கட்டுரை மலைகள் இணைய இதழ் அறிமுக விழா அனுபவத்தின்நிழல் சுகம்—————-. இளஞ்சேரல்

அனுபவத்தின்நிழல் சுகம்—————-.

இளஞ்சேரல்

( மலைகள் இணைய இதழ் அறிமுக விழா-நாள்-26-8-2012 ஞாயிறு- எஸ்.பி.நரசிம்மலுநாயுடு உயர்நிலைப்பள்ளி-கோவை)

மலைகள் இணைய இதழ் ஆசிரியர் திரு.சிபிச்செல்வன்  நிகழ்த்திய உரையிலிருந்து சில குறிப்புகள் 

தற்காலத்தில் இணைய இதழ்கள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியி்ன் பயனாக நமக்குக் கிடைத்திருக்கிறது. இணையம் மூலமாக இதழ்களையும் புத்தகங்களையும் வாசிக்கும் வசதி. ஒவ்வொரு துறைகளுக்கும் இணைய இதழ்கள் வந்து கொண்டிருக்கிறது. படைப்பிலக்கியம் சார்ந்த இதழ்களில் முக்கியமான இதழாக  -மலைகள்-கவனப்படுத்தப்படுகிற இணைய இதழாக உள்ளது குறித்து இணைய இதழின் ஆசிரியர் சிபிச்செல்வன் அறிமுகப் படுத்தி உரையாற்றினார்.

மலைகள் என்பதின் பொருள் சேலம்தான்.சேலம் என்றால்  மலைகள் சூழந்த ஊர் எனப் பொருள். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்த ஊர். சைலம்தான் மருவி சேலம் என்றானது. சுற்றிலும் மலைகள்.பகலில் மிகுந்த வெப்பம் காணப்படுவதற்கும் பிறகு மாலைப் பொழுதில் இனிய காற்று வீசுவதற்கும் இந்த மலைச்சூழல்தான் காரணம். அந்த ஞாபகமாகவே இந்தப் பெயர். ஈரோட்டில் கல்லூரியில் படிக்கும் நாட்களிலிருந்தே இலக்கியங்களின் மீது தீவிரமான நாட்டம் கொண்டேன். அதன் மூலம் சிறுபத்திரிக்கைகள்,அதன் படைப்பாளர்கள் ஆசிரியர்கள், நண்பர்களாகவும் ஆனார்கள்.

நான் முதலில் நிறைய பேருக்கு நன்றி சொல்லவேண்டும். நான் முதலில் காலச்சுவடு கண்ணனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் உலகத் தமிழ் இணைய இதழ் மற்றும் காலச்சுவடு இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றவும் இதழ் பணிகளைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கொடுத்தவர்.  இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய போது அரவிந்தன் தனது ஆழ்ந்த அனுபவத்தின் மூலமாக எனக்கு பல்வேறு இதழியல் பணிகளை அறிந்து கொள்ள உதவியிருக்கிறார். அவர் ஏற்கெனவே இந்தியா டுடே இதழில் பணிபுரிந்தவர். அவருக்கு நன்றி. உலகத்தமிழ் டாட் காமில் பணியாற்றிய போது  பல தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டததுதான் இன்று மலைகள் இணைய இதழ் நடத்த உதவுகிறது. அப்போது எனக்குக் கிடைத்த பல  படைப்பு ஆளுமைகளுடன் ஏற்பட்ட நட்பும்  இன்று மலைகள் இதழ் சிறப்பாக வரக் காரணம்.

அடுத்ததாக ஸ்ரீராம்  சிட்ஸ் சேர்மன் ஆர்.தியாகராஜன் மற்றும் ஆர்.கண்ணன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

சேலத்திலிருந்து வெளிவந்த முக்கியமான இரண்டு  சிற்றிதழ்கள்  பற்றிக் குறிப்பிட வேண்டும். ஒன்று சி.மணி நடத்திய ”நடை”மற்றொன்று –அஃ.  இதழை நடத்தியவர் பரந்தாமன். பின்னால் அவருடைய பெயரே அஃ பரந்தாமன் ஆயிற்று.

நான் முதன் முதலில் பார்த்த சிற்றிதழ் லயம் கல்லுரி நுலகத்தில் அதைக் கொண்டு வந்து அறிமுகப் படுத்தியவர் கால.சுப்பிரமணியம். 84 ல் ஒரு நாள் கோவை விஜயா பதிப்பகத்தில்  கனவு ஆசிரியர்  சுப்பிர பாரதிமணியத்தை சந்தித்தேன். அவர்களுக்கும் நன்றி. அது போலவே இந்த அமர்விற்கு வந்திருக்கின்ற பல நண்பர்களை 80களின்  நாட்களிலிருந்தே அறிவேன்.

குறிப்பாக 80 களில் கோவையிலிருந்து நடத்தப்பட்டு வந்த உயிர்மெய் இதழ்கள் பற்றியும் அறிவேன். இந்நிகழ்வுக்கு வந்திருக்கும் உயிர்மெய் ஆசிரியர்களாக இருந்த சூரியநாராயணன் மற்றும் சீனிவாசன் இருவரும் நான் அவர்கள் நடத்திய சிற்றிதழின் வாசகனா என ஆச்சர்யமாகக் கேட்டார்கள்.

மலைகள் இதழ்களுக்கான வாசகர்கள்  நான் நினைத்ததை விடவும்  உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும்  பல்லாயிரக் கணக்கில் வாசிக்கிறார்கள்.ஒவ்வொரு இதழுக்கும் வாசகர்கள்  அதிகமாகிக் கொண்டேயிருக்கிறார்கள். சிங்கப்பூர்,மலேசியா, பிரான்சு, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா, பின்லாந்து,ஹாலந்து, போலந்து, ஸ்விட்சர் லாந்து,ஆஸ்திரேலியா  போன்ற நாடுகளிலிருந்து வாசிப்பவர்களின் பட்டியல் நீள்கிறது. இவையெல்லாம் ஒரு இதழாசிரியனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கிறது.

தரமான படைப்புகளை மட்டுமே தேர்வு செய்கிறேன்.தரம் குறைந்த படைப்புகளை தயவு தாட்சண்யமில்லாமல் நிராகரிக்கிறேன். யாருடைய பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளவதில்லை. அந்தப் படைப்பு தரமானதாக இருக்க வேண்டும். அது தான் அந்தப் படைப்பு மலைகள் இதழில் பிரசுரமாவதற்கான ஒரே வழி.அது தான் மலைகள் இதழின் தரம் கூட. மலைகள் இணைய இதழாக வெளி வந்தாலும் அது சிற்றிதழ்களின் பாராம்பர்யத்தில் தொடர்ச்சியாக வெளி வருகிற இணைய இதழ். அதாவது டிஜிட்டல் லிட்டில் மேகசின்.  அதுபோலவே இதழாக்கத்திலும் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். வரும் படைப்புகளை பதிவேற்றம் செய்யும் போது அதிகமான கால அவகாசத்தை எடுத்துக்கொள்வதை பொறுமையுடனும்  நுட்பத்துடனும் கலையம்சத்துடனும் செய்யவேண்டியிருக்கிறது.. உலகத் தமிழ் இணைய இதழாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கணிணியில் நவீன தொழிற்நுட்பம் பற்றியும் சாப்ட் வேர் மற்றும் பாண்ட் எனப்படும்  தமிழ் எழுத்துருக்கள் பற்றிய விவரமும் நான் அறிந்திருந்ததால்  இவை சார்ந்த பிரச்சினைகள் வரும் போது எளிதில் கையாள முடிகிறது. என்னுடைய அனுபவம் இதழாக்கத் திற்கு உதவுகிறது.

என் மகன் அமுதராஜ் மற்றும் அவருடைய நண்பர் அடைக்கலம் இருவரும் மூன்றாம் ஆண்டு கணிணி தொழில் நுட்ப பொறியியில் படிக்கிறார்கள், அவர்கள் இருவரும்தான்  மலைகள் இதழ் ஆரம்பகட்ட வடிவமைக்கும் பணியில் உதவி செய்தார்கள் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், தகவல் தொழிற்நுட்பத்திலும் சாப்ட்வேர் வடிவமைப்பிலும் வல்லுநர்களுடன் எனக்கு இருந்த உறவும், உலகத்தமிழ் டாட் காமில்  பணியாற்றிய போது பல்வேறு இணையமாநாடுகளில்  பங்கேற்ற அனுபவமும், பல்வேறு கணிணி ஆளுமைகளை நேர்காணல் நடத்தியதும்  உதவுகிறது.

என்னுடைய நண்பர்கள் பலர்  அச்சில் ஏன் இந்த இதழையே   மாத இலக்கிய இதழாக வெளியிடக்  கூடாது என்று கேட்கிறார்கள்.  அப்படித்தயாரிக்கும் போது  மாதம் ஒரு இதழுக்கு ஐம்பதாயிரம்  செலவாகும்.. வருடத்திற்கு  ஆறு லட்ச ருபாய் செலவாகிறது. அப்படி செய்யும் போது தனிப்பட்ட முறையில் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். பிறகு சிறுபத்திரிக்கைகளுக்குரிய நிலமை போலவே மலைகள் இதழும்  நின்று போகலாம். நான் அறிந்த தொழிலதிபர்கள் கேட்டால் மறுக்கப் போவதில்லை. ஆயினும் சில சமரசங்களில் ஈடுபட வேண்டியது வரலாம். அதை நான் விரும்பவில்லை.

அப்படியெல்லாம் அச்சில் சமரசம் செய்து   துவங்கும் போது    நினைக்கும்படைப்பின் தரமும்,படைப்பிலக்கியமும்  வாசகர்களைச் சென்றடையாது  என்பதை உணர்வேன்.

நண்பர்களிடம் படைப்புகளைக்  கேட்டு காலதாமதப்படுத்துகிறவர்களும்  இருக்கிறார்கள் அதேபோலவே  எதிர்பாராத விதமாக இதழுக்குப்  படைப்புகள் அனுப்புவதிலும்  அக்கறையுடன் அனுப்புகிறர்வர்களையும்  காண்கிறேன். உதாரணமாக ஆஸ்திரேலியாவிலிருந்து  வைத்தீஸ்வரன் மெயிலில்  தொடர்பு கொண்டு இதழ் குறித்து எழுதினார். அது  மட்டுமின்றி படைப்புகளையும் அனுப்பியிருக்கிறார். சில நண்பர்கள் படைப்புகளை அனுப்பிவிட்டு பிளாக்கிலும் போடுகிறார்கள். ஒருவர் கவிதை ஒன்று அனுப்பியிருந்தார். வாசிக்கும் போதே அவை எங்கோ படித்தது போலவும் தோன்றிட அவரிடம் கேட்டேன் அவர் ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே பிரசுரம் ஆன கவிதை என்பதை. இரண்டாம் பிரசுரம் செய்வதற்காக மலைகள் இதழ் நடத்தப்படுவதில்லை. குறைந்த பட்ச நாகரீகம் வேண்டும். ஒரு இதழுக்குப் படைப்பு அனுப்பிவைக்கிறோம் அது இதுவரையிலும் எங்கும் பிரசுரம் ஆகாமல் இருக்கவேண்டும்.

புதியபடைப்பாளிக்கு படைப்பின் தரத்தில்  சற்று விதிவலக்கு.குறைந்த பட்ச தகுதியிருந்தாலே போதும். படைப்பாளி அறிமுகம் என்ற அடைமொழியுடன் வெளியிடுகிறோம். ஒரு நண்பர் கவிதை அனுப்பியிருந்தார். அதன் தரம் எனக்கு உடன்பாடில்லை. நிராகரித்தேன். அவர் போன் செய்து எனது கவிதையை ஒரு குறிப்பிட்ட இணைய இதழை குறிப்பிட்டு அதிலேயே வெளியிட்டு இருக்கிறார்கள் ஏன் நீங்கள் போடவில்லை என்கிறார். ஒரு இதழில் ஒரு கவிதை வந்திருப்பதை வைத்து மோசமான கவிதைகளை பிரசுரிக்க வேண்டும் என்பதில்லை. அப்படியென்றால் அந்த இதழுக்கு அனுப்பிடுங்கள் என்றேன்.

நானும் ஒரு வகையில் சிறுபத்தரிக்கை மரபிலிருந்து வந்தவன்தான். அவர்களுடைய சிரமங்களையும் நான் அறிவேன். என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர்களும் படைப்பாளர்களும் இன்னும் விடாப்பிடியாக அதே அளவு இலக்கியத்தரத்துடனும் நடத்துகிறார்கள். சில நண்பர்கள் இடையில் நிறுத்தியிருக்கிறார்கள். சுப்ரபாரதிமணியன் கனவு இதழை இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்திவருகிறார். சிறுபத்திரிக்கைக்குக் காலம்  என்பதெல்லாம் கிடையாது. ஆசிரியருக்கு எப்போது இரண்டாயிரமோ மூவாயிரமோ பணம் சேர்ந்தால் இதழ் வரும். யாரிடமும் பணத்திற்காகவோ விளம்பரங்களுக்காகவோ போய் நிற்கவேண்டியதில்லை.

என்னுடடைய முதல் கவிதைத்  தொகுப்பை 96 இல் வெளிவந்தது. பிற்பாடு 2003இ ல் இரண்டாவது கவிதைத்தொகுதி கறுப்புநாய்கள் வெளிவந்தது. 2003இ ல் கனவு இலக்கிய வட்டம் மற்றும்   கவிதைக்கணம் இணைந்து நடத்திய நிகழ்வுகளிலிருந்து பல கவிஞர்களை உருவாக்கினோம். அப்படி நாங்கள் உருவாக்கிய கவிஞர்கள் பலர் இந்த அமர்வில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சில பெண்கவிஞர்களும் உருவானார்கள். ஆரம்பத்தில் மிக சாதாரணமாக எழுதிக் கொண்டிருந்த கவிஞர் எனக்குத் தனிப்பட்ட முறையில் அவருடைய கவிதைகளை அனுப்பிவைத்தார். நான் சில திருத்தங்களுடன் கவிதைகளில் சில மாற்றங்கள் செய்து ஊக்கப்படுத்தினேன். பிற்பாடு தமிழின் முக்கியமான பெண்கவிஞராக அவர் மாறினார்.

அது போலவே மலைகள் இதழில் பல புதிய படைப்பாளிகளுக்கு இடம் கொடுத்து அவர்களின்     படைப்புத் திறன் மேம்பட உதவ வேண்டும் என்பது மலைகளின் நோக்கம்.           மலைகள் இதழுக்கு சூத்ரதாரி  என்ற எம்.கோபாலகிருஷ்ணன்  தனது படைப்பை அனுப்பியிருக்கிறார்.  அவர் என்னுடைய நெடுநாளைய  நெருங்கிய நண்பர். அவர்  ஜீம்பாலகரியின் சிறுகதை  மொழிபெயர்ப்பை  அனுப்பியிருந்தார். அதற்கு முன்னோட்டமாக பேஸ்புக்கில்  இந்த இதழில் இவர் எழுதுகிறார் என்று ஒரு இளம்பெண்ணின் படத்தை வெளியிட்டு இருந்தேன். பலருக்குத்தெரியவில்லை.இன்னும் சிலர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பெயர்களைக் குறிப்பட்டு அவர்களா எனக் கேட்டிருந்தார்கள்.இன்னும் சிலர் என்ன சிபி மாறிவிட்டாரா என்னாயிற்று அவருக்கு என்றெல்லாம் அலைபேசி அழைப்புகள். பிறகு ஒரு நண்பர்  கண்டுபிடித்து இது ஜும்பாலகரியாயிற்றே அவர் எழுதுகிறாரா என்றார்.

ஈரோட்டிலிருற்து நண்பர் க.மோகனரங்கன் வந்திருக்கிறார். அவர் ஒரு இலக்கிய அமர்வில் கட்டுரை வாசித்தது நினைவில் இருக்கிறது. துவக்கத்தில் பேசும் போது கவிதைகள் இப்போது திருகலான மொழியில் எழுதப்படுகிறது என்று பேசியது நினைவுக்கு வருகிறது. தற்காலத்தில் கவிதைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுவிட்டது. மிக எளிமையான வடிவத்தை எல்லோரும் கையாள்கிறார்கள். எளிமையாக எழுதுவது உண்மையிலேயே மிகவும் கடினமான விசயம். திருகலாகவும் இறுக்கமாகவும் பூடகமாகவும் எழுதிவிடலாம். எளிமையான படைப்புகளையும் மலைகள் ஊக்கவிக்கும். இலக்கியத்தரம் மிகவும் அவசியமாக இருக்கவேண்டும்.

இதழ் வடிவமைப்பிலும் படைப்புகள்  வெளியிடுவதிலும் புதிய  இலக்கிய ஆர்வமுள்ள வர்களின் தரமான  படைப்புகளை அறிமுகப்படுத்துவதும்  மலைகளின் முக்கியமான பணியாகக் கருதுகிறேன்.

இது போலத்தான் சில மாற்றங்களைச் செய்கிறோம். பிரபல என்று சில படைப்பாளிகளுக்கு எழுதுவது அவர்களை உற்சாகப் படுத்துவது மட்டுமல்ல, பல்வறு வாசகத்தன்மை கொண்டவர்களும் வாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பயண்படுத்துகிறோம். மலைகள் முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்த படைப்புகள் , மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கட்டுரைகள்  வெளியிடுவதற்காகத்தான் நடத்தப்படுகிடுகிறது. மற்றபடி நிச்சமாக வாஸ்து வராது, சமையல் குறிப்புகள் வராது. அந்த உத்திரவாதத்தைத் தருகிறேன்.

ஒருநாள் நானே அதிசயிக்கும் வண்ணம் ஒரு முறை காலச்சுவடு கண்ணன் பேசினார். இதழ்களின் தரம் மற்றும் படைப்புகள் மிகச்சிறப்பாக வந்து கொண்டிருப்பதைப் பாராட்டினார்.

மலைகளின் இதுரையிலும்  118 படைப்புகள் வெளிவந்துள்ளன. 54 கவிதைகள் வந்துள்ளது.41 கட்டுரைகள்.36 சிறுகதைகள்,மொழிபெயர்ப்புகள்  வெளியாகியுள்ளது. குறிப்பாக  எல்லோரும் படைப்புகள்  கேட்டால் கவிதைகள் அனுப்பிவைக்கவா  என்கிறார்கள். மற்ற பிரிவுகளில்  எழுதுவதற்கும் கூடுதலாக  உழைப்பதற்கு ம்யோசிக்கிறார்கள். கவிதைதானே என்று அனுப்பிவிடுகிறார்கள். மிக அதிக அளவில் கவிதைகள் வந்து குவிகிறது. அவற்றில் பல குப்பை. அவற்றிலிருந்து தான் நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்து வெளியிடுகிறேன்.

மலைகள்  பதிவேற்றம் பிரதி மாதம் 3, 18 ஆம் தேதிகளிலும் வெளியாகும். படைப்புகளை அனுப்பும் நண்பர்கள் அதற்குள்ளாக அனுப்ப வேண்டும். பதிவேற்றத்தின் போது நிகழும் தொழிற்நுட்பக் கோளாறுகளால்  பதிவேற்ற பணிகளுக்காக ஒரு முழுநாளைக் கூட செலவிட வேண்டியுள்ளது. எழுத்துருக்கள்,பக்க வடிவமைப்பு, ஓவியங்கள். புகைப்படங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தவும் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெக்கவும் நிறைய நாளையும் நேரத்தையும் செலவழிக்கிறேன். மலைகள் இதழில் வெளியாகும் படைப்புகளுக்கான படங்களை நான் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கிறேன் என்பதை ஒரு நண்பர் நம்ப மறுக்கிறார். அவை நன்றாக இருப்பது தான் அதற்கு காரணமாம்.

கடந்த இதழ்களின் வாசிப்பு அனுபவத்தை இந்த அமர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தால் மேற்கொண்டு இனி வரும் இதழ்களை சிறப்பாக வடிவமைக்கவும் உதவும். நண்பர் பெரியசாமி தன்னுடைய செல்போனிலேயே வாசித்து விட்டு அதன் மூலமாகவே பதிலும் உடனுக்குடன் அனுப்புகிறார். எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. மிகவிரைவாக வாசித்துவிட்டு அனுபவத்தையும் ஈமெயில் செய்கிறார். பெ.அய்யனார் கூட இதழின் முக்கியமான வாசகர். அவரும் என்னுடன் இதழ் வெளியானவுடன் வாசித்துவிட்டு படைப்புகள் பற்றி பேசுகிறார். பல நாடுகளிலிருந்து இதழ் வெளியானதும் வாசித்து விட்டு அலைபேசியிலும் சாட்டிங்கிலும் உரையாடுவது நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.அதே சமயம் என் பொருப்புணர்வையும் கூட்கிறது.என் கவனத்தையும் அக்கறையையும் மேலதிகமாக கோருகிறது.

நீங்கள் எதிர்வரும் மலைகள் இதழ்களை  வடிவாக்கம் மற்றும் பிற  விசயங்கள் பற்றியும் கருத்துக்களைத்  தெரிவிக்க வேண்டுகிறேன். நீங்கள் வெளிப்படையாக  கேட்பதற்குத் தயங்கினாலும்  எனக்கு மெயில் அனுப்புங்கள். பேசுங்கள். இந்த அரங்கில் இன்னும் மலைகள் இதழுக்குப் படைப்புகள் அனுப்பாத நண்பர்கள் இருக்கிறீர்கள். அதுபோல படைப்புகள் அனுப்பிய நண்பர்கள் தியாகு. மயுரா ரத்தினசாமி, எம்.கோபால கிருஷ்ணன், இசை ,ஜி.தேவி ஆகியோருடையவை  பிரசுரமாகி யுள்ளது. கால சுப்பிரமணியம் தன்னுடைய மொழிபெயர்ப்புகளை அனுப்புவார் என்று நம்புகிறேன்.. ஒரே ஒரு மிக சாதாரணமான படைப்பு சார்ந்த நிபந்தனை யென்னவென்றால் நீங்கள் வேறெதிலும் அனுப்புவது இதுவரை  பிரசுரமாகாத படைப்பாக இருக்க வேண்டும். அதுபோலவே உங்கள் பிளாக்கில் இருந்து அனுப்பாமல் புதிய படைப்பாகவும் தரமானதாகவும் இருக்கவேண்டும். ஏறக்குறைய எல்லோரும் வாசிப்பதோடு உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பீர்கள்  என நம்பகிறேன்.

• பிறகு நடந்த வாசகர்களுடனான  கலந்துரையாடலில் கடந்த  30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள  படைப்புகளின் வளர்ச்சி  தற்போதுள்ள நவீன தொழிற்நுட்பத்தால்  சாத்தியமா யிருக்கிறதா  என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்

மிகவும் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது இணைய காலச்சூழலில் நிறைய வாசிக்க இடம் கிடைத்துள்ளது. முன்பு ஒரு குறிப்பட்ட இதழ் மற்றும் இதழாளரின் படைப்புகளை வாசிக்கக் காத்திருந்தது போலில்லாமல் இப்போது  உடனே தேடிப்பிடித்து வாசிக்கலாம். ஈ புக் எனப்படும் கையடக்க  ஐபேடுகள் 5-10 ஆயிரம் ருபாய்க்கு வந்து விட்டது. நாம் பயண நேரத்தில் இபுக் டவுன்லோடு செய்து அப்படியே வாசித்துக் கொள்ளலாம். ஆயினும் தரமான படைப்புகளைத் தேடுவதில் உள்ள சிக்கலையும் கவனிக்க வேண்டும் என்றார்.

மயுரா ரத்தினசாமி “இணையத்திலேயே தொடர்ந்து மணிக்கணக்காக தொடர்ந்து வாசிக்க .ஃபாண்ட்  தடையாக சங்கடமாகவும் இருக்கிறது. சரிசெய்ய வாய்ப்பிருக்கிறதா என்றார்.

”.ஃபாண்ட்-எழுத்துருக்களை  கணிணி வல்லுநர்கள் நிறைய உருவாக்கியிருக்கிறார்கள். அவை உலக அளவில் உள்ள தமிழ் வாசகர்கள் பயண்படுத்தியும் வருகிறார்கள். முன்பு சொன்னது போல வேர்ட் பிரஸ் குறிப்பிட்ட பக்க வரைமுறைகள் வைத்திருக்கிறார்கள். அதற்குள் நம்முடைய படைப்புகளை வெளியிடவேண்டும்.

தியாகு பேசுகையி்ல் இதழாக்கம் சிறப்பாக உள்ளது. ஆனால் பக்க வாக்கியங்களில் ஆங்காங்கு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சில எழுத்துருக்களில் உள்ளது மாறி வேறு எழுத்து பதிந்துள்ளது. இது போன்றவைகளை கவனித்தால் வாசிப்பதற்கும் விடுபடலும் தவிர்க்கலாம்..

ஒரு படைப்பாளர் வேர்ட் 2003 இல் டைப் அடிக்கிறார் என்று வைத்துக் கொண்டால் என்னிடம் வேர்ட் 2010 என்று வைத்துக் கொண்டால் அவை சரியாகப் பொருந்துவதில்லை. லேஅவுட் சிக்கல் வருகிறது. அந்தப்படைப்பினை சிரமேற்கொண்டு லே அவுட் செய்கிறோம்.

அதில் உள்ள பிரச்சனை  படைப்பாளர்களின் ஃபாண்ட்  மற்றும் பக்கலேவுட் சிக்கல்  நாம் படைப்பாளியிடம் இருக்கிறவையை  வைத்துத்தான் அவரும் எழுதி டைப் செய்து அனுப்ப முடியும். படைப்பாளி அனுப்புவதே அபூர்வம்.அவரை நிர்பந்திக்க முடியாது.

இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகத்தை  அப்படியே ஸ்கேன் செய்து  பிறகு டைப் செய்யாமல்  அச்சில் கொண்டுவருகிற  சாத்தியமும் உள்ளது. அந்த  வசதியையும் விரைவில் பயண்படுத்துவோம் என்றார்.

ஜி.தேவியின் கேள்வியான  நீங்கள் தலையங்கம் எழுதலாமே  என்றார்.

எனக்குத் தலையங்கம்  எழுதுவதில் ஆர்வமில்லை. அல்லது கட்டாயமும் இல்லை.  அந்த இடத்தை யாராவது  ஒரு படைப்பாளிக்கு   ஒதுக்கலாம். அதுமட்டுமின்றி மலைகள்  என்னுடைய இதழ் அல்ல இது படைப்பாளர்களின் இதழ். நானே  இதுவரை மலைகள் இதழில் அதிகம் எழுதவில்லை. நான் எழுதுவது முக்கியமாகப் படவில்லை. நீங்கள் குறிப்பிடுபவர் பற்றி எனக்கு பெரிய மரியாதை இல்லை. அவர் எப்படிப்பட்டவர் என்ன செய்கிறார் என்பதும் தெரியும். அப்படி நடந்து கொள்வதும் எனக்கு உடன்பாடில்லை.

ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நடந்த மலைகள் பற்றிய உரை மற்றும் பங்கேற்பாளர்களுடான உரையாடல் மிக ஆரோக்கியமாக நடந்தது.

நவீன இலக்கியம்,பதிப்பு, இணைய இதழ் வளர்ச்சி, எழுத்து. பற்றிய தற்காலச்சுழல் பற்றி அரங்கில் கலந்து கொண்ட புதிய மாணவர்கள் இலக்கிய ஆர்வலர்கள் அறிய நேர்ந்தது. மாறிவரும் வாசிப்பு இதழாக்க வடிவங்களில் நமது பங்கு என்னவாக இருக்கப் போகிறது என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டிய தருணமாகவும் இருந்தது.

*

மலைகள் இணைய இதழ் அறிமுக    நிகழ்வில் கால.சுப்பிரமணியம், சுப்ரபாரதி  மணியன் அவைநாயகன், கே.ஆர்.பாபு, அருவி  அமைப்பிலிருந்து சீனிவாசன்,  சூரியநாராயணன், களம் ஆறுமுகம். நாணற்காடன், பா.ராஜா,ஜி.தேவி, இசை,இளங்கோ கிருஷ்ணன்,பொதிய வெற்பன்,வே.பாபு,அகச்சேரன், அக்னி சிவகுமார்,யோகா செந்தில்குமார், ரவீந்திரன் உள்ளிட்ட ஆளுமைகள், பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் முடிவில் பா.தியாகு நன்றி கூறினார்.

••

மலைகள் இணைய இதழில் கடந்த 8 இதழ்களில் தொடர்ந்து பங்களித்து வருகிற மூத்த படைப்பாளிகள்,இளைய படைப்பாளிகள் மற்றும் புதிய படைப்பாளிகள்  மேலும் பலவகைகளிலும் ஒத்துழைப்பு நல்கி வரும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தன்னுடைய வணக்கங்களையும் நன்றியையும் சிபிச்செல்வன் தெரிவித்தார்.

•••••

Advertisements