கவிதைகள் சூரியதாஸ் கவிதைகள்

 

சூரியதாஸ் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

மரங்களைப்போல் நிழல்களும்

ஆழ வேர்விட்டுக் கிடக்கும் அடர்வனம்

ஆயிரம் விரல்களால் வேர்களை வேர்கள்

பின்னிக்  கிளர்ச்சியூட்ட

கிளைகள் குலுங்கிச் சிரிக்கும் பூக்களாய்

இலைநுனி முத்தங்களால்

கிறங்கிச் சொக்கிய மேகங்களில் சில

எங்கள் வயலில் வந்து விழும்

பெயர் தெரியா உயிரெல்லாம்

பெருவனத்தில்  சந்ததி பெருக்கும்

நெடுநாளாய்  வசித்துவந்த நிழலொன்று

வேரோடு காணாமல்  போயிருந்தது

வனத்தில்  ஒருநாள்

அதேநாள் அதேநேரம் அதேஆண்டில்

எங்கள் ஊரின்  மழையொன்றும்

காணாமல் போயிருந்தது

குஞ்சுகளைப் பறிகொடுத்துப்

புலம்பெயர்ந்த

புள்ளினத்தின் தகவல்-

கோடரியுடன்  ஒருவன் உள்நுழைந்தபோது

அமைச்சர்  ஒருவர்

மரம்நடு விழாவில்

வார்த்தைகளை நட்டுக் கொண்டிருந்ததாய்.

*

Advertisements