பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் விழுப்புரம் படுகொலை 1978

பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் விழுப்புரம் படுகொலை 1978

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஈரோடு புத்தகச் சந்தையில் ஆகஸ்ட் 4 மாலை, வ.உ.சி மைதானம் அருகில் இருக்கும் ஹோட்டல் ஆக்ஸ்போர்டில் வெளியிடப்பட இருக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘விழுப்புரம் படுகொலை 1978 ’ (காலச்சுவடு பதிப்பகம்) புத்தகத்திலிருந்து:

பின்னுரையாக ஒரு பதிப்புரை

விழுப்புரம் நகரம் தற்போது மாவட்டத் தலைநகரமாக இருக்கிறது. 1993ஆம் ஆண்டு தனி மாவட்டமாக மாறும்வரை தென்னாற்காடு மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. சாலைப் போக்குவரத்திலும் தொடர்வண்டிப் போக்குவரத்திலும் முக்கிய சந்திப்பாகத் திகழ்கிறது விழுப்புரம். தலித் மக்கள் எண்ணிக்கையில் அதிகமுள்ள மாவட்டம் இது. விழுப்புரம் நகரத்திலும் தலித் மக்கள் தொகை அதிகம். மக்கள் தொகையில் வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே மிகக் குறைந்த சதவிகிதமே வித்தியாசமிருக்கிறது. மற்றபடி முதலியார், நாயக்கர், உடையார், இசுலாமியர் முதலிய எண்ணிக்கை குறைந்த ஆனால் அதிகார பலமுடைய சாதியினர் பரவலாக இருக்கின்றனர். பெரியகாலனி எனப்படும் பெரிய பறைச்சேரி, மருதூர், தாமரைகுளம் ஆகியவை மட்டுமே விழுப்புரம் நகரில் தலித் மக்கள் வசித்த பழைய சேரிகள். தற்போது இவற்றோடு சேவியர் காலனி, நரசிங்கபுரம் சிறிய காலனி ஆகிய சேரிகளும் இருக்கின்றன. பெரிய பறைச்சேரியோடு ஒப்பிடும்போது மற்றவை மிகச் சிறியவை. பெரியகாலனியை ஒட்டி இசுலாமியர் குடியிருப்புகள் உள்ளன. பூந்தோட்டம், நாயக்கன் தோப்பு, சிவன்படைத் தெரு ஆகிய பகுதிகளில் வன்னியர்கள் உள்ளிட்ட சாதி இந்துக்கள் வாழ்கின்றனர். பெரியகாலனியில் பறையர்கள் பெரும்பான்மையாகவும் அருந்ததியர்கள் சிறுபான்மையாகவும் துணி வெளுப்போர், முடிதிருத்துவோர் ஆகியோர் ஓரிரு குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர். தற்போது எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இக்காலனியில் 1978ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5000 மக்கள் தொகை இருந்தது. குறுகலான தெருக்கள், கொட்டடியாய் குறுகிக் கிடக்கும் வீடுகள் என்றமைந்துள்ள இக்காலனியில் குறைந்த பரப்பில் மக்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர். இந்தச் சேரியைப் பற்றிய சித்தரிப்பை விழி.பா. இதய வேந்தன் கதைகளில் காண முடியும். குறிப்பாகப் பள்ளத்தெரு (1995 இந்தியாடுடே ஆண்டு மலர்) நந்தனார் தெரு (1991, மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்க வெளியீடு) முதலிய கதைகளில் இச்சித்தரிப்பை விரிவாக அறிய முடியும். இத்தலைப்பிலமைந்த இரண்டு தெருக்களும் பெரியகாலனியில் உள்ளவையாகும். 1978இல் இச்சேரியில் இரண்டு மெத்தை வீடுகளைத் தவிர மற்றவை குடிசைகளே. ஊருக்கு மத்தியில் சேரி அமைந்திருக்கும் மிகச்சில நகரங்களில் விழுப்புரமும் ஒன்று. நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த காய்கறி அங்காடி, பேருந்து நிலையம் ஆகியவற்றை ஒட்டியே பெரியகாலனி அமைந்திருந்தது. மார்கெட்டிலும் பேருந்து நிலையத்திலும் தலித்துகள் கூலிகளாகப் பணியாற்றினர். ஊரின்மையமான இருப்பு, எண்ணிக்கை பெரும்பான்மை காரணமாகத் தலித்துகள் சாதிக் கட்டுப்பாட்டின் இறுக்கம் தளர்ந்து வாழ்ந்தனர். தலித்துகளோடு கூலித் தொழிலாளர்களாக வன்னியர்களும் இருந்தனர். மார்க்கெட்டிலும் பேருந்து நிலையத்திலும் வியாபாரம், கடை உரிமை போன்றவற்றில் முதலியார், இசுலாமியர், வன்னியர், நாடார் ஆகியோர் பாத்தியப்பட்டு இருந்தனர். தலித்துகளில் ஜோதிலிங்கம் என்பவர் தொழிலதிபர் நிலையில் இருந்தார்.

இந்நிலையில் ஜோதிலிங்கத்திடம் லாரி ஓட்டுநராகப் பணியாற்றிய பெரியகாலனியைச் சேர்ந்த சண்முகத்தின் மனைவி சாலம்மாளை வன்னியர் வகுப்பைச் சேர்ந்த கலியமூர்த்தி என்ற கலியன் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். கலியன் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்யும் தொழிலாளி. இச்சம்பவம் பற்றி விசாரிக்கச் சில இளைஞர்களோடு சண்முகம் சென்றபோது பேச்சு கைகலப்பாக மாறி கலியன் தாக்கப்பட்டிருக்கிறார். காய்கறி வியாபாரிகளின் சங்கத் தலைவரான அண்ணாமலையின் ஆலோசனையின்பேரில் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் தலித்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது என்று கருதிய சாதி இந்துக்கள் ‘தங்கள் வியாபாரி’ ஒருவரைப் பெரியகாலனியைச் சேர்ந்தவர்கள் தாக்கியிருப்பதற்கு எதிராகக் கடையடைப்பும் ஊர்வலமும் அறிவித்தனர். சாதி இந்துக்களும் முஸ்லிம்களும் முன்னெடுத்த இந்த ஊர்வலத்திற்கு மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வன்னியசாதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான கிருஷ்ணனும் (அதிமுக) ஒத்துழைத்தார். கண்டன ஊர்வலத்தில் தலித்துகளுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் அன்றே நடந்த அவசரக் கூட்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளிகளால் வியாபாரிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை அரசாங்கம் நீக்கும் வரை கடையடைப்பு தொடர்வதென்றும், பேருந்து நிலையத்தையும் காய்கறி அங்காடியையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன. இச்சூழ்நிலையில்தான் விழுப்புரம் கலவரத்தின் முதல் சம்பவம் 24.07.1978 அன்று இரவு சில சைக்கிள் ரிக்ஷாக்களும் அவற்றின் ஓட்டுநர்களும் தாக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. இத்தாக்குதல் நடந்துகொண்டிருந்த அதேவேளையில் பெரியகாலனி நந்தனார் தெருவிலிருந்த கல்யாணி என்பவரின் வீடு கொளுத்தப்பட்டது. இரண்டு வீட்டிற்கு வைக்கப்பட்டத் தீ எட்டு வீடுகளின் சேதத்தில் முடிந்தது. மறுநாள் ஜூலை 25ந் தேதி தீ வைப்பிலும் மோதலிலும் இருதரப்பினரும் ஈடுபட்டனர். தலித்துகள் எதிர்த்தாக்குதலில் மட்டுமல்லாது தீவைப்பிலும் ஈடுபட்டனர். ஜூலை 25ந் தேதி சாதி இந்துக்கள் வசிக்கும் நாயக்கன் தோப்பிலும் சிவன்படை தெருவிலும் தலித்துகள் தீயிட்டனர். எதிர்த் தாக்குதலில் தலித்துகளின் கைஓங்கியது என்றே சொல்ல வேண்டும். எனினும் தீயில் எரிந்த வீடுகளில் தலித்களுடையதே அதிகம். பெரியகாலனியில் 25.7.1978ஆம் நாளில் 10 வீடுகளும் 26.07.1978இல் 12 வீடுகளும் எரிக்கப்பட்டன.

இரண்டு நாள் நீடித்த இருதரப்பின் மோதலும் தீவைப்பும் விழுப்புரம் நகரத்திற்கு வெளியே பரவியது. பெரியகாலனியைச் சேராத பிறசேரிகளைச் சேர்ந்த தலித்துகளைப் பிடித்த சாதி இந்துக்கள் அவர்களை நையப்புடைத்து கொடூரமான முறையில் கொன்றனர். கொலைக்குக் காரணமானவர்களென்று குற்றம் சாட்டப்பட்ட 41 பேரில் 34 பேர் கைது செய்யப்பட்டனர். தீர்ப்பில் மூன்று பேருக்குத் தூக்குத்தண்டனையும் (பின்னர் தண்டனை குறைக்கப்பட்டது) 27 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்களில் பலரும் பின்னர் தண்டனை குறைப்புப் பெற்றதோடு விடுதலையும் பெற்றனர்.

கலவரத்திற்குப் பிறகு அகில இந்திய அளவில் ஜெகஜீவன் ராம், சந்திரசேகர், தமிழக அளவில் மு.கருணாநிதி, ஆளும் அமைச்சர்கள், பின்னர் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆகியோர் பார்வையிட்டனர். அரசு சார்பாக இழப்பீடும் சிலருக்கு அரசுப் பணியும் வழங்கப்பட்டன. இறுதியாக விசாரணைக் கமிஷனும் நியமிக்கப்பட்டது. விழுப்புரம் நகரில் நீண்ட காலமாகத் தன்னிச்சையாகச் செயல்பட்டுவந்த தலித்துகளுக்கு எதிரான கோபம் இவ்வாறு 12 பேரின் கொலையில் முடிந்தது.

m

விழுப்புரம் கலவரம் தமிழக வரலாற்றில் மறக்கப்பட்ட சம்பவமாகவும், சில சமயங்களில் பெயரளவில் குறிப்பிடப்படும் தகவலாகவும் உள்ளது. கலவரம் பற்றிய அடிப்படை விவரங்கள் கூடக் கிடைக்காத நிலையில்தான் 1979ஆம் ஆண்டு சிறு நூலாக வெளியிடப்பட்ட D. டேவிட் தொகுத்த ‘விழுப்புரத்தில் (26, ஜுலை 1978) பன்னிரண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் பயங்கரப் படுகொலை’ என்ற நூலைப் பார்க்க முடிந்தது. விழுப்புரம் கலவரம் நடந்தவுடன் தலித் மக்களுக்குச் சார்பாக அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் செயல்பட முன்வந்தவர்களுள் முதன்மையானவர் D. டேவிட். அவர் 1932இல் வேலூரில் பிறந்து தற்போதுவரை வேலூரிலேயே வசிக்கிறார். தலித் கிறித்தவரான அவரைத் திருச்சபையில் நிலவும் சாதிபிரச்சினைகளுக்கு எதிரான போராட்டங்களே பிற சமூகப் பிரச்சினைகள் மீதும் அக்கறைகொள்ள வைத்தது. 1971ஆம் ஆண்டு வேலூர் பிஷப் டேவிட் மரியநாயகம் இறந்துவிட்ட பின்பு அடுத்த பிஷப்பாகத் தலித் ஒருவரை நியமிக்கும் முயற்சியில் தலித்துகள் ஈடுபட்டபோது திருச்சபையில் நிலவிய சாதிய அரசியல் அதை முறியடித்தது. அம் முயற்சியில் ஈடுபட்டவர்களுள் டேவிட் அவர்களும் ஒருவர். 1970களின் இறுதியில் வேலூரைச் சேர்ந்த அருள்தாஸ், சதானந்தன், ஜோசப் ஆகியோரோடு இணைந்து புறப்படுத்தப்பட்டோர் மனித உரிமைகள் சங்கம் (பு.ம.உ.ச.) என்ற அமைப்பை ஏற்படுத்தி மக்கள் திரள் அமைப்பு போலில்லாமல் கருத்தரங்குகள், சட்ட ரீதியான தலையீடுகள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டினார். ஒட்டுமொத்த சமூகத்தாலும் சாதியமைப்பாலும் புறந்தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் குறிப்பதாக அமைப்பின் இப்பெயர் அமைக்கப்பட்டது. புமஉச சார்பாகத் தமிழகத்தின் பல இடங்களிலும் கருத்தரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டன. பலதரப்புப் பார்வையும் வெளிப்படும்படியாகக் கருத்தரங்குகளுக்கானத் தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. உதாரணமாக: ஒதுக்கீடு இருக்கும்வரை சாதிகளும் இருக்கும் – சரியா, தவறா? என்ற தலைப்பு. மதுரையில் இக்கருத்தரங்கம் நடைபெற்றபோது வழக்கறிஞர் மலைச்சாமியின் தொடர்பு உருவானது.  பாரதீய தலித் சிறுத்தைகள் அமைப்பின் தமிழகக் கிளையாக DPI (Dalit panther of India) அமைப்பை மதுரையில் மலைச்சாமியும் அவர் நண்பர்களும் தொடங்கியபோது உடனிருந்தோர்களில் டேவிட் அவர்களும் ஒருவர்.

விழுப்புரம் கலவரம் பற்றிய தகவலைச் செய்தித்தாள் மூலம் அறிந்து தானாக முன்வந்து அப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டார் D. டேவிட். தலித் மக்களின் பாதிப்பும் நியாயமும் உரிய விதத்தில் எடுத்துரைக்கும் சூழல் நிலவாத அக்காலத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை சட்ட ரீதியாகவும், அமைப்புகள் மூலம் நிவாரண உதவிகள் கிடைக்கச் செய்ததிலும் டேவிட்டின் பணி குறிப்பிடத்தக்கது. கலவரத்தை ஆராய அரசாங்கம் நியமித்த சதாசிவம் கமிஷனிடம் அளிப்பதற்காகத் தலித் மக்கள் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்றை அவர் தயாரித்தார். விசாரணைக் கமிஷன் அரசாங்கத்தின் முன்முடிவிற்கேற்பவும் தலித் மக்களுக்கு எதிராகவும் தரவுகளைத் திரட்டிக்கொண்டிருந்தபோது டேவிட் தயாரித்த அறிக்கை தலித் தரப்பிலிருந்து முக்கியமான இடையீட்டை மேற்கொண்டது. எந்த அரசியல் கட்சியும் பெரிய அளவில் கண்டுகொள்ளாத அக் காலத்தில் அய்ஃகப் செயலாளராய்ப் பணியாற்ற வந்திருந்த அந்தோணி ராஜ், காங்கிரஸிலிருந்த தலித் தலைவர்களுள் ஒருவரான எல். இளையபெருமாள், பரதன், அரசப்பன் ஆகியோரின் துணையோடு இந்த அறிக்கையை அவர் தயாரித்தார்.

இந்நூலைப் பிரச்சினையோடு தொடர்புகொண்டு செயற் பட்ட ஒருவர் தொகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நூல் எழுதுவதைவிட ஆவணம் ஒன்றை அப்படியே நூல் வடிவில் தரும் முயற்சியே நடந்துள்ளது. முறையான பதிப்பு விவரங்கள்கூட இல்லாமல் டேவிட் அவர்களின் முகவரியிலேயே வெளியாகியுள்ளது. அந்த வகையில் கூட்டு முயற்சியின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களாகவே இவை அமைந்துள்ளன. சாட்சிகள், சம்பவங்கள், புள்ளிவிவரங்கள், சான்றாவணங்கள் முதலிய அம்சங்களை வைத்து வழக்குரைஞருக்கேயுரிய முறையில் சட்டத்திற்குட்பட்டு அவர் இச்சிக்கலை விளக்கியுள்ள பாங்கு இந்நூலின் சிறப்பு. வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சாதி இயங்கும் விதத்தை நுட்பமான பார்வைகொண்டு விளக்கியுள்ளார். தலித்துகள் மட்டுமே கொல்லப்பட்ட இக் கலவரத்தை ஆராயும் விசாரணைக் கமிஷனின் தலைவராக சாதி இந்து ஒருவரை நியமிக்கக் கூடாது என்று கூறிய டேவிட் கலவரகாலத்தில் தலித்துகளுக்கு ஆதரவாயிருந்த குமரகுரு முதலியார் போன்ற தலித் அல்லாதவர்களைக் குறிப்பிடத் தவறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கலவரம் போன்ற உணர்ச்சிபூர்வமான சூழல்களின்போது கட்டமைக்கப்படும் தலித்துகள் குறித்த பொதுப் புத்தியினை அவர் எதிர்கொள்ள முற்பட்டமை சவால்தாம். கலவரம் போன்ற உணர்ச்சியை உசுப்பும் சம்பவங்களை வைத்துக் கட்சி வளர்த்து, பிறகு அதில் சமரசம் ஆவதின்மூலம் கிட்டும் சலுகைகளோ, நூலாகப் பதிவு செய்வதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களைவிடத் தங்களை மேலானவர்களாகக் காட்டிக்கொள்ளும் நோக்கமோ அவருக்கு இல்லை. தான் ஆற்றிய சமூகப் பணிகளுக்கான எந்தக் கோரலும் இல்லாமல் இன்றும் தான் நம்பும் பணிகளில் மூழ்கியிருப்பதே இதற்கான சான்று.

இந்நூலின் வடிவமைப்பும் வேறு சில அம்சங்களும் இது பிரச்சார நோக்கம் கொண்டது என்பதை அறிவிக்கிறது. இப் பிரச்சினையின் நியாயத்தை உடனடியாக மக்களிடம் கொண்டு செல்லும் தன்மை இந்நூலில் உண்டு. அந்த வகையில் இந்நூல் தலித் வாசகர்களை நோக்கி வெளியிடப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நூலின் அட்டையில் காந்திபடம் இடம் பெற்றிருப்பதோடு அதற்குக் கீழே மனிதாபிமானமுள்ள பாரத மக்களுக்கு அர்ப்பணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (பார்க்க: பிற்சேர்க்கை பகுதி மிமி – 2). பின்னட்டையில் சாதியை விமர்சிக்கும் பாரதியாரின் கவிதைவரிகள் இடம்பெற்றுள்ளன. நூலின் வாசக இலக்கு யார் என்பதை இந்த அம்சங்கள் புலப்படுத்துகின்றன. இந்நூலை முதன்முறையாகக் கண்ணுற்றபோது ஓர் ஆச்சர்யம் பிறந்தது. தலித் தொடர்பான நூலொன்றில் காந்தி படம் போட்டிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் என்று என்னிடமிருந்த இந்நூலின் பிரதியைப் பார்த்த நண்பரொருவர் கூறியதும் வியப்பு பலருக்கும் இருந்ததைக் காட்டியது. அதே போல இந்நூல் முழுவதும் அரிசன் என்ற காந்தியச் சொல்லாடல் இடம்பெற்றுள்ளது. இப்பிரச்சினையின் தலித் தரப்பு நியாயம் எல்லோருக்கும் சென்றுசேர வேண்டும் என்பதே இவ்வாறு குறிப்பிட்டதின் நோக்கம் என்று நூலாசிரியர் நேர்ப் பேச்சில் குறிப்பிட்டார்.

மேலும் விழுப்புரம் கலவரத்தின்போது தலித் மக்களுக்கு ஆதரவாயிருந்தவர்களில் காங்கிரஸ்காரர்களே அதிகம். விழுப்புரம் பெரியகாலனியைச் சேர்ந்த டி. லோகநாதன் அப் பகுதியின் காங்கிரஸ் பிரமுகர். வன்முறை தொடங்கியது முதல் விசாரணை முடியும்வரை தன்னை ஈடுபடுத்திக்கொண்டவரான எல். இளையபெருமாள் தமிழகமறிந்த காங்கிரஸ்காரர். அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷனுக்குத் தமிழ்நாடு குடியரசுக் கட்சித் தலைவர்கள் பெரியவர் சுந்தர்ராஜன், சக்திதாசன், வி.பி. முருகையன், அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் வை. பாலசுந்தரம் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனரெனினும் அம்முடிவைக் கைவிட்டுக் கமிஷனில் சாட்சியம் அளிக்க அவர்களை உந்திய திருமதி மரகதம் சந்திரசேகர் காங்கிரஸ்காரர். மொத்தத்தில் விழுப்புரம் கலவரத்தின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்த தலித் தலைவர்களும் இந்தியக் குடியரசுக் கட்சியும்தான் தலித்துகளுக்கு ஆதரவாய் இருந்தனர் என்று தெரிகிறது. இந்த ஆதரவைக் காங்கிரஸ் கட்சியுடையது என்று புரிந்துகொள்வதைவிடவும் காங்கிரஸிலிருந்துகொண்டு தலித் பிரச்சினைகளில் சுயேட்சையுடன் செயற்பட முடிந்த தலித் தலைவர்களுடையது என்று கொள்ளுவதே பொருந்தும். தலித் பிரச்சினைகளின் போது சுயேட்சையுடன் செயற்படக்கூடிய வெளி அக்கட்சியில் இருந்தது. காந்தி காலம் முதலே இருந்துவந்த அரிஜனச்சார்பு அரசியலின் தொடர்ச்சி அது. தமிழகத்தில் தலித் மக்களில் பெரும்பகுதியினர் காங்கிரஸ் ஆதரவாளர்களாய் இருந்தே பிற கட்சிகளை நோக்கிச் சென்றனர். தற்போது மாநிலக் கட்சிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் படிப்படியாக உருவாகிவிட்ட வட்டாரப் பெரும்பான்மைவாத எழுச்சிக்குப் பிறகு புதிய தலைமுறை தலித் வாக்குவங்கி காங்கிரஸை நோக்கிச் சேகரமாகவில்லை. எல். இளையபெருமாள் காங்கிரஸிலிருந்து விலகி மனித உரிமைக் கட்சியை ஆரம்பித்ததும் பாரதீய தலித் பேந்தர் போன்ற அமைப்பைத் தமிழக அளவில் தொடங்குவதில் இந் நூலாசிரியர் டேவிட் போன்றோர் இணைந்ததும்கூட இவ்வாறு தான். இந்நூலில் எடுத்துரைக்கப்படும் சட்டவாதத்திற்குப் பின்னால் அரசமைப்பு மீதான நம்பிக்கை வெளிப்படுகிறது. இந்நம்பிக்கைக்குக் காங்கிரஸ் சார்பு முரணுடையதல்ல. எனவே இந்நூல் மேல்படிந்திருக்கும் காங்கிரஸ் சார்பு இயல்பானதே.

அதேவேளையில் காங்கிரஸ் கட்சியை வலிந்து நியாயப்படுத்தவோ பிற கட்சிகளைக் குற்றம் சாட்டவோ செய்யாமல் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் ஆவணத்திற்குரிய அனைத்துத் தரவுகளோடு இந்நூல் அமைந்துள்ளது. அதிகாரிகளையும் தலைவர்களையும் விமர்சிக்கும்போதுகூட மாண்புமிகு, திரு, திருவாளர் போன்ற அடைகள் தவறாமல் குறிப்பிடப்பட்டுள்ளன.

காந்திபடம் தாங்கியிருந்தபோதிலும் காந்தியக் கண்ணோட்டத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் அம்பேத்கரிய பார்வையை இந்நூல் வரிந்துகொண்டுள்ளது என்பது சுவையான முரண். சாதியின் நுட்பத்தை அம்பேத்கர் பார்வையிலேயே இந்நூல் விளக்கிச் செல்கிறது. முன்னுரை நீங்கலாக 10 தலைப்புகளாக அமைந்துள்ள டேவிட்டின் நூலில் இரண்டாவது தலைப்பின் பெயர் ‘சாதி-கொடிய அரக்கன்’ என்பதாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் தலித்துகள் மீதான வன்முறை, சாதிபற்றிய அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றை விவரிக்கும் இப்பகுதியில் இன்றைய ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி பதிவு செய்யப்படுகிறது. இன்றைய அரசு காந்தி வழியிலிருந்து விலகிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது. 1947க்குப் பின்பும் தலித் பழங்குடியினர் வாழ்வு விடியவில்லை என்றும் காந்திய வழியில் நடப்பதாகக் கூறும் இந்திய அரசு தலித்துகளிடம் சாதி இந்துக்களைவிட அதிகளவில் விரோத மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என்றும் குறிப்பிடுகிறது. இத்தலைப்பில் காந்தியும் அம்பேத்கரும் சாதியை அணுகிய முறை விவாதிக்கப்படுகிறது. காந்தியின் கருத்துகளைப் புறந்தள்ளாமல் அம்பேத்கர் பார்வையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காந்தி வர்ணாசிரம தர்மத்தைக் கடைபிடித்தே தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். வர்ணாசிரம தர்மத்தை ஒழித்தால்தான் தீண்டாமை ஒழிக்கப்படும் என்று அவர் நினைத்துச் செயற்படவில்லை, இந்துமதப் பற்றினால் தீண்டாமையை ஒழிக்க மனமாற்றம் தேவையென்று நினைத்தார் என்று காந்தியை மதிப்பிடுகிறது. ஆனால் அம்பேத்கர் மக்களின் பேரிலுள்ள பற்றினால் தீண்டாமையை ஒழிக்க வர்ணாசிரமத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்றுக் கூறிவந்தார் என்று விளக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பேத்கரின் கருத்தை அரிசன் என்ற பின்னணியிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும் என்கிறது இந்நூல். இந்நூலில் இடம்பெற்ற ஆறு பிற்சேர்க்கைகளில் முதல் பிற்சேர்க்கை டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் என்பதாகும். சாதி, சாதிவிலக்கம், சாதியும் கிராமமும், தீண்டாமை, தாழ்த்தப்பட்டவர்களின் துயரம், சுய மரியாதை, பகவத்கீதை, சாஸ்திரங்களின் உண்மை, காந்தியும் காந்தியமும், இந்து நாகரிகம், சுதந்திரம், ஜனநாயகம், போராட்டம், அரிசன், அசுத்தத் தொழில்கள், இந்துமதவெறி, சமத்துவம், மாமேதையின் கடைசி வேண்டுகோள் ஆகிய உட் தலைப்புகளில் அம்பேத்கரின் கருத்துகள் 11 பக்கஅளவில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில் காந்திபடம் பொறித்த இந்நூலில் உள்ளீடாக அம்பேத்கரின் செல்வாக்கு தான் நிலைகொண்டுள்ளது.

டேவிட்டின் நூல், களஆய்வு, புதிய பின்னிணைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு விழுப்புரம் கலவரம் பற்றிய புதிய நூலைக்கூட எழுதியிருக்க முடியும். ஆனால் டேவிட் தொகுத்த நூலையே மீண்டும் பதிப்பிப்பதற்குக் காரணமுண்டு. முதலில் இந்நூலைத் தொகுப்பதற்கான டேவிட்டின் நோக்கம் வெளிப்படையானது என்பதை நாம் பார்க்க வேண்டும். விழுப்புரம் கலவரம் பற்றி முதலமைச்சர் எம்ஜிஆர் “விழுப்புரம் கலவரம் சாதிக் கலவரமல்ல. சமூக விரோத தீயசக்திகளினால் ஏற்பட்ட கலவரம்” என்று கருத்து தெரிவித்தார். பிறகு அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக விசாரணைக் கமிஷன் ஒன்றையும் நியமித்தார். முதலமைச்சரின் கூற்றுக்கேற்பக் கமிஷன் தன் அறிக்கையைத் தயாரிக்குமென்ற ‘வழக்கம்’ காரணமாகத் தலித் மக்கள் சார்பிலிருந்து ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டு விசாரணைக் கமிஷனிடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கைதான் இந்நூல். ‘எனது சமுதாயக் கடமையென்றும் பொறுப்பு என்றும் உணர்ந்த நான் விழுப்புரம் விசாரணைக் கமிஷனில் தாழ்த்தப் பட்ட மக்கள் சார்பில் ஆஜராகி விசாரணைக் கமிஷன் முன்பு எழுத்து மூலமாக எனது வாதங்களைச் சமர்ப்பித்தேன். தாழ்த்தப்பட்ட மக்களும் மற்றவர்களும் விழுப்புரம் கலவரம் சாதிவெறியால் ஏற்பட்ட கலவரம் என்று தெரிந்துகொள்ளும் வகையில் இந்தச் சிறியப் புத்தகத்தை வெளியிட்டுள்ளேன்’ என்று டேவிட்டும் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்நிலையில் அரசு நியமித்த சதாசிவம் கமிஷன் அறிக்கையைப் படித்த பின்பு டேவிட் அறிக்கையை மீண்டுமொருமுறை ஒப்பிட்டுப் படித்தேன். அப்போதுதான் டேவிட் அறிக்கையின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. புதிதாக எழுதுவதைக் காட்டிலும் அரசாங்க அறிக்கையை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட தலித் மக்களின் எண்ணப்போக்கோடு தொடர்புகொண்டிருந்த டேவிட் தொகுத்த இந்நூலைப் பதிப்பிப்பதே பொருத்தம் என்றுணர்ந்தேன். விழுப்புரம் கலவரத்தின் பின்னணியை உரிய சான்றுகளோடு இதைக் காட்டிலும் சிறப்பாக வேறுயாரும் எடுத்துரைத்துவிட முடியாது என்ற உணர்ச்சியின் காரணமாகத்தான் இதைப் பதிப்பித்து விட வேண்டுமென்று உறுதிகொண்டேன்.

m

விழுப்புரம் கலவரத்தை விசாரிப்பதற்காக 29.07.1998ஆம் நாளிட்ட அரசாணையின் மூலம் நீதிபதி ஆர். சதாசிவம் தலைமையிலான விசாரணைக் கமிஷனைத் தமிழக அரசு அறிவித்தது. 31.07.1978இல் நீதிபதி சதாசிவம் கமிஷனின்  தலைவராகப் பொறுப்பேற்றார். 10.08.1978 முதல் சாட்சிகளின் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிப்பதென முதலில் அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை பிறப்பித்த ஆணைகள் மூலம் கால அளவு முதலில் மூன்று மாதங்களுக்கும் அடுத்து ஒரு மாதமும் நீட்டிக்கப்பட்டு ஆறு மாதத்தில் நிறைவு செய்யப்பட்டது. 211 சாட்சிகளோடு 310 சான்றாவணங்களோடு 150 பக்கங்களில் கமிஷன் அறிக்கை அமைந்தது.

ஆனால் உடனடியாக விசாரணைக் கமிஷனுக்குத் தலித் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்குச் சில காரணங்கள் இருந்தன. கலவரம் தொடங்கிய ஜுலை 25ஆம் தேதி அதிகாலையில் மதுரை நகராட்சித் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு விழுப்புரம் வழியாக முதலமைச்சர் எம்ஜிஆர் சென்னை சென்றார். விழுப்புரம் நகரின் பதட்ட நிலைமை தெரிந்தும் எம்ஜிஆர் அதில் அக்கறை காட்டாமல் சென்று விட்டார் என்று தலித் மக்கள்தரப்பு கருதியது. அடுத்ததாக மாவட்ட ஆட்சித் தலைவர் அரசுக்குச் சமர்ப்பித்த அறிக்கையிலும் 09.08.1978ஆம் நாளில் கலவரப் பாதிப்புகளைப் பார்வையிட்டுவிட்டு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேசிய எம்ஜிஆரின் உரையிலும் “விழுப்புரம் கலவரம் சாதிக் கலவரமல்ல, மாறாக சமூக விரோதத் தீயசக்திகளின் கலவரம்” என்று சொல்லப்பட்டமை விசாரணைக் கமிஷன்மீதான நம்பிக்கையை முற்றிலும் கைவிடவைத்தது. அரசாங்கத்தின் கருத்தினையே அரசால் நியமிக்கப்படும் கமிஷனும் பிரதிபலிக்கும் என்று அப்போது தலித் சார்பாகச் செயற்பட வந்த தலித் தலைவர்கள் கருதினர். அதாவது விசாரணைக் கமிஷனின் தலைவராக ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவரை நியமிக்கக் கூடாதென்றும், தலித் இசுலாமிய மற்றும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தவர்களையே தலைவராக நியமிக்க வேண்டுமெனவும் அவர்களால் கோரப்பட்டது. அப்போதைய சட்ட அமைச்சர் கே. நாராயணசாமி முதலியார் ஆலோசனையின்படியே விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். சதாசிவம் அவர்களை நியமித்தமை கமிஷனின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. கலவரத்தில் பங்கெடுத்த வகுப்பொன்றினைச் சேர்ந்தவராகக் கமிஷன் தலைவர் இருந்தால் விசாரணை நியாயமாக நடைபெறாது என்ற எண்ணமே இதற்குக் காரணம். இந்நிலையில் இக்கலவரக் காலத்தில் தலித் மக்களுக்கு ஆதரவான பணிகளில் ஈடுபட்ட எல். இளையபெருமாள், நாடாளுமன்ற உறுப்பினரான மரகதம் சந்திரசேகர் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் விசாரணைக் கமிஷனைப் பயன்படுத்திக்கொள்வதென முடிவெடுக்கப்பட்டு தலித் அமைப்புகளும் தலித் செயலாளிகளும் விசாரணைக்கு ஒத்துழைத்தனர். ஆனால் தலித் அமைப்புகளும் மக்களும் எதிர்பார்த்ததைப் போலவே அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிஷன் தலித் மக்கள்மீது மீண்டும் ஒருமுறை குறியீட்டு ரீதியான வன்முறையை நிகழ்த்திக் காட்டியது.

1990களில் நடந்த சாதி வன்முறைகளுக்காக நியமிக்கப்பட்ட கோமதிநாயகம் கமிஷன் (தென்மாவட்ட கலவரங்கள் – 1997) மோகன் கமிஷன் (நெல்லை தாமிர பரணி படுகொலை – 1999) ஆகியவை அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாறி தலித் மக்களின் இழப்புகளுக்கு நியாயம் செய்யவில்லை என்பதை நாமறிவோம். 1990களில் மட்டுமல்ல எப்போதுமே விசாரணைக் கமிஷன்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் துடைக்கப்பட்டதாகச் சான்றுகள் கிடைக்கவில்லை. தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை உலகறியவும் நீதிகிடைக்கவும் விசாரணைக் கமிஷனை ஒடுக்கப்பட்ட மக்கள் கோருகிறார்கள். ஆனால் அரசாங்கமோ குறிப்பிட்ட பிரச்சினையை ஒட்டி உருவாகியுள்ள மக்களின் கோபத்தை ஆறப்போடவும் தன் பொறுப்பைப் பெயரளவில் மட்டுமே நிறைவேற்றவும் ஒரு கண்துடைப்பு முயற்சியாகவே விசாரணைக் கமிஷனை நியமிக்கிறது. விழுப்புரம் கலவரத்திற்காக அரசாங்கம் நியமித்த கமிஷன் ஒரு கண்துடைப்பு முயற்சியே. பெரும் கலவரமும் 12 பேரின் படுகொலையும் நடந்துவிட்டதால் இப் பிரச்சினை இந்திய அளவிலான கவனத்திற்குச் சென்றது. தமிழகத்தின் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சந்திரசேகர், ஜெகஜீவன்ராம் ஆகிய அகில இந்தியத் தலைவர்களும் விழுப்புரத்திற்கு வந்து நேரடியாகப் பார்வையிட்டதும் இப் பிரச்சினைக்காக அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலை உருவானது. விழுப்புரம் கலவரத்தை ஆராய்வதற்காக நாடாளுமன்ற குழுவொன்றை மத்திய அரசு நியமிக்க இருந்தது. இச் சூழலில்தான் தமிழக அரசு உடனடியாக விசாரணைக் கமிஷனை நியமித்தது.

ஆர். சதாசிவம் தலைமையிலான விசாரணைக் கமிஷன் அறிக்கையை முதன்முறையாக வாசித்தபோது அரசு சார்பாக இப்படியொரு அறிக்கையை எழுத முடியுமா என்ற சந்தேகம் தான் தோன்றியது. விழுப்புரம் கலவரத்திற்கானக் காரணங்களாக தலித் அல்லாத வகுப்பினர் கூறிய கூற்றுகளை அப்படியே பிரதிபலிப்பதாக அந்த அறிக்கை எழுதப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. மேலும் மாவட்ட ஆட்சியரும் முதலமைச்சரும் கலவரம்பற்றிக் கூறிய கூற்றினைச் சட்ட ரீதியாக நிறுவிக்காட்டும் வேலையையே அது செய்திருப்பதையும் கவனிக்க முடிந்தது. ‘தலித்தரப்பு சமூகவிரோதி களை’ இனங்காட்டி இக்கலவரம் அதற்கான எதிர்வினையே என்று கூறியிருப்பதோடு இக்கலவரத்தில் சாதி உணர்ச்சிக்குச் சிறிதும் இடமிருந்திருக்கவில்லை என்று சொல்லி முடிந்திருக்கிறது. தலித் மக்களுக்கு ஆதரவாக இரண்டே இரண்டு சம்பவங்களை மட்டுமே அவ்வறிக்கை ஏற்றுக்கொள்கிறது. அதாவது கலவரம் தீ வைப்பு சம்பவத்திலிருந்தே தொடங்கியது. தலித்துகளின் வீடுகளைத் தீயிலிட்டதிலிருந்தே தீவைப்பு தொடங்கியது என்பதையும் கொலையுண்ட 12 பேரும் தலித் மக்கள் என்பதை ஒப்புக்கொண்டதையும் தவிர வேறெதையும் அவ்வறிக்கை தலித்துகளுக்குச் செய்யவில்லை. இச் சம்பவங்கள் சாதியுணர்ச்சியோடு தொடர்புகொண்டவைதாமா? என்ற சந்தேகம்கொண்டு ஆராயக்கூட அது விரும்பவில்லை. மறுக்க முடியாத, வெளிப்படையான பெரும் இழப்புகளாக இருப்பதாலே தலைப்பையும் படுகொலையையும்கூட அது ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மற்றபடி தலித் தரப்புச் சேதங்களையும் சாட்சியங்களையும் அய்யத்திற்குரியவையாகவும் பொய்யானவையாகவும் மாற்றிக் காட்டுவதிலேயே அவ் வறிக்கை பெருமளவு பக்கங்களைச் செலவிட்டுள்ளது.

பாகுபாட்டின் காரணமாக நீண்டகாலம் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை அதிலிருந்து மீறுவதற்கான அவர்களின் எத்தனம் இதை ஆதிக்க வகுப்பினரின் எதிர்கொள்ளும் முறை போன்ற சமூகவியல் நோக்கைச் சிறிதளவும் கொண்டிராத அவ்வறிக்கை முழுக்க தலித்துகளையே குற்றவாளிகளாக்கியிருக்கிறது. 24.07.1978ஆம் நாளன்று இரவு சுமார் 1:30 மணிக்கு நந்தனார் வீதியில்தான் முதல்முதல் தீப்பிடித்திருக்கலாமென எண்ணத் தோன்றுகிறது (பக்:31) என்றும் விழுப்புரம் சம்பவங்கள் சைக்கிள் ரிக்ஷாக்களும் அவற்றின் ஓட்டுநர்களும் தாக்கப்பட்டதை அடுத்துத் தொடங்கியதாகத் தெரிகிறது (பக்:30) என்றும் குறிப்பிடும்போது தலித் தரப்புச் சேதத்தை ஒப்புக்கொள்வதுபோல் தெரிந்தாலும் ‘தோன்றுகிறது, தெரிகிறது’ என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்களாக அவற்றைத் தருவதைக் கவனிக்கலாம். அதே வேளையில் தலித் மக்களின் மீறல்களைக் கூறும்போது பெரியகாலனியிலுள்ள சிலரின் ரௌடித்தனங்களைப் பொறுத்துக்கொள்ள வியாபாரிகளால் முடியவில்லை. பெரிய காலனியில் சமூகவிரோதிகள் பலர் வாழ்கின்ற காரணத்தினால் அப்பகுதி குற்றங்கள் நிகழ்வதற்குரிய இடமாக ஆகிவிட்டிருப்பதை அறிந்துகொண்டுள்ளேன். தாக்குதல்கள் பெரியகாலனி அரிசனங்களில் சமூக விரோதச் சக்திகளுக்கு எதிராகவே நடை பெற்றன என்பதற்கு ஏராளமான சாட்சியங்கள் உள்ளன என்றெல்லாம் துல்லியமாகவும் உறுதியாகவும் இந்த அறிக்கை கூறுவதைக் காணலாம். இந்த அறிக்கையின் அடிப்படையில் மட்டும் ஒருவர் இக்கலவரத்தைப் பற்றி யோசிக்க முடிந்தால் தலித்துகள் மீதான இத்தாக்குதல் தவிர்க்க முடியாததே என்ற முடிவை மட்டுமல்ல நியாயமானது என்ற முடிவையும் வந்தடைவார்.

இவ்வாறு அரிசன சமூகவிரோதிகள் பற்றிப் பேசும் அறிக்கை “பேருந்துநிலையம், அங்காடி நிலையம் மாற்றப்பட வேண்டுமெனக் கோரியது அரிசன சமூக விரோத சக்திகளால் அன்றி, அரிசனங்கள் மீதுள்ள கெட்ட எண்ணம் காரணமாக இல்லை” (பக்:83) என்றதோடு சட்டமன்றத்தில் இக்கலவரம் சமூக விரோதக் கலவரமல்ல என்று முதலமைச்சர் எம்ஜிஆர் கூறியது சரியே என்றும் வழிமொழிகிறது. ஆனால் தலித் தரப்பு சாட்சியங்களும், டேவிட், பரதன் பிருந்தாவன் மோசஸ் ஆகியோரின் அறிக்கைகளும், இந்நூலின் மறுபதிப்புக்காகச் செய்யப்பட்ட களஆய்வும் விசாரணைக் கமிஷனின் இம் முடிவை மறுப்பதோடு, தலித்துகள் எண்ணிக்கை பலத்தால் விழுப்புரம் நகரத்தின் மையத்திலிருந்து பொது அங்காடியையும், பேருந்து நிலையத்தையும் தம் செல்வாக்கில் இருத்திவைத்திருந்தமையால் உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்த சாதி இந்துக்களின் கோபம் ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தது. அது கலியபெருமாள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் காரணமாகக் கொண்டு வெளிப்பட்டது என்பதை மிகத்தெளிவாக அறிய முடிகிறது. தாக்குதல் சம்பவத்திற்கு எதிராகத் தலித் அல்லாதவர்கள் நடத்திய ஊர்வலத்தில் அரிசனங்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்படவில்லை என்று சாட்சியம் தெளிவாகக் கூறியுள்ளது என்று இப்பிரச்சிணையை ஆர். சதாசிவம் முடித்துக் கொள்கிறார். சாதி இந்து தரப்பிலான இதுபோன்ற சாட்சியங்களைக் கேள்வியேதுமின்றி ஏற்றுக்கொள்ளும் அறிக்கை தலித் தரப்பு சாட்சியங்கள்மீது கடுமையாக அய்யம் கொள்கிறது. உதாரணமாக மோதலுக்குத் தொடக்கமாகக் கொளுத்தப்பட்ட வீட்டைச் சேர்ந்த ஆசிரியையான திருமதி கல்யாணியின் சாட்சியத்தை “திருமதி கல்யாணி நம்பத்தகுந்த சாட்சியைப் போல் தோன்றினாலும் அவருடைய சாட்சியங்களேகூடக் கற்பனை கலந்தவையாக உள்ளன” (பக்:33) என்கிறார். அதே போல தலித் பெண் ஒருவரை மணந்துகொண்டு வாழும் தலித் அல்லாத மகேந்திரன் என்பவர் தலித் அல்லாத வகுப்பினரின் முறைமீறல்களைப் பற்றிச் சாட்சியம் கூறியதை எந்தவிதக் காரணமும் இல்லாமல் “அவரது சாட்சியம் நம்பகமானது என்று என்னால் கருத இயலவில்லை” (பக்:19) என்கிறார். முறைப்படி தாலி, திருமணம் என்றில்லாமல் சேர்ந்து வாழும் அத் தம்பதியினரை ஒருவித அசூயையோடு நோக்கும் பார்வையாக இது அமைந்துள்ளது. பிரச்சினையின் தொடக்கமாகக் கூறப்படும் சாலம்மாள் என்பவரையும்கூட சண்முகம் என்பவரின் முறைப்படியான மனைவி இல்லை என்று கூறுவதில் அறிக்கை அதிக அக்கறை காட்டியிருக்கிறது. தலித்துகளின் கடந்தகால ‘சமூக விரோதச் செயல்’களையெல்லாம் திரட்டிக்காட்டித் தாம் கட்டமைக்க விரும்பும் தலித்துகள் பற்றிய பிம்பங்களை உறுதிப்படுத்துகிறார். மேலும் அறிக்கையின் எல்லைக்கு அப்பாற்பட்டு தலித்துகள்பற்றிச் சில விமர்சனங்களை சதாசிவம் அறிக்கை கூறுகிறது. செல்லாராம் (சாட்சி எண்:19) என்பவர் அரிசனங்களின் அந்தஸ்தைக் கண்டு பிறர் பொறாமை கொண்டனர் என்றும் பெரியகாலனியைச் சேர்ந்தோர் மற்றவர்களைவிடப் படித்துப் பணியாற்றுபவர்களாக உள்ளனர் என்றும் அளித்த சாட்சியத்தின்மீது “இத்தகையவர்கள் பெரியகாலனியில் இல்லை. இந்த அரிசனங்கள் படித்துவிட்டு நல்லதொரு நிலைக்கு வந்தவுடன் தங்களது சொந்த நலனைப் பெருக்கிக்கொள்வதுடன் மனநிறைவடைந்து தங்களது இனத்தைச் சேர்ந்தோரின் தேவைகளை முற்றிலும் புறக்கணித்துவருகின்றனர்” என்கிறார்.

இதுபோன்ற அரசு விசாரணைகளின்போது சாட்சியங்களும் சான்றுகளும் இருந்துவிட்டாலே உண்மையென்று கருதப்பட்டுவிடுகின்றன. இந்நிலையில் தீர்ப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அது நீதியாக இருக்க வேண்டிய அவசியத்தை யாரும் எதிர்பார்ப்பதில்லை. பலநேரங்களில் சாட்சியங்கள் இல்லாத காரணத்தாலேயே நீதி கைகூடுவதில்லை. சாதி போன்ற பழமையான தாக்கங்கள் நிலவும் நம்சூழலில் பிரச்சினையின் சமூகவியல் காரணிகளும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் சதாசிவம் அறிக்கையில் அதற்கானச் சிறு சுவடும் இல்லை. இக்கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் பெரியகாலனியைச் சேர்ந்த தலித்துகளே அதிக அளவில் சாட்சியம் அளித்தனர். இருந்தும் பெரிய காலனி மக்கள்மீதுதான் அதிகக் குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை சுமத்தியுள்ளது. தலித் அல்லாத வகுப்பினரின் குற்றங்கள் அதே அளவிற்கோ அதற்கும் அதிகமாகவோ இருந்தன எனினும் அறிக்கையில் காட்டப்படவில்லை. எடுத்தாளப்படும் சிலவும்கூட மெய்பிக்கப்படாதவையாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான் டேவிட் அவர்களின் அறிக்கை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சதாசிவம் கமிஷன் விசாரணையை நடத்திக்கொண்டிருந்தபோது டேவிட், பரதன் – பிருந்தாவன் மோசஸ் மற்றும் பல தலித் செயற்பாட்டாளர்கள் அதன்மீது நிகழ்த்திய இடையீடு விசாரணையைக் கடுமையாகப் பாதித்தது. விழுப்புரம் மோதலின்போது விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கிருஷ்ணன்மீது தலித் மக்கள் ஒருசேரக் குற்றம் சாட்டினர். பெரியகாலனியைச் சேர்ந்த சின்னராஜு என்ற இளைஞர், கிருஷ்ணன் தம் ஆட்களுடன் வந்து தீ வைத்ததைப் பார்த்ததாகப் பார்வையிட வந்த முதலமைச்சர் எம்ஜிஆரிடம் கூறினார். அதை எழுத்து ஆவணமாக அவர் தரக்கேட்டு அந்த இளைஞனும் தந்ததாகக் கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணனைப் பற்றி சொல்லிய கருத்துகள் வெளியே தெரியுமானால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென முதலமைச்சர் அஞ்சியதாக விசாரணைக் கமிஷன் முன் சின்னராஜ் சாட்சியம் அளித்தார். சின்னராஜுவின் இச்சாட்சியம் குறித்து விசாரிப் பதற்கு முதலமைச்சரை அழைக்க வேண்டுமென டேவிட் கமிஷ னிடம் கோரினார். டேவிட்டின் மனு ஏற்கப்பட்டு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் எம். இராமையா 180ஆவது சாட்சியாகச் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் “டேவிட் கேட்டுக்கொண்டதற்கிணங்க அரிசனங்கள் அல்லாதார் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கையையும் அவ்வினத்தைச் சேர்ந்த ரவுடிகளின் விவரத்தொகுப்பையும் அனுப்பிவைக்குமாறு நான் காவல்துறையினருக்கு ஆணையிட்டேன்” என்று நீதிபதி சதாசிவம் கூறுவதிலிருந்தும் டேவிட் தலையீட்டின் முக்கியத்துவத்தை உணரலாம். இதற்காகவே விசாரணை அறிக்கையின் பெரும்பகுதியை டேவிட் உள்ளிட்டோரின் அறிக்கைக்குப் பதிலளிப்பதற்கு நீதிபதி சதாசிவம் செலவிட்டுள்ளார்.

விழுப்புரம் வன்முறைக்கு கலியன் தாக்கப்பட்ட சம்பவம்தான் உடனடிக் காரணம். அதேவேளையில் அதற்கு முந்திய பல சம்பவங்கள் காரணமாகத்தான் வன்முறை ஏற்பட்டது என்று டேவிட் கூறுவதைச் சரியானது என்று அறிக்கை ஏற்கிறது. ஆனால் அதற்கு முந்திய பல சம்பவங்கள் எவை என்பதில் தான் சதாசிவம் கமிஷனிடமிருந்து டேவிட் வேறுபடுகிறார். சாதிய கட்டுமானத்திற்குள் அடங்காததால் தலித் அல்லாத பிறவகுப்பினர் மனங்களில் புகைந்துகொண்டிருந்த சாதியப் பகைமையையே முந்திய சம்பவங்களாக டேவிட் கருதினார். தலித்துகளுக்கும் தலித் அல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடு என்ற வகையில் கலியன் தாக்கப்பட்ட சிறு சம்பவத் திற்காகக் காவல்துறை கடையடைப்பை அனுமதித்திருக்க வேண்டியதில்லை என்ற கூற்றை “டேவிட்டின் சற்று வேகத்துடன் கூடிய வாதம்” என்று குறிப்பிடும் சதாசிவம் கமிஷன் “கலியன் சம்பவத்திற்காக மட்டும் கடையடைப்பு நடத்தப்படவில்லை. அதற்கு முந்திய பல சம்பவங்கள் காரணமாக நடத்தப்பட்டன” என்கிறது. ஆனால் தலித் தரப்பிலான தொடர்ச்சியான சமூகவிரோத மோதல்களே இந்த முந்திய சம்பவங்கள் என்று டேவிட்டிடமிருந்து மாறுபட்டுக் கூறுகிறது.

சதாசிவம் கமிஷன் அறிக்கையையும் டேவிட் அறிக்கையையும் ஒப்பிட்டு யாரும் படிப்பார்களானால் டேவிட் அறிக்கை கொண்டிருக்கும் தர்க்கமும் வாதப்பொருத்தமும் சான்றாவணங்களும் சதாசிவம் அறிக்கையில் இல்லாமலிருப்பதை மிக எளிமையாக அறிய முடியும். சதாசிவம் அறிக்கையில் சில சாட்சியங்களையும் கூற்றுகளையும் புறக்கணிப்பதற்கு எவ்வித தர்க்க ரீதியான காரணங்களும்கூட இருப்பதில்லை.

அரிசனங்கள் படும் அல்லல்கள் குறித்து அம்பேத்கர் எழுதியுள்ள கருத்துகளைக் கமிஷனுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் டேவிட் விரிவாக எடுத்தாண்டுள்ளார். டேவிட் எடுத்துவைக்கும் அம்பேத்கரின் இக்கருத்துகளை எதிர்கொள்ளும் விதமாக நீதிபதி சதாசிவம் வேறுபதிவுகளைத் தம் அறிக்கையில் மேற்கோளிடுகிறார். அதாவது அனைத்துலக நீதிபதிகளின் ஆணைக் குழு 1978 ஜூனில் ‘இந்தியாவில் முன்பிருந்த தீண்டத்தகாதவர்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ‘சுவைமிக்க’ கட்டுரையைக் காட்டுகிறார். அதில் நான்கு வகை வர்ணங்களுக்குள் அடங்காத தீண்டப்படாதவர்களுக்குள்ளும் பல்வேறு சாதிப் பிரிவினைகள் இருப்பது துரதிஷ்டவசமானது என்கிறார். இக்கருத்தை இவ்விடத்தில் அவர் குறிப்பிடுவதற்கானக் காரணம் ஏதுமில்லை. மேலும் தீண்டத்தகாதவர்களின் இழிநிலையைப் போக்க விரும்பிய இந்திய சீர்திருத்தவாதிகளான ராஜாராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், மகாதேவ கோவிந்தரானடே, கோபாலகிருஷ்ண கோகலே, தாகூர், மகாத்மா காந்தி ஆகியோரை மட்டுமே காட்டும் அறிக்கை பின்னர் இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவுகளால் இக் கொடுமை தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. தீண்டத் தகாதவர்களுக்குத் தனிஉரிமைகளும் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தாலும் அவை அரிசனங்கள், அரிசனங்கள் அல்லாதார் பிரிவைச் சமுதாயத்தில் நிரந்தரமாக்கும் விளைவைத் துரதிருஷ்டவசமாக ஏற்படுத்திவிட்டது என்கிறார். விழுப்புரம் கலவரத்தில் சாதிமனோபாவத்தை ஒரு அம்சமாகக்கூட ஆர். சதாசிவம் ஆராய விரும்பாததை நாம் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஆதிக்கச் சாதிக்கும் ஒடுக்கப்பட்டோருக்குமான முரணை ஆராய வேண்டிய இடத்தில் ஒடுக்கப்படும் சாதிகளுக்குள்ளும் முரண்பாடுகளுண்டு என்று கூறுவது, இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைச் சாதியை நிரந்தரமாக்கும் முயற்சி என்று குறிப்பிடுவது ஆகியவற்றின் மூலம் மோசமான சமூகவியல் கண்ணோட்டத்தை அவர் பிரதிபலிக்கிறார். இவையெல்லாவற்றையும்விட அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டியின் உரையை மேற்கோள்காட்டி “சலுகைகளைச் சாதியை அடிப்படையாக வைத்து அளிப்பதற்குப் பதிலாக அவர்களுடைய பொருளாதார நிலையிலிருந்து அளிக்கலாம்” என்ற அவரின் கூற்றை அறிக்கை வழிமொழிகிறது. விழுப்புரம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித் அல்லாத சாதிகளிலும் ஏழைகளுண்டு என்பதைக் குறிப்பிடும் இடத்தில் இந்தக் கருத்தை அவர் மேற்கோள்காட்டுகிறார்.

அதேபோல தலித் மக்கள் சார்பாக நகரத்தில் செயற்பட்ட தலித் பிரமுகர்களை அவர்களின் ‘சட்டத்திற்கு அப்பாற்பட்ட குழுவாதங்களை’ மட்டுமே கணக்கில்கொண்டு அறிக்கை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. அதோடு அவர்களைப் பெரிய அளவில் கொச்சைப்படுத்தியும் உள்ளது. கட்சி, கொள்கை என்றளவில் இல்லாமல் நகர்ப்புறச் சேரிக் கலாச்சாரத்தில் குழுக்களாகப் பிரிந்தியங்கும் தலைவர்கள் தாம் சார்ந்த குழுவின் நலன்களைக் காப்பவர்களாகவும் நாளடைவில் அக்குழுவினர் அத்தலைவர்களின் தனித்த தலைமையை அங்கீகரிப்பவர்களாகவும் மாறிப்போகின்றனர். ஆனால் பெரியகாலனியில் இரண்டு குழுக்களாகச் செயற்பட்ட ஜோதிலிங்கம், லோகநாதன் ஆகிய இருவருமே கலவரத்தின்போதும், முன்பும் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு அரண்களாக இருந்தனர். தலித் மக்களுக்கான இருவேறு தலைமைகளாக விளங்கினாலும் பெரியகாலனி மக்களிடம் ஏற்படும் பிரச்சினைகளையும், பிற வகுப்பினரோடு உருவாகும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர்களாக இருந்தனர். இத்தலைமை தவிர்க்க முடியாததாக மாறிப்போனபோது சாதி இந்துக்களால் அதைத் தாண்ட முடியவில்லை. காய்கறி மார்க்கெட், பேருந்துநிலையம் முதலிய இடங்களில் தலித்துகளின் ஏகபோகம் இவ்விரு தலைவர்களின் நிழலின்கீழ்தான் சாத்தியப்பட்டிருந்தது. எனவே தலித்துகள் மீதான கோபம் அவர்தம் தலைவர்கள்மீதான கோபமாக இருந்ததையும் புரிந்துகொள்ள முடிகிறது. தனித்த தொழில் தலைமை, பஞ்சாயத்து இவற்றினூடாக உருவாகும் கொடுக்கல் வாங்கல் ஆகிய சட்டத்திற்கு உள்ளடங்காத காரியங்களை நீதிபதி சதாசிவம் சமூக விரோதச் செயல்களாக மட்டுமே விளக்கியிருப்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல.

பலவேளைகளில் இந்த உள்வட்டாரத் தலைவர்கள் தலித்துகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளைப் பலவந்தமாகச் செயற்படுத்துகிறவர்களாகவும் இருந்துவிடுகின்றனர். அதனை முற்றிலும் சமூகவிரோதக் காரியமாக மட்டுமே பார்க்க முடியுமா என்கிற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. ஜோதிலிங்கம் மட்டுமல்ல அவரின் தந்தை முனுசாமியும் ஒரு கேடி (ரவுடி) அதாவது குற்றவாளி என்கிறது அறிக்கை. ஓரிடத்தில் லோகநாதனைத் தவிர வேறுயாரும் விழுப்புரத்தில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாகக் கூறவில்லை’ என்று கூறி அப்புகாரைப் புறக்கணிக்கும் அறிக்கை, மற்றோரிடத்தில் தங்களிடம் சாதியுணர்வு இல்லை என்று சாதி இந்துக்கள் கூறியதை அப்படியே ஏற்கிறது. பெரியகாலனி சமூகவிரோதிகளுக்கு லோகநாதனும் ஜோதிலிங்கமும் ஆதரவளிக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக மெய்ப்பிக்கிறது (பக்:24) என்றும், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன்மீது சாட்டப்படும் குற்றசாட்டுகளை ஜோதிலிங்கமும் லோகநாதனும் தவறாக சம்பந்தப்படுத்துகின்றனர் என்றும் இருவேறாகப் பகுத்து ஜோதிலிங்கத்தையும், லோகநாதனையும் இயல்பிலேயே மோசமானவர்களாகக் காட்டுகிறது. கலவரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரத்தில் இல்லையென்பதை ‘சாட்சியங்கள்வழி’ கமிஷன் ஏற்றுக்கொள்கிறது. ஒருவர் சம்பவ இடத்தில் இல்லையென்பதாலேயே பிரச்சினையோடு தொடர்பற்றவர் என்று தீர்ப்பிடும் அளவிற்குத் தான் இக்கமிஷனின் லட்சணம் இருந்தது. லோகநாதனும் ஜோதிலிங்கமும் ஆளுங்கட்சிக்கு எதிரானவர்கள் என்று கூறுவதன்மூலம் கலவரத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற எதிர்விற்குள் நிறுத்தி எளிமைப்படுத்துகிறார். விழுப்புரம் நகரத்தில் விகிதாச்சாரப்படிப் பெரிய காலனியில்தான் ரவுடிகள் அதிகம். அரிசனங்கள் அல்லாதோரில் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றோர் யாரும் இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும் (பக்:20) என்று குறிப்பிடும் கமிஷன் அறிக்கை படுகொலைகள் நடத்தப்படுவதற்குக் காரணமான வதந்திகூட பெரியகாலனியின் சமூக விரோதிகள் ஏற்கனவே செய்து வந்த சமூகவிரோதச் செயல்களால் அச்சுறுத்தப்பட்ட மனநிலையிலிருந்துதான் பிற வகுப்பினரால் நம்பப்பட்டது என்ற பொருளில் விளக்கியிருப்பதை பார்க்க முடியும். மேலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர்களைக்கூட இந்த அறிக்கை கொச்சைப்படுத்தத் தவறவில்லை. கொல்லப்பட்ட மணிகுண்டு என்பவரும் 12 வயது சக்தி என்பவரும் மருதூருக்குக் கஞ்சா வாங்க வந்தபோது கொல்லப்பட்டனர் என்றும் அதேபோலக் கொல்லப்பட்டவர்களில் இருவர் அண்ணாநகரில் தீ வைத்த சமூக விரோதிகள் என்றும் அறிக்கை குறிப்பிட்டது. தலித் தரப்பு பற்றிய இத்துல்லியத்தில் சிறுபகுதியைக்கூட கொன்றவர்களையோ, கலவரத்தில் ஈடுபட்ட தலித் அல்லாத வகுப்பினர்களையோ அடையாளம் காட்டுவதில் இந்த அறிக்கை காட்ட வில்லை.

இறுதியில் எவ்வித இழப்பீட்டையும் கமிஷன் பரிந்துரைக்கவில்லை. தீ வைப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரினைத் துடைக்கும்பொருட்டு தமிழக அரசு உணவும் ரொக்க உதவியும் வழங்கியது. கொலையுண்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்கியது என்று கூறியதோடு நின்றுகொண்டது. துப்பு துலக்கும் பொறுப்பை ஏற்றுள்ள சிஐடியினர் குற்றவாளிகளைக் கைது செய்து தண்டிப்பார்களென்று கூறியது. மேலும் வருங் காலத்தில் பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு காலனி வீடுகள் தரப்பட வேண்டும். மாணவர் விடுதியும் அவ்வாறே அமைய வேண்டும். பொய்ச்செய்தி பரப்புவோரைக் கிரிமினல் குற்றம் சாட்டித் தண்டிக்க வேண்டும். பெரியகாலனியில் சிறுகாவல் நிலையம் அமைக்க வேண்டும். நல்லிணக்க அமைதிக்குழு அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இவையனைத்தும் பொத்தாம்பொதுவான பரிந்துரைகளே.

m

விழுப்புரம் கலவரம் உணர்த்தும் அனுபவங்களும் உண்மைகளும் ஏராளம். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் நடந்த கலவரம் இது. காங்கிரஸ், திமுக, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக முதலிய கட்சிகளின் காலத்தில் நடந்த கலவரங்களுக்குப் பதிவுகள் உண்டு. ‘ஏழைப் பங்காளனான’ எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திற்கு இத்தகுப் பதிவுகள் இல்லை. 1979ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் உஞ்சனையில் ஐந்து ஒடுக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டதும் எம்ஜிஆர் ஆட்சியின்போதுதான். சாதியாதிக்கம் காரணமாகக் கலவரங்கள் எழுந்து தலித்துகள் பாதிக்கப்படுவார்களானால் எந்த ஆட்சியும் – கட்சியும் எவ்வாறு விளக்குவார்களோ அவ்வாறுதான் விழுப்புரம் கலவரத்தை எம்ஜிஆரும் விளக்கினார். டேவிட் தொகுத்த இந்நூல் உருவானதற்கான காரணமே அவர் கூறிய கூற்றுதான். ஒடுக்கப்பட்டோர்மீதான ஒடுக்குமுறையையோ சுரண்டலையோ நிலவும் சமூக அமைப்பின் கோளாறாகப் பார்த்து அதைச் சீர்படுத்தாமல் வெறுமனே வகுப்புகளின் ஒழுங்கீனமாகக் காட்டி சமூகத்தைச் சீர்படுத்துவதிலிருந்து விலகிக்கொள்ளும் அதிகாரவர்க்கத்தின் உருவாக்கம்தான் இச்சொல்லாடல். சக்திவாய்ந்த சிக்கலொன்றைச் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றிக் காட்டும்போது அதை எதிர்கொள்வது மட்டுமல்ல, பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதும் எளிமையாகிவிடுகிறது. ஆளும் வர்க்கம் எப்போதுமே இவ்வாறுதான் நடந்துகொள்ள விரும்புகிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணத்தை இந்நூல் தருகிறது. பீகார் மாநிலம் பெலுச்சி நகரில் தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது உள்துறை அமைச்சர் சரண் சிங் சமூக விரோதச் சக்திகளின் மோதல் என்றுதான் விளக்கியிருக்கிறார்.

சமூக அதிகாரம் பெற்றிராத தலித்துகளுக்கு எண்ணிக்கைப் பெரும்பான்மை ஒருவித உளவியல் பலத்தையும், பல்வேறு வழிமுறைகளால் தலித்துகளை அடக்கிவந்த ஆதிக்க வகுப்பினருக்கு அதுவே அச்சுறுத்தலாகவும் மாறிப்போகிறது. இவ்வாறு தான் விழுப்புரத்தில் மரபான சாதியக் கட்டுமானத்திற்கு வெளியே தலித்துகள் உலவினர். பலவேளைகளில் சாதி இந்துக்களைக் கட்டுப்படுத்துகிறவர்களாகவும் இருந்தனர். ஜோதி லிங்கம் பணக்காரராகவும் 300பேர்வரை வைத்து வேலை செய்பவராகவும் இருந்தார். மற்றொரு தலைவர் லோகநாதன்.  இருவரும் உறவினர் என்றபோதிலும் இரண்டு குடும்பத்திற்கும் பகை இருந்து வந்தது. இருவரும் இணைந்து செயற்பட்ட தருணங்களும் உண்டு. அவை தலித் மக்களுக்குச் சிக்கல் வரும் தருணங்களாக இருந்தன. ஜோதிலிங்கம் ஆரம்பத்தில் திமுகவிலிருந்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். அரசுப் பொதுமருத்துவமனைக்கு எதிரில் மேற்குப் பக்கமிருந்து பெரிய காலனிக்கு நுழையும் வழியில் அமைந்துள்ள தொழில் கூட்டுறவுச் சங்கமும், சேமிப்புக்கிடங்கும் ஜோதிலிங்கத்தின் முயற்சியால் கொணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரியகாலனி மக்களில் பலரும் வேலைபெற்றனர்.

டி. லோகநாதன் (1921-2003) 5ஆம் வகுப்புவரை படித்தவர். 17.10.1936ஆம் ஆண்டு விழுப்புரம் கமலாநகரில் காங்கிரஸ் கொடி ஏற்றும்போது அரிசன் ஒருவரே கொடியேற்றப் பாடலைப் பாட வேண்டுமென்று நேரு குறிப்பிட்டதால் லோகநாதன் அப் பாடலைப் பாடினார் என்று அவரைப் பற்றிய குறிப்பு குறிப்பிடுகிறது. சுதந்திரப் போராட்ட அரசியல்மீதான ஆர்வம் அவருக்கு அங்கிருந்து உருவானது. அன்று முதல் அவர் காங்கிரஸ் தொண்டரானார். இறுதிவரையிலும் காந்தி தொப்பியும் கதராடையும் அணிந்து வந்தார். அப்பகுதி மக்களால் இவர் தொப்பி என்றே அழைக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு அவர் தியாகி என்று பதிந்துகொள்ளவோ இறுதிவரை தியாகிபென்சன் பெறவோ விரும்பவில்லை. ஆனால் அவர் அப்பகுதி மக்களால் சுதந்திர போராட்டத் தியாகி என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

டி. லோகநாதன் விழுப்புரம் நகராட்சிக் கவுன்சிலராக 10 வருடங்கள் இருந்தார். நகராட்சி சார்பாக ‘வீரபகத்சிங்’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. எனவே வீரபகத்சிங் டி. லோகநாதன் என்றே பின்னாளில் அழைக்கப்பட்டார்.  விழுப்புரம் காங்கிரஸ் கமிட்டித் துணைத்தலைவராக 20 வருடங்கள் பணியாற்றினார். மாவட்ட ஹரிஜனலீக் பெருந்தலைவராகவும் நீண்டகாலம் இருந்தார். சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவராக 30 ஆண்டுகள் இருந்தார். சுமைதூக்கும் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் தலித்துகளாக இருந்த காரணத்தினால் இவர் அதன் தலைவரானார். தலித் மக்களிடையேயும், தலித்துகள் மற்றும் பிறவகுப்பினருக்கு இடையேயும் பிரச்சினைகள் வரும்போது லோகநாதன் அல்லது ஜோதிலிங்கம் ஆகியோரால் தீர்த்துவைக்கப்பட்டன. இது ஒரு வகை உள்ளுர் அதிகாரம் என்றே கூற வேண்டும். இதனால் எல்லா இடத்திலும் போலவே இங்கும் காவல்துறை இந்த உள்ளூர் பிரமுகர்களோடு இணக்கமாக இருந்தது.

உள்ளூரில் உருவான இத்தலைமையால் விழுப்புரத்தைச் சுற்றியிருந்த கிராமங்களில் தலித் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாதுகாப்புக்காக இத்தலைவர்களை நாடினர். சிலசமயங்களில் இவர்களேகூடத் தலையிட்டனர். குறிப்பாக 1981இல் விழுப்புரம் அருகிலுள்ள துத்திப்பட்டி என்ற கிராமத்தில் அவ்வூர் ஆதிக்க வகுப்பினரால் தலித் மக்கள் துரத்தப்பட்டபோது டி. லோகநாதன் தலையிட்டுத் துணிச்சலாகச் செய்த காரியங்களைப் பெரிய காலனியைச் சேர்ந்த சர்வேஸ்வரன் என்பவர் பகிர்ந்து கொண்டார். ஆனால் சதாசிவம் கமிஷன் அறிக்கை டி. லோகநாதனின் தலையீட்டைச் சட்டவிரோதச் செயல்பாடு என்றே வர்ணிக்கிறார். டி. லோகநாதன் தலித் மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயற்பட்ட தருணங்களே அதிகம். சேரிக்குள் சாராயக்கடை கொணருவதை அவர் இறுதிவரை எதிர்த்து வந்தார். கலவரத்தின்போது லோகநாதன்தான் தலித் அல்லாதார் வீடுகளைக் கொளுத்த வேண்டாம் என்று தடுத்தார். அதை மீறிச்சென்றுதான் தலித்துகளில் சிலர் பூந்தோட்டத்திலிருந்த தலித் அல்லாதோர் குடிசைகளைக் கொளுத்தினார்கள். இல்லையெனில் தலித் அல்லாதோருக்குச் சேதாரம் அதிகமாயிருக்கும் என்றார் ஓர் தகவலாளி.

விழுப்புரம் பெரியகாலனிக்கு அருகில்தான் பேருந்து நிலையம், பொதுமார்க்கெட் ஆகிய பொதுவெளிகள் அமைந்திருந்தன. எனவே இந்தப் பொதுவெளிகள்மீது தலித்துகளின் செல்வாக்கு தவிர்க்க முடியாமலிருந்தது. பொதுவாகப் பொதுவெளிகள்மீது தலித்துகளுக்குள்ள உரிமை என்ன? அதன் மீதான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. பேருந்து நிலையம் முதலிய பொது இடத்தில் ஒரு தேநீர்சாலைகூட தலித் ஒருவருக்கு உரிமையாயிருப்பதில்லை. மிகச் சில விதி விலக்குகள் தவிர தமிழகம் எங்கும் இந்நிலைதான். தமிழகத்தின் எந்த கிராமத்திலும் பள்ளிக்கூடம், நூலகம், கூட்டுறவு சாலை, அஞ்சலகம், நீர்த்தேக்கத்தொட்டி முதலிய பொது மக்கள் புழங்கு வெளிகள் தலித் பகுதிகளில் அமைவதில்லை. அங்கு தலித் ஒருவர்மீது தாக்குதல் நடக்குமானால் பொது வெளியே அவனுக்கு எதிராக மாறுகிறது. அவனுக்கு உதவும் தார்மீகபலம் அங்கிருப்பதில்லை. விழுப்புரத்தில் ஊருக்கு மையத்தில் பொதுவெளிகளுக்கு அருகில் சேரி இருப்பதையும் சேரிவாழ்வோரின் செல்வாக்கு படர்ந்திருப்பதையும் தலித் அல்லாத வகுப்பினர் விரும்பவில்லை. இதுதொடர்பாகப் பல முறை அவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு இருந்தனர். மாற்றக்கோருவதற்கானக் காரணங்களாகத் திருடுதல், அடிதடி போன்றவை காட்டப்பட்டன. இதுதொடர்பாக நூலாசிரியர் டி.டேவிட் என்னிடம் நேரில் பகிர்ந்துகொண்ட செய்திகள் முக்கியமானவையாகும். அங்கிருந்த சட்டவிரோதத் தன்மைகள் ஒரு வகுப்பிற்குரியவையாக மட்டுமே இருக்கவில்லை. தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் வாழ்க்கை முறையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரு வகுப்பாரும் சேர்ந்தே குடித்தல், சீட்டு விளையாடுதல் முதலிய காரியங்களில் ஈடுபட்டு வந்தனர் என்றார். கலவரத்தில் ஈடுபட்ட தலித் அல்லாதோரில் வன்னியர்கள் அதிகளவில் இருந்திருந்தாலும் முதலியார் உள்ளிட்ட சாதியினரின் தூண்டுதல் இருந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றார் மற்றொரு தகலாளி. விழுப்புரத்தின் நிலைமையைப் பார்க்கும்போது தலித்துகளின் செல்வாக்கு பொதுவெளிகள்மீது படர்ந்திருந்தமையை அறிய முடிகிறது. வாழ்விடம் சார்ந்தும் வாழ்வோரின் எண்ணிக்கை சார்ந்தும் தலித்துகளுக்கு இந்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில் அவர்களும் ஈடுபட்டிருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் தலித்துகளுக்கு வாய்த்தது உதிரி அதிகாரமும் லும்பன் வாழ்முறையும்தான்.

சாதியமைப்பு நிர்ப்பந்தித்த இழிவாழ்வுதான் இதற்கான அடிப்படைக் காரணம். காரணத்தை மறைத்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களையே பலியாக்குவதுதான் சாதியமைப்பின் விதி. தலித்துகள் அங்கு உடலுழைப்பைக் கோரும் சுமைதூக்கும் கூலிகளாக இருந்தார்களே ஒழிய கடை உரிமையாளர்களாக இருந்திருக்கவில்லை. சாதி இத்துக்களும்கூடத் தலித்துகளைச் சுமைதூக்குவோர்களாக மட்டுமே குறித்தனர். இவ்வாறு தலித்துகள் மீதிருந்த வன்மத்தின் தொடர்ச்சியாகத்தான் விழுப்புரம் கலவரத்திற்கான காரணி அமைந்தது.

நள்ளிரவுக் காட்சிக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் விருப்பத்திற்கு மாறாக நடக்க முயன்ற சாதி இந்துவோடு முரண்பட்ட தலித் குழுவினர்மீது காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்மீதான அலட்சியத்தால் ‘தலித்துகளுக்கு ஆதரவாக நடக்க முயன்ற’ காவல்துறையைக் கண்டிப்பதாகத் தொடங்கும் காய்கறிக்கடை வியாபாரிகளின் போராட்டம் மெல்ல மெல்ல தலித்துகள்மீதான கோபமாக மாறியது, போராட்ட ஊர்வலத்தில் தலித்துகளுக்கு எதிராகக் கோஷம் எழுப்பப்பட்டதோடு தங்களது நீண்டநாள் கோரிக்கையான ‘அங்காடி இடம்மாற்றக் கோரிக்கை’யும் எழுப்பப்பட்டது.  அங்கு இரண்டு விஷயங்களுக்குக் குறிவைக்கப்பட்டன. புகாரை அலட்சியம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ என்பவர் தலித் என்பதால்தான் காவல்துறை தலித்துகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டது என்பது ஒன்று. இரண்டாவது தலித்துகளில் தொழிலதிபர் நிலையிலுள்ள ஜோதிலிங்கம் என்பவரின் இருப்பும் டி. லோகநாதனின் செயற்பாடும்தான் தலித்துகளுக்குத் தங்களைத் தாக்கும் துணிச்சலைத் தருகிறது என்று சாதி இந்துக்கள் கருதினர். உடனடிப் பிரச்சினைக்குக் காரணமாக அமைந்த கலியபெருமாள் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சண்முகம் ஜோதிலிங்கத்திற்குச் சொந்தமான லாரியின் ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவல்துறை தலித் மக்கள் சார்பாக நடந்துகொள்ளும் தருணங்கள் மிகவும் அரிது. இதுவரையிலான சாதி வன்முறைகளின்போதெல்லாம் ஆதிக்க வகுப்பினருக்கு அடுத்து காவல்துறை நடத்தும் வன்முறைகளுக்கான உதாரணங்களே அதிகம். ஆனால் விழுப்புரத்தில் காவல்துறை தலித்துகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. தங்களுக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டிய காவல்துறையின் சுணக்கம் தலித்துகளுக்குச் சார்பாகிவிடுமென்று கருதும்போது காவல்துறைக்கு எதிராகவும் போராட முற்படுகின்றனர் சாதி இந்துக்கள். இங்கு தலித்துகள்மீது அடிக்கடி புகார் அளிப்பது சாதி இந்துக்களின் வழக்கமாக இருந்துள்ளது. பெரும்பாலும் அவை இயலாமை யின் வெளிப்பாடாக இருந்திருக்க வேண்டும். “உங்களுக்கு இதே தொழிலாகிவிட்டது” என்று சலித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டரின் கூற்று இதைத்தான் காட்டுகிறது. உள்ளூர்ப் பஞ்சாயத்து உள்ளிட்ட அதிகாரத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஜோதிலிங்கம் போன்றோரிடம் காவல்துறை கொண்டிருந்த ‘இயல்பான’ உறவு அவரின் ஓட்டுநருக்கு எதிரான புகாரைப் பெறுவதில் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

முதலில் 24.07.1978 அன்று நடுநிசியில் தலித்துகளுக்குச் சொந்தமான ரிக்ஷாக்கள்மீது தீவைப்பதிலிருந்து வன்முறை தொடங்கியது. பின்னர் இருதரப்பு மோதலாக மாறியது. கலவரத்தின்போது சேரிக்குள் புகுந்து யாராலும் தாக்க முடியவில்லை. குடிசைகளைக் கொளுத்தியதுகூட சேரிக்குள் வராமல் வானத்தில் கந்தகத் தூளோடு வெடிவிட்டுக் கொளுத்தினார்கள். கலவரத்தின்போது அன்றாடப் புழங்கு பொருட்கள் சேரிக்குள் செல்ல முடியவில்லை. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. தண்ணீரிலும் விஷம் கலந்திருக்கக்கூடும் என்ற வதந்தி இருந்தது. கலவரத்தின்போது ஜோதிலிங்கம், லோகநாதன் ஆகியோரின் தலைக்கு விலையும் அறிவிக்கப்பட்டது. சேரிக்குள் புகுந்து தாக்க முடியாத காரணத்தால் பெரியகாலனிக்கு வெளியேயிருந்து நகரத்திற்கு பிழைப்பு நாடி வந்துசென்ற பிற சேரிகளைச் சேர்ந்தவர்களைக் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் இருசம்மாள் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவராகக் கள ஆய்வில் அறிய முடிந்தது. இருசம்மாள் களம் சாடுபவர். சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைக் கல்மண்ணோடு அள்ளிப் புடைத்துத் துணியை வைத்து ஒத்தடம் எடுத்து அதில் வரும் நெல்லை மட்டும் திரட்டுவது தான் களம் சாடுவதாகும். அந்த வேலையைச் செய்துவிட்டுத் திரும்பும்போது அவர் கொலை செய்யப்பட்டார்.

மோதல், படுகொலைகளாக மாறுவது வதந்தியால்தான். வதந்தியின் தன்மையை அதன் முழுப் பரிமாணத்தோடு இக்கலவரத்தின்போது பார்க்கலாம். முத்துத்தோப்பிலிருந்து மருதூர் கிராமத்திற்குச் சென்ற தலித் அல்லாதோர் சிலர் “வீடுகளை எரிக்கப் பெரியகாலனிக்காரர்கள் வருகிறார்கள்” என்ற வதந்தியைப் பரப்பினர் என்று இந்நூல் குறிப்பிடுகிறது. மேலும் கலவரத்தின்போது சூறையாடிய சொத்துக்களைப் பிரிப்பதில் தலித்துகளிடையே போட்டி ஏற்பட்டதாகவும் அப் போட்டியில் கொல்லப்பட்டவர்களுடைய சடலங்களைத் தலித்துகள் கொணர்ந்து தலித் அல்லாதோர் பகுதியில் போட்டுச் சென்றனர் என்றும் கூறப்பட்டது. வதந்தியானது சிதறிக்கிடக்கும் கோபத்தினை ஒன்றுதிரட்டும் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சபால்டன் ஆய்வுகளில் வதந்தி என்பது மேலாதிக்கத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்பாகக் கூறப்பட்டது. ஆனால் இங்கு வதந்தியை ஒடுக்குவோரும் ஒடுக்குமுறைக்கான அம்சமாக உபயோகித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. வதந்தியின் வேர் இன்னதென்று சொல்ல முடியாதாகையால் அது எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. உடனடித் தன்மை கொண்ட வதந்திகள்தாம் இங்கு வேறு எவற்றாலும் வீழ்த்த முடியாத ஜனத்திரளை எதிர்கொள்வதற்குக் கையாளப்பட்டிருக்கிறது.

தலித்துகள்மீது சாதி இந்துக்கள் கொண்டிருந்த நீண்டகாலக் கோபத்தையே இக்கொடிய கொலைகள் காட்டுகின்றன. சிறிய அளவில் ‘சாதிய முறை பிறழ்ந்து’ வாழ முற்பட்ட காரணத்தாலேயே தலித்துகள் கொல்லப்பட்டனர். ஆனால் எங்கும் முறைகேட்டையே சாதி அதிகாரமாகக்கொண்டு வாழும் சாதி இந்துக்களை அதற்கு ஈடாகக் கொன்றுதான் தலித்துகள் வாழ்கிறார்களா என்ன?

m

இந்நூலைப் பதிப்பிப்பது குறித்துச் சில செய்திகளைச் சொல்ல வேண்டும். நானறிந்தவரையில் தமிழில் தங்கராஜ் எழுதிய ‘முதுகுளத்தூர் முதல்’ என்ற நூலில்தான் விழுப்புரம் படுகொலைபற்றி ஓரளவுத் தகவல் தரப்பட்டுள்ளது. பிருந்தாவன் மோசஸும் பரதனும் இணைந்து எழுதிய விழுப்புரம் கலவரம் பற்றிய அறிக்கையின் சுருக்கம் EPW ஆங்கில இதழில் வெளியாகியிருந்தது. பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர் 1986 பிப்ரவரியில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை அவரின் ‘Riot after Riot’ என்ற நூலில் (2003, The Lotus Collection – ROLI BOOKS, New Delhi)இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கிலக் கட்டுரைகளில் இக்கலவரத்தின் பின்னணி ஓரளவு விவரிக்கப் பட்டுள்ளது. இந்தக் கட்டுரைகள் கிடைத்த பின்னால் விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, வேலூர் போன்ற இடங்களுக்குக் கூடுதல் விவரங்கள் தேடிப் பயணமானேன். இவ்விடங்களில் கிடைத்த தரவுகள் டேவிட்டின் நூல் தரும் தகவல்களை மிஞ்சியதாக இல்லை. கலவரம் நடந்த இடம் என்ற வகையில் விழுப்புரம் நகரத்திற்குச் சிலமுறை பயணித்தேன். சம்பவத்தோடு தொடர்புடைய இடங்களைப் பார்த்தேன். கலவரம் நடந்தபோது சம்பவத்தோடு தொடர்புடைய அல்லது கலவரத்தைப் பார்த்த சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்களுக்குத் துல்லியமான தகவல்கள் மறந்துபோயிருந்தன. கலவர சம்பவங்கள் பற்றியும் பெரியகாலனியிலிருந்த தலைவர்கள் பற்றியும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். கலவரத்திற்குப் பின்பு PMD நிறுவனர் கரி. பெரியநாயகம், கிளாடு, கல்விகேந்திரா சின்னப்பன், நாட்டுக்கவி நாராயணசாமி ஆகியோரின் முன் முயற்சி மூலம் கட்டித்தரப்பட்ட வீடுகளைப் பார்க்க முடிந்தது. இதில் 1978 கலவரத்திற்கு முன்பே இங்கு நடந்த கலவரம் பற்றிய தகவலும் கிடைத்தது. 23.06.1967இல் பெரியகாலனி தலித்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் ஒரு கலவரம் நடந்தது. அக்கலவரம்பற்றி அளிக்கப்பட்ட அரசு சார்பான அறிக்கையிலும் தலித்துகளே குறைகூறப்பட்டனர் என்பதை ஆர். சதா சிவம் கமிஷன் அறிக்கையின் குறிப்பொன்றிலிருந்து அறிய முடிகிறது. அக்கலவரம் தலித் கூலியாட்கள் அதிக ஊதியம் கேட்டதால் ஏற்பட்டது. இதை சதாசிவம் அறிக்கையே ஓரிடத்தில் ஒத்துக்கொண்டிருக்கிறது. 1970களில் பெரியகாலனியில் பலரும் எம்ஜிஆர் அனுதாபிகளாக இருந்துள்ளனர். கலவரத்தைப் பார்வையிட வந்தபோது எம்ஜிஆரும் அதை அறிந்து கொண்டார். தலித் தரப்பில் அப்போது படித்தவர்களாக இருந்த விநாயகமூர்த்தி, சின்னராஜீ ஆகியோருக்கு முறையே கிராம நிர்வாக அதிகாரி (VOA) நடத்துனர் பணிகளை வழங்க ஆணையிட்டார். அதேபோல எம்ஜிஆர் கலவரத்தைப் பார்வையிட வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கைதுசெய்தனர். ஆனால் பின்னர் அவர்களை விட்டுவிடுமாறு எம்ஜிஆர் உத்தரவிட்டார். இவையெல்லாம் டேவிட் அறிக்கைக்குப் பின்னர் நடந்தவையாகும். தலித் மக்கள் மத்தியில் இதைச் செய்த அவர் பின்னர் சமூக விரோதிகளின் கலவரம் என்று குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கதாகும். டி. லோகநாதன், ஜோதிலிங்கம் ஆகிய இருவரில் ஜோதிலிங்கம் மட்டுமே தற்போது உயிரோடிருக்கிறார். முயற்சி செய்தும் அவரின் உடல்நிலை காரணமாகச் சந்திக்க முடியவில்லை. டி. லோகநாதனின் பேரன் திரு. பிரின்ஸ்சோமு மூலம் லோகநாதன் எழுதிய குறிப்புகள் சிலவும், நீதிமன்ற ஆவணங்கள் சிலவும் கிடைத்தன. அவற்றில் கலவரத்தை விளங்கிக்கொள்வதற்கான புதிய செய்திகள் இல்லை. இந்தத் தேடலில் இரண்டு விசயங்கள் விடுபட்டுப் போனமை ஒரு குறையாகவே உள்ளது. ஒன்று கலவரத்தோடு தொடர்புடைய தலித் அல்லாதவர் ஒருவரைச் சந்திக்க இயலாமல் போனமை. இறந்தவர்களின் படங்கள் கிடைக்காமை மற்றொன்று. இரண்டுமே சாத்தியமில்லை என்பது தெரிந்த பின்பே மற்றவற்றைத் தொகுத்தேன்.

கலவரம் பற்றிய நினைவுகூறல்களில் தலித் அல்லாதோரைத் துரத்தி அடித்தோம். அவர்களால் திருப்பித்தாக்க முடியவில்லை. அந்தக் கோபத்தைத்தான் தனியே மாட்டிக்கொண்ட பிறசேரிகளைச் சேர்ந்தவர்களைக் கொன்று தீர்த்துக் கொண்டனர் என்ற பகிர்தல் தவறாமல் இடம்பெற்றது. தலித் அல்லாதவர்களைத் துரத்தி அடித்ததை அவர்கள் பெருமிதமாகக் குறிப்பிட்டனர். குறிப்பாகக் கலவரத்தின்போது எதிர்த்தாக்குதலில் ஈடுபட்ட வனிதா(55), ரமணி(52) ஆகிய இரு பெண்மணிகளைச் சந்தித்தது நல்ல அனுபவம்.

நூல் சார்ந்த தரவுகளிலும் கள ஆய்விலும் எனக்கு கிடைத்த அதிர்ச்சியான தகவல் கொல்லப்பட்ட 12பேரின் பெயர்கள் சரிவரக் கிடைக்கவில்லை என்பதுதான். கலவரத்தை ஒட்டி ஊரைவிட்டு வெளியேறி உறவினர்களின் ஊர்களில் தங்கியிருந்த அம்மக்கள் அதையெல்லாம் தங்களால் சேகரிக்க முடியவில்லை என்றனர். காவல்துறையே அப்பிணங்களை அடக்கம் செய்துவிட்டதாகத் தெரிகிறது. டேவிட் நூலில்கூட 11பேரின் பெயர்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. சதாசிவம் கமிஷன் அறிக்கையில் 11பேரின் பெயர்களைக் குறிப்பிட்டாலும் மற்றொருவரை “இன்னாரென்று தெரியாத மற்றொரு நபர்” என்றே குறிப்பிடுகிறது. ஆனால் இக்கலவரத்தில் இறந்த 12 பேரின் நினைவாக விழுப்புரம் அரசுப் பொது மருத்துவமனை எதிரே சென்னை – திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து பெரிய காலனியில் நுழையும் மேற்குப் பாதையில் நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பட்டுள்ளது. வேறெந்த ஆவணமும் இல்லாததால் அம்பேத்கரின் சிலையையே நினைவுச் சின்னம் என்ற பெயரில் அமைத்துள்ளனர். “Dr. அம்பேத்கர் சிலை திறப்புவிழா, 25.07.1978 சாதிக் கலவரத்தில் வீரமரணமடைந்த தியாகிகள் நினைவுக் கல்வெட்டு திறப்புவிழா”, என்ற பலகை அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அது 29.12.2001இல் திறக்கப்பட்டுள்ளது. சிலையை பூவை மூர்த்தியும், கல்வெட்டை க. திருவள்ளுவனும் திறந்துள்ளனர். முன்னிலை வகிப்பவர்களில் ஜோதிலிங்கம், டி. லோகநாதன் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. டேவிட் நூல் தரும் பட்டியல், சதாசிவம் கமிஷன் காட்டும் பட்டியல் ஆகிய இரண்டிலிருந்தும் நினைவுச் சின்னத்தின் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள 12பேரின் பெயர் பட்டியல் வேறுபடுகிறது. டேவிட் நூலில் இடம்பெற்ற பெருமாள் என்ற பெயர் திருமால் என்று மாறியுள்ளது. செல்லமுத்து என்ற பெயருக்குப் பதிலாக செல்வராஜ் என்ற பெயரும் 12ஆவது பெயராக ராமசாமி என்ற புதிய பெயரும் இடம்பெற்றுள்ளது. கல்வெட்டு அமைத்தவர்கள் கையாண்ட ஆதாரம் எதுவென நமக்குத் தெரியவில்லை. எவை சரியென ஆராய நம்மிடமும் தரவுகள் இல்லை.

1. மணிகுண்டு

2. ஆறுமுகம்            விழுப்புரம் பெரியகாலனி

3. கோணக்கழுத்தன் என்ற செல்லமுத்து
(விழுப்புரம் நினைவுச்சின்னத்தில் உள்ளபடி செல்வராஜ்)

4. வீரப்பன்

5. பெருமாள் அல்லது திருமால்         கப்பியான் புலியூர்

6. காத்தவராயன்

7. சக்தி – கண்டம்பாக்கம்

8. ரங்கசாமி – காங்கேயன் காலனி

9. சேகர் – திருவாத்தூர் காலனி

10. மண்ணாங்கட்டி – கருங்காலி மோட்டூர்காலனி

11. இருசம்மாள் – கானை காலனி

12. ராமசாமி (விழுப்புரம் நினைவுச்சின்னத்தில் குறிப்பிட்டுள்ளபடி)

இவ்வாறு விழுப்புரம் கலவரம் பற்றிப் பல்வேறு தகவல் களைப் படித்து வந்தபோது மூன்று அறிக்கைகள் முக்கியமானவையாகத் தோன்றின. நூலாக்கப்பட்ட டேவிட்டின் அறிக்கை, சதாசிவம் கமிஷன் அறிக்கை, பரதனும் பிருந்தாவன் மோசஸும் எழுதிய அறிக்கை. இதில் சதாசிவம் கமிஷன் அறிக்கை அரசு சார்பானது. மற்ற இரண்டும் தலித் மக்கள் சார்பாக செயற்பட வந்தவர்களின் அறிக்கைகள். சதாசிவம் கமிஷன் அறிக்கையை விடுத்து மற்ற இரண்டு அறிக்கைகளைப் பதிப்பிக்க எண்ணினேன். ஆனால் பரதன் அறிக்கை கிடைக்கவில்லை. பிருந்தாவன் மோசஸிடம் கேட்டும் அவரிடம் இல்லை. பரதன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் அவரோடு தொடர்பில்லை என்றும் கூறிவிட்டார். அதனால் அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து EPWவில் வெளிவந்த கட்டுரையின் மொழியாக்கம் மட்டும் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பரதனும் மோசஸும் தலித் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டேவிட்டின் நூல் ஓரளவு சுருக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறு சொல்லும் புதியதாகச் சேர்க்கப்படவில்லை. நூல் 10 தலைப்புகளையும் 6 பிற்சேர்க்கைகளையும் கொண்டு அமைந்திருந்தது. 10 தலைப்புகளில் சாதி – கொடிய அரக்கன் என்ற தலைப்பும் அம்பேத்கர் சிந்தனைகள் என்ற பிற்சேர்க்கையும் தவிர மற்ற அனைத்தும் கலவரத்தோடு நேரடியாகத் தொடர்புகொண்டவை. எனவே சாதி – கொடிய அரக்கன் என்ற தலைப்புப் பகுதி ஓரளவு சுருக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சாதிஒழிப்பு நூலிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துகள் என்பதால் அம்பேத்கர் சிந்தனைகள் என்ற பிற்சேர்க்கை சேர்க்காமல் விடப்பட்டுள்ளது. டேவிட் நூலிலிருந்த பிற்சேர்க்கைகளில் 5 தவிர மற்ற பிற்சேர்க்கைகள் என்னால் இணைக்கப்பட்டவையாகும்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது தமிழக முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் விளக்கியதைப்போல விழுப்புரம் கலவரம் சமூக விரோத சக்திகளின் கலவரம் என்றே தோற்றம் அளிக்கக்கூடும். பொதுப் புத்திசார் ஒழுக்க விதிகளையும் மைய நீரோட்ட அரசியல் கண்ணோட்டத்தையும் கொண்டு பார்த்தால் இதை அவ்வாறே விளங்கிக்கொள்ளக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆனால் அத்தகைய பார்வைகளை மாற்றிக்கொள்ளக் கூடிய நுட்பத்தினை டேவிட்டின் நூல் பெற்றுள்ளது. விழுப்புரம் கலவரம் தலித் சாதி மீதான சாதிவன்மத்தினால் எழுந்த கலவரமே என்பதை ஒடுக்கப்பட்ட பார்வையிலிருந்து நிறுவும் ஆவணம் இது. எண்ணிக்கைப் பெரும்பான்மை மூலம் அதிகாரச் சாதிகளாக மாறிப்போய்விட்ட ஆதிக்க வகுப்பினரின் கடந்தகாலத் துயரங்களை சபால்டர்ன் வாழ்வாகச் சித்திரிக்கும் நம் சமகால அறிவுச்சூழலில் ‘விழுப்புரம் கலவரம்’ என்ற இந்நூல் சபால்டன் அடையாளத்திற்கு ஒரு சான்றாக முன் வைக்கப்படுகிறது.

ஸ்டாலின் ராஜாங்கம்

 

விலை: ரூ.125

பக்கம்: 160

தொடர்புக்கு

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி.சாலை

நாகர்கோவில் 629 001

Ph: 9677778863

Onlineஇல் வாங்க www.nhm.insupport@nhm.in மற்றும் http://www.flipkart.com தொடர்புகொள்ளவும்.