இசை லால்குடி ஜெயராமன் 80 அசதா

  லால்குடி ஜெயராமன் 80

அசதா

(2010-ல்திரு. லால்குடிஜெயராமன்அவர்களின் 80வதுபிறந்தநாளைமுன்னிட்டுஎழுதப்பட்டகட்டுரை)

ஓர்இசைமேதையாக:

இன்று உலகில் லால்குடி என்னும்  பெயர் இசை, வயலின் ஆகிய விஷயங்களோடு  சேர்த்து அறியப்படுகிறது என்றால் அதற்கான பெருமையனைத்தும் திரு. லால்குடி ஜெயராமன் அவர்களையே சாரும். 1930ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி பிறந்த திரு. லால்குடி ஜெயராமன் இவ்வாண்டு தமது எண்பதாவது அகவையில் கால் பதிக்கிறார். திரு. லால்குடி ஜெயராமன் இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராயரின் சிஷ்யப் பரம்பரையில் தோன்றியவர். இசைச் சூழலில் வளர்க்கப்பட்ட அவர் இசையில் வல்லவரான அவரது தந்தை திரு.கோபால ஐயரிடம் கர்னாடக இசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். திரு. லால்குடி ஜெயராமன் அவர்களால் தென்னிந்திய இசை உலகு பல வழிகளில் துலக்கமும் மேன்மையும் அடைந்தது என்றால் அது மிகையாகாது. வியக்கத் தகுந்த அவரது இசைஞானம் கர்னாடக இசை ‘சாகர’த்திற்கு ஊக்கமூட்டியது. அதன்வழி பரந்தவொரு, அர்த்தமிகு பரிமாணத்தினை இசைக்கு நிரந்தரமாக அவர் உருவாக்கியளித்தார். இசைக்கான முழுமொத்த அர்ப்பணிப்பு, கூர்த்த மதி, மேன்மையை நோக்கிச் செயல்படவும் தம் சமகாலத்தை விஞ்சவுமான திடசித்தம், நெடுங்காலமாய்க் குன்றாது தொடரும் விடாமுயற்சி இவையே திரு. லால்குடி ஜெயராமன் இந்திய மற்றும் கர்னாடக இசையுலகில் உயரிய ஓர் இடத்தை அடைய உதவியவை.

ஒருகலைஞராக:

வயலின்  மீதான அவரது பிசகற்ற  ஆளுமை, வசீகரிக்கக்கூடியதான  ஆழ்ந்த ஞானமிக்க பாணி, இசையின் அனைத்துக் கூறுகள் மீதுமான மேதமை ஆகியவை இசை வாழ்வின் ஆரம்பத்திலேயே அவரை ஒப்புயர்வற்ற இசைக் கலைஞராக்கின. பலரும் தங்கள் கச்சேரிகளில் பக்கவாத்தியம் இசைக்க லால்குடி அவர்களையே தேர்வு செய்தனர்.ஆகவே முடிகொண்டான் வெங்கட்ராம ஜயர், முசிறி, அரியக்குடி, செம்மங்குடி, மதுரை மணி அய்யர், ஜி.என். பாலசுப்ரமணியம், ஆலத்தூர் சகோதரர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களோடு அவர் கச்சேரிகள் செய்தார் என்பதொன்றும் வியப்புகுரியதல்ல. இசைக்கலைஞனுக்கான நுண்மான் நுழைபுலமும், கச்சேரி செய்பவரின் இசைப்போக்கினை முன்னறியும் திறனும் கொண்டு ஒரு பக்கவாத்தியக் கலைஞராக தமது அழியா முத்திரையைப் பதித்தார். இருப்பினும் ஒவ்வொரு முறையும் கச்சேரி செய்பவரை தான் விஞ்சிவிடாதபடி பார்த்துக் கொண்டார்.இவ்வாறு ஒரு பக்கவாத்தியக் கலைஞராக புதியதொரு கச்சேரி தர்மத்தை அவர் வகுத்தளித்தார்.

ஓர்இசை வல்லுனராக:

திரு. லால்குடி ஜெயராமன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிக் கச்சேரிகளை நிகழ்த்தி உலகெங்கும் தனது தனித்த வயலின் இசையினை நீக்கமற நிறைந்திருக்கச் செய்திருக்கிறார். அதோடு ‘லால்குடி பாணி’ என அறியப்படும் தனது தனித்துவமான, ஒப்பற்ற இசைப் பாணியையும் உருவாக்கித் தந்திருக்கிறார். ‘பாடும் வயலின்’ எனப்படும் அவரது வயலின் உள் இழைந்த பாவம் மற்றும் உணர்ச்சிகளுடன் வார்த்தைகளுக்கு உயிரூட்டி, வாய்ப் பாட்டினை அப்படியே செவிக்குத் தரவல்லது. அவரது வார்த்தைகளில் சொன்னால் இசையை வழங்கும்போது முழுக்க முழுக்க ஒருவிதப் பேருவகையிலும், கலையில் மூழ்கியிருக்கும்போது மெய்மறந்தும் இருப்பதுதான் அவரது கச்சேரிகளை தெய்வீக அனுபவமாக்குகின்றன. கற்பனைமிகு ராக ஆலாபனைகள், பாவம் கூடிய இசைவரிகளுடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இசைக்கப்படும் கிருதிகள், லயத்தினை தன் கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகியவற்றால் லால்குடி அவர்களின் இசை மேன்மைமிக்கவொன்றாக மதிக்கப்படுகிறது.
அவரதுபாணி

திரு. லால்குடி ஜெயராமன் கர்னாடக இசை உலகுக்கு லால்குடி பாணி என்ற ஒப்பற்ற இசைப் பாணியை வழங்கியிருக்கிறார். அவரது தன்னிகரற்ற இசைக்கோலங்கள், ஆயிரக்கணக்கான நெஞ்சையுருக்கும் கச்சேரிகள் யாவும் இன்னும் எண்ணற்ற தலைமுறைகளுக்கு இசையுலகில் கோலோச்சியபடி இருக்கும்.

ஒருஇசைஞராக:

லால்குடி  ஜெயராமன் அவர்கள் இசையுலகுக்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புகளில் ஒன்று தென்னிந்தியக் கர்னாடக இசையையும் அதன் வழி வயலினையும் மேற்கத்திய நாடுகளில் பிரபலப்படுத்தியதாகும். ரஷ்யாவில் நடந்த ‘இந்திய சர்வதேச இசை விழா’( India International Festival), அமெரிக்கா மற்றும் லண்டனில் நடந்த ‘இந்தியா விழா’(Festival of India) ஆகியவற்றில் பங்கேற்று இவர் இசை வழங்கியது இங்கு குறிப்பிடத் தகுந்தது. 1965 ம் ஆண்டு நடந்த எடின்பர்க் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் அவர்களின் வயலின் இசையையும் அவரது வாசிக்கும் திறனையும் கண்டு வியந்த புகழ்பெற்ற வயலின் இஞைக் கலைஞர் எஹுத் மெனுஹின் அவர்கள் லால்குடி அவர்களுக்கு இத்தாலிய வயலின் ஒன்றினைப் பரிசளித்தார். லால்குடி அவர்கள் சிங்கப்பூர், மலேசியா, மணிலா மற்றும் கிழக்கு ஜரோப்பிய நாடுகள் பலவற்றிலும் எண்ணற்ற கச்சேரிகள் செய்துள்ளார். பாக்காத்திலுள்ள ‘சர்வதேச இசைக் கழகம்’ (International Music Council), ‘ஆசிய பசிபிக் இசை மேடை’ (Asian Pacific Music Rostrum), ஈராக் ஒலிபரப்பு ஸ்தாபனம் ஆகியவற்றில் தமது இசையை அவர் சமர்ப்பித்துள்ளார். 1979ம் ஆண்டு 77 போட்டியாளர்களில் முதலாவதாக அவரது இசை தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் அவர் வழங்கிய ‘ஜூகல்பந்தி’ கச்சேரிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. லால்குடி உருவாக்கிய ‘ஜெய ஜெய தேவி’ என்ற நாட்டிய நாடகம் 1994ல் அமெரிக்காவின் க்ளீவ்லேண்டில் அரங்கேற்றப்பட்டது. பிறகு அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் இந்நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது.

ஓர்இசையமைப்பாளராக:

ஓர் இசையமைப்பளராக  லால்குடி அவர்களது பரிமாணம் மிக முக்கியமானது. இந்தப் பரிமாணத்தில் கிட்டத்தட்ட  சரஸ்வதியின் மறுவடிவாகவே  அவர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 26 வயது இளைஞராக முதன் முதலில் ‘தில்லானா’வை உருவாக்கியதிலிருந்து, சமீபத்தில்(ஜனவரி 2009) ராகம் ஹிந்தோளம் வாஸந்தத்தில் அவர் அமைத்து அவரது பிள்ளைகளும் பிரதம சிஷ்யர்களுமான லால்குடி GJR கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி ஆகியோரால் இசைக்கப்பட்ட தில்லானாக்கள் வரை லால்குடியின் இசைப்பெருக்கு தொடர்ந்து தில்லானாக்கள், வர்ணங்கள், கிருதிகள் என பல ஆண்டுகாளகப் பாய்ந்தோடியபடியே இருக்கிறது. ‘ஒரு கலைஞன் தனது சமகாலத்தை விஞ்சியவனாகவோ அல்லது அதற்குப் பிந்தையவனாகவோ இருக்கிறான்’ என்றார் ஜார்ஜ் மூர். இதில் லால்குடி முதல் வகையைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு அவர் உருவாக்கிய இசைக்கோலங்கள் அபூர்வமான அவரது ஆழ்ந்த இசை ஞானத்துக்குச் சான்றாக விளங்குபவை. கால ஓட்டத்தினை மீறி இன்றும் அவை வாசிப்பவரையும் கேட்பவரையும் இசையின்பத்தில் ஆழ்த்துவனவாக இருக்கின்றன.

ஒருகுருவாக:

ஒரு குருவாக  அவர் தமது நோக்கத்தில் முழு அர்ப்ணிப்புள்ளவராக இருந்தார். நயந்தும் புகழ்ந்தும் வேலைவாங்குபவர் தம் சிஷ்யர்களின் உச்சபட்ச திறமையை வெளிக்கொணர கடுமையான ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் தயங்கமாட்டார். தமது பரந்த  இசையறிவை மற்ற இசைக்கலைஞர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயங்காத பெருந்தன்மையுடையவர். அவர் வாசிப்பதைக் கண்டே பலர் வயலினும் கர்னாடக இசையும் கற்க உந்தப்பட்டனர் என்பது யதார்த்தம். தொழில்முறைக் கலைஞராக தமது தொழிலின்மீது ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மிக்கவர். அவரது இசை வாழ்வு பல தலைமுறைகள் அளவுக்குப் பரந்ததாக  இருந்த போதும் தமது மனநிலையினை எப்போதும் தற்காலத்தோடு ஒத்திசைவுடன் வைத்திருப்பவர்.

விருதுகளும்அங்கீகாரங்களும்:

சிறப்பு வாழ்நாள் சாதனை விருது- மியூசிக் அகாடமி, சென்னை-2008.

சங்கீத  சுரபி-2008.

சிறப்பு வாழ்நாள் சாதனை விருது, கர்னாடிகா-2008.

ஸ்ரீ  சண்முகானந்தா உயர் விருது-2008.

ஸ்வாமா  ஜெயந்தி விருது- கிருஷ்ண  கான சபா- 2004.

லலிதா லய கம்பீரர்- சின்மயா மிஷன், போஸ்டன்-2003.

சௌடய்யா பிரசாஸ்தி, கன்னட & கலாச்சாரத்துறை, கர்நாடகா-2003.

பத்மபூஷன்-2001.

பத்மஸ்ரீ-1972.

விஷ்வப்ரியா சங்கீத பூபாலி, மகராஜபுரம் விஸ்வநாத ஜயர் அறக்கட்டளை-2003.

பாரத  ஜோதி, பாரதீய வித்யாபவன், நியூயார்க்-1999.

சங்கீத  கலா ரத்னா-1997.

கௌரவக்  குடியுரிமை, மேரிலேண்ட், அமெரிக்கா-1994.

சௌடய்யா நினைவு தேசிய விருது,

சங்கீத  நாடக அகாடமி விருது-1979.

தமிழக அரசின் அவைக் கலைஞர்-1979

சங்கீத  சூடாமணி, இசை சபாக்கள் கூட்டமைப்பு, சென்னை          (1971 & 1972)

வாத்ய சங்கீத கலாரத்னா, பாரதி சங்கம், நியூயார்க்.

நாத வித்யா ரத்னகரா, கிழக்கு மேற்கு பரிமாற்றம் (East West Exchange), நியூயார்க்.

நாத வித்யா திலகம்- இசை அன்பர்கள்  சங்கம், லால்குடி-1963.

 

(லால்குடி  ஜெயராமன் பற்றி நான்  ஆங்கிலத்தில் எழுதிய விரிவான  கட்டுரை இங்கு: http://www.mugaiyur.blogspot.in/2012/08/sri-lalgudi-g-jayaraman-violin-virtuoso_28.html)

***