கவிதைகள் கே.பாலமுருகன் கவிதைகள்

கவிதைகள் கே.பாலமுருகன் கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

கிணற்றடி  கதைகள்

1

துரத்தப்பட்ட  இரவொன்றில்

தாத்தாவும்  பாட்டியும்

கிணற்றடியிலேயே  கிடந்தார்கள்.

சுவரிலிருந்த  நகக்கீறலகளில்

அவர்களை நுகரலாம்.

தகறக்குவளையில்  மிச்சமாகியிருந்த

நீரில் சப்தமின்றி மிதந்தன

அவர்களின் தனிமை.

யாருக்கும்  கேட்காதபடிக்கு

ஒளித்துவைக்கப்பட்ட நிசப்தத்தில்

பத்திரமாக பரவிக் கொண்டிருக்கின்றன

நேற்றிரவு கிணற்றடியில்

நிகழ்ந்த  தற்கொலையின் வாசனை.

2

நீர்வாளியிலிருந்த நீரின்

அலம்பல்கூட  ஓயவில்லை

கிணற்றின் உள்சுவரில்

ஒழுகிக் கொண்டிருந்தது

மரணம்.

3

முனியாண்டி  மாமா

தொழிலில்  தோல்வியுற்ற தருணமும்

கீழ்வீட்டு  மேனஜர் மகன்

மலாய்மொழி சோதனையில் தோல்வியுற்ற  தருணமும்

ஒரே நாளில் வந்திருக்கக்கூடாது.

ஆழ்க்கிணறு  நிழலில்

இருவரும்  ஒரே மாதிரி

தெரிந்தார்கள்.

4

மரணத்தின்

நீளம் 17 அடி

அகலம் 200 செண்டி மீட்டர்.

ஒரே ஒரு கயிற்று  வாளி.

 

***

Advertisements