கவிதைகள் கோசின்ரா கவிதைகள்

கோசின்ரா  கவிதைகள்

 

 

*

 

 

 

இந்த முறையும் உன் காதல்

என்னுடலை புதிதாக மொழிபெயர்த்து தருகிறது

ஒவ்வொரு மொழிபெயர்ப்பும்

புதிய மலைகளையும் சிகரங்களையும் கொண்டு வருகிறது

கண்களின் வெளிச்சம் சிகரத்திற்க்கு

இதுவரை போகாத தடங்களில்  அழைத்துச் செல்கிறது

தோழமையின் கரங்கள்

காதலின் கரங்களாக மாறும்கணம்

தன் மொழியையும் உதடுகளையும்  மாற்றிக்கொள்கிறது

அதன் உச்சரிப்புகள் புதிய  ராகததை இசைக்கின்றன

உடல் காதலின் நிலமாகும்போது

விரல்கள் புதிய விதைகளை  விதைக்கின்றன

அத்தனை விதைகளும் நொடியில்

மலர்களை மலரச்செய்கின்றன

உடல் நிலத்தில் ஈசல் நதிகள் மீன் களைப் போல் நீந்துகின்றன

அவைகள் மெல்ல எரிமலைகளை  எழுப்புகின்றன

உடல்கள்  நெருப்பின் ஆடையை அணிந்து கொள்கின்றன

சற்று நேரத்திற்கு பிறகு

உடல் மணல்வெளி போல கிடக்கிறது

அகவெளி நண்டுகள் வளைக்குள்ளிருந்து வெளிவருகின்றன

உடலிருந்து கீழே விழுந்த  நட்சத்திரங்களை பொறுக்குவதற்கு

 

*

 

 

நதியில் பிணமொன்று மிதந்து  செல்கிறது

மரங்கள் ஆர்ப்பரிக்கின்றன

கிளைகள் கைகளை நீட்டுகிறது

மாயாவியின் கைகளைப் போல் அது நீளமாகவில்லை

பறவைகள் பேசிக்கொள்கின்றன

அது பெண்ணின் பிணமென்று

அவள் இழுத்துக் கட்டிய சேலைக்குள்

ஒரு  குழந்தையின் சடலமும்

இருக்கிறதென்று சொல்லிச் செல்கிறது அலைகள்

வெளிச்சம் வடிந்துவிட்டது

பிணங்களைத் தேடித் யாரும் வரவில்லை

அல்லது வேறெங்காவது தேடிக்கொண்டிருக்கலாம்

நதிகள் பிணம் தூக்கிகளல்ல

கரையொதுக்கிவிட்டது தன்  மேலிருந்த உடல்களை

இருட்டின் புதர்களில் கிடக்கிறார்கள் தாயும் சேயும்

கரையேற்றத் தெரியாமல் தவிக்கிறது மின்மினிகள்

கருமேகங்கள் ஒன்று கூடின  மழையின் அஞ்சலி

ஆதரவற்று சாவதற்கு

நிறைய வழிகளை வைத்திருக்கிறது தேசம்

எல்லா அதிகாரங்களும்

சாவின் போர்வையை

சுலபமாக போர்த்தி விடுகிறது  ஏழைகளின் மீது

செய்தி வருகிறது தானியக்கிடங்கில் கிடக்கும்

இரண்டு லட்சம் டண் மூட்டைகளின்  மீது

விளையாடுகின்றன காளான்  பூஞ்சைகள்

எலிகள் மழை வெயில் காற்று

பிச்சையெடுக்க கற்றுக்  கொள்ளாமல்

குழந்தயை வெகுதூரம் கூட்டிச் சென்று

தற்கொலை செய்துக் கொள்கிறவளை எதுவும் கேட்கவில்லை

தானியக் கிடங்குகளோ அரசாங்கமோ வழிப்போக்கர்களோ.

*

என்னுடைய மதம்

என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறது

புலியைக் கண்டால் பயந்தொதுங்கி

மான்களைப் போல ஒடுவதற்கு

சிலரைக் கண்டால் தோள் துண்டினையெடுத்து

இடுப்பில் கட்டிக் கொள்வதற்கு

எப்படி முதுகை வளைக்க வேண்டுமென்பதற்கு

எவ்வளவு தூரம் கைகளை நீட்டிக் கொள்ளலாமென்பதற்கு

கேட்காமலே சுமைகளை சுமந்து

கூலியாக மாறிக் கொள்வதற்கு

மதம் எனக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறது

ஒளிந்திருந்து வேதங்களை கேட்கக்கூடாது  என்பதற்கு

இந்த பிறவியில் பிறந்ததற்கு

போன பிறவியின் பாவம்தான்  என நொந்துக் கொள்வதற்கு

கடவுளுக்கு நெருக்கமானவனெ  சொல்லித்தரவில்லை

நானும் அவனுடைய வாரிசுகளில்  ஒருவனெ அறிவிக்கவில்லை

ஒருமுறைகூட பேசாத கடவுளிடம்

கோபப்பட்டு என்ன நிகழ்ந்துவிடப்போகிறது

மதம் மனிதனை  விட ரொம்பவும்

இளவயதுக்காரன்தான்

வழிப்போக்கனைப் போல வந்த மதம்

கடவுளின் வீட்டுக்கு குத்தகை  காரனைப் போல நடந்துக்கொள்கிறது

மதம் இப்போது என்ன சொல்லிக் கொடுக்கிறது

அடுத்த சாதி பெண்களிடம்

காதல் கொள்ளாதேயென்று

அது கப் பஞ்சாயத்துகளை  உருவாக்குகிறது

மதம் தந்திரக்காரனாக மாறிவிட்டது

பழைய முகத்தின் மீது

புதிய முகமூடியை அனிந்துக்கொண்டது

என்னையும் கடவுளின் பிள்ளையென்கிறது

அதற்கு நிறைய நாக்குகளும் முகங்களும் முளைத்துவிட்டன

 

*

அவர் இறந்துவிட்டார்

அவர் இறப்பது இது முதல்  தடவையல்ல

இறப்பை யாரும் நம்பவில்லையென்பதால்

மீண்டும் மீண்டும் இறந்திருக்கிறார்

இப்பொழுது அவரை முழுவதும்  நம்பிவிட்டார்கள்

அதற்கு அடையாளமாக அவரை

அன்றைய செய்திதாள்களால் மூடியிருக்கிறார்கள்

சாவதற்கு சில மணி நேரம்  முன்புவரை

இருமிக்கொண்டிருந்தாராம்

அவருக்கென்று சொத்துக்கள்  ஏதுமில்லை

வாழ்ந்து வந்த நடைப்பாதை

நகராட்சிக்கு சொந்தமானது

அவர் மரணத்திற்கு அழ யாருமில்லை

தடவியல் நிபுணனுக்கு

எவ்வித சிரமும் கொடுக்காமல்  செத்துவிட்டார்

நெடு நாளாக பசி உருண்டைகளை விழுங்கியிருக்கிறார்

பசி மனிதனை கொல்லக்கூடிய மிருகம்தான்

திரைப்படப் சுவரொட்டிகள்தான்

படுக்கைவிரிப்புகளாக இருந்திருக்கிறது

அதை யாருக்கும் உயில் எழுதவில்லை

இறந்தபிறகு செய்திதாள் போர்வை கிடைத்திருக்கிறது

அவருக்காக அமரர் ஊர்தி வரப்போவதில்லை

மாநகராட்சி வண்டிக்காக காத்துக் கிடக்கிறார்

வைகுண்டஏகாதேசி தினத்தில் இறந்திருப்பதால்

சொர்க்கம் போவாரென பேசிக்கொண்டார்கள்

போனவாரத்தில் இறந்து கிடந்த நாயை

மாநகராட்சி வண்டிதான்  தூக்கிக்கொண்டு போனது

மாநகராட்சி வண்டிகளுக்கு ஏழைகளும் குப்பைதான்.

*

பிரிதல் பழகிவிட்டது

முதல் பிரிவுக்கு கண்கலங்கியது போலில்லை

இரண்டாம் பிரிவும் மூன்றாம் பிரிவும்

பிரிவு எப்போதுமே தளர்ந்த  சூழல்களை இறுக்கி கட்டிவிடுகிறது

பிரிதலின் போது மெளனத்திற்கு சோகை பிடிக்கிறது

காலம் நம்மை பொம்மைகளாக்கிப்  பார்க்கிறது

உடல் கணத்துப் போகிறது

மனைவியை பிரியும் உடலும் குழந்தைகளை பிரியும் உடலும்

அப்பா அம்மாவை பிரியும் உடலும் வெவ்வேறானவை

வீட்டை பிரிவது வேறொரு வலி

பழகிய இடத்தை பிரிவது

சில மனிதர்களிடமிருந்து மரங்களிடமிருந்து

சில அறிமுகங்களிடமிருந்து

சில கட்டமைப்புகளிடமிருந்து மீண்டும் அந்நியமாகிறோமென்பதே

அதிகாலையில் நண்பகலில்  மாலையில் இரவில் நடு இரவில்

எல்லா நேரங்களிலும் பிரிந்திருக்கிறேன் வீட்டை

குழந்தைகள்  தூங்கும்போது பிரிந்திருக்கிறேன

சிறு குழந்தையாயிருக்கும்போது அழுதிருக்கிறார்கள்

இப்போது வளர்ந்துவிட்டார்கள்

பிரிதல் வாழ்வின் அங்கமென்று புரிந்துக் கொண்டார்கள்

யாருக்காக பிரிகிறோம்

கனவுகளும் பொறுப்புகளும்

கடமையும் இழுத்துச் செல்கின்றன

பயணங்களெங்கும் கூடவே  வரும்

வழியனுப்பும் முகங்களோடு

மனசின் உதடுகள் பேசிக்கொண்டிருக்கும்

நிகழ்காலத்தில் இரயில் வண்டி இழுத்துக்கொண்டு  போகும்பொது

எதிர்திசையில் இறந்தகாலத்திற்குள் போய்க் கொண்டிருப்பேன்

*

 

அவர் வீட்டிற்கு வெளியே

நடந்துக் கொண்டிருக்கிறார்

இன்னும் என் வீட்டை கண்டடையவில்லை

இதற்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்

சில நூற்றாண்டுகளாகத்தான் வரவில்லை

ஏதோ ஒரு சொல் வீட்டின் வழியில்

ஒரு மலையை உருவாக்கிவிட்டது

அந்த துருபிடித்த சொல்

காலத்தின் இடைவெளியில்  மேலும் இறுகியிருந்தது

சொற்களை துளைத்து சுரங்கப்பாதையை

அமைக்க முயல்கிறோம் முடியவில்லை

சொற்கள் நன்றாக வேர்பிடித்துவிட்டது

அது கடின பாறை போல வளர்ந்து விட்டது

இப்போது அந்த பாறையின் மீது

உட்கார்ந்துதான் பேசிக் கொண்டிருக்கிறோம்

பாறைகளை நகங்களால் சுரண்டிகொண்டு.