கவிதைகள் ஜி.தேவி கவிதைகள்

 

ஜி.தேவி கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எரிமலையும் என் தோழியும்

மெல்லிய குளிரில் உடல் சற்றே  விறைத்திருக்க

வீங்கிய விழிகளுடன் எதிரில்

அமர்ந்திருந்தவளுக்கு

சொல்ல நிறைய இருந்திருக்க்க்  வேண்டும்

கவிதை பேசும் அவள் விழிகள்

சுனாமிக்கு உள்வாங்கிய கடலாய்

கலங்கிக் கருத்திருந்தது

அதில் அவளது  அவலத்தின் தரை/தாரை

தட்டுப்பட்டது

பணிக்கப்பட்ட கடும் சூட்டிலான  தேனீர்

அவளது குளிர் குறைக்கப்  போதுமானதாக இல்லை

கைகளில் ஏந்திய தேனீர் குவளைக்குள்

விழுந்த  அவளது விழிகளின்  துளிகள்

என் உறுதியைக் குலைப்பதாய்  இருக்கவே

என்னம்மா என்றேன்

எனக்கே கேட்காத குரலில்

அவளில் வெடித்துக் கிளம்பிய

”லாவா” வில் நான்

உருகிக் காணாமல் போயிருக்க

அவள் இன்னும் இன்னும்

திடமாய் எரிமலையென்ற தன்

இருத்தலை இறுக்கமாகப்  பதிகிறாள்

*

காமதேவன் கைக்கரும்பைப்  பிழிந்தெடுத்த

ரசம் ததும்புகிறது

நம் விழிக்கோப்பைகளில்

பார்வைகளின் கனம்

கோப்பை நிறைகிறது

பின்

ழி

கி

து

மோகத்தைக் குழைத்தபடி

மூர்ச்சையாகும் கணங்களில்

தெளிவிக்கவும் அதுவே தெளிக்கப்படுகிறது

சிருங்காரத்தின் சிணுங்கல்களை

வயலின்களில் வாசித்தபடி

மிதக்கிறார்கள் தேவதைகள்

இரவுகள் அதி வெளிச்சமாய்ப்  பரவும் நொடிகளில்

காதல் ஒரு நீள் தனிமையைப்

போர்த்திவிட்டு வெளியேறுகிறது

நான் மலைச்சாரலாகவும்

நீ மழைச்சாரலாகவும்

மாறிவிட்ட கணமொன்றில்

பெருமழைக்காலமொன்று சிருஷ்டிக்கப்படுகிறது

நம்மால்…

அதிர்வுறும் தேகங்கள்

மவுனக் கடத்திகளாய்

கடத்துகின்றன

சரச நாடகமொன்றை

 

 

*

ஒரு குடிகாரனும்…சிந்திய  சில வார்த்தைகளும்

—————————————–

 

என் இரகசியங்களைக் கைபற்றி விட வேண்டுமென்ற

உன் கடும் பிரயாசைகள்

அடர்த்தியான இருளென

என் மேல் கவிந்த வண்ணமேயிருக்கிறது

எவ்விதக் கடவுச்சொல்க் கொண்டும்

மூடிவிட முடியாத

என் அந்தரங்கத்தைத்

திறந்து விட்ட அயர்ச்சியில் சற்றே கண்ணயர்கிறேன்

இப்போது இருளுக்குப்  பதில்

நீ படருகிறாய்

அரவம் இறுக்குகிற உயிராய்

உணர்வுகளை  நொறுக்குகிறாய்

துர்நாற்றத்தின் வாயொழுக்குகிறாய்

அதில் ஊற்றெடுக்கிறது உன் காமம்

கள்ளுக்கடையில் குதறிப்போட்ட

கோழியின் கறியென

மீண்டும் மீண்டும் உன் முன்

கிடத்தப்பட்டிருக்கிறது

என் உடலெனும் மாமிசம்

பொறுக்கவியலாமல்

கண்களை இறுக்குகையில்

ஓங்கி அறைந்து

உயிர்ப்பிக்கிறாய்

வழமையான

உன் குற்றச்சாட்டுகளில் சுவாரசியமற்று

புரண்டு படுக்கிறேன்

அனிச்சையாய் உடலைச் சிதைக்கிறாய்

இறுதியாக

நீ குடித்து வந்த புளித்த கள்ளை

வார்த்தைகளாக வாந்தியெடுக்கிறாய்

பிறகு,

ஒரு நாயைப் போலே

உன் வாந்தியை நீயே

சுவைத்துச் செரிக்கிறாய்

 

Advertisements