்சள் தேய்த்துக் குளிப்பாட்டித் துணிமணியுடுத்திப் பொட்டு வைத்துச் சீராட்டிக் குழறிக்குழறி உறக்காட்டுவாள்.

“              கண்ணே ஒறங்கு

காலுமேல படுத்தொறங்கு

பொன்னே ஒறங்கு

பூப்போல படுத்தொறங்கு.”

குழந்தை விரைவிலேயே கண்ணயர்ந்துவிடும். மெல்லத் தூக்கித் துணிப் பாயில் கிடத்தி அருகில் படுத்து அணைத்தபடி அவளும் உறங்கிவிடுவாள்.

வீரம்மா தட்டாங்கல் விளையாடும் சொகமே தனி. ராகம்போட்டுக் கல் பரத்தி விளையாட்டை ஆரம்பிப்பாள்.

“கட்டுமுட்டாங் காலெடு

கணங்காலப் பேத்தெடு

தொட்டகல்ல எடுக்காத

தொடையப் புடுங்கீருவென்

வச்சகல்ல எடுக்காத

வாரீட்டுப் போயிருவென்.”

கல்லைச் சிலுப்பும்போதும் ஏந்தும்போதும் கையசைவில் ஒரு தளுக்கு. குரங்குக்கல் விளையாட்டில் உயரப் பறக்கும் கல்லைக் கொத்திப் பிடிக்கையில் கண்கள் உருளும் அழகைப் பார்க்கப்பார்க்க மனசு கிறங்கும்.

நிலாக் காலத்தில் பூசணிப் பழம் தூக்கி விளையாடினால் அவள் கொஞ்சிக் கொஞ்சிப் பாடுவதுதான் தனித்துக் கேட்கும்.

“சித்தகத்திப் பூவே மெல்லவந்து மெல்லப்போ

செவ்வரளிப் பூவே மெல்லவந்து மெல்லப்போ

துத்திப் பூவே மெல்லவந்து மெல்லப்போ

தும்பப் பூவே மெல்லவந்து மெல்லப்போ

மஞ்சணத்திப் பூவே மெல்லவந்து மெல்லப்போ

மாதுளம் பூவே மெல்லவந்து மெல்லப்போ…”

அடுக்கடுக்காகப் பூக்களைத் தொடுத்துக்கொண்டே போவாள். ஆரவார மில்லாத ராகம் மனசைச் சுண்டியிழுக்கும்.

வீட்டுக்குள் பூரித்துக்கிடக்கும் ஆண்டியின் குரல் கருப்பியைத் தேடும்.

“ஏம்பிளி ஏம்பிளி இந்தப் புள்ள இம்புட்டுப் பூவும் எங்கருந்துதான் சம்பாரிச்சதோ.”

“அஞ்ஞாடி இப்படி மூச்சடக்கிப் படிக்காளே. ஒருநேரம்போல ஒருநேரம் இருக்குமா.”

கருப்பி விளையாட்டு நடக்கும் இடத்துக்கே போய்விடுவாள். எல்லாம்  முடியும்வரை காத்திருந்து மகளைக் கூட்டிவருவாள். அதுக்குப் பிறகுதான் வீட்டில் எல்லாருக்கும் சாப்பாடு.

விடிந்தால் வீட்டில் வீரம்மாளைப் பிடிக்க முடியாது. காளான் எடுக்கக் காடுகரைக்குக் கிளம்பிவிடுவாள். வாய்க்கால் வரப்பு ஓடைக் கரை எதையும் விட்டுவைக்காமல் அலசுவாள். எந்த இடத்தில் குடைக்காளான் கிடைக்கும் எங்கே முண்டுகாளான் கிடைக்குமென்று கணக்கு வைத்திருப்பாள். சின்ன முண்டாக இருந்தால் மறுநாள்வரை விட்டுவிடுவாள். அடுத்த நாள் மண்ணுதறி வெளியே முகங்காட்டி வெளேரென்று பூத்திருக்கும். அவளுக்குத் தவிட்டுக் காளான் பூக்கும் இடங்கூடத் தெரியும். ராத்திரி அவள் தொணதொணப்பு தாங் காது. கருப்பி பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்.

“ஏஞ்ஞ நாளைக்கு ரெம்பக் காளான் எடுத்துட்டு வருவென்.”

“ஒரு மடி கொண்டுவா தாயி.”

“நல்லா வெஞ்சனம் வச்சுக் குடுக்கணும்.”

“எஞ் செல்ல மகளுக்கு இல்லாற வெஞ்சனமா.”

“விடியக்காலம் என்னய உசுப்பிவுட்ரு.”

“அதக்காட்டி எனக்கு என்ன வேல. முத்தம் தொளிக்கயிலயே உசுப்பீறென்.”

“எல்லாருக்கும் முந்திப் போயி தூ காளான் தொணக் காளான்னு புடுங்கிப் புடுங்கி மடியில கெட்டிக்கிருவென். நீ உசுப்பிவுடலன்னா அழுவென். ஒங்கூடப் பேச மாட்டென்.”

“இண்ணைக்கு நல்லா ஒறங்குனாத்தான நாளைக்கு வெருசனா எந்திரிக் கலாம்.”

“ஆமா.”

“அப்ப ஒறங்கு.”

அவளை உறங்க வைப்பதற்குள் கருப்பி திணறிப்போவாள். தலையில் ஈர் தடவிச் சொகமேற்றிக்கொண்டே சரிப்படுத்தணும்.

“ஏஞ்ஞ காளான வேற ஆரும் எனக்கு முந்தி எடுத்துருவாகளா.”

“அது எங்கயும் ஓடிப்போகாது. அப்பனப் போயி ராத்திரி முழுக்கக் காவ லுருக்கச் சொல்றென்.”

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே படுத்திருக்கும் ஆண்டி தைரியம் சொல்வான்.

“நம்ம புள்ள பாத்துவச்சிருக்கிறத எவனும் எடுத்துட்டுப் போயிருவான் பாரு. கையி ஒடிஞ்சுபோகும். ஏம்பிளி அருவா கம்ப எடுத்துவையி. ஒரு நட சுத்திப் பாத்துட்டு வந்துறென்… நீ கவலப்படாம ஒறங்கு தாயி.”

வீரம்மாளுக்குக் காளானென்றால் உயிர். முண்டுகளைக் குச்சால் தெண்டி யெடுத்து இடுப்புத் துணியில் மண் துடைத்துக் கடலைப்பருப்பு மாதிரி மொரு மொருவென்று தின்பாள். காளான் வெஞ்சனம் வைத்தால் ருசிபார்க்கும்வரை அஞ்ஞையின் காலைச் சுற்றிச்சுற்றி வருவாள். அடுப்பில் சட்டியை எட்டிஎட்டிப் பார்ப்பாள். அஞ்ஞை குறும்பாகச் சிரிப்பாள்.

“உறியில நெய்யிருந்தா ஒறங்காதாம் பூனக்குட்டி.”

உப்புச் சாறு என்றால் சொல்லவே வேணாம். நெத்திலியும் காளானும் போட்டு பச்சைமிளகாய் வெங்காயத்துடன் வதக்கிச் சுண்டினாற்போல் சாறு வைத்துக் கொடுக்கணும். சோளக் கஞ்சியில் குழிபறித்து ஊற்றிக்கொண்டு சுடச்சுடத் தொட்டுத் தின்பாள். மசால் கூட்டிய காளான் வெஞ்சனமென்றால் அவளுக்குக் கோழிக்கறி.

ஒவ்வொரு நாள் பெரிய காளான் கிடைக்கவில்லையென்றால் மெனக் கிட்டு அலைந்து பூப்பறித்ததுபோல் தவிட்டுக் காளானைப் பொறுக்கி வருவாள். அஞ்ஞை அதையும் கைபார்த்து வதக்கிக்கொடுத்து மகள் சாப்பிடும் அழகைப் பார்த்துக்கொண்டேயிருப்பாள்.

முந்தியெல்லாம் அடிவயிற்றில் பிள்ளைத்துத்தி பூத்திருப்பதைப் பார்த்து அவள் ஆண்டியிடம் ஆசையாகச் சொல்வதுண்டு.

“ஏ இவனே நான் இனியும் புள்ளபெறுவென்.”

அவனும் அதுக்கேற்றபடி பேசுவான்.

“அதுக்கென்ன வதவதன்னு பெத்துப்போடு. அதுகளுக்கின்னு ஆட்டுக் கூடு ஒண்ணு செஞ்சு கவுத்திப்போட்ருவொம்.”

அந்த ஆசையெல்லாம் இப்போது பறந்துவிட்டது. வீரம்மா ஒருத்தியே போதும். அவள் படுத்தும் பாடு பத்துப் பிள்ளைக்குச் சமானம். அவளை மேய்த்து மேய்த்து உடம்பே இற்றுப்போனது. முன்னைப் போல் ஓடியாடித் திரிய முடிய வில்லை. கனத்த வேலை செய்ய முடியவில்லை. என்ன வேலை செய்தாலும் உடம்பில் ஒரு கோட்டை அலுப்பைச் சுமந்த மாதிரி திணறுவாள்.

“ஸ்…அஞ்ஞாடி…”

பானைசட்டி கழுவினாலும் ஏன் காதில் தூவி குடைந்தால்கூட இதே அலுப்புத்தான். பிள்ளைகளுக்குச் சோறு ஊட்டும்போது ஒரு கவளத்துக் கொருக்க “ஸ்…அஞ்ஞாடி…” கேட்கும். வீரம்மா சோற்றை விழுங்கிவிட்டு அஞ்ஞையைப் போலவே வக்கணைகாட்டுவாள். அப்போது வீடு முழுக்கச் சிரிப்பு கலகலக்கும்.

 

***

Advertisements