கவிதைகள் சுவாதி ச முகில் கவிதைகள்

கவிதை  சுவாதி ச முகில்  கவிதை

இச்சாதாரி

 

 

 

 

 

 

ரகசிய வனாந்திரங்களில் மண்டிய தாழம்புதர்கள்

மடலவிழ்க்கும் ஆளரவமற்ற பொழுதுகளில்

ஊர்ந்து வரத் துவங்குகிற அரவத்திற்குக்

கள்வத்திலூறிய பச்சைக் கண்கள்

தாழைக் கள்ளுண்ட பித்தேறி முறுக்கிய நெளியுடலமெங்கும்

முண்டிக் கிளம்பும் ப்ரக்ஞை பிணைச்சாரைக்கானது

 

பிணையலின் பேராவல் சுழன்றடிக்கும்

புலனைந்தின் ஊழிமூச்சில்

கொதியுலையின் கொந்தளிப்பு

 

உடுக்கள் சிதறுண்ட கருவிசும்பில் பரவும்

வெப்பத் தகிப்பில் பழுக்கக் காய்கிறது பௌர்ணமி

பற்றியெரிகிறது தாழங்காடு

 

கனிந்து கொண்டிருக்கும் ஏதேன் தோட்டத்துச் செங்காயில்

நஞ்சேற்றத் துவங்குகிறாள் இச்சாதாரி

 

**