புதிய படைப்பாளி கவிதை பாண்டூ கவிதைகள்

 புதிய படைப்பாளி  கவிதை பாண்டூ  கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

கழுதை

 

 

நான்கு வர்ணங்கள்…

பிரிக்கப்பட்டு,

கலைத்துப் போடுவதில்

களைகட்டுகிறது ஆட்டம் !

 

 

ஒரே வர்ணங்கள்…

ஒன்றாய்க்

கூடிக் கொள்ள…

 

 

வெவ்வேறு வர்ணங்கள்…

வெட்டிக்கொள்வதற்கே

களமிறக்கப்படுகிறது…

 

 

வெட்டுவதும் வெட்டப்படுவதுமாய்த்

தொடருகிறது ஆட்டம்

இன்றுவரை…

 

 

எல்லா வர்ணங்களையும்

ஒன்றாய்க் கூட்டிப்

பிடிக்கத் துடிப்பவருக்கு…

 

எப்போதும் கிடைக்கிறது

கழுதைப் பட்டம் !!

 

.**

விதைகளின் வியாபாரி

 

விதைகளின் வியாபாரி நான் 

என்னிடம் பழங்களைத் தேடாதீர் !

 

விதைகளை விருட்சமாக்கவே…

உரங்களோடு தருகிறேன் !

 

ஆனால் நீருற்ற !

என் கரங்களைத் தேடாதீர் !

 

ஆதாமின் ஆப்பிளோ,

ஐசக்கின் ஆப்பிளோ,

மார்க்சின் மாவோ,

இன்னும் எத்தனை எத்தனையோ…

 

அத்தனைக்குமான விதைகளைக்

கடைவிரித்து வைக்கிறேன் !

 

வேண்டும் பழத்தோட்டத்தை

விருப்போடு செய்துகொள்வீர் !

 

விதைகளின் வியாபாரி நான்….

என்னிடம் பழங்களைத் தேடாதீர் !

 

.***

 

தராசு

குற்றவாளிக் கூண்டில்..
கையில் அம்பும்
மெய்யில் தோலாடையுமாய்..
பொய்யில்லா பழங்குடி ஒருவன்
பரபரப்புடன்!

நாகரீகங்களின் நக்கல் நகைப்பு
அவை நிறைக்க…

“ஆர்டர் ஆர்டர் ஆர்டர்…
குற்றத்தை ஒப்புக்கொள்கிறானா?”

“கணம் கோர்ட்டார் அவர்களே…
அவர்கள் மொழியில் 
குற்றம் என்ற வார்த்தை இல்லையே” 
தலை சொரிந்தார் மொழிபெயர்ப்பாளர்!

“சரி.. சரி.. 
மானைக் கொன்றானா?”

“உணவுக்காய் குடும்பம் காத்திருப்பதையும்…
மானின் மீது முதலில் அம்பு தானே எய்ததையும்…
அது தனக்கே உரியதெனவும்…”

மீண்டும்..

“உங்களுக்கும் வேண்டுமானால் 
நாம் பகிர்ந்து கொள்ளலாம்” 

அவன் குரலை மொழிபெயர்த்தார்…

“ம்… ரூபாய் 50,000/- அபராதம்… 
அல்லது ஒராண்டு சிறை தண்டனை”

“கோர்ட்டார் அவர்களே!
ரூபாய் என்பதோ
அபராதம் என்பதோ
சிறை என்பதோ
தண்டனை என்பதோ
அவர்கள் மொழியில் இல்லை”

***

Advertisements