கவிதைகள் ராமலக்ஷ்மி கவிதைகள்

ராமலக்ஷ்மி  கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவள் 

 

நிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன

குறிப்பாக அவளிடமிருந்து

 

அவளுள் இருந்தார்கள்

மகள் தாய் மனைவி தங்கை தோழி

அத்தனை பேரும்

 

மிகப் பெரிய குற்றங்களையோ

மறக்க முடியாத துரோகங்களையோ

எவருக்கும் செய்துவிடவில்லை

 

சில தற்செயலாக நிகழ்ந்தவை

பல காலகாலமாக எல்லோரும் செய்தவை

அவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு

வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை

 

நிறைய நோகச் செய்திருக்கிறேன்

அது குறித்துக்

கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன்

இப்போது

மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன..

மன அமைதிக்காக

 

காலம் கடந்து விட்டது

எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்

கசிந்துருகி நிற்கும் எனக்குக்

காட்டப்படுகிற கருணையில்

உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது

நான் யாசிக்கிற மன்னிப்பு

மறுக்கப்படுகிறது

 

கையில் அள்ளி வீசும் நீராக

அலைக்கழித்த என்னை

ஆழ்கடலின் பேரமைதியுடன்

அச்சுறுத்துகிறாள் இன்று.

***

 

 

1.

 

பேரன்பு

 

தனித்த முதுமையொன்று

நிறைந்த வாழ்வு தந்து

பிரிந்த துணையை நினைந்து

நடுங்கும் விரல்களால்

காலச் சங்கலியின்

ஒவ்வொரு கணுவினையும்

கவனமாக எண்ணியபடிப்

பின்னோக்கிப் பயணித்துக்

கொண்டிருந்தது.

 

அண்டவெளியில் அழுத்தத்துடன்

மையம் கொண்ட புயலும்

ஆர்ப்பரிக்க எத்தனித்த

ஆழிப் பேரலையும்

கனிவுடன் காத்தன மெளனம்

தம்மால் அறுந்து விடக் கூடாது

சங்கலியின் இழை என்று.

 

ஒவ்வொரு கணுவின் ஸ்பரிசமும்

தந்த நினைவுகளால்

தழும்பிய விழிகளில்

ஒளிர்ந்த பேரன்பு கண்டு..

ஓர் கணம்

நின்று

சுழன்றன கோள்கள்.

***

———————————

2.

 

ஒருசொல்

 

நினைவின் விளிம்பில்

தளும்பி நின்றாலும்

முழுதாக முகங்காட்ட மறுத்துக்

கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது

அந்த சொல்

 

பல ஒலிகளில் நீளங்களில்

விதவிதமான அழகுச் சொற்கள்

விரித்த வலையில் வந்து விழுந்தாலும்

எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை

 

பள்ளிக்கூட வாசலில்

சீருடைச் சிட்டுகளோடு கலந்துவிடும்

சின்னஞ்சிறு மகளைத்

தேடிக் களைக்கும் கண்களை விடச்

சோர்ந்து விட்டிருந்தது மூளை

நாட்கணக்கில் கசக்கப்பட்டதில்

 

மறந்து விடத் தீர்மானித்தேன்

மறந்து விட்டதாய்

சொல்லியும் கொண்டேன்

 

அப்படியும் எங்கிருந்தாவது

எட்டிப் பார்த்துப்

பாதிமுகம் காட்டிப் பைத்தியமாக்கியது

பல வாரங்கள் ஆட்டிப் படைத்தது

 

‘உனக்கும் எனக்குமிடையே

இனி ஒன்றுமேயில்லை

குறுக்கிடாதே என் வழியில்’

கோபித்துக் கொண்டேன்

 

என்ன நினைத்ததோ

காட்சிதந்தது மறுநாளே

தோட்டத்து மண்ணில்

வானத்து நட்சத்திரங்களாக

உதிர்ந்து கிடந்த

எண்ணற்றப் பவள மல்லிகளில்

ஒன்றாக.

 

விடிவெள்ளியாய்ப் பிரகாசித்ததனை

நொடியில் அடையாளங்கண்டு

சிலிர்ப்புடன் கையில் ஏந்தி

ஓடிச்சென்று பொருத்தினேன்..

அந்த ஒரு சொல்லே

உயிர்நாடியென நான்

கைவிரித்து விட்டதால்

மரிக்கக் கிடந்த கவிதையில்

 

எழுந்து அமர்ந்தது கவிதை.

குலுக்கிக் கொண்டோம்

நானும் சொல்லும் கைகளை.

 

——————————————————————

3.

 

இறக்கைகள் 

 

நாம் பறந்தபடி நாட்கள் பறப்பதாக

அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்.

 

பறந்த நாட்கள் ஒன்றன்மேல் ஒன்றாக

அடுக்கிக் கொண்டே வரப்படுகின்றன

மாதங்களாகவும் வருடங்களாகவும்.

 

அவற்றின் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு

சோபையிழந்து சிரிக்கின்றன

அர்த்தமற்றப் பெருமிதங்களும்

கொண்டாடிய சம்பவங்களும்

உயர்வாய் நினைத்த சேகரிப்புகளும்.

 

எதையோ தேடப்போனபோது

அகப்பட்டன

அனுபவப் பாடங்களும்

தொடர்பறுந்த நட்புகளும்

தவறவிட்டப் பல

அற்புதத் தருணங்களும்.

 

இறக்கைகளைக் கழற்றி விட்டு

நடக்கத் தொடங்கிய என் கைகளை

ஒரு குழந்தையின் குதூகலத்துடன்

பற்றிக் கொண்டு

தளிர்நடை போடுகிறது காலம்.

***

 

—————————————-

4.

 

இலைகள்பழுக்காதஉலகம்

 

கைபிடித்துக் கதைபேசி நடந்த நாட்களும்

பாசத்தால் நனைந்த நிகழ்வுகளும்

நெஞ்சோடு இருந்தாலும்

நிழற்படங்களாலேயே

நினைவில் பொருத்திப் பார்த்தத்

தந்தையின் முகத்தைக்

கண்டேன் கனவில் நேற்று.

 

கம்பீரத் தோற்றம்

அதே கணீர் சிரிப்பு.

 

தேடுகின்றன அவர் கண்கள்

தான் விட்டுச் சென்ற

எட்டு வயதுச் சிறுமியை.

 

ஏற்றுக்கொள்ள இயலவில்லை

மகளென்று

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

நரையோடும் சிகையோடு

அவரினும்

அதிக வயதாகி நின்றிருந்த என்னை..

 

மறையாத சூரியனின் வெளிச்சத்தில்

தேயாத முழுநிலவைக் காண முடிகிற

தான் வாழும் உலகில்

வாடாத மலர்களையும்

பழுக்காத இலைகளையுமே

பார்த்துப் பழகிவிட்டவருக்கு.

***

 

Advertisements