கவிதைகள் கருணாகரன் கவிதைகள்

கவிதைகள்          கருணாகரன்   கவிதைகள்
 
பனையடி வினை
பாடலெல்லாம் சிதைந்திருந்த தெருவழியே
தனித்திருந்த பனை மரங்களைக் கேட்டேன்
இந்த வெறி எங்கே கொண்டு போகும்? என்று
எந்தப்பனையும் எதுவும் பேசவில்லை
நூற்றாண்டுகள் பலவும் வாய் மூடி மௌனமாக இருந்த பழக்கத்தை விடுவதில்
ஏராளம்  தயக்கங்கள்
ஒவ்வொரு தளும்பாய் பனை நீளம் படர்ந்திருந்தது.
நானறிய
நூற்றாண்டுகளை விழுங்கி விழுங்கி
எல்லா வெறிக்கும் வழிவிட்ட
பனையே
முறிகின்றாய் பெரும் பழி சூழ் வினையில்.
ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய்
முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ?
தோப்பெல்லாம் பெருந்தீ மூண்டெரிந்தாலும்
புதுக் குருத்தெறியும் வரமுடைய
தாலமே
கால நிழலின் குழியுள்
இதோ உனது நாட்கள்
செத்தழிகின்றன
எல்லா வெறிக்கும் வழி விட்ட
முந்தைப் பெரும் பழியெலாம்
இன்று
உன் ஒவ்வொரு தலையாய் கொண்டு போகிறது
என்பேன்;
அதற்கும் மௌனம்தானா
சொல் பனையே
தோப்பென்றும் கூடலென்றும் பேரோடிருந்த
பனங்காடே
பாடலாயிரம் பெருகி இசை பொழிந்த தெருவழியே
நிழல் விரித்திருந்த பனந்தோப்பே
வானளாவி
நிலவும் பரிதியும் மறைந்தொளிந்து விளையாட
ஒளிச்சித்திரங்களால்
பூமியின் சுழற்சியைச் சொன்ன புதிரே
இன்று அகாலத்தில்
பாடல் சிதைந்த தெருவழியே
தனித்திருக்கிறாய்
ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய்
முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ?
00
கிரகம்
பரதேசியின் நிழல் அலைந்த தடம்
திசைகளெங்கும்
கலவரத்தோடும்
நிம்மதியின்மையின் பதற்றத்தோடும்
எல்லாத் தெருவிலும்
எல்லா நகரங்களிலும்
சிதறிக்கிடக்கக் கண்டேன்.
தகிக்கும் வாளின் கூராய்
கண்ணை உறுத்தும் தனித்த நட்சத்திரம் அது
பூமியை வானமாக்கி
சிதறிக்கிடந்தது பன்னெடுங்காலமாய்.
விமானங்களின் பறப்பிற்கிடையிலும்
தொலைக்காட்சிகளின் அலைவரிசைகளுக்கிடையிலும்
பெரு நகர் விடுதியில்
மதுவும் இசையும் நடனமும் நிரம்பிய மண்டபத்தில் என
ஒளிர்ந்த பகட்டிலே ஒதுங்கிய
நிழல்
அவமதிப்பின் எச்சில்.
ஆயினுமது வெம்மையாறாத
எரிகோள்.
எந்த நிழலிலும் தங்காத சுவடது.
எந்த மதுவிலும் தணியாத தாக மது
முடியாப் பெரும் பயணத்தில்
நகர்ந்து செல்கிறது
பல்லாயிரம் உள் வெளி வலைகளில்
சிக்கிய நிழல்
கணத்தில் வெளியேறி
விசையெடுத்துப் போகிறது
திசைகளை அழித்து
வெளியையே மாபெரும் திசையாகக் கொண்டு.
00
மலைக்குருவி
வெளியில்
ஆகாயம் தொடும் பெருந்தாகத்தோடு
நிமிர்ந்த மலையில்
நிற்கும் தோறும்
வெளியே கனலும் மூச்சொலிப் பெருக்குப் பெருகுவதைக் கேட்டேன்.
உள்ளே, கருணை பொங்கித் ததும்பும்
ஊற்றொலிச் சங்கீதம்.
தணலும் தண்மையும்
மலையின் அடிவயிற்றுப் பேரருவிகள்.
சுடும் பாறையின் உள்ளிருந்து
பெருக்கெடுத்தோடும் நதி
நதி செல்லும் வழிவிட்டு
வெயில் குடித்துக் காய்ந்திருக்கும்
பெரும்பாறைக் கூட்டம்
ஒரு போதும் வருந்தியதில்லை
இத்தனை பெருக்கெடுத்தோடும் நதி
தன்மடியிருக்கும் போதும்
தான் வெயில் காய்வதையெண்ணி
காற்றாலும் வெளியாலும் ‚
தன்னை நிரப்பி வைத்திருக்கும் பள்ளத்தாக்கு
வான்நோக்கி சிகரத்தை உயர்த்திவிட்டுத்
தான் செல்கிறது
பூமியின் சமதரை நோக்கி
கூடவே தன்னோ டழைத்துப் போகிறது
நதியையும்.
பள்ளத்தாக்கின் மறுபாதி சிகரம்
சிகரத்தின் மறுபாதி பள்ளத்தாக்கு
சிகரத்துக்கும் பள்ளத்தாக்குக்கும்
இடையில் எங்கிருக்கிறது  மலை?
00