பதிப்பக அலமாரி தக்கை பதிப்பகம் துரன் குணா கவிதைகள்

பதிப்பக அலமாரி தக்கை துரன் குணா கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1.பகற்கனவுக் கலை

 

பகற்கனவுகளை நெய்ய மந்தமான வெயில் கொண்ட  முற்பகல் அல்லது பிற்பகல் பொருத்தமானது.பெண்கள் இல்லாத வீட்டின் அல்லது அறையின்  வாசல் ஜன்னல் கதவுகள் இறுகப் பூட்டப்பட்டு எல்லாவித ஓசைகளும் தடுக்கப்பட வேண்டும். நேற்றைய  இரவின் ஒழுங்குபடுத்தப்படாத  படுக்கையில் புரண்டவாறே உடலை மேலும் சோம்பலூட்டிக்  கொள்வது நலம்.

 

இப்படியாக நாம் மெல்ல உள் நுழையும் பகற்கனவினுள் பெளதீகத்தின் சுமையில்லை.குற்றங்களை கண்காணிக்கும்  கண்களும் தண்டனைகளின் அச்சவுணர்வும்  இல்லை.குறிப்பாக மிக புராதன வாதைகளான பசி மற்றும் வலி  இல்லை.அச்சமூட்டும் இரவின் துர்கனவுகளிலிருந்து அலறி விழிப்பது நேராது.ஒரு மாய  வித்தைக்காரனைப் போல எதையும்  கலைத்து அடுக்க,அடுக்கி கலக்க நம்மால் முடியும்.ஒரு பகற்கனவு என்பது நித்யத்தின் ஒரு சிறுகீற்று என்பதை மெல்ல மெல் நாம் புரிந்துகொள்கிறோம்.

 

பகற்கனவிலிருந்து  வெளியேறுதல் மாலைப்பொழுதில் மலைச்சரிவில் இறங்குதலை  போன்றது.அப்போது நாம் வெளியேறுதலின்  ஏக்கத்தை முற்றாக தவிர்த்து  விட வேண்டும்.

 

மேற்சொன்னவாறு இல்லாமல் எப்படிப்பட்ட சூழலிலும்  குறிப்பாக இரவுகளிலும்  எவ்விதமான  நோக்கங்களுக்காகவும்  ஒருவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப பகற்கனவுகளை காணலாம்.

 

வெகுகாலமாக  பகற்கனவுகளை பயில்பவன்  என்ற முறையில் உங்களிடம்  நான் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.மரித்தவனின்  மூடாத இமைகளைப் போல் நீங்கள்  உங்கள் கண்களை பொருத்திக்கொள்ளும் போதெல்லாம் குற்றங் குறையற்ற ஒரு பகற்கனவு நிச்சயம் சாத்தியப்படும்.

 

 

 

 

 

 

 

 

2.பெரும்பொழுது பச்சோந்தி

 

 

நிலந் தழுவி

விளையாடும்

வேனிற்கால

நிழலுக்குள்

இலைகளோடு

வெளி இணைத்து

உடல் விரித்த

தருவின்

சிறு மஞ்சற்

பூக்கள்

தாங்கும்

கிளை நடுவே

உரு

மெல்லக் கொள்ளும்

பச்சோந்தியை

பார்க்க

பார்க்க

அது

அசையாமலேயே

கூதிர்காலத்திற்குள்

போய்க்கொண்டிருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

3.கூகிள் எர்த்

 

குதிரையில் பயணித்தால்

ஒரு இரவு

ஒரு பகல்

நீளும்

அங்கே

என் உயிர்க்கூடு இருக்கின்றது

பச்சையக்கடலின் அலைகள்

காற்றில் அசைந்துகொண்டிருக்கின்றன

இந்த பெருநகரத்தில்

என் கணிப்பொறியில்

கூகிள் எர்த்தை நான் இயக்குகிறேன்

அதில் ஒரு

சிறு நகரத்தை அடையாளங்கண்டு

சிற்றூரை அடையாளங்கண்டு

நகர்மயமாகிக்கொண்டிருக்கும் எனது கிராமத்தின்

கான்கீரிட் உச்சிக்கூரைகளை

காண்கின்றேன் -அங்கேயிருந்து

எனது கிராமத்திற்கு பிரியும்

சாலையை காண்கிறேன்

கிராமத்திலிருந்து

தோட்டத்திற்கு நீளும் இட்டேரியை காண்கிறேன்

நடந்த ஒற்றையடிகள்

கோடாய் நீள்கின்றன

கனவுகளின் கூட்டுப்புழுக்கள் நிறைந்த

நிலத்தைக் காண்கிறேன்

வீட்டின் உச்சிக்கூரையை காண்கிறேன்

தென்னைகளின் இலைகளைக் காண்கிறேன்

மாட்டுக்கொட்டிலின் வெண்ணிற ஆஸ்பெஸ்டசைக் காண்கிறேன்.

மலங்கழித்த வேலியோரங்கள்

தெளிவாக தெரிகின்றன

காமத்தின் திவலைகள்

சிதறிய மறைவிடங்களும்

ஆனால் எனக்குத் தெரியும்

அங்கே சில துயருற்ற ஆன்மாக்கள்

அலைகின்றன

 

அவற்றை மட்டும்

கூகிள் எர்த்தால்

மையப்படுத்தமுடியவில்லை.

 

 

 

 

4.புத்தனின் முப்பது வயது ஆண்குறி

 

 

இன்று

முதுகெலும்பற்ற ஆண்குறி

புழுவைப்போல் தொங்கிக்கொண்டிருக்கிறது

இன்னும்

மிச்சமிருக்கும் வாலிபத்தின்

ஆரம்ப வசந்தங்களில்

எல்லா அதிகாரங்களின் கயமையை

கொண்டிருந்த

அது விறைத்திருக்கும்போது

பைத்தியம்

நான் வாளேந்தியிருந்ததாகவே நினைத்திருந்தேன்

ஆனால் காமம்

தசையை விட

அதன் நிழல்களிலிருக்கிறது

என்பதை அறியத்துவங்கியபோது

அதற்கு எலும்புமில்லையென்பதை

நானும் அதுவும் அறிந்துகொண்டோம்

புழுவானது நாகத்தைப்போல் சீறும்போது

அதன் துயர்களை

ஏந்திக்கொள்ளும்

ஆற்றுப்படுத்தும்

யோனியின் தாய்மை

என் கண்களிலிருந்து விரியும் உலகில்

எங்குமேயில்லை

கனவு மைதுனங்கள் சலித்துவிட்ட

நேற்றைய இரவின்

பெளர்ணமி ஒளியில்

என் ஆண்குறியை

ஒரு கிடாராக மாற்றும்போது

இந்த உலகில் உடல்கள்

தசைகளால் படைக்கப்படவேயில்லை என்பதே

என் ஞானமாக இருந்தது.

 

*

Advertisements